வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

சிதம்பர (ஸ்மரண) நினைவுகள்...........

வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘சிதம்பர நினைவுகள்’ கட்டுரைத் தொகுப்பை வாசித்தேன், அதை எழுதியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்று மலையாள எழுத்தாளர். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை எழுதியிருக்கிறார். தமிழில் கே.வி.ஷைலஜா அவர்கள் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். வம்சி பதிப்பகத்தையும் பவா-ஷைலஜா தம்பதியினரையும் வலைப்பூக்கள் வாயிலாக அறிந்திருக்கிறேன், அவர்கள் சம்பாதித்துள்ள் நட்புகளை பார்த்து வியந்திருக்கிறேன், கலை இலக்கியவாதிகள் சங்கமிக்கும் கூடாக 19,டி.எம்.சரோன் விளங்கிவருகிறது. திருவண்ணாமலைக்கு கிரிவலம் என்பது பொதுஅடையாளம், எனக்கு நினைவில் வருவது வம்சி பதிப்பகம்.



இதற்கு முன்னர் வம்சி வெளியீட்டில் வந்த கந்தர்வன் சிறுகதைகள், ஜெயமோகன் எழுதிய அறம் ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். “சிதம்பர நினைவுகள்” கட்டுரைத்தொகுப்பை வாசிக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதே நினைவில் இல்லை, ஏதோ பாலச்சந்திரன் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார் என்பது போல இருந்தது. பிறப்பால் மலையாளியான ஷைலஜா அவர்களுக்கு மலையாளத்தில் எழுதவோ, படிக்கவோ தெரியாது, தன்னுடைய சகோதரியின் மகள் ஒரு சிறுமியின் மூலமாக மலையாள அட்சரங்களைத கற்றுக்கொண்டு, பயின்று மலையாளத்தில் சுள்ளிக்காட்டின் கட்டுரையை வாசித்து தமிழில் மொழிபெயர்த்ததாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார். இலக்கியம் படிப்பதற்கென்று வெகுசிலரே அந்நிய மொழிகளை கற்றறிந்திருக்கிறார்கள்.

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்று எழுத்துக்காரன் எனக்கு ஒரு சாகசக்காரனாகத்தான் தெரிந்தான், கல்யாண்ஜி கூட வாகிக்கும்போது தன்னை பாலச்சந்திரனாக உணர்ந்தாராம். 18 வயதில் கொண்ட கொளகைகளுக்காக சொத்து,சுகம், சோறு என எல்லாத்தை துறந்து வீட்டைவிட்டு வெளியேறினார். தவத்திரு பொன்னம்பல அடிகளார் முன்னுரையில் சொல்வது போல, சோற்றுக்காக வாழ்பவன் மூளை இருப்பதைப் பற்றியே எண்ணமாட்டான், அறிவுக்காக வாழ்பவன் வயிற்றைப்பற்றி கவலைப்படமாட்டான், வறுமைகூட இலட்சியவாதியிடம் தோற்றுப்போகும். இன்னும் சொல்கிறார், கர்ணனை கடவுளுக்கே இரத்ததானம் செய்தவன் என்றும், அவனைவிட ஒருவேளை சோற்றிற்காக தன்ரத்தத்தை விற்று பசிபோக்கவேண்டிய சூழ்நிலையில் இன்னொரு உயிரை காப்பற்றியவனின் இரத்தம் கோபுர கலசங்களில் தெளிக்கப்படும் புனித நீரைவிட சிறந்தது என்கிறார்.

வாழ்க்கையில் சந்தித்த பெரும்பேறுகளை வெளியே சொல்லமுடியும், ஆனால் அவமானங்களையும், இழிவுகளையும், தானே மிருகத்தனமாக நடந்துகொண்டதையும் இவரால் மட்டுமே எழுதமுடிகிறது. மலையாள நாட்டில் திருவோணத் திருநாளில் யாரும் பிச்சை எடுக்கமாட்டார்களாம், ஆனால் அந்த நாளில் வயிற்றுப்பசியால் ஒரு வீட்டில் யாசகம் கேட்டு பிச்சைக்காரனாக சாப்பிடுகிறார், அந்த வீட்டில் இருந்த ஒரு பெண் தன் கல்லூரியில் பார்த்த கவிஞனா? பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்று வியந்து வீட்டிலுள்ள அனைவருக்கும் சொல்கிறாள்.

கல்லுரியில் சேருவதற்கு முன்பே வீட்டைவிட்டு வெளியேறி கவிதை எழுதிய பணத்திலும், பத்திரிக்கையாளனாகவும் இருந்துகொண்டு படித்தும் வந்தார், அப்போதே காதல் கல்யாணம். மருத்துவக்கல்லூரிக்கு செல்லவேண்டிய ஒரு பெண் ஒரு பொறுக்கியோடு ஓடிப்போனாள், அந்த பொறுக்கி வேறயாருமில்லை நான் தான் என்கிறார். படிப்பின் பாதியில் 6 மாதமாக ஹாஸ்டல் பீஸும் கல்லூரி பீஸூம் கட்டாமல் அவமானப்பட்டபோது சுள்ளிக்காட்டின் கவிதை வாசித்த ஜோசப் என்ற அரசியல்வாதி பீஸ்கட்டி படிப்பு தொடர உதவுகிறார்..யாரிடமும் கையேந்தவும், பிச்சைகேட்கவும் வெட்கப்பட்டதேயில்லை என்கிறார்.

பதினெட்டால் வயதில் ஒருவேளை சோற்றிற்காகவும் 5ரூபாய் சம்பள்த்திற்காகவும் நடிகர்திலகம் சிவாஜி நடித்த ‘தங்கப்பதக்கம்’ படம் திரையிடப்படுகிறது என்று ஆட்டோவில் சென்று கூவினாராம், அடுத்த 20 ஆண்டுகள் கழித்து அதே நடிகர் திலகத்தின் அரண்மனை போன்ற வீட்டில் அவரோடு ஸ்காட்ஸ் விஸ்கி பருகிய அனுபவத்தையும் சிவாஜி நடித்துக்காட்டிய கட்டபொம்மன் ஜாக்சந்துரையிடம் பேசிய வசனத்தை அருகிலிருந்து ரசித்திருக்கிறார்.

ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கவிதைகளையும் சிறுகதைகளையும் எழுதிய கலகக்காரி என்ற புகழ்பெற்ற கமலாதஸை சந்தித்த தருணங்கள். ஸ்வீடன்நாட்டு அரசவிருந்தாளியாக Gothenburg புத்தகத்திருவிழாவில் சந்தித்த தென்னாப்பிரிக்க தாயை சந்தித்த அனுபவம்.

நோபெல்கமிட்டி சேர்மனோடு ஒருமுறை உரையாடும்போது ஷென் எஸ்மெர்க், பாலச்சந்திரனை ‘இந்த அரங்கிற்கு மீண்டும் ஒருமுறை வருவதற்கான வாய்ப்பு கிடைக்கட்டும் என்று வாழ்த்தினாராம். அதாவது நோபெல்விருது பெறுவதற்கு. அதற்கு பாலச்சந்திரன், டால்ஸ்டாய் என்ற இலக்கிய  மாமேதைக்கு வழங்காமல் ஷெல்லி ப்ருதோம் என்ற அற்பமனிதனுக்கு வழங்கினீர்களே! டால்ஸ்டாய் என்ற மகா கலைஞனுக்கு கொடுக்காத நோபெல் பரிசை அவரோடு ஒப்பிடும்போது மிகவும் சாதாரண எழுத்துக்காரனான நான் ஏற்றுக்கொள்ள்முடியாது என்று பதிவு செய்தாராம்.

ஒவ்வொரு கட்டுரையையும் வாசிக்கும்போது கண்ணீர்துளிகளை செலவிடாமல் கடக்கமுடியாது. தமிழுக்கு அளித்த கே.வி.ஷைலஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!.

1 கருத்து:

Unknown சொன்னது…

nalla puthaga mathippurai viraivil vangi vidugiren chennai l yengu kidaikkum comrade