புதன், 31 ஆகஸ்ட், 2011

பிழைப்பு என்பது `பிழையாக` வாழ்வது

நீண்ட நாட்களாக மனதில் ஓடியவற்றை எழுதமுடியாமலேயெ போய்விட்டது. ‘அடர்கருப்பு ’ வலைப்பூவில் வந்த வரிகள் ‘லஞ்சம் கொடுத்தவரும் லஞ்சம் வாங்குவபருமாகக் கலந்து கிடக்கிறது தேசம்’ எவ்வளவு யதார்த்தமான உண்மை. மத்தியதர மக்கள் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தியடைந்தவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் 24 மணிநேர செய்தி ஊடகங்கள் காட்டும் பரபரப்பிற்கு பின்னால் ஒடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் சமூகமாற்றத்தைப் பற்றியோ விளிம்புநிலை மனிதர்கள் படும் பொருளாதாரப் பிரச்ச்னைகள் பற்றியோ அவர்களிடம் தீர்வும் அக்கறையும் இல்லை. ஆனால் லட்சங்கள் கொட்டி ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வியை விலைக்கு வாங்கிவிட்டு அடுத்தவர்களின் ஊழலை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறார்கள். இந்த தேசத்தில் ஊழலைத் தவிற வேறு பிரச்ச்னைகளே இல்லையா என்ன?

இந்த நாட்டில் நான்கில் மூன்று பங்கு பேர்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாயில் பிழைப்பு நடத்துகிறார்கள் என்ற அரசாங்கமே அமைத்த சென்குப்தா அறிக்கை சுட்டிகாட்டியது, அந்த அறிக்கை வெளிவந்த 5 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் நிலைமை மாறிவிட்டதா என்றால் மேலும் அவர்கள் மீது சுமையை ஏற்றிகொண்டெயிருக்கிறது. அவர்கள் எப்படி அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளமுடியும்.மூன்றாம் உலக நாடுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ள தேசம் இந்தியா தான். சென்ற நூற்றாண்டு வரை தென் அமெரிக்கா கண்டத்தில் பெரும்பாலான நாடுகளை காலனியாக வைத்திருந்த ஸ்பெயின் நாட்டில் இந்தியாவின் பில்லிணியர்கள் இல்லை, டச்சுக்காரர்களிடம் இத்தனை பில்லிணியர்கள் இல்லை, பிரெஞ்சு, ஜெர்மனி, ஜப்பான் என முன்னேறிய நாடுகளில் கூட இந்தியா உருவாக்கிய பில்லிணியர்கள் அங்கு இல்லை. உலகமயமாக்கலுக்குப் பின்னர் இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி ஒரு ஏற்றத்தாழ்வு. அரசாங்கம் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குகிற கொள்கையை கடைப்பிடிப்பதால் தானே. அம்பானிகளும் வேதாந்தாக்களும் இலாபம் வளர்ச்சி என்று சொல்லுகிறார்களே அது என்ன சுத்தத் திறமையால் நிகழ்ந்த அற்புதமா என்ன? சென்ற நூற்றாண்டில் அபினி என்ற கஞ்சாவை ஏற்றுமதி செய்தவர்கள் இப்பொது புனிதப்பசுக்களாகிவிட்டார்கள். இந்த மக்களின் வளத்தை தனதாக்கிக்கொண்டு வளர்ந்தார்கள். அரசாங்கத்தை அதை நடத்துகிற அரசியல்வாதிகளையும் அதிகாரவர்க்கத்தையும் கையில் போட்டுகொண்டு அவர்களுக்கு சாதகமானவற்றை எல்லாம் சட்டங்கள் செய்தார்கள். சாதகம் என்பதே என்ன? அது பாதகத்தை மற்றவருக்கு ஏற்படுத்துவதுதானே? எண்ணிக்கையில் சிறிய அளவிலுள்ள இந்த மாபாதகர்கள் பெருவாரியான மக்களின் சட்டைப்பையிலிருந்து பணத்தை கண்ணுக்குத் தெரியாமலேயெ எடுக்கிறார்கள் அதற்குத் தானே இந்த பாராளுமன்றம், நீதிமன்றம், காவல்துறை அரசு.

வலுத்தது வாழும் என்பது டார்வினின் பரிணாமக்கொள்கை, நாகரீக சமூகத்தில் எளியவர்களையும் வாழ அனுமதிக்க வேண்டும் என்பதற்குத்தானே இந்த `அரசு’ இருக்கிறது. ஆனால் சமூகத்தில் ஒவ்வொருவரும் அடுத்தவரின் பையிலிருந்து கண்ணுக்குத் தெரியாமல் திருடிக்கொண்டேயிருக்கிறார்கள். எல்லோரும் அதற்குச் சொல்லும் விளக்கம் `இலாபம்`. எத்தனை சதவீதம்? அது வாங்குபவன், விற்பவன், சந்தை தீர்மானிக்கும்? பிறகு என்னத்துக்கு இந்த அரசாங்கம். உழைப்பை சரக்காக விற்பவனும் உணவு உறப்த்தி செய்யும் விவசாயியும் தான் இந்த சமூகத்தில் ஏமாந்தவர்கள். ஏனென்றால் அவர்களின் `சரக்கை` எப்போதும் வாங்குபவனே விலை சொல்கிறான். தேசத்தில் விலைவாசி விண்ணைத்தொட்டாலும் கவலைக்குள்ளாகமல் நிறையப்பேர் இருக்கிறார்கள், அவர்கள் உழைப்பை விற்பவர்கள் அல்லர். சரக்குகளை விற்பவர்கள் தாங்கள் வாங்கும் பொருளின் விலைக்கு கொடுக்கும் கூடுதல் தொகைக்கு விற்கும் பொருளிடம் வைத்துக்கொள்கிறார். இதை எப்படி கொள்ளை, மோசடி அநியாய விலை என்று சொல்லமுடியும். அவரவர்க்கு நியாயம் இருக்காதானே செய்கிறது.இதற்கு முடிவுதான் என்ன? இது பொருளாதாரச் சிக்கல். இந்த சிக்கலை அவிழ்ப்பதற்கு எந்த முயற்சியுமே இல்லை, ஏழை சொல் அம்பலம் ஏறுமா? என்பது போல இது எளியமனிதர்களின் பிரச்சனை மட்டுமே? தீர்வு தான் என்ன? தொடரும்...

2 கருத்துகள்:

cosmo சொன்னது…

மிக தெளிவான சிந்தனையோட்டம்
வாழ்த்துக்கள்

வழிப்போக்கன் சொன்னது…

// வலுத்தது வாழும் என்பது டார்வினின் பரிணாமக் கொள்கை //

சரியாகச் சொன்னீர்கள். மாற்றும் தருணத்தில் நாமோ மாறும் மனநிலையில் ஜனநாயகமோ இல்லை.