ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

டி.செல்வராஜ் எழுதிய “தோல்” நாவல்..

டி.செல்வராஜ் எழுதிய “தோல்” நாவல்..இந்த நாவல் வெளிவந்த நேரத்தில் எழுத்தாளர் தோழர்.காஷ்யபன் சொன்னார் (2011) இந்த ஆண்டில் சிறப்பான படைப்புகளில் ஒன்றாக “தோல்” இருக்கும் என்றார். அது பொய்த்துப் போகவில்லை 2012ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் தோல் பதனிடும் ஆலைகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களைப் பற்றிய நாவல் என்றபோதும் தொழிற்சங்க இயக்கம், இடதுசாரி இயக்கம் தடைசெய்யப்பட்ட காலம், வர்க்கப் போராட்டத்துடன் அடித்தட்டுமக்களின் சமூக பரிணாமங்களையும் நாவல் சொல்கிறது. இந்த நாவலில் 117 பாத்திரங்கள் வருகிறார்கள், யார் இதில் கதாபாத்திரம் ஒசேப்புவா, சங்கரனா,வேலாயுதமா, இருதயசாமியா, சாமியார் தங்கசாமியா என்று முடிவுக்கு வரமுடியவில்லை.தோல் ஷாப்பில் பணிபுரியும் பாட்டாளிகள், நகராட்சியில் பீயள்ளும் தொழிலாளர்கள் கதையின் மாந்தர்கள். உழைப்பாளி மக்களை, சமூகத்தின் அடித்தட்டு மக்களை நாயகர்களாகக் கொண்டுள்ள இலக்கியம் மிகவும் குறைவு. தலித் இலக்கியங்கள் அவர்கள் படும் அவலங்களையும் வஞ்சிக்கப்படுவதையும் மட்டுமே காட்டுகின்றன. இந்த நாவல் வஞ்சிக்கப்பட்டவர்களான தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் தங்கள்மீது திணிக்கப்பட்ட இழிவுகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக ஓரணியில் திரண்டு போராடுகிறார்கள், அவர்களுக்கு ஜீவனாக சங்கம் இருக்கிறது. இந்த காலகட்டத்தின் கதைமாந்தர்கள் வீரர்கள் அல்லர், வஞ்சிக்கப்பட்டவர்கள் என்று சொன்ன ரேமண்ட் வில்லியம்ஸ் வரிகளை எழுத்தாளர் கையாண்டுள்ளார்.

“தோல்” ஷாப்புகளில் பணிபுரிபவர்கள் அந்த நகரத்தின் பறையர்களும் அருந்ததியினர்களும், எந்தவித பாதுகாப்பு சாதனங்களின்றியும் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறையின்றியும் 8 மணி நேரம் வேலை என்றல்லாமல் சுரண்டப்படுகிறார்கள். ஆண் தொழிலாளர்களுக்கு அடியும் உதையும், பெண் தொழிலாளர்கள் பணியிடங்களில் பாலியல் வன்புணர்ச்சிக்கும் ஆளாகிறார்கள், நகரத்தில் பிரபலமான ஹாஜியார் அஸன் ராவுத்தர் தோல்ஷாப்பில் சின்னக்கிளி என்ற இளம் பெண்ணை அஸன் ராவுத்தரின் மைத்துனன் காமுகன் முஸ்தபா மீரான் பாலியல் வன்புணர்ச்சி செய்கிறான், அதைத்தட்டி கேட்க காலங்காலமாக அம்மக்களுக்கு துணிவு இல்லை. அதே ஷாப்பில் வேலைசெய்யும் ஓசெப்பிற்கு ‘ஸ்டோர் ரூமிலிருந்து’ கதறும் சின்னக்கிளியின் கதறல் அவனது இதயத்தை கூறுபோடுவதுபோல் இருந்தது, அந்த அறையின் கதவை உடைத்து முஸ்தபாமீரானை அடித்து தாக்கிவிடுகிறான். இச்சம்பவத்தையடுத்து என்ன நடக்கும் என்பதையுணர்ந்த சகபெண் தொழிலாளியும் அவனது காதலியுமான அருக்காணி ஒசேப்பை தப்பியோடவைக்கிறாள். பின்னர் தோல்ஷாப்பு முதலாளிகளின் அடியாள் கழுவத்தேவனிடம் பிடிபட்டு சித்திரவதைக்குள்ளாகிறான். அவ்வழியே சென்ற கத்தோலிக்க பள்ளியில் ஆசிரியராக இருக்கும் இருதயசாமி ஒசேப்பை கழுவத்தேவனிடமிருந்து காப்பாற்றுகிறார்.

வன்புணர்ச்சிக்குள்ளான சின்னக்கிளி இறந்துபோகிறாள், அவளை அடக்கம் செய்வதற்கு வழக்கமாக சேரிமக்கள ஊர்தெருவழியாக அல்லாமல் ஊருணிவழியாகத்தான் செல்வார்கள். அப்போது பெய்த மழையில் ஊருணி நிறைந்து வழிந்ததால் பிணத்தை அவ்வழியே கொண்டுசெல்லமுடியாமலும் ஊரின் தெருவழியே கொண்டுசெல்ல திராணியில்லாமலும் தவித்தார்கள். அந்த ஊரில் சுந்தரேசய்யர் ஒரு வழக்கறிஞரும் காந்தியவாதியுமாவார். அவர் ஹரிஜனசேவா சங்கத்தின் முக்கியபுள்ளியும் மதுரை வைத்தியநாதய்யரின் ஆத்ம சீடரும் ஆவார்.அவரிடம் சென்று சுடுகாட்டுப் பாதைக்காக முறையிட்டார்கள், அந்த மக்கள் சார்பாக ஏற்கனவே அந்த வழக்கை சுந்தரேய்யர் வாதாடி நீதிபெற்றிருக்கிறார்கள் ஆனால் அந்த தீர்ப்பை மேல்சாதியினர் ஏற்றுக்கொள்ளச்செய்ய கையாளாகாத அரசு நிர்வாகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சுந்தரேசய்யர் தன்னுடைய மகன் சங்கரனை பிரச்சனைக்கு தீர்வுகாண அனுப்புகிறார். சங்கரனின் நண்பனும் சப்-கலெக்டருமான வாட்ஸனுன் மேல்சாதிக்காரர்களை அணுகி பேசுகிறார்கள், பொருளாதாரபலமும், சாதிஆதிக்கமும் கொண்டவர்கள் பிடிவாதமாக அரசாங்கத்தின் பேச்சைக்கேட்கமறுக்க பிணத்தை பிராமணன் சங்கரனும் சப்-கலெக்டரும் தூக்கி நீதிமன்றத்தீர்ப்பையும் மனித உரிமையையும் நிலைநாட்டுகிறார்கள். அந்த மக்களின் சுடுகாட்டுப் பாதையுரிமை அமல்செய்யப்படுகிறது.

அந்த காலத்தில் பிராமணர்கள் அருகில் வருவதற்கே தாழ்த்தப்பட்ட மக்கள் அஞ்சுவார்கள், பார்த்தால் தீட்டு, பேசினால் தீட்டு என மடமை கொண்டகாலத்தில் பிராமணனான சங்கரன் அதுவும் ஒரு சக்கிலியப்பெண்ணின் பிணத்தை தூக்கினால் அக்ரகாரம் பொறுத்துக்கொள்ளுமா? சுந்தரேசயர்ரின் குடும்பத்தால் அக்ரகாரம் தீட்டுப்பட்டுவிட்டது என்று வந்தார்கள், அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. வரலாற்றில் திலகரின் பிணத்தை மகாத்மா காந்தி தூக்கவந்தபோது பிராமணர்கள் அவரை தள்ளிவிட்டார்கள், ஒரு வைசியன் பிராமணனின் பிணத்தை தூக்கலாமோ என்று? பிராமணசாதியில் பிறந்த சங்கரன் படிப்படியாக “தோல்” ஷாப் தொழிலாளிகளுக்காக அரசாங்க நிர்வாகத்திடம் ஒரு வக்கீலாகவும் தொழிற்சங்கவாதியாகவும் போராடினார். சுந்தரேசய்யர் மகனின் இந்த நடவடிக்கைகள் தன்னுடைய செயலின் தொடர்ச்சியாகவே பார்த்தார். ஆரம்ப காலத்தில் முடநாற்றம் வீசும் அந்த மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஒரு அசூயையுடன் சென்ற சங்கரன் தொடர்ந்து அவர்களோடு ஒன்றாக உணவருந்துவது அந்த மக்கள் சமைத்த உணவை உண்ணப்பழகிப்போனார். அந்த மக்கள் வேலைசெய்யும் தோல் ஷாப்பிலிருந்து கொண்டுவரும் மாமிசம் அதாவது பச்சைத்தோலிலிருந்து வழித்து எடுப்பது , விட்டுப்போன கொழுப்பு, சவ்வு போன்றவைகளை குச்சிக்கிழங்குடன் சமைத்த உணவுதான் சங்கத்தலைவர்களுக்கு விருந்து. இன்னமும் இரட்டை குவளைகள் அமலில் இருக்கிற சூழ்நிலையில் ஒரு சங்கரன் செய்த காரியம் சாதாரணமானதா?

சங்கரன் தலைமையில் தோல் தொழிலாளர்கள் சங்கம் அமைத்து தங்கள் உரிமைகளுக்காக போராடினார்கள். இதுவரை முதலாளிகளைக்கண்டு கூனிக்குறுகிய சக்கிலியர்கலும் பறையர்களும் சங்கத்தின் நிர்வாகிகள் என்பதால் அரசங்கத்தின் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமதையாக உட்காருவதை கண்டு அஸன் ராவுத்தரும், வரதராஜூலு நாயுடுவும் சுந்தரம் அய்யரும் முதலான தோல் ஷாப் உடமையாளர்கள் கொதித்துப்போனார்கள். அவர்களின் ஆத்திரம் சங்கரன்மேல் பெருகியது, அவனை ஒழித்தால் இவர்கள் அடங்கிவிடுவார்கள் என்று அடியாட்கள் மூலம் கொலைமுயற்சி செய்தார்கள். காவல்துறையை விலைக்குவாங்கி ஏவிப் பார்த்தார்கள். அந்த மக்கள் குடியிருந்த சேரி அடிக்கடி காவல்துறையின் வன்முறைக்கு இலக்காக இருந்தது. தொழிற்சங்க வரலாற்றோடு,அரசியல் இயக்கவரலாறும் இடம்பெறுகிறது. இக்கதையின் மாந்தர்கள் யாவரும் இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர்களும் அந்நகரில் வாழ்ந்த பாட்டாளிகளுமாவர். நாவலின் காலம் இந்திய விடுதலைக்கு முன்னர் ஆரம்பித்து 1952 வரை செல்கிறது. தோல் ஷாப்பின் தொழிலாளி அந்த நகரத்தின் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். சங்கரன் பூனூலை  அறுத்தெரிந்து சாதியற்றவானாக மாறுகிறார், தேவசாதி குலத்தில் பிறந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்கிறார்.

இந்த நாவல் வர்க்கப்போராட்டத்தின் வரலாறாகவும், அருந்ததியர்கள், பறையர்களின் வாழ்க்கைப் பதிவாகவும் தொழிற்சங்க இயக்கத்தின் வர்லாறாகவும், பொதுவுடமை இயக்கத்தின் வரலாறாகவும் இருக்கிறது.