ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஈரோடு புத்தகத்திருவிழா 2011

ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் வருடந்தோறும் ஜூலை/ஆகஸ்டு மாதத்தில் புத்தகத்திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்த வருடம் விழாவின் மூன்றாம் நாளான ஞாயிறன்று சென்றிருந்தேன். காலை 11 மணிக்கு தொடங்குவதாக அறிவிப்பு இருந்தபோதும் மக்கள் 30 நிமிடம் முன்பாகவே அங்கே குழுமிவிட்டனர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, முன்பெல்லாம் சினிமாவிற்குத்தான் இப்படி முன்னதாகவே வருவார்கள், ஆனால் புத்தகம் வாங்குவதற்காக மக்களும், மாணவர்களும் சில பெற்றோர்கள் குழந்தைகளுடன் வந்ததை பார்க்கும் போது மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி கிடக்கவில்லை என்பது தெரிகிறது. இந்த விழாவை வருடந்தோறும் சிறப்பாக மக்கள் சிந்தனைப் பேர்வை நடத்திவருவது பாராட்டுக்குரியது. பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் காயிதேமில்லத் கலைக்கல்லூரியில் ‘பபாசி’ நடத்திய புத்தகத்திருவிழாவிற்கு சென்றிருந்தேன். சென்னை போன்ற பெருநகரங்களில் புத்தகத்திருவிழா நடத்துவதில் அதிக சிரமமில்லை, அங்கே வாசகர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால் ஈரோடு போன்ற விவசாயம், சிறுதொழில் நடக்கின்ற ஒரு நகரமக்களிடம் புத்தகத்தை கொண்டு சேர்ப்பது மிகவும் சிறப்பான பணியாகும்.

கடந்த ஆண்டில் வலைப்பதிவர் ஈரோடுகதிர் மூலமாகத்தான் புத்தகத்திருவிழா குறித்த செய்தி அறிந்தேன். இந்த ஆண்டும் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் மாலை நடக்கின்ற சொற்பொழிவுகளை கேட்கமுடியாமல் போய்விட்டது. சென்றமுறை எழுத்தாளர் பிரபஞ்சன், தமிழ்செல்வன் மற்றும் மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரின் சொற்பொழிவை குறுந்தகட்டின் வாயிலாக கேட்டேன். இலக்கியம் பற்றியும் புத்தகம் படிக்கவேண்டியதன் அவசியத்தையும் எழுத்தாளர் பிரபஞ்சனின் பேச்சு அமைந்தது. இந்த முறை எழுத்தாளர்கள். ஜெயகாந்தன்,எஸ்.ராமகிருஷ்ணன், பாரதிகிருஷ்ணகுமார், பொன்னீலன், மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன், பாடலாசிரியர்.அறிவுமதி் ஆகியோர் ஆற்றிய உரைகளின் குறுந்தகட்டை வாங்கினேன். எழுத்தாளர்கள் சிறந்த சொற்பொழிவாளர்கள் என்பதை அவர்கள் ஆற்றிய உரையின் அறியமுடிந்தது.

இன்று இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் புத்தகம் வாங்கமுடிந்தாலும் நாம் அறியாத பல புத்தகங்களை, பதிப்பாளர்களை புத்தகத்திருவிழா நமக்கு அறிமுகம் செய்கிறது. கல்கியின் நூலகள் நாட்டுடமையாக்கியதால் எல்லா பதிப்பகத்திலும் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ கிடைக்கிறது. இதே போல் தந்தை பெரியாரின் எழுத்துக்கள் எல்லோரிடத்தும் சென்றடைய வேண்டுமானால் பெரியாரின் எழுத்துகளும் சிந்தனைகளும் நாட்டுடமையாக்கப்பட வேண்டும், அதற்கு அவர் நடத்திய இயக்கமே தடையாக இருப்பது வேதனையாக உள்ளது. இடதுசாரி சிந்தனை நூல்களுக்கென்றே பல பதிப்பகங்கள் இருந்தன குறிப்பாக அலைகள் வெளியீட்டகம், பாரதி புத்தகாலயம், என்சிபிஎச்,பாவை பப்ளிகேசன். அளவிற்கு குறையாமல் பக்தி இலக்கியங்கள், ஜோதிட நூல்கள் விற்பனையாகின்றன. பாரதிகிருஷ்ணகுமார் இயக்கிய குறும்படமான ‘எனக்கு இல்லையா கல்வி’ பாரதி புத்தகாலயத்தில் கிடைத்தது. நிறைய சிறுவர் இலக்கியப் புத்தகங்களும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதைக்கம்பளம் தொகுப்பும் பாரதி புத்தகாலயம் வெளியிடிருந்தது. அளவில் சிறியனவும் விலையும் குறைவான புத்தகங்களையும் அந்தப் பதிப்பகத்தில் வாங்க முடிந்தது.

ஒவ்வொரு மாவட்டத்தலைநகரிலும் இந்த மாதிரி புத்தகத்திருவிழா நடக்கவேண்டும், குறைந்த பட்சம் அரசு அதற்கான இடத்தையாவது ஒதுக்கி இலவசமாக வழங்கவேண்டும். மக்களிடம் நல்ல இலக்கியங்கள் கொண்டு செல்லப்படவேண்டும்.

நான் வாங்கிய சில புத்தகங்கள்.

கரிசல் கதைகள்- கி.ரா.
மகாநதி - பிரபஞ்சன்
கண்ணீரால் காப்போம் - பிரபஞ்சன்
பிரபஞ்சன் கட்டுரைகள்
சர்க்கரை நாவல் -கு.சி.பா
ஏறுவெயில் -பெருமாள்முருகன்
கந்தர்வன் கதைகள்- கந்தர்வன்
பண்டைய இந்தியா -டி.டி.கோசாம்பி
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
ஊருக்கு நூறுபேர் -ஜெயகாந்தன்
பிரளயம் -ஜெயகாந்தன்
பயணம் -தேனி சீருடையான்
ஈ.எம்.எஸ் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
மாபசான் சிறுகதைகள்
மீன்காரத்தெரு- கீரனூர் ஜாகிர்ராஜா
கதைக்கம்பளம்- எஸ்.ராமகிருஷ்ணன் தொகுப்பு
முதல் ஆசிரிய- சிங்கிஸ் மத்தாவ்
வெண்ணிற இரவுகள் -தஸ்தாயேஸ்கி
விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்- இரா.நடராசன்
நேற்றுமனிதர்கள்- பிரபஞ்சன்
டால்ஸ்டாய் நீதிக்கதைகள்

------------------------------------------------------

5 கருத்துகள்:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே !
டிசெல்வராஜின் "தோல் " வாங்கியிருக்கலாமே.இந்த ஆண்டின் மிகமுக்கியமான நாவலாச்சே .---காஸ்யபன்

hariharan சொன்னது…

நன்றி தோழரே! ‘தோல்’ நாவலைப் பார்த்தேன், நாவல் பற்றி எனக்கு தெரியவில்லை. அடுத்தமுறை வாங்கவேண்டும்.

rajasundararajan சொன்னது…

'தோல்' முதல் அத்தியாயத்தைப் படித்ததும் எனக்கு வருத்தமாகப் போய்விட்டது - இப்படி வாசிக்கிற ஆர்வத்தில் மண்ணைப் போட்டுவிட்டாரே என்று. ஆம், தோழர்களே, முதல் அத்தியாயத்துக்கு மேல் நான் வாசிக்கவில்லை. ஒரு வற்கலவி (rape) வர்ணனை வருகிறது பாருங்கள் - அய்யோ! வில்லனைக் கொடுமையானவனாகக் காட்டவேண்டும் என்பதற்காக, ஒரு சிறுபெண்ணை அதைச் செய்தான் இதைச் செய்தான் என்று அவர் கொடுக்கிற வர்ணனைகள்... சினிமாப் பார்த்துக் கெட்டுப் போன கோளாறுதான் வேறென்ன?

ஹரி, விஜயன் சுட்டிக்காட்டி உங்கள் தளத்துக்கு வந்தேன். தொடர்ந்து வருவேன்.

hariharan சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி திரு.சுந்தர் ராஜன் அவர்களே!, உங்களுடைய பின்னூட்டங்க்லளை பல வலைப்பூக்களில் பார்த்திருக்கிறேன்.

kashyapan சொன்னது…

ராஜு சுந்தரம் அவர்களே! நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால் நூறு சதம் நிச்சயமாக சொல்லமுடியும் .அது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நூலாக இருக்கப் போகிறது.தயவு செய்து முழுமையாகப் படியுங்கள் ---காஸ்யபன்