புதன், 21 ஆகஸ்ட், 2013

'வெட்டுப்புலி' நாவல்


அண்மையில் வாசித்த நாவல் வெட்டுப்புலி, தமிழ்மகன் எழுதிய நாவல். சென்ற ஆண்டில் கோவை புத்தகத்திருவிழாவில் வாங்கி வாசிக்காமலேயெ இருந்தேன். தகவல்கள் நிறைந்த கட்டுரைகளைப் படித்து சலிப்புதட்டும்போது புனைவு இலக்கியம் நோக்கி மனம் செல்கிறது. எப்படி இந்த நூலை வாங்கினேன் என்று தெரியவில்லை, தமிழ்மகன் எழுதிய இன்னொரு புத்தகமும் வாங்கினேன் ‘ஆண்பெல்-பெண்பால்’ அதை வாசித்தபோது ஒன்றுமே புரியவில்லை, எனது துணைவியாரும் வாசித்துவிட்டு புரியாமல் கைவிடப்பட்டது அதேபோல் தான் இதுவும் இருக்குமோ! என்று விமர்சனங்கள் சிலவற்றை வாசித்தபோது இந்நாவல் ஒரு தமிழகத்தின் குறிப்பீட்ட பகுதி மக்களின ஏறத்தாழ நூற்றாண்டுவரலாற்றை தந்திருக்கிறார். அந்த நாவலில் வருகின்ற மொழி சென்னை மொழியல்ல, திருவள்ளூர் பகுதியின் மொழி. எனக்கு ஏற்கனவே மணலி, ஆண்டார்குப்பம், புழல், செங்குன்றம், கொசப்பூர் பகுதி மக்கள் பேசும் மொழி எனக்கு பரிச்சயமாக இருந்தது. எண்ணற்ற சொற்களுக்கு கடைசிபக்கத்தில் பொருள் கொடுத்திருக்கிறார். தமிழ்-தமிழ் அகராதி தேவைப்படுகிறது. கரிசல் வட்டார மொழிக்கென்றே கி.ரா. ஒரு நூல் எழுதியிருக்கிறார். இதை ஒரு வரலாற்றுப்புதினம் என்று கூடச்சொல்லலாம். மன்னர்களைப் பற்றி அவர்களின் வீரம்,போர்கள், அந்தப்புரம் மட்டும் வரலாறுகள் அல்லவே! மக்கள் அந்த காலகட்டத்தில் எப்படி வாழ்ந்தார்கள், என்ன சாப்பிட்டார்கள், கல்விமுறை எப்படி, தொழில் என்ன? அறிவியல் வளர்ச்சி, உடைகள், சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நிலவியதா,எப்படி பயணம் மேற்கொண்டார்கள், நாட்டு விடுதலையில் கிராமபுற மக்களின் பங்கு என்ன? வெள்ளையர்களின் ஆட்சியை எப்படி பார்த்தார்கள்? சினிமாவின் வளர்ச்சி, திராவிட இயக்கங்களின் தோற்றம், பெரியாரின் தாக்கம் என பல தகவல்கள் அடங்கிய நாவலாக அமைந்திருக்கிறது.

ஒரு தீப்பெட்டி அட்டையில் ’வெட்டுப்புலி’ படத்தை தாங்கி பார்த்திருக்கிறோம், அது திருவெற்றியூரில் இருக்கிற விம்கோ தீப்பெட்டி தொழிற்சாலையின் தயாரிப்பு. ஊத்துக்கொட்டை அருகே சென்னாரெட்டி என்பவர் ஒரு சிறுத்தையை கத்தியால் குத்தி கொன்றுவிடுகிறார், வெள்ளைக்காரர்கள் துப்பாக்கிகொண்டு சிரமப்பட்டு வேட்டையாடிக்கொல்லும் சிறுத்தையை கத்தியை வைத்து கொன்றது வீரதீரச்செயலாக செய்தித்தாளில் அச்சாகிறது, அந்த பிரபலத்தினால் தீப்பெட்டியின் அட்டையில் அந்தப் படத்தை அச்சடித்து விறப்னையாகிறது. இவர் சிறுத்தையைக் கொன்றது பூண்டி அருகேயுள்ள சின்னாரெட்டியின் சொந்த ஊரான ரங்காவரத்தில் ஒருமாதிரியாகவும் லட்சுமணன் ஊரான ஜகந்தாதபுரத்தில் வேறுமாதிரியாகவும் சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அவரை சிறுத்தைசென்னாரெட்டி என்று சொன்னால் சுற்றுவட்டாரத்திற்கே தெரியும். லட்சுமணன் வசிக்கும் ஜெகன்நாதபுரத்தை பற்றிய சொல்லப்படுகிறது, அந்த ஊர் சென்னையிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள ஊர்.வெள்ளையர்களின் ஆட்சியில் கிராமங்களில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதே தெரியாமலே இருக்கிறார்கள், அது ஏதோ நகரத்தில் இருப்பவர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான சண்டை என்றே கருதுகிறார்கள். கிராமங்களில் அக்ரஹாரங்கள் என்ற அகரம் தனியாகவும், கொஞ்சம் நிலம் வைத்திருக்கும் பிறசாதிகள் அக்ரஹாரத்திற்கு அருகேயும், விவசாயிகளுக்கு கலப்பை செய்யும் ஆசாரிகளும் இருந்தார்கள். பறைசேரிகள் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாகவும் இருக்கின்றன, செத்துப்போன மாடுகளை எடுத்துக்கொண்டுபோய் சாப்பிடும் ‘சக்கிலிப்பாளையம்’ இன்னும் கொஞ்சம் தள்ளியிருக்கிறது. விவசாயிகள் வருடந்தோறும் விளைச்சலில் பாதியை ஜமீனுக்கு அளக்கவேண்டும்.கல்விபண்டு என்று வருசாவருஷம் விளைச்சலில் வரி அளப்பார்கள், எந்த வாத்தியானும் ஊருக்குள் வந்து பாடம் சொல்லித்தந்ததில்லை. ஜமீந்தார்கள் ஒவ்வொரு ஊரையும் நானூறு ரூபாய் ரொக்கம் கொடுத்து வாங்கியிருந்தார்கள். மாட்டுவண்டி வைத்திருப்பதையே விவசாயிகளுக்கு பெரியவிசயம், “குதிரை வச்சிருந்தா ஜமீன் எதிரியா நினைச்சி சுட்டே போடுவான்”.
 

 சீதாரமையரு ஆத்துல குளிச்சிட்டு கரையேறும்போது கலப்பையை தூக்கிட்டு ஆளுங்க, மாடு-கன்னு நடமாட ஆரம்பிச்சுரும், பதபதைச்சுபோவாரு ஐயரு. ‘தீட்டாப்போச்சு தீட்டாப்போச்சு’ நு துடிச்சு போய்டுவாரு. சாதி விசயங்களில் கறாராக இருந்தார்கள். பள்ளு பறைகள் மற்றவர்களை தொட்டு தீட்டு ஏற்படும் பாவம் இவர்களுக்கு வந்துசேரும் என அஞ்சினார்கள். பெண்கள் கிராமங்களில் எப்படி இருந்தார்கள் என்பதற்கு, லட்சுமணனின் தாய், “எல்லாரும் சாப்பிட்டுவிட்டு முடித்துப் படுத்த பின்னாடி சுவர் பக்கமாக திரும்பி உட்கார்ந்து மிச்ச்மிருக்கும் சாப்பாட்டை குழம்பு ஊற்றி நான்கு உருண்டையாக வாயில் போட்டுக்கொள்வாள்”. செருப்பு அணிவதற்கே கிராமத்தில் பெண்கள் ‘யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க’ என்று லட்சுமணனின் மனைவி சொல்கிறார். ஆண்கள் எல்லாரும் குடுமி வைத்திருந்தார்கள், சிலர் சுத்தமாக தலைகுளித்து பேன் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள் சிலர் பக்கத்தில் வந்தாலே வேப்பெண்னெய் வாசம் அடிக்கும். அந்த ஊரில் இருந்த மணி ஐயருடைய தாத்தா காலத்தில் நவாப் வரிவசூலுக்காக அந்த ஊருக்கு வருகிறார், ஊர்க்காரர்கள் எல்லாரும் வணங்கி மரியாதை செலுத்துகிறார்கள்.மணி ஐயரின் தாத்தாவும் பாட்டியும் சாஷ்டங்காமக நவாப் காலில் விழுந்து வணக்கம் தெரிவிக்கிறார்கள். நவாபின் மனைவியை ‘பூ நாகம்’ தீண்டாமல் காப்பாற்றியதற்கு இருநூறு காணியை இனாமாகத் தந்தான் ஐயருக்கு, அதுவே இனாம் அகரம் ஆகிப்போனது. சேரிமக்களுக்கு ஏன் காணிகள் இல்லாமல் விவசாயக்கூலிகளாக இருந்தார்கள் என்பதற்கு, தரிசு நிலத்தை திருத்தி உழவுசெய்து விளைச்சலில் பாதியை ஜமீனுக்கு அளந்தால் நிலம் சொந்தமாகிவிடும். சேரிஜனம் அவ்வளவு சரியாக நெல்லை அளந்து நிலத்தை தக்கவைத்துக்கொள்வதில்லை. ஆனால் திருத்திய நிலத்தை ஒருமூட்டை நெல்லுக்கும், கேழ்வரகிற்கும் கொடுத்துவிடுவார்கள், மீண்டும் தரிசு நிலத்தை பண்படுத்திக்கொள்ளலாம் என முயற்சிப்பார்கள். ஆனால் பண்படுத்திய நிலத்தை மீண்டும் தானியத்திற்கு கொடுத்துவிடுவார்கள். அறியாமையும் கூடவே பெரிய அளவில் நிலத்தை ஆக்ரமித்து உழுது பயிர் செய்வதில் அவர்களுக்கு வெட்கமும் தயக்கமும் இருந்தது.

தெலுங்குக்காரர்களுக்கு விவசாயம் செய்பவன் ரெட்டி, அதே சாதிப்பெயரே ஆந்திரத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் வன்னியர்களுக்கும் ஆகிப்போனது, இன்னும் நாயகர்கள் என்றும், கொஞ்சம் தெற்கே போனால் படையாச்சி, வன்னியர்கள் என்றும் சாதி பெயர்களில் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். சாதியை குலகவுரவத்தை தசரதரெட்டியின் முன்னோர்கள் காலத்திலிருந்தே காப்பாற்றி வருகிறார்கள் என்பதால் யாரும் மீறத்துணியவில்லை. லட்சுமணனை வெள்ளைக்கார ஜேம்ஸ்க்கு அவனுடைய குதிரையில் ஏறியதிலிருந்து பிடிக்காமல்போனது, வெள்ளைக்காரனிடமிருந்து காப்பாற்ற அவனுடைய பெரியம்மாவீட்டிற்கு தசரதன் அனுப்பிவைக்கிறார். அங்கே ரங்காவரம் பூண்டி ஏரியை அப்போதுதான் கட்டுகிறார்கள், அது சென்னையின் குடிநீர் சப்ளைக்காக வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்படுகிறது. ஏரியின் காண்ட்ராக்ட் வேலை சிறுத்தை சென்னாரெட்டியின் மகனுக்கு கிடைக்கிறது, அங்கே ஏரியை ஆழப்படுத்தவும் அகலப்படுத்தும் பணிக்கு லட்சுமணனும் செல்கிறான். அங்கே குணவதிமீது காதல்வருகிறது. அவள் சேரிப்பெண் என்று தெரிந்தும் அவளை மணக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறான். அதுவரை அவனும் சேரி ஜனக்களை அவர்கள் வயதானவர்களாக இருந்தாலும் பேர் சொல்லி அழைப்பது, ஒருமையில் விளிப்பது தான் ஊர்ப்பழக்கம். குணவதி லட்சுமணனை ரெட்டியாரே! என்றுதான் அழைக்கிறாள், தன்னுடைய காதலை அவளிடம் சொல்கிறான், இனிமேல் ரெட்டியாரே என்று சொல்லாதே! என்கிறாள். “நான் ரெட்டியார்னு சொல்லாட்டா எல்லாம் சரியாடுமா? நீ எங்க சித்தப்பனை வாடா போடானு கூப்புடறே.. எங்கம்மாவ பேடிட்டுத்தான் கூப்பிடுறே. அதையெல்லாம் வுட்டுடமுடியுமா? அவள் கேட்ட கேள்விக்கு நிலைகுலைந்து போனான்.

 நாம் இனிமேல் அவர்களை வேறுமாதிரி அழைக்கமுடியுமா?சாத்தியா? எப்பேர்பட்ட பைத்தியக்காரத்தனம்? குணவதியின் அம்மாவை எப்படி அத்தையென்றும், அவளுடைய சித்தப்பனை மாமா என்றும் எப்படி அழைக்கமுடியும்? எல்லோரையும் வீட்டுக்குள் சேர்த்துக்கொள்ள முடியுமா? நினைத்துப்பார்ர்க்க முடியாத செயலாக அந்தக் கணம் உணர்ந்தான். இப்போதுதான் ஞானம் வந்தமாதிரி யோசித்தான். அவர்களும் பார்க்கிறார்கள், பேசுகிறார்கள், கேட்கிறார்கள் , உழைக்கிறார்கள் என்பது அவர்களையும் நம்மையம் ஒரே தராசில் வைக்கப்போதாதா? அவன் உலகைப் புதிதாகப்பார்த்தான். அந்தக்காதலினால் சேரி ஜனங்கள் குடியிருப்பை காலிசெய்ய நேர்ந்தது. லட்சுமணனின் அப்பா தசரதனும் ஊர்க்காரர்களைப்போல் மூர்க்கமாக சேரி ஜனங்களை நடத்துவதில்லை, ஒருமுறை மீதமிருந்த கூழை சேரிப்பெண்ணிடம் குடிக்கச்சொன்னபொது சக உழவுக்காரர்கள் எதிர்த்தார்கள் அதை சட்டை செய்யாமல், நாய்க்கு கூட ஊத்துவ, மனுசாளுக்குதரக்கூடாதோ என்ற தசரதனின் சொல்லுக்கு அவள் குடித்த பானையில் நாளை நான் எப்படி கூழ் குடிக்கமுடியும் என்கிறான். லட்சுமணனுக்கு பெரியார் கொள்கையில் நாட்டம் ஏற்படுகிறது.

 தசரதனின் குடும்பக்கதை தனியாகவும், ஆறுமுகமுதலி குடும்பக்கதை தனியாக சொல்லப்படுகிறது, ஆறுமுகமுதலி ஊத்துக்கோட்டையில் விவசாயம் செய்பவர், அவருடைய அண்ணன் கணேசன் சென்னையில் ரயில்வேயில் வேலைசெய்துகொண்டு மாம்பலத்தில் குடியிருக்கிறார் கணேசன் பெரியார் கொள்கையுடையவர், அண்ணனின் கொள்கை எதுவும் ஆறுமுகமுதலிக்கு பிடிக்கவில்லை. ஏன் பிராமணர்களை எதிர்க்கவேண்டும் என்கிறார். கணேசமுதலி என்ற சாதி அடையாளத்தை துறப்பதே பெரியார் கட்சியில் சேருவதற்கு முன்னுரை. கணெசனின் மகன் நடேசன் அப்பவைப்போல பெரியார் சிந்தனையிருந்தாலும் பிரிவினையை எதிர்த்தான், அப்பா பாரதிதாசனை வாசிக்கும்போது நடேசன் பாரதியைப் புகழ்ந்தான். ஆறுமுகமுதலி சினிமா தயாரிக்கும் ஆசையில் அலைகிறார், முயற்சி தோற்று ஒரு சினிமாக்கொட்டகை கட்டுகிறார். சுயமரியாதை இயக்கம், ஹிந்தி எதிர்ப்பு , அண்ணா பெரியாரை விட்டு பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தது என்று செல்கிறது. ஜஸ்டீஸ் பார்ட்டியில் முதலியார்களின் ஆதிக்கம்தான் இருந்தது, அதன் தாக்கம் பச்சையப்பா (முதலி) கல்லூரியிலும் சுயமரியாதை சிந்தனை வளர்ந்தது.

 சென்னை என்றாலே அது வேப்பேரி,செண்ட்ரல்,  புரசைவாக்கம் பகுதிகளில் வீடுகள் இருந்தன, பூந்தமல்லி சாலையின் மருங்கில் விவசாயம் நடைபெற்றது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. காபி குடித்தேன் என்று வெளியில் சொல்வதற்கே வெட்கப்பட்டார்கள். சைக்கிள் வைத்திருப்பவர்கள், ஓட்டத்தெரிந்தவர்கள் வசதியானவர்கள்.( இன்னும் எனது கிராமத்தில் சிலருக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது) 40களில் ஜப்பான்காரன் சென்னைப்பட்டணத்தில் குண்டுவீசியதையடுத்து நகரவாசிகள் காலிசெய்து அவரவர் சொந்தங்களைத் தேடி அசலூருக்கு ஓடுகிறார்கள். சினிமா பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆறுமுகமுதலிக்கு சினிமாப்படம் தயாரிக்க கிறுக்குபிடித்து சென்னைவந்து ஸ்டுடியோவுக்கு சென்று விசாரிக்கிறார், அப்போது எல்லாம் பக்திப்படங்கள் தான், கம்சவதம், பிரகலாதா, வள்ளிதிருமணம் என்ற படங்கள் தான். ஆறுமுகமுதலியின் அண்ணன் கணேசன், அந்த மாதிரி குப்பையெல்லாம் கிளராதே, வெளிநாட்டில் சமூகபடங்கள், குடும்ப உறவுகள் பற்றிய ப்டங்கள் எல்லாம் வருது அதைமாதிரி எடுக்கனும் என்கிறார். சென்னை கெயிட்டி தியேட்டரில் சினிமா பார்ப்பதற்கு ஆறுமுகமுதலி சென்ற போது மக்கள் “சினிமாக்கொட்டகையின் முன்னே பசித்திருப்பவன் சாப்பாட்டுக்கடைப் பார்க்கிற தோரணையில் ஏக்கம் கொண்டு காத்திருந்தார்கள்”. சென்னையில் போக்குவரத்து டிராம்கள் இருந்ததை பதிவு செய்கிறது. இன்றைக்கு இருக்கிற ‘பெரியார்திடல்’ காமராஜர் ஆட்சி காலத்தில் அரசு நிலத்தை ஏலம்போடும்போது அதில் பெரியாரும் டெண்டர்மனு போட்டிருந்தார், பெரியாருக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக போட்டியாளர்களான ஜி;டி.நாயுடுவையும் ஆதித்தனாரிடம் பேசி ஏலத்திலிருந்து வாபஸ் வாங்கச்சொன்னார் காமராஜர். இந்த விபரம் பெரியாருக்குத் தெரிந்தால் கோபப்பட்டிருப்பார், அவரும் அவ்வளவு நேர்மை, ஈரோடு ரயில்நிலையத்திற்கே அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுத்தவர் பெரியார் என்ற தகவலும் உண்டு.

 நாற்பதுகள், முப்பதுகள், ஐம்பதுகள் என நாவலின் வரலாறு வளர்ச்சிபெறுகிறது. ஐம்பதுகளில் காந்தியைக்கொல்ல சதிசெய்தவராகக் கருதிய சாவர்க்கரின் படமும் காந்தியின் படமும் பாராளுமன்றத்தில் மாட்டப்பட்டன.பெரியார் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுசரித்தது அண்ணாவை பெரியாரிடமிருந்து முற்றிலுமாக விலகச்செய்தது. தென்னிந்திய நலுரிமைச்சங்கம் விக்டோரியா ஹாலில் 1915-16ல் துவக்கப்பட்டது, அதிலும் ஜஸ்டீஸ் பார்டியிலும் முதலியார் சமூகம் அதிக பங்குவகித்ததாலும் பச்சையப்பர் கல்லூரியில் அதன் தாக்கம் இருந்தது, அதே சமயத்தில் சாதி ஈடுபாட்டை வெளிக்கட்டிக்கொள்வதை மாணவர்கள் இழிவாகக்கருதினர் என்ற செய்தி இன்று முரணாக உள்ளது. பெரியார், அண்ணாத்துரையை சார்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தால் பணம் சம்பாதிப்பதில்தான் குறியாக இருப்பார்கள் என்ற செய்தி எவ்வளவு சரி!ஐம்பதுகளில் திராவிட இயக்கத்தினர் ‘கருணாநிதி வகிடு’ சீவியிருப்பார்கள். இப்போது நடிகர்கள் ஸ்டைலில் முடிவெட்டுகிறார்கள் என்பது மாற்றம். இந்த நாவலை கல்லூரிப்பேராசிரியர் ஒருவர் ஆய்வு செய்து ‘காலஎந்திரத்தில்’ பயணம் செய்வது போல் உள்ளதென ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறார். http://cdmissmdu.blogspot.in/2013/05/vettupuli-novel-what-i-taught-and.html இதை வாசித்தால் நாவலை வாசிக்க நிச்சயம் தூண்டும்.
 

கருத்துகள் இல்லை: