புதன், 13 ஆகஸ்ட், 2014

மணியாச்சி ..வாஞ்சிமணியாச்சி


நான் சொந்த ஊருக்கு ரயிலில் போகவேண்டுமானால் மணியாச்சி ரயில்நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 5 கி.மீ பயணம் செய்யவேண்டும். அந்த ரயில்நிலையத்திற்கு ஜங்ஷன் என்பதைத்தவிற எந்த பிரபலுமும் கிடையாது. கருவேல மரங்கள் நிறைந்த கரிசல் காட்டின் நடுவே பக்கத்தில் ஊரே கிடையாது குறைந்தபட்சம் 1 கி.மீ ல் தான் மணியாச்சி கிராமம் உள்ளது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நீராவி ரயில்கள் மீட்டர் கேஜ் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது. திருநெல்வேலிருந்து மதுரைக்கு போகிறவழியில் 30வது கி.மீல் மணியாச்சி இருக்கிறது, அதேபோல் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு செல்லவேண்டுமானாலும் மணியாச்சி ரயில்நிலையத்தில்தான் இரண்டு பாதைகளும் இணைகிறது. எத்தனையோ நீராவி ரயில்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டு சகபயணியான இன்னொரு ரயிலுக்கு காத்திருக்கும், அந்த நேரத்தில் தாகத்திற்கு தண்ணீரையும் நிரப்பிக்கொள்ளும். அங்கிருந்த தண்டவாளங்களில் எரிந்துபோன கரித்துண்டுகளை சாம்பலோடு லோகோ ஓட்டுனர்கள் கீழே தட்டுவார்கள். அதை எடுத்து டீக்கடை பாய்லர்களும் ரயில்நிலையத்தின் கடைகளில் இயங்கிகொண்டிருக்கும். ராகம் போட்டு காப்பி..காப்பி என்று ஜன்ன்லோரம் விற்றுக்கொண்டிருப்பார்கள்.அந்த ரயில் நிலையத்திற்கு ஒரு வரலாறும் உண்டு.

1911ம் ஆண்டு ஜூன்மாதம் 17ம்தேதி இரண்டு இளைஞர்கள் திருனெல்வேலிருந்து  மதுரை செல்லும் ரயிலில் ஏறினார்கள். ஒருவனுக்கு வயது 23, மற்றவனுக்கு வயது 22. அவர்கள் மேற்குறிப்பிட்ட ரயில்நிலையத்திற்கு ரயில் வந்துசேர்ந்ததும் இறங்கினார்கள். அந்த ரயில்  தூத்துக்குடியிலிருந்து இன்னொரு ரயில் வருவதற்காக காத்திருந்தது. ரயில் நிலையத்தில் பேசிவைத்தபடி ஆளுக்கொரு பக்கமாக பிரிந்துவிட்டார்கள். அதே ரயிலில் திருநெல்வேலியிலிருந்து ஆஷ் என்ற வெள்ளைக்கார கலெக்டரும் இங்கிலாந்திலிருந்து ஐந்துநாட்களுக்கு முன்பு வந்த அவனது மனைவியும் தங்களது குழந்தைகளைக்கான கொடைக்கானல் செல்கிறார்கள். அந்த 23 வயது இளைஞன் வாஞ்சிநாதன், செங்கோட்டையிலிருந்து வருகிறான், திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்கைக்கு உட்பட்ட பகுதியில் காட்டிலாகா பிரிவில் ஒரு குமாஸ்தாவாக வேலைசெய்துவருகிறான். ஆஷும் அவனது மனைவியும் உட்கார்ந்திருந்த முதல்வகுப்பு பெட்டியில் வாஞ்சிநாதன் ஏறினான், குட்மார்னிங் ஆஷ் என்றான்... ஒரு இந்தியன், அடிமை நம்மை பெயர் சொல்லி அழைக்கிறான் என்ற கோபம்கொண்ட போதிலும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, இங்கிருந்து போய்விடு என்கிறான். இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நெஞ்சில் குறிவைத்து ஆஷ் என்பவனை சுட்டுவிட்டு கீழே இறங்கினான். துப்பாக்கியின் சத்தம்கேட்டும் , ஆஷின் மனைவியின் அலறல் கேட்டும் ஆஷின் பாதுகாப்பு அதிகாரி ஓடிவந்து வாஞ்சியை கட்டிப்பிடித்துக் கொண்டான். ரயில்நிலைய பிளாட்பாரத்தில் இருவரும் உருள்கிறார்கள். ஒருவேகம் வந்து அந்த அதிகாரியை நெட்டித்தள்ளிவிட்டு வாஞ்சி ஓட்டமெடுக்கிறான், ரயில் நிலையத்தில் வேலைசெய்வோர், ஆஷின் சிப்பந்திகள் துரத்துகிறார்கள். நடைமேடையிலிருந்த் ஒரு கழிப்பறைக்கு உள்ளேசென்று தாளிட்டுக்கொண்டான் வாஞ்சி. அங்கே கூட்டம் கூடிவிட்டது, ஆனால் யாரும் உள்ளேபோக அஞ்சுகிறார்கள் ஏனென்றால் கைத்துப்பாக்கி வைத்திருக்கிறான்.

சில நிமிடங்கள் கரைகிறது, உள்ளேயிருந்து ஒரு வெடிச்சத்தம்.. பின்னர் கழிப்பறை கதவை உடைத்தார்கள். தன்னுடைய வாயில் சுட்டுக்கொண்டதால் அடையாளம் தெரியாமல் தலை சிதறிவிட்டது. சுடப்பட்ட ஆஷை மருத்துவமனை கொண்டுசெல்ல கொடைக்கானல் செல்லும் ரயிலை திருநெல்வெலிக்கு திருப்பிவிடுகிறார்கள். திருநெல்வேலி சென்று சேரும்முன்ன்ரே ஆஷ் செத்துப்போனான். தற்கொலை செய்துகொண்ட வாஞ்சியை ஒரு கூட்ஸ் ரயிலில் ஏற்றி திருனெல்வேலி மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்கள். வாஞ்சியுடன் கூடவந்த இளைஞன் அவனது சொந்த மைத்துனன் மணியாச்சி ரயில்நிலையத்திலிருந்து தப்பிஓடிவிட்டான். வாஞ்சியின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. திருநெல்வேலியில் தேசபக்தர்களை கொடுமைப்படுத்தியதற்காகவும், வெள்ளைக்காரர்களை ஆயுதப்புரட்சி செய்து விரட்ட ஆட்கள் சேர்ந்திருக்கிறோம் என்றும் இந்த கொலைக்கான காரணங்களை கடிதத்தில் எழுதியிருந்தான்.

மருத்துவமனையில் அடையாளம் தெரியாத நிலையிலிருந்து வாஞ்சியின் உடலை மூன்று நாட்கள் கழித்து அவரது தந்தை, எனது மகன் வாஞ்சியின் உடல்தான். மூன்று மாதங்களாக அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தன்னைக்காப்பாற்றிக் கொள்ள வாக்குமூலம் கொடுத்தார்.

வாஞ்சிநாதன் திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் படிக்கும்போது கல்யாணம் நடந்துவிட்டது, வாஞ்சிக்கு வயது 18, மனைவி பொன்னமாளுக்கு வயது 8 , பால்ய விவாகம். வாஞ்சி இறந்தபோது வயது 23, பொன்னம்மாள் வாஞ்சி இறந்தபின்னர்தான் பூப்படைந்தார், கல்யாணமாகி 5 வருடங்கள் கழித்து பூப்படைவதற்குள் விதவையானார் பொன்னம்மாள். கன்னியாகவே விதவையான சோகவரலாறு. இந்திய சுதந்திரம்பெற்ற பிறகும் அந்த அம்மாவுக்கு தியாகி பென்ஷன் பல்வேறு காரணங்கள் சொல்லி மறுக்கப்பட்டது 1967ல் பென்ஷன் வழங்க அரசாங்க ஆணைவந்தபோது பொன்னம்மாள் உயிரோடு இல்லை.

வாஞ்சியின் நினைவாக மணியாச்சி ரயில்நிலையம் வாஞ்சிமணியாச்சி என்று பெயர் சூட்டப்பட்டது.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

விசிட் : http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_21.html