புதன், 24 ஆகஸ்ட், 2011
ஊருக்கு இளைத்தவன் அரசியல்வாதி...
இன்று ஜன்லோக்பால் அமைக்கவேண்டும் என்று உண்ணாவிரதமிருக்கும் அன்னா ஹசாரேவிற்கு பெரும்பான்மையான நகர்ப்புற மத்தியதர மக்கள் ஆதரவளிப்பது அவர்களுக்கு அரசியல் கட்சிகளுக்கு மீதுள்ள வெறுப்பினால் தான். யாருக்கெல்லாம் அரசியல்கட்சிகள் பிடிக்கவில்லையோ அவர்களையெல்லாம் இந்த ஜன்லோக்பால் ஒன்றினைத்து விட்டது. மக்களை அரசியல்கட்சிகளிடமிருந்து விலக்கிவைக்கும் ‘அரசியல்’ அன்றி இது வேறில்லை. ஏற்கனவே அரசியலென்றால் சாக்கடை என்று ஒதுங்கியிருக்கும் எலைட் மற்றும் மத்தியதர வர்க்கத்தை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மீடியா வசதியாக பயன்படுத்திக்கொண்டது. ஊழல் என்றால் அரசியல்வாதி அல்லது அதிகாரவர்க்கம் என்று தான் பொதுப்புத்தியில் ஊறிக்கிடக்கிறது. உலகமயமாக்கல் சூழலில் அரசாங்கம் எல்லாவற்றையும் தனியாருக்கு தாரைவார்க்கும் சூழலை இந்திய கார்ப்பரேட்டுகளும் பன்னாட்டு நிறுவனக்களும் பயன்படுத்திக் கொண்டன. இன்று லட்சம் கோடிகளில் புரளும் ஊழலுக்கு எது காரணம்? உலகமயமாக்கல் தான். 2ஜி அலைக்கற்றை ஊழலில் அரசியல்வாதிகளும் அதிகாரிகள் சிலரும் தண்டிக்கப்பட்டுள்ளனர், ஆனால் பயனடைந்த கார்ப்பரேட்டுகள் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. ஏனென்றால் இந்த அரசை நடத்துபவர்கள் அவர்களே! அப்படி அவர்கள் மீது ஏதும் நடவடிக்கை வந்துவிடக்கூடாதே என்பதற்காக அன்னா ஹசாரேவை இந்த அரசுக்கு எதிராகவே ஒரு கருவியாக முதலாளித்துவம் பயன்படுத்துகிறதோ என்ற ஐயம் எழுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கும் இந்த 24 மணிநேர செய்தி மீடியாக்களுக்கும் உள்ள ‘கள்ள’உறவு 2ஜி அலைக்கற்றை ஊழலில் வெளிப்பட்டது. ‘பர்கா தத்’ என்ற பத்திரிக்கையாளர் கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் புரோக்காராக இருந்ததை இந்த நாடறிந்தது. இப்போது அந்த சேனல்கள் திருடனே, திருடன்... திருடன் ஒடுறான் பிடி என்கிற மாதிரி ஊழல் ஊழல் என்று கத்திக்கொண்டேயிருக்கிறது.
அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளொ எல்லோரும் ஊழல்வாதிகளோ அல்ல, இந்திய அரசியலில் இடதுசாரிகள் கறைபடியாதவர்கள் என்பதை இந்த ஊடகங்கள் ஏன் மக்களிடம் கொண்டுசெல்லவில்லை அல்லது இடதுசாரிகள் தான் ‘மாற்று’ என்று ஏன் சொல்லவில்லை. அது அவர்களின் வர்க்கநலன் அடங்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன்புவரை பிரதமர் மன்மோகன்சிங்கை நடுத்தரவர்க்கத்தினர் அவர் சிறந்த பொருளாதாரமேதை என்று கொண்டாடினார்கள், திருவாளர் மன்மோகன்சிங்கின் செழுமையான பயோடேட்டாவை மின்னஞ்சல்களில் பரப்பிவிட்டு தங்களின் தேசபக்த உணர்வை வெளிக்காட்டினார்கள்.மன்மோகன்சிங்கின் தாரளவாதக் கொள்கையால் இந்த மேட்டுக்குடியினர் முன்னேறியிருக்கின்றனர். ஆனால் அந்த பிம்பத்தை இப்போது அவர்களே போட்டு உடைத்துவிட்டார்கள். எந்த அளவிற்கு ‘தனிமனிதனை’ புகழ்கிறார்களோ அதே அளவில் இகழ்ந்தும் விட்டார்கள். யாரெல்லாம் அன்னா ஹசாரேவை ஆதரிக்கவில்லையோ அவர்கள் ஊழலுக்கு துணைபோகிறார்கள் என்று அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். தாங்கள் விரும்புவதை இந்த தேசமே விரும்பவேண்டும் என்ற சிந்தனையை ‘கார்ப்பரேட்’ மீடியாக்கள் ஊதுகின்றன.
அரசியல்வாதிகள் தேர்தல்களில் ஓட்டுக்குப் பணம்கொடுத்தபோது இவர்கள் எரிகிற வீட்டில் பிடுங்குறவரை லாபம் என்று தேடிச்சென்று பணம்வாங்கினார்கள். அவர்கள் எப்படி அரசியல் நடத்துகிறார்கள் என்பதை அறியாமலேயே அவர்களை திட்டுகிறார்கள். இடதுசாரிக் கட்சிகளைத் தவிர எல்லா அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் நிதி /கட்சி நிதி வாங்குகின்றார்கள். இந்த அன்னா ஹசாரேவின் தொண்டு நிறுவனம் கூட கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஃபோர்ட் பவுண்டேசனிடமிருந்து $400,000 நிதி பெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன. தொண்டு நிறுவனக்கள் என்ற போர்வையில் இவர்கள் செய்வது ‘ஃபண்டு’ பண்ணுவது தான். ஊழலின் வேர் தெரியாமல் கூட்டத்தோடு கோவிந்தா போடுகிறார்கள்.வழக்கமாக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டால் மக்கள்பணம் வீணாகிறது என கூச்சல் போடுகிற, இவர்களால் பாராளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் போய்விடுகிறது. லோக்பால் ஒன்றும் சர்வநோக நிவாரணி அல்ல என்பது தெரிய இன்னும் நாளாகும் அதற்குள் எத்தனையொ செய்திகள் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக