புதன், 20 ஜனவரி, 2016

கோவில் நிலம் சாதி - பொ.வேல்சாமி.

கோவில்  நிலம் சாதி - பொ.வேல்சாமி.





இந்த நூலை எழுதியவர் பொ.வேல்சாமி அவர்கள், பல்வேறு சிற்றிதழ்களில் அவரால் எழுதப்பட்ட கட்டு்ரைகளை காலச்சுவடு நூலாக கொண்டுவந்துள்ளது. கோவிலுக்கும் நிலத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? நிலத்திற்கும் சாதிக்கும் உள்ள தொடர்பை பற்றி கட்டுரைகள் வரலாற்று தரவுகளோடு சொல்கிறது. தொழில்ரீதியாக சாதிகள் தோன்றியாதாக சொல்லப்படுகிறது, 21ம் நூற்றாண்டிலும் இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க, என்று வாய் சொன்னாலும் சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் நிகழவில்லை. முற்பட்ட சாதிகள் என்போர் இடஒதுக்கீட்டை கேவலமாக பேசிவருகிறார்கள், அதிலும் பிற்படுத்தபட்ட பிரிவினர் அதே ஒதுக்கீட்டை அனுபவித்துகொண்டே தாழ்த்தப்பட்டவர்களை இழிவு செய்தும் வருவது கண்கூடு. இடஒதுக்கீடு இன்னும் தேவையா? என்பவர்கள் கொஞ்சம்.. சாக்கடை, குப்பை , கழிவுநீர்தொட்டி வேலையில் எந்த ஒதுக்கீட்டுத் தடையும் இல்லாமல் தலித் மக்களும் அருந்ததியினர் மட்டும் செய்கிற தொழிலை வேறு யாரும் செய்யவில்லை.


ஏன் அந்த சாதியினர் மட்டும் இழிவான தொழிலுக்கு தள்ளப்பட்டார்கள், அவர்களிடம் ஏன் நிலமில்லை. என்பதற்கெல்லாம் வரலாற்றை நோக்கவேண்டும். இந்த நூல் என்பது ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பு எனலாம். அதற்காக நூலின் ஆசிரியர் எத்தனை நூல்களை மேற்கோள் காட்டியுள்ளார். அந்த நூலில் சொல்லப்பட்ட சில தகவல்களை மட்டும் கீழே தருகிறேன்...


வெற்றி பெற்றவர்கள் வரலாறு எழுதிகிறார்கள், முரண்பாடான ஒரு வரலாற்றை பாருங்கள்...


குலோத்துங்கச்சோழன் தன்னுடைய வீரமிக்க தளபதியான கருணாகர தொண்டைமானைக் கலிங்க நாடிற்கு அனுப்பி வீரப்போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்றியதாக கல்வெட்டுகளிலும் செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியிலும் உள்ளது, ஆனால் முத்தப்பசெட்டியார் நூலில் சோழர்களின் கலிங்கத்துப் படையெடுப்பு முதல் முயற்சியில் வெற்றியடையாமல் போகவே இரண்டாவதுமுறை கருணாகரத்தொண்டைமான் தஞ்சாவூர் பகுதியிலிருந்து 1000 தாசிப்பெண்களை கலிங்கத்துக்கு கூட்டிச்சென்று வீரர்களை மயக்கி, காமமயக்கத்தில் இருக்கும்போது அவர்களை வென்று கலிங்கநாட்டை அடிமைப்படுத்தியிருக்கிறார்கள்.’புத்திசாலியான மனிதன்’ எந்த வகையிலும் வெற்றிபெறுவான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று புகழப்பட்டுள்ளது.


1500 ஆண்டுகால தமிழக வரலாற்றில் நூற்றுக்கணக்கான பஞ்சங்கள் வந்து இலட்சக்கணக்கான மக்கள் மாண்டு போனார்கள், ஒருவேளை உணவுக்காக தங்களையே அடிமைகளாக விற்றுகொண்டார்கள் என்ற செய்திகளோடு அதே காலத்தில் உண்ட உணவு செரிமானம் அடைவதற்கு உயர்சாதித் தமிழர்கள் சில வகை மருந்துவகைகளைத் திண்பண்டம் போலத் தயாரித்து உண்டார்கள். இன்றைய காலத்திலும் சுவையான சைவ உணவுகளைத் தயாரிப்பவர்கள் ‘தஞ்சாவூர் பார்ப்பனர்கள், அசைவ உணவு தயாரிப்பவர்கள் செட்டிநாட்டுக் காரர்கள், சுவையான இனிப்புவகைகளை தயாரிப்பதில் திருநெல்வேலிப் பிள்ளைமார்கள்.


தமிழகத்தின் நீர்வளம் மிக்க நிலங்களில் 75 சதமானம் கோவில்களின் உடமையாக இருந்தது, அதை நிர்வகிப்பவர்கள் பார்ப்பனர்களில் பெரும்பான்மையினர். பல்லவர் காலத்திலிருந்து கி.பி 5ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டுவரை அரசின் அதிகாரமான சட்டம்-ஒழுங்கு என்பது கோவில் நிர்வாகிகளிடம்தான் இருந்துள்ளது. அரசர்கள் என்பவர்கள் தற்போதைய ராணுவத் தலைவர்கள் போல செயல்பட்டுள்ளனர். சோழர் வரலாற்றில் இராஜராஜசோழனின் தமையனான ஆதித்த கரிகாலன் கொலையில் முக்கிய பங்காற்றிய ரவிதாசனையும் அவன் குடும்பத்தாரையும் எவ்வித தண்டனைக்கும் உட்படுத்த முடியவில்லை?


நிலம் யாருக்கு கொடுத்தார்கள்;
பல்லவர்கள் அளித்த பூதானங்களை தெரிவ்க்கும் கல்வெட்டுகள் ஹொஸக்கோட்டை பள்ளங்கொவில் ஆகிய இரண்டும் சமணப்பள்ளிகளுக்கு தானம் வழங்கப்பட்டிருக்கிறது, இது தவிற மற்ற அனைத்தும் வடநாட்டு பிரமாணர்களுக்கு அளிக்கப்பட்டவை. ஒருபங்கு நிலமென்றால் 2400குழி ஒவ்வொரு பங்கிற்கும் கொடுத்திருக்கிறார்கள், சிலருக்கு அரைப்பங்கு இவ்விதம் பிரிக்காமல் முழுக்கிராமத்தையே ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள். கிராமம் என்ற சொல்லே வடமொழியில் கிரமங்கள் பயின்றவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்திலிருந்து வந்தது. தானம் பெறப்பட்ட நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது, வரிசெலுத்தத் தேவையில்லை. அந்த நிலங்கள் பிரம்தேயங்கள் என்ற பெயரில் வழங்கப்பட்டன.


வேதக்கல்வி கற்பவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரசாங்கத்த்லிருந்து ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. வடமொழிக் கல்வி நிலையங்கள் பல்லவர், சோழர், பாண்டியர் காலங்களில் சுமார் 50க்கும் மேற்பட்டவை தமிழ்நாடு முழுமைக்கும் இருந்துள்ளன. இராஜசதுர்வேதிமங்கலத்தில் ஒரு கல்லூரியில் எத்தனை மாணவர்கள் எந்த வேதத்தை கற்றார்கள், அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கபட்டது என்ற குறிப்புகளும் கல்வெட்டுகள் இருக்கின்றன. தானியம்தவிர தங்கமும் கொடுத்திருக்கிறார்கள்.


இந்த மன்னர்களுக்கு குரு என்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருந்துள்ளார்கள், இராசேந்திரசோழனின் குரு பீகார் பார்ப்பனர் சர்வசிவபண்டிதர், முதலாம் இராசராசனின் குரு ஈசான் சிவபண்டிதர் இவரும் வடநாட்டு பார்ப்பனர்தான். அரசனுக்கு படைத்தலைவர்களும் பார்ப்பனர்கள் தான் வகித்துள்ளனர்.



கொலைக்குற்றம் செய்தாலும் மரணதண்டனை பிரமாணர்களுக்கு கிடையாது, அதே சலுகையை பிற்காலத்தில் நில்வுடமையாளர்களான வேளாளர்களுக்கும் வழங்கபட்டுள்ளது.  ஒரு கொலைக் குற்றவாளியான வேளாள சாதிக்காரருக்கு அந்த் ஊர் கோவிலுக்கு விளக்கு எரிக்கும் நிபந்தம் வைத்தால் போதும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


சோழர்காலத்தில் பார்ப்பனர்கள் பலர், தங்கள் நிலத்தைக் கோவிலுக்கு விற்பனை செய்த்தை கல்வெட்டுகள் பதிவுசெய்துள்ளன. களப்பிரர்கள் காலத்தில் தங்கள் நிலங்களை இழந்த பார்ப்பனர்கள், இனி ஒரு முறை அவ்வாறு நிகழக்கூடாது என்பதற்காக நிலத்தை கோவிலுக்குவிற்று பொற்கசுகளை பெற்றுக்கொண்டனர். அதேவேளையில் கோவில் நிலங்களின் நிர்வாகிகள் என்ற பெயரில் அந்த நிலத்தின் மீதும் அதிகாரம் தங்களை விட்டு நீங்காமல் பார்த்துக்கொண்டனர்.


இந்த வரலாறுகள் மூலம் நிகழ்காலத்தையும் நாம் அறிந்துகொள்ளலாம். இன்னும் பெள்த்த, ஜைன மதங்கள் பழங்குடிகளிடம் பெற்ற செல்வாக்கு,வேதமதம் எப்படி மக்கள் செல்வாக்கு பெற்றது என்பதையெல்லாம் கட்டுரைகள் விவரிக்கின்றன. ஆழமாக படிக்கவேண்டிய நூல்.
 

கருத்துகள் இல்லை: