செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்குக் கொலை மிரட்டல் தமுஎகச கடும் கண்டனம்


எழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Monday, August 08, 2011
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

28/21,வரதராஜபுரம் பிரதான சாலை,சென்னை-600018

பத்திரிகைச்செய்தி:8-8-2011


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா நடத்தும் புதுவிசை காலாண்டிதழில் இலங்கை எழுத்தாளர் யோ.கர்ணன் எழுதிய சிறுகதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அக்கதையை வெளியிட்தற்காக பெயர்தெரியா நபர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தரக்குறைவான வார்த்தைகளில் பேசியுள்ளனர்.அவர் இல்லாதபோது பகல் என்றும் இரவென்றும் பாராமல் அவருடைய துணைவியாரிடமும் இதே தரக்குறைவான வார்த்தைகளில் உன் கணவனைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று பேசி வருகின்றனர்.அக்கதை மீதும் கதையை வெளியிட்டதன் மீதும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.அது இயல்பு.அதைப் புரிந்துகொள்ள முடியும்.அதைக் கருத்துரீதியாகச் சந்திக்கத் திராணியில்லாமல் , மறுப்புகளை வெளியிடத்தயாராக இருப்பதாக அவர் கூறியும் தொடர்ந்து தொலைபேசி மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.இதன் அடுத்த கட்டமாக தமுஎகச மற்றும் இடதுசாரிகள் மீது அவதூறுகளை வெளியிடுவதல் உற்சாகம் காட்டும் ஒரு வலைத்தளத்தில் அவர்மீதும் இயக்கத்தின் மீதும் அவதூறு பொழிவதைத் தொடங்கியுள்ளனர்.இன்னும் ஆதவன் தீட்சண்யாவின் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளரை மிரட்டியுள்ளனர்.அவர் ஆதவனின் புத்தகத்தை வெளியிடப் பயந்து திருப்பி அனுப்பியுள்ளார். இந்த வன்முறை நடவடிக்கைகளை ஆகஸ்ட் 6,7 தேதிகளில் கூடிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு விவாதித்தது.இது தமிழ்க் கருத்துலகில் மாற்றுக்கருத்தை எழுதுபவர்களை எழுதவிடாமல் வாயடைக்கச் செய்யும் அராஜக முயற்சியாகும்.சமீபகாலமாக இத்தகைய போக்கு அதிகரித்து வருகிறது.இந்தக் கோழைத்தனமான செயலை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.மிரட்டும் தொலைபேசி எண்களைக்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தாக்குதலை ஜனநாயக ரீதியாக சந்திக்கவும் செயற்குழு தீர்மானித்தது. கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரும் இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளை கண்டனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்

மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்/வலைப்பூவில்/வலைத்தளத்தில்/முகநூலில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அருணன் ச.தமிழ்ச்செல்வன்

தலைவர் பொதுச்செயலாளர்

கருத்துகள் இல்லை: