வியாழன், 7 ஆகஸ்ட், 2014

மனித ரத்தத்தின் விலை என்ன?

ஒரு எழுத்துக்காரன் தான் கொண்ட கொள்கைகளுக்காகவும், எழுத்துக்காகவும் வீட்டைவிட்டு பதினெட்டாம் வயதில் விலக்கப்பட்டான். ஒரு பத்திரிக்கையில் பணியாற்றிக்கொண்டே, மேடைகளில் கவிதைவாசித்துகொண்டும் கல்லூரியில் படித்துவந்தான். மிகுந்த பசியோடு அழுக்கு வேட்டியும் சட்டையுமாக திருவனந்தபுரம் தம்பனூரில் ஒரு ஹோட்டலில் நுழைந்து ஒரு மசால தோசை சாப்பிட்டான். கையில் நயாபைசா கிடையாது, கல்லாவில் உட்கார்ந்திருந்த ஐயரிடம், மன்னிச்சிடுங்க கையில காசு இல்ல என்றான். ஊரு,பேரு,எல்லாம் வாஞ்சையோடு விசாரித்த ஐயர் , திருட்டுப்பயலே என்று கன்னத்தில் பளார் விட்டார். உள்ளேயிருந்து ஒருவனை கூப்பிட்டுவிட்டு இவனை உள்ளே கூட்டிட்டு போவென்றார்.

ஹோட்டலின் சமையலறையில் ஒரு சாக்கு வெங்கயாத்தை அவனுக்கு முன்னாள்தள்ளி உரிடா தாயோளி என்றார்கள். எல்லா வெங்காயத்தை உரித்துமுடித்துவிட்டு வீங்கிய கண்களுடன் வெளியே வந்தபோது கல்லாவிலிருந்த ஐயர் , காசில்லன்னா மெடிக்கல் காலேஜ்க்கு போ., ரத்தம் வித்தா காசு கொடுப்பான் என்றார்.

நேராக ரத்தவங்கிக்கு சென்று ரத்தம்விற்க பெஞ்சில் வரிசையிலிருந்தான், ஒரு பாட்டில் ரத்தத்திற்கு பதினாறு ரூபாய் விலையாம்.. 12 ரூபாயில் டிரெனில் ஆலூவா போய்விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தான்.

‘ரத்தம் எங்க வாங்குறாங்கன்னு தெரியுமா’ என்று கட்டம்போட்ட கைலியுடன் ஒருத்தன் வந்தான், எழுத்துக்காரனும் இவனும் அருகருகே இருந்த படுக்கையில் படுத்திருந்து இரத்தம் கொடுத்தார்கள் இல்லை விற்றார்கள். தலா பதினாறு ரூபாய் பெற்றுக்கொண்டு இறங்கினார்கள். கட்டம்போட்ட கைலி அணிந்தவன் எழுத்துக்காரனிடம் தன் கதையைச்சொன்னான். என் தங்கை ஜென்ரல் வார்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள். வெளியிலிருந்து மருந்து வாங்க சீட்டு எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். கையில் காசில்லை அதனால் இரத்தம் விற்றேன் என்று சொல்லிவிட்டு எனக்கு இங்கிலீஷ் தெரியாது, சரியான மருந்து கொடுக்கிறார்களா என்று பார்ப்பதற்கு என்னுடன்  மருந்துவாங்க உதவிசெய்யமுடியுமா என்றான்,. பல மெடிக்கல்ஷாப் அலைந்தார்கள் கடைசியில் ஒரு ஷாப்பில் மருந்து கிடைத்தது.. விலை 27 ரூபாய், அவனுக்கு தொண்டை அடைத்துவிட்டது. இன்னொரு பாட்டில் ரத்தம் கொடுத்துட்டு வரட்டுமா எனக்கேட்டான்.

எழுத்துக்காரன் சொன்னான், ஒருநாளைக்கு ஒருவாட்டிதான் எடுப்பார்கள் என்று தன்னுடைய 16 ரூபாயை கொடுத்தான்.

 ‘அப்புறம் நீ எப்படி ஊருக்கு போவ’

‘ஊருக்கு நாளைக்கு போய்க்கிறேன் இந்தா பணம்’

மருந்துவாங்கிக்கொண்டு அவன் தங்கை படுத்திருந்த ஜென்ரல் வார்டுக்கு சென்றார்கள். அங்கே  அவனுடைய அம்மா, மருந்துவாங்க காசு ஏது?

இதோ, என்னுடைய நண்பர்தான் கொடுத்தார். அம்மாவிற்கு ரத்தம்விற்றது தெரிந்தால் ஆதிரத்தம் சுண்டிவிடுமே!!

இப்படி முன்பின் தெரியாத ஒரு மனிதனுக்கு ரத்தம்விற்ற காசில் உதவியவர் மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.


1 கருத்து:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_21.html

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.