இந்த விடுமுறையில் குடும்பத்துடன் திருவனந்தபுரம் சென்றேன், திருவனந்தபுரத்தில் மிருகக்காட்சி சாலை, பத்மநாபசுவாமி ஆலயம், அருங்காட்சியகம், பூங்கா, சட்டசபை வளாகம், கோவளம் கடற்கரை ஆகிய இடத்திற்கு சென்றோம். நாகர்கோவில் வழியாக ரயிலில் செல்லும்போது அவ்வள்வு பசுமை தென்னை, வாழை, பாக்கு, தேக்குமரங்கள், நீரோடைகள், கால்வாய்கள் காணுமிடமெங்கும் பூமித்தாய் பச்சைப்பட்டாடை உடுத்தியதுபோல.
ரயில்நிலையத்தில் இறங்கியபோது ஒரு தலைநகருக்குண்டான ஆரவாரம் ஏதுமில்லை, ஆட்டோக்காரர்களோ, டாக்ஸிகாரர்க்ளோ, லாட்ஜ் புரோக்கர்களோ யாருமே குறுக்கேவரவில்லை. திருவனந்தபுரம் ரயில்நிலையத்திற்கு இரண்டு வாசல்கள் ஒன்று தம்பனூர் மற்றொன்று பவர்ஹவுஸ் ரோடு. பவர்ஹவுஸ் ரோட்டில் 200 மீட்டரில் பிரிகிற சாலைபஜாரிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கினோம். நல்ல உபசரிப்பு. ஆட்டோவில் சென்றால் மீட்டர் கட்டணம். ஹோட்டல்களில் சீரகம்போட்டு கொதிக்கவைத்த மிதமான சூடுள்ள குடிநீர். சாலைகளில் நான் முந்தி நீ முந்தி என யாரும் வாகனங்களை ஓட்டவில்லை, சாலையோரங்களில் குப்பையோ, பிளாஷ்டிக் பொருட்களோ இறைந்துகிடக்கவில்லை. பேருந்துகளிலோ, பொதுமக்களிடமோ வழிகேட்டால் நிதானமாக சொல்கிறார்கள்.
திருவனந்தபுரத்தைப் பற்றி சமஸ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை அத்தனையும் உண்மை. இரவு சாப்பாடுக்கு அசைவ ஹோட்டலுக்கு போகலாம் என்று கெத்தில் சாஹிப் ஹோட்டலைத் தேடினேன் அதுவும் சாலை பஜாரில்தான். ஜெயமோகன் எழுதிய சோற்றுக்கடன் சிறுகதையைப் பற்றி வம்சி ஷைலஜா அக்கா அறம் நூலில் பதிப்புரையில் குறிப்பிட்டார்கள். அந்த நூலில் சில தனிமனிதர்களின் உண்மைக்க்தைகள் வரும். ஒருவன் கெத்தில் சாஹிப் ஹோட்டலில் சுமார் 5வருடங்கள் காசு கொடுக்காமல் சாப்பிட்டான். அது 1960 களில். மெனு கார்டோ, விலைப்பட்டியலோ கிடையாது. மதியமும் இரவும் மட்டும் தான் உணவு. சாப்பிட்டவர்கள் வெளியோ போகும்போது ஒரு உண்டியல் இருக்கும் அதிலே அவரவருக்கு எவ்வள்வு போடவேண்டுமோ அவ்வள்வு போடுவார்கள். உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் படிக்கும் ஒருவன் பசிபட்டினியால் வாடும்போது கெத்தில்சாஹிப் ஹோட்டலைப் பற்றி கேள்விப்பட்டு அங்கேபோய் சாப்பிடுகிறான். அவனுடைய தாய்கூட ஆக்கியசோற்றில் 4 பேர் சாப்பிடவேண்டும் என்பதற்காக அரைவயிறு தான் சோறிட்டாள் ஆனால் கெத்தில் சாஹிப் கை தின்னத்தின்ன இலையில் சோற்றை போட்டுக்கொண்டேயிருந்தது. அவன் தாயின் கையாக உணர்ந்தான். 5 ஆண்டுகள் சாப்பிட்டு யூனிவர்சிட்டி காலேஜில் படித்து வேலைகிடைத்தவுடன் 20,000 ரூ சீட்டு எடுத்துவந்து அந்த உண்டியலில் போட்டானாம். 1970களில் 20000 ரூக்கு திருவனந்தபுரத்தில் ஒரு வீடே வாங்கலாம். அதற்காக கெத்தில் சாஹிப் நன்றாக உபசரிக்கவும் இல்லை, அவன் எதுவுமே போடாதபோதும் எந்த வித்தியாசமும் காட்டவில்லை. அந்த கைகள் சிக்கன்குழம்பு, லெக்பீஸ், ஈரல், என போட்டுக்கொண்டேயிருக்கும்.
இப்படி ஹோட்டல் நடத்திய கெத்தில் சாஹிப் ஒன்றும் குடிமொழுகி போய்விடவில்லை, சிறப்பாகத்தான் வாழ்ந்தாராம்.
இப்போது ரஹ்மானியா கெத்தில் சாஹிப் என்ற பெயரில் இருக்கிற ஒரு ஹோட்டலுக்கு சென்றேன், அது கெத்தில் சாஹிப்பின் வாரிசுகளா? என தெரியாது, அதே அறத்தை பின்பற்றுகிறார்களா என்றும் தெரியவில்லை.
உள்ளே நாற்காலிகளோ அலங்கார விளக்குகளோ கிடையாது, லேபிள், பெஞ்ச் டைப். இலையில் சப்பாத்தி வைக்கிறார்கள், ஒரு கிண்ணத்தில் சிக்கன் சூப் போன்ற கறி, பின்னர் தேங்காய் எண்ணெயில் வறுத்த சிக்கன் துண்டுகள் , ஈரல்கள், செம்மீன்பொடி இவையெல்லாம் எண்ணிக்கையே கிடையாது எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம். ஒரு பிளேட்டுக்கு ரூ180. வாங்குகிறார்கள். ஆனால் பரிமாறியபோது சிக்கன் லெக் பீஸ் மாதிரி இல்லை. காக்காவாக இருக்குமோ என்றால் அதைவிட பெரியது. சராசரி சிக்கன் லெக் பீஸைவிட சிறியது. எப்படியோ சுவை நன்றாக இருந்தது, கூச்சத்தில் சரியாக சாப்பிடவில்லை, ஆனாலும் 180 ரூ.
இரவு 8:45 க்கு சாலை பாஜாரில் கடைகளை அடைத்துவிட்டார்கள். எனக்கு பயமாகிவிட்டது ஏதாவது பிரச்சனையா? என்றால் அதுதான் வழக்கமாம். ஞாயிற்றுகிழமைகளில் எல்லாக் கடைகளும் திறந்திருக்காது. அதுவும் 8 மணிக்கு மேல்தான் திறப்பார்கள். திருப்தியோடு வாழ்கிறார்கள் போல.
மிருகக்காட்சி சாலையில் பறவைகள், குரங்குகள் மான்களைப் பார்க்கும்போது கூட பரவாயில்லை, புலியை அடைத்துவைத்த கூட்டில் புலி கோபமாக உலாத்துகிறது. அதன் கண்கள் காட்டைத்தேடுகிறது. நமக்கு காட்சிப் பொருளுக்காக இப்படி விலங்குகளை ஆயுள் சிறை வைக்கவேண்டுமா? அல்லது விலங்குகளை ஓரிரு வருடங்களில் மாற்றிக்கொண்டேயிருக்கலாம்.
பெங்களூர், மைசூர் சென்றபோது அனந்தபுரியை மீண்டும் பார்க்கவேண்டுபோல இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக