செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

தாய் - பெண் - தெய்வங்கள்.


 ஒரு நாவலை வாசித்தபோது அங்கே முத்தாலம்மன் பற்றிய உபகதை ஒன்று வருகிறது, மூக்கச்சாம்பான் என்பவனின் மூதாதையர்கள் சோழதேசம், அந்த சேரிமக்கள் அனைவரும் கைலாசநாதர் கோவிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட அடிமைகளாக இருக்கிறார்கள். சோழமாமன்னன் தஞ்சைப்பெருவுடையார் கோவிலை கட்ட கடைக்கால் நாட்டும்போது துவாரபாலகர்கள் நரபலி கேட்க ஆயிரம பஞ்சமர்களைப் பிடித்து நரபலிகொடுக்க சோழமன்னன் முடிவுசெய்து பறையறிவிக்கிறான். இதைக் கேள்விப்பட்ட சேரி ஜனங்கள் பயந்து தப்பிக்கிறார்கள். அப்போது மூக்கச்சாம்பானும் அவனது மனைவியும் நள்ளிரவில் சேரியை விட்டு அமாவாசை நாளில் தப்பித்து வேற நாட்டுக்கு தஞ்சம்புகலாம் என்று கிளம்புகிறார்கள். இரவில் அடைமழைவேறு..சேரி ஜனங்கள் தப்பித்து ஓடுவதை கேள்விப்ப்ட்ட சோழமன்னர் பிரதானிகள் படைகளை அனுப்பி அவர்களை பிடித்துவர உத்தரவு போடுகிறார்கள். காவிரியாற்றை நெருங்குகிறார்கள், ஆற்றில் கரைதொட்டு வெள்ளம் சென்றுகொண்டிருக்கிறது, பின்னால் சோழபடைகள் விரட்டிவருகிறது, ஆற்றில் இறங்கினால் வெள்ளம் அடித்துக்கொண்டுபோகும், படையினரிடம் சிக்கினால் சிரச்சேதம் உறுதி. இந்த சூழ்நிலையில் மழைக்கு ஒரு ஆலமரத்தின்கீழே ஒதுங்கிறார்கள். அப்போது ஒரு பெண் சிறிய விளக்குவைத்துக்கொண்டு இவர்களை நோக்கிவருகிறாள், பின்னர் தானும் காவிரியை தாண்டி அக்கறை செல்லப்போவதாகவும் தன் பின்னே வருமாறு பெரியமூக்கன் தம்பதியை அழைக்கிறாள். அந்தப் பெண் வெள்ளம் புரண்டு ஓடுகிற காவிரியில் அசாத்தியமாக இறங்குகிறாள் இவர்களும் பிந்தொடர்கிறார்கள் காவிரி அவர்களுக்கு வழிவிடுகிறது பின்னால் துரத்திவந்த சோழப்படையினர் ஆற்றில் இறங்கியபோது வெள்ளம் அவர்களை அடித்துக்கொண்டு போய்விடுகிறது. அந்த பெண்ணிற்கு அம்மைநோய் கண்டு சிலதினங்களில் இறந்துபோகிறாள், இறப்பதற்கு முன்பு தான் ஒரு தெய்வப்பிறவி என்றும் இவர்களை காப்பதற்கே வந்ததாகவும் இறந்தவுடன் அடக்கம்செய்து எரித்த சாம்பலை குறிப்பிட்ட ஊருக்குச்சென்று மரத்தில் போடுங்கள் அது ஒரு புற்றாக வளரும், அதை முத்தாலம்மன் என பெயரிட்டு வழிபடுங்கள் என்று சொன்னதாக அந்த கதை அமைகிறது.

 இதே கதை மாதிரியே, கி.ரா. எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலில் ஒரு குழுமக்கள் தெலுங்கு தேசத்தின் துலுக்கராஜாக் களிடமிருந்து தப்பித்து அரவதேசம் வருகின்ற ஒரு குடும்பத்திற்கு ஒரு கன்னிப்பெண் விளக்குடன், பனை நாரினால் செய்யப்பட்ட பெட்டியோடு வந்து ஒரு ஆற்றைக்கடக்க உதவுகிறாள், அவர்களை துரத்திவந்த துலுக்கராஜாவின் படைகளால் வெள்ளம் பொங்கிவரும் ஆற்றைக்கடக்க இயலவில்லை. அவர்களை காப்பாற்றிய கன்னிப்பெண் நோய்வாய்ப்பட்டு இறந்துபோகிறாள் அவளை ரேணுகாதேவி என்ற பெயரில் குலசாமியாக வழிபடுகிறார்கள் என்பது நடைமுறையாகவும் இருக்கிறது.

 தமிழகத்தில் பெண் தெய்வங்கள் அதாவது ஆண் துணையின்றி இருக்கும் சாமிகள் யாவும் வைதீகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாதது, சில பெண் தெய்வங்கள் ஊருக்கு பொதுவாகவும், சில தெய்வங்கள் சில குடும்பங்களுக்கு மட்டும் என நடப்பில் பார்க்கிறோம். எல்லா ஊர்களிலும் மாரியம்மன் போன்ற சினங்கொண்ட தெய்வங்கள் ‘வடக்கு’ நோக்கியே பார்த்திருக்கிறது, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் தமிழகம் என்பது கேரளம் உள்ளிட்ட பகுதி முப்புரமும் கடல் சூழ்ந்தது, அதனால் பகைப்படை என்பது வடக்கிலிருந்துதான் வரமுடியும் அதை தடுக்கவே அம்மன் வடக்கு நோக்கி இருக்கிறார். இந்த கோவில்களில் பிராமணர்கள் பூசாரிகளாக இல்லை , பண்டாரம், குயவர் போன்ற சாதியினரே பூசாரிகளாக இருக்கிறார்கள்.வைதீகம் பெண் தெய்வத்தை சிவனுக்கு மனைவியாக, திருமாலுக்கு தங்கையாக மாற்றியபோதும் ‘தாய்’த்தெய்வத்தின் தனித்த அடையாளம் முற்றிலும் நீங்கிவிடவில்லை. தீச்சட்டி எடுப்பது, பொங்கலிடுவது முளைப்பாரி, வீதிஉலாவரும்போது சாமிசிலை எடுத்துவருவதர்குப் பதிலாக சாமியாடிகள்மேல் அருள் வந்து ஆடுவது, இரத்தப்பலி போன்றவை தாய்த்தெய்வத்தின் தனி அடையாளம்.

 சில பெருந்தெய்வக் கோவில்களில் தந்தைத் தெய்வத்தைவிட தாய்தெய்வம் ஆழ்ந்த பக்திக்கும் மரியாதைக்கும் உரியதாக உள்ளது, கன்னியாகுமரியில் குமரித்தெய்வம், திருநெல்வேலி காந்திமதி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், திருவானைக்கால் அகிலாண்டேசுவரி, காஞ்சி காமாட்சி போன்றவற்றில் தாய்த்தெய்வத்தின் மீதான வழிபாடு சிறப்புடையதாக இருக்கிறது. சில தாய்த்தெய்வங்கள் குறிப்பிட்ட மக்கள்திரள்களுக்கு உரியவையாக இருக்கிறது, காஞ்சி காமாட்சியம்மன் கோவில் சங்கராச்சியர்களுக்கு முன்பு கம்மாளர் ‘விசுவகர்மா’’ சாதியாருக்கு சொந்தமானது, காமாட்சிதெய்வம் கொளதமபுத்தரின் தாயார் தாராதேவி வழிபாட்டிலிருந்து தோன்றியிருக்கவேண்டும் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதேபோல் ’பத்திரகாளி’ அம்மனை தமிழகத்தில் நாடார்கள் அதிகமாக வழிபடுகிறார்கள். பத்ரம் என்ற வடசொல்லுக்கு ஓலை என்று பொருள். மரபுவழியாக பனைத்தொழிலோடு தொடர்புகொண்ட மக்கள்திரளின் (clan)தெய்வமாக தோன்றியிருக்கவேண்டும்.

 தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதத்தில் இயேசுவைப்போல மரியமாதாவை வழிபடும் வழக்கமுள்ளது, தொடக்ககால மதம் பரப்புநர்கள் தமிழர்களின் தாய்தெய்வ வழிபாட்டிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை உண்ர்ந்து அதை கிறிஸ்தவத்தில் ஏற்படுத்தியிருக்கலாம். 18ம் நூற்றாண்டில் திருச்சிக்கு அருகே ஏலங்குறிச்சியில் தூயமரியாளுக்கு வீரமாமுனிவர் கோவில் கட்டினார், அந்த கோவிலின் மாதாவுக்கு ‘பெரியநாயகி’ என்று பெயரிட்டார்.அங்கு அமைந்த குடியிருப்புகளுக்கு அன்னையின் காவலில் உள்ள ஊர் என்பதற்கு ‘திருக்காவலூர்’ என்று பெயரிட்டார். இன்னும் கத்தோலிக்க தேவாலயத்தை மாதா கோவில் என்று அழைக்கும் வழக்கம் கிறிஸ்தவர் அல்லாத மக்களிடமுண்டு.

 மனிதர்களாக வாழ்ந்து மரித்தவர்களையும் அம்மனாக வழிபடும் மரபும் இருக்கிறது, பூப்பெய்தும் பருவத்திலோ இளவயதிலோ இறந்த பெண்கள் அந்த குடும்பத்திற்குரிய கன்னித் தெய்வமாக வழிபடப்படுகின்றனர்.திருமணமாகி குழந்தைபெற்று இளவயதில் இறந்துபோன பெண்களும் குடும்ப தெய்வங்களானார்கள் அவர்களை மாலையம்மன் என்று வழிபடுகிறார்கள். பேரரசர்கள் இறந்தபின் அவர்களுக்கு பள்ளிப்படை (சமாதி) அமைப்பது இருந்தது போல, அரசன் மனைவி மங்கலப்பெண்ணாக இறந்திருந்தால் பள்ளிப்படை கோவில் எழுப்பியிருக்கிறார்கள். சமயபுரம் மாரியம்மன் கோவில் சோழப்பெருந்தேவி ஒருவர் அம்மை நோய்கண்டு இறந்தபின் எழுப்பப்பட்ட பள்ளிப்படை என்கிறார்கள் பண்பாட்டு ஆய்வாளர்கள்.

(தகவல்கள்- தொ.பரமசிவன்  எழுதிய  தாய்தெய்வம் கட்டுரையிலிருந்து)

5 கருத்துகள்:

kashyapan சொன்னது…

மதிப்பிற்குறிய தோழர் ஹரிஹரன் அவர்களுக்கு ! 29-6 13 அன்ர மதுரையில் தீக்கதிர் ஐம்பதாம் ஆண்டு நீறைவு விழாவில் கலந்து கொண்டென் ! பணியற்றிய பழைய தோழர்களுக்கு பொன்னாடை போர்த்தி பிரகாஷ் காரத் கௌரவித்தார்! மலரும் வேளியிடப்பட்டது ! அதில் என்னுடைய கட்டுரையும் உள்ளது ! கட்டுரையில் உங்களைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்! தகவலுக்காக ---காஸ்யபன் .

hariharan சொன்னது…

wநன்றி தோழரே!, நான் அந்த மலரை இன்னும் வாசிக்கவில்லை. திசம்பர் மாதம் இந்தியா செல்லும்போது வாங்கிப்படிக்கிறேன்.

kashyapan சொன்னது…

தோழரே! உங்கள் மின் அஞ்சல் முகவ்ரியைக் கொடுத்தால் கட்டுரையை அனுப்ப முயற்சிக்கிறென் ! ---காஸ்யபன்.

hariharan சொன்னது…

தோழரே! che_hari@hotmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
.நன்றி

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஆச்சரியமளிக்கும் விரிவான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!