ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

விக்கிரமாதித்தன் கதைகள்


விக்கிரமாதித்தன் கதை தமிழகத்தில் அதிகமான விற்பனையான புத்தகங்களில் ஒன்று, அந்த கதைகளை சின்னவயதில் கேள்விப்பட்டிருகிறேன். அந்த கதைகள் முன்னர் தினமலர்-சிறுவர்மலர் இதழில் காமிக்ஸ் வடிவில் வரும், அதற்காக பள்ளிமுடிந்ததும் சிறுவர்மலர் இதழுக்காகவே நூலகம் செல்வோம். அந்த கதைப்புத்தகத்தை சென்ற ஆண்டில் வாங்கினேன் பிரேமா பிரசுரம் வெளியிட்டுள்ள அந்த புத்தகம் 26ம் பதிப்பைக் கண்டுள்ளது. அதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை, வடமொழியிலிருந்து மற்றமொழிகளுக்கு சென்றிருக்கிறது. அந்த கதைகள், போஜரானுக்கு சிம்மசானம் சொல்லியகதை, விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொல்லியகதை என்ற வடிவில் இருக்கிறது. படிக்கும்போது அது திட்டமிட்டு ஒரு பிரச்சார வடிவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. எந்தமாதிரி பிரச்சாரம் என்றால் பிராமணீய மேலாண்மை, பெண்களைப்பற்றி மோசமான கருத்துக்களையும் அந்த காலத்தில் பகுதிவாரியாக ஆட்சிசெய்த ராஜாமார்கள் நீதிதவறாமல் ஆட்சிசெய்தமாதிரி சித்திரம் தீட்டியிருக்கிறார்கள். அரசர்கள் பிராமணர்களை நடத்தியவிதம், இளவரசர்கள் கண்ணில்பட்ட பெண்களை கண்டு மோகம் காதல் கொள்வது, ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தியப்பண்பாடு என்று கதையை ஏற்படுத்தி அது அரசர்களுக்கு அல்ல என்பது, ஒரு அரசன் 1000 பெண்களை மணந்து அந்தப்புரத்தை அழகு செய்தானாம். பண்பாடு என்பது ஒரேமாதிரி இல்லை. முதல் ஐம்பது பக்கங்களை வாசிக்கும்போதே அலுத்துவிட்டது, இவ்வளவு மோசமான பிரச்சார நூல் எவ்வள்வு விற்பனையாகியிருக்கிறது. இன்னும் என்ன்வெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்பதற்காக 670 பக்கம் கொண்ட நூலில் 200 பக்கங்கள் கடந்துள்ளேன்.

அந்த கதைகளில் பெண்கள் மோசமானவர்களாம், மயானத்தில் வைக்கப்படும் பண்டங்களுக்கு நிகராக அவர்களை ஒதுக்கவேண்டுமாம். பெண்கள் என்றால் நம் அன்னையர்களை, சகோதரிகளையெல்லாம் இழிவுசெய்திருக்கிறார்கள். காடுகழ்னிகளில் ஆண்களுக்கு நிகராக இன்னும் அதிகமாக வீட்டுவேலையை பெண்கள் மட்டும் செய்கின்ற பெண்களை, மென்மையானவர்கள், பேராசைபிடித்தவர்கள், பழிவாங்கும் குணமுடையவர்கள், காம இச்சைகள் தீராதவர்கள், அழகான யாரைக்கண்டாலும் மோகிப்பவர்கள் என்று எழுதியிருக்கிறார்கள். இதைவைத்துதான் ஆட்டோக்களில் `பாம்பை நம்பினாலும் பெண்ணை நம்பாதே` போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
அதில் குறிப்பிட்டுள்ள வரிகள் சிலவற்றைஅப்படியே தருகின்றேன்.

நந்தமன்னன் ஒருவன் தன்னுடைய அரசியை பொதுசபையில் உட்காரவைத்தானாம், மந்திரிபஹூசுருதன் உட்காரவெண்டிய இடத்தில் அவனுடைய சகதர்மினியை உட்காரவைத்ததால் மந்திரி இப்படி சொல்கிறான், ``பொதுச்சபையில் பேரழகியான ஒரு பெண்ணை தன்னுடன் உட்காரவைத்துக்கொள்கிறான். மக்கள் அவளைப்பார்க்கிறார்கள், மக்கள் கூட்டத்தில் வாலிபர்களும் இருப்பார்கள், காணாத கனியைக் காண்பவர்கள் போலவே பலர் பட்டமகிஷியைப் பெரு மூச்சுடன் பார்க்கிறார்கள். ஆடவனின் ஆசை வழியும் விழிகளை ஆரணங்கு பார்ப்பாளேயாகில் அவளால் நிஷ்டூரமாகப் புறக்கணிக்கமுடியாது, அவளுடைய சித்தமும் குழம்பக்கூடும்``.

அந்த மன்னனின் ராஜகுரு சொல்கிறார், ``பெண்கள் ஒருவனுடன் வாயால் பேசுகிறார்கள். அதே சமயம் கருவிழிகளால் மற்றவனின் மனதைக் கிளரும் விதமாகப் பார்க்கிறார்கள்; மூன்றாம் மனிதனைப் பற்றி மனதிலே நினைக்கிறார்கள். ஒருவனொடு பெண்கள் திருப்தி அடைவதில்லை, எரிப்பதற்கு விறகுக்கட்டை எவ்வளவு இருந்தாலும் நெருப்புக்கு போதாது; ஆற்று நீர் எவ்வளவு விழுந்தாலும் கடலின் நீர்மட்டம் உயராது; எல்லா ஜீவவர்க்கங்களின் உயிர்களைத் தின்றாலும் கூற்றுவன் திருப்தி அடையமாட்டான்; அவ்விதமே அழ்கிய கண்களை உடைய பெண்களும் ஆடவர்கள் விசயத்தில் திருப்தியடையந்து விடமாட்டார்கள்``.

மேலும் சொல்கிறான், காக்கையிடம் சுத்தம், சூதாடியிடம் நியாயம், பேடியிடம் வீரம், குடிகாரனிடம் வாக்குறுதி, பாம்பினிடம் தயை, பெண்களிடையே நிரந்தர மோகவிகாரம் இல்லாமை ஆகியவற்றை யார்தான் கண்டும் கேட்டும் இருக்கிறார்கள்.

இன்னொரு அரசனைப்பற்றிய கதை வருகிறது, சந்திரவர்ணன் என்கிற பிராமணன் ஆறுமாதம் அன்னம் ஆகாரமின்றியும் நித்திரையின்றியும் காட்டில் தவம்செய்தான், அவன் காட்டிலிருந்து நாட்டிற்கு வந்தபோது களைப்பால் தாசிவீட்டுத்திண்ணையில் உறங்கிப்போனான் பின்னர் அவனுக்கு ஆகாரம்கொடுத்து பசியை நீக்கி உடல்நலத்தை கவனித்தாள், தன்னையே மணக்கவேண்டுமென்று தாசி அரசசபையில் முறையிட சபையிலிருந்த புரோகிதர், பிராமண குலத்தில் பிறந்த ஒருவன் தங்கள் குலத்திலல்லாமல் வேறு குலத்தின் பெண்ணை மணந்தால் நான்கு வர்ணப்பெண்களையும் ஒரே முகூர்த்தத்தில் மணக்க வேண்டுமென் சாஸ்திரம் சொல்கிறது என்றான்,. அப்படியே தாசி அலங்காரவல்லியையும், புரோகிதரின் குமாரத்தி கல்யாணியையும் மன்னனின் குமாரத்தி சித்திரரேகையையும், சபையிலிருந்த வைசியகுலச் சோமசேகர செட்டியாரின் குமாரத்தி கோமளாங்கியையும் ஒரே முகூர்த்தத்தில் சந்திர்வர்ணன் என்ற அந்த பிராமணுக்கு மணம் முடித்தார்கள். அந்த நாட்டு மன்னன் இறந்தவுடன் வாரிசு இல்லாததால் சந்திரவர்ணனுக்கு ஆட்சிப்பொறுப்பு அளித்தார்கள்.

சந்திரவர்ணனுக்கு பிராமணஸ்திரீயிடம் பிறந்தவன் வல்லவரிஷி  காட்டுக்கு தவம் செய்யப்போய்விட்டான், வைசியப்பெண் வயிற்றில் பிறந்தவன் பட்டி  என்பவன், அரசகுமாரிக்கு பிறந்தவன் விக்கிரமாதித்தன் என்றும், தாசிவயிற்றில்  பிறந்தவன்  பர்த்ருஹரி என்ற நான்கு குமாரர்கள் பிறந்தார்கள். சந்திரவர்ணன் அந்திமகாலத்தை நெருங்கும்போது புதல்வர்களை அழைத்தான், அப்போது தாசிக்கு பிறந்த பர்த்ருஹரியைப் பார்த்து, இவனுக்கு கல்யாணம் செய்தால் புத்திரர்கள் பிறப்பார்கள் அது நல்லதல்ல என்றான், அப்படியே பர்த்ருஹரி ,கல்யாணம் செய்துகொண்டாலும் பிள்ளைகள் பெற்று உங்கல் நற்கதிக்குத் தடையாக ஒருபோதும் இருக்கமாட்டேன் என்று சத்தியம் செய்துகொடுக்கிறான்.

தாசியை கல்யாணம் செய்ததால்தான் மற்ற மூன்று மனைவியரை அடைந்தேன், அதனால் தாசி வயிற்றுப்பிள்ளையான பர்த்ருஹரிக்கு பட்டம் சூட்டவேண்டும் என்றான். அவ்வாறே பர்த்ருஹரி ராஜாவானான், அவனுக்குப்பின்னர் ஷ்த்திரகுலப்பெண்ணுக்கு பிறந்த விக்கிரமாதித்தன் அரசபொறுப்பேற்றான் அவனுக்கு மதியூகமந்திரியாக வைசியப்பெண்ணுக்கு பிறந்த பட்டி என்பவன் இருந்ததாக கதை வருகிறது.ராஜா பர்த்ருஹரி பெண்ணாசை கொண்டு 360 அழகிகளை மணந்து தன் அரண்மனை அந்தப்புரங்களைக் கலைக்கூடமாக்கினானாம். ராஜா பர்த்ருஹரி அனங்கசேனை என்பவளிடம் அலாதிப்பிரியம் கொண்டான், ஆனால் அவளுக்கு குதிரைப்பாகன் ஒருவன் சோரநாயகனாக இருந்தானாம். பர்த்ருஹரியின் அரசியைப்பற்றி சொல்லப்பட்ட வரிகள்..

`` மனதைக்கவரும் உருவம்,யெள்வனம் ஆகிய இரண்டிலும் ஆடவன் கொள்ளும் அபிமானம் வீந்தான். வில்போன்ற புருவங்களுடைய பெண்கள் உள்ளத்தில் மன்ம்தன் தான் விரும்பியதையே செய்வான். பெண்களின் எண்ணங்களயும் செயல்களையும் ஒருவராலும் அறியமுடியாது``

``குதிரையின் பாய்ச்சல், தேவேந்திரனின் இடிமுழக்கம், பெண்களின் சித்தம், மனிதனுடைய பாக்கியம், அதிகமழை, மழையின்மை- இவைகளை தெய்வத்தாலேயே தடுக்க முடியாது``

``மலட்டுப்பெண்ணின் குழந்தை அரசுக்கட்டில் ஏறலாம் என்றும், வானத்தில் பூக்கள் மலர்வதைக் காணமுடியும் என்றும் நினைக்கலாம், ஆனால் பெண்களின் உள்ளத்தில் புனிதத்தன்மையைப் பற்றிச் சிறிதுகூட நினைக்க முடியாது``

``ஜபம், மந்திரம், தந்திரம், விநயம், அறிவு, ஆகியவை இல்லாமலேயே பேரறிவு படைத்த ஒருவனையும் பெண்கள் ஒரு கணத்தில் ஏமாற்றும் சக்தி வாய்ந்தவர்கள்``

``பெண்கள் சுயலாபத்திற்காகச் சிரிக்கவும் அழவும் செய்வார்கள்; தங்களிடம் நம்பிக்கை வைக்கும்படி அவர்கள்கெஞ்சுவார்கள்; ஆனால் அதே சமயம் அவர்கள் யாரிடமும் நம்பிக்கை வைப்பதில்லை; நல்ல குடும்பத்தில் பிறந்தவனும் புத்தியுள்ளவனும் , அவர்களை மயானத்தில் கிடக்கும் பணியாரங்களைப் போல் தவிற்க்கவேண்டும்``

இவ்விதம் ராஜாபர்த்ருஹரி தன்னுடைய ஆசைநாயகி அனங்கசேனையைப் பற்றி சிந்தித்தான். இந்த அரசிகளைப் பற்றிய வசைகள் எல்லாப்பெண்களுக்கும் பொதுவான குணமாக சித்திரத்துள்ளார்கள். ராஜாபர்த்ருஹரி ஒரு ஷ்த்திரியன் அல்லாதவன், அதேபோல நந்தமன்னனின் மனைவியைப் பற்றியும் வசைவருகிறது அவனும் ஷ்த்திரிய வம்சமல்ல.

வேதாளம்  இன்னொரு கதையைக்கூறி யார் அதிக புத்திசாலி என்று விக்கிரமாதித்தனைக் கேட்கிறது. விக்கிரமாதித்தன், ``ஆடாகயிருந்தாலும்
பெண் புத்தி கேளாதிருந்தமையால் அதுவே அதுவே அதிக புத்திசாலி`` என்று விடை சொல்கிறான், இதன் மூலம் பெண்புத்தி பின்புத்தி என்ற வசை நிலவுகிறது.

அர்த்தசாஸ்திரத்தில் தண்டனைகள் , ஒரே குற்றத்திற்கு ஒவ்வொரு வர்ணத்திற்கும் தனித்தனியான தண்டனைகள் இருக்கிறது. அந்தனன் ஒருவனுடைய நிலத்தின் பயிரை போஜராஜனின் படைகள் பசியில் அழிமானம் செய்கிறார்கள். அப்போது அந்த அந்தணன் போஜராஜனைப்பார்த்து சொல்கிறான், ``தாங்கள் எல்லா நீதி சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவர். அப்படியிருக்கத் தாங்களே அந்தணன் ஒருவனுடைய சொத்தைப் பாழாக்குகிறீர்கள். அந்தணன்  சொத்து தான் உண்மையான விஷம் என்று சொல்லப்படுகிறது. விஷம் என்பது அறிஞன் ஒருவனுடைய சொத்துடன் ஒப்பிடும்போது விஷமாகது; அந்தச் சொத்தே உண்மையான விஷமாகும்; ஏனென்றால் விஷம் அருந்திய ஒருவனை மட்டுமே கொல்லக்கூடியது; ஆனால் அறிஞன் சொத்தோ அபகரித்தவனின் சந்ததியையும், அவர்களின் சந்ததிகளையும் கூட அழித்துவிடும் அன்றோ? இதைத் தாங்கள் அறிவீர்களே என்கிறான். இதைவைத்து கிராமங்களில் கதைகள் இருக்கின்றன.

 எல்லாக்கதைகளிலும் நீதிதவறாத மன்னர்கள், தவத்தில் சிறந்த அந்தணர்கள் நிச்சயம் வருவார்கள், சாதாரணகுடிகளைப் பற்றி எந்தக் கதையிலும் பதிவுகள் இல்லை. அந்தப்புரங்கள், ராணிகள் மென்மை, இளவரசர்களின் கண்டவுடன் காதல், மோகம் இது நிரம்பியிருக்கிறது. இந்த கதைகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களிடம் வாய்மொழியாக சென்றிருக்கிறது. இந்தக் கதைகளை தேசத்தின் பண்பாடு என்று கொண்டாடுபவர்களும் இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை: