புதன், 17 நவம்பர், 2010

ஒரு குடிமகனின் புலம்பல்கள்



ஒரு வழியாக ஸ்பெக்டரம் புகழ் ‘ராசா’ பதவி விலகிவிட்டார். இதுவரை நாடு இவ்வளவு பெரிய ஊழலைக் கண்டிருக்குமா என்பது சந்தேகம் தான். இருபது முப்பதாண்டுகளுக்கு முன்னாலும் ஊழல் இருந்தது, ஆனால் அது இலட்சங்கள்,சில கோடிகளில் இருந்தது. இது ஏன் இப்போது இலட்சம் கோடிகளில் இருக்கிறதென்றால் அதற்கு புதிய பொருளாதாரம் தான் ஊழலையும்‘தாராளமய’மாக்கியிருக்கிறது. ஒருவேளை BSNL நிறுவனம் மட்டுமே தொலைத்தொடர்பில் கோலோச்சியிருந்தால் இந்த ஊழல் நடந்திருக்குமா? என்பது சந்தேகம் தான். உடனே BSNLன் சேவையை குறைசொல்லத் தொடங்கிவிடுவார்கள். நமது மக்களுக்கு லஞ்சம், ஊழல் என்பெதெல்லாம் பழகிவிட்டது அதனால் அந்த சொற்கள் சாதாரணமாகிவிட்டது, இனிமேல் ஊழலை ‘பெருந்திருட்டு’ என்று மாற்றவேண்டும் அப்போதாவது ‘திருடன்’ மேல் கோபம் வருகிறதா என்று பார்க்கலாம்.

ஒரு பதிவர் சொன்னார், சினிமாவில் அநியாயத்தையும்,அக்கிரமத்தையும் எதிர்க்காத இளைஞர்கள் உண்டா? திரைப்படத்தில் விஷாலும்,விஜய்யும் அநியாயக்காரர்களையும், அக்கிரமக்காரர்களையும், பந்தாடும்போது சமூகத்தின் மீது உள்ள அந்த இளைஞனின் கோபம் வடிந்துவிடுகிறது. இந்த நிலைமையில் தான் நாம் உள்ளோம்,அதற்குத் தான் மதங்களே அநியாயங்கள் அதிகரிக்கும்போது ‘கடவுள்’ அவதாரம் எடுத்துவருவார் என்று மக்களின் கோபத்தை தணிக்கிறது.இந்த அமைப்பே ‘பெருந்திருட்டு’களை ஊக்குவிக்கும் அமைப்பாக உள்ளது. ரெண்டுபேர் பேசிக்கொண்டால் சினிமாவில் ஆரம்பித்து அரசியல்வாதிகளை திட்டி உரையாடல்களை முடித்துக்கொள்வார்கள், அதன் வேர் என்ன? முதலாளித்துவ அரசியல் கட்சிகள் எப்படி ‘தொழில்’ (அரசியல் என்பது அவர்களுக்கு தொழில் தானே)நடத்துகிறார்கள் என்ற கேள்வியை யாரும் வைப்பதில்லை, அவர்கள் கைக்காசைப் போட்டு இயக்கம் நடத்தினால் அது வட்டியுடன் திரும்ப எடுக்கவேண்டும். சேவையாக நடத்தினால் மக்களிடம் அவர்கள் சந்தா வசூல் செய்யவேண்டும், யாருக்கும் தருவதற்கு விருப்பம் இல்லை, வாக்குகளையே விற்பவர்கள் எப்படி தருவார்கள்? அதனால் தேர்தல் மற்றும் கட்சி செலவீனங்களுக்கு சமூகத்தின் சிறுபான்மை பிரிவினரான தொழிலதிபர்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் நாடுகிறார்கள். பதவிக்கு வந்தவுடன் நன்றிமறவாமல் ‘கைமாறு’செய்கிறார்கள், எப்படியென்றால் ஸ்பெக்ட்ரம் மாதிரி. இது அவர்களுக்கான ‘Win Win' ஒப்பந்தம். மொத்தத்தில் அரசின் கஜானாவிற்கு உண்மையாக வந்துசேர வேண்டிய பணம் அந்த சிறுபான்மை பிரிவினரான தொழிலபதிர்களிடமிருந்து வரவில்லை. இது தான் சமூகத்தின் ஒருபிரிவினர் குறுகிய காலத்தில் பில்லிணியர்களாக மாறுவதும் மற்றொருபுறம் வறுமைக்கோடு இன்னமும் அழியாமல் இருப்பதற்கும் காரணம்.



முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கும் பெரும்தொழிலதிபர்களுக்கும் உள்ள மானசீக உறவு இது தான். இதைப்போல் இப்போது ஊடகங்களும் மேற்குறிப்பிட்ட இரு பிரிவினரை பாதுகாக்கும் வேலையைச் செய்கின்றன. 50ரூ, 100ரூ லஞ்சம் பெறுகின்ற அரசு அதிகாரிகள் தண்டிக்கபடுவதை நாம் செய்திகளில் வாசிக்கிறோம், ஆனால் கோடிகளில் ‘பெருந்திருட்டில்’ ஈடுபடுவோர் இதுவரை தண்டனை பெற்றதை இந்தியாவில் நிகழ்ந்ததில்லை.அது இந்த அமைப்பு நீடித்திருக்கும் வரை தொடரும். அண்மையில் கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனை காவல்துறை ‘என்கெளண்டரில்’ சுட்டவுடன் மக்கள் நரகாசுரன் இறந்தான் என தீபாவளியே கொண்டாடினார்கள், ஆனால் ஹரியானாவில் முன்னாள் DGP ரத்தோர்ட் அதே பாலியல் பலாத்காரதிற்காக ஜாமீன் பெற்றான் (’ர்’விகுதி அவசியமில்லை). அதை மீடியாவோ மக்களோ கேள்விக்குள்ளாக்கவில்லை. உடனே தண்டனை கொடுக்கவேண்டும் என்று மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.

சமீபத்திய பெருந்திருட்டுகளில் முதலிடம் பெறுவது ‘ஸ்பெக்ட்ரம்’ தான், அடுத்து ஆதர்ஸ் வீடு ஒதுக்கீட்டு ஊழல்,(கார்கில் சவப்பெட்டி,ஆயுதபேர ஊழல் என்னாச்சு?) காமன்வெல்த் ஊழல் என மத்தியில் ஆளும் காங்கிரஸும் அதன் கூட்டணியும் நாறுகிறது. சுரங்க ஊழலில் பாஜக திணறுகிறது. பிரதமர் இதுநாள் வரை ‘சட்டப்படி’ தான் என்று சப்பைக்கட்டு கட்டி திமுகவைக் காப்பாற்றினார். எதிர்க்கட்சிகளின் சீறிய முயற்சியால் தான் ராசா பதவி விலகினார். எதிர்க்கட்சிகல் பாராளுமன்றத்தில் அமளி மக்கள் பணம் வீண் என்று எந்த மீடியாவும் வாய் திறக்கமுடியவில்லை, இந்த தேசத்தில் சுதந்திரம் பெற்றபின்பும் போராடமல் எதுவும் கிடைப்பதில்லை (சிலருக்கு விதிவிலக்கு). உச்சநீதிமன்றம் அடிக்கடி பெருந்திருட்டையும், சிறுதிருட்டையும் விமர்சிக்கிறது, ஆனால் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊழலைப் பற்றி பிரசாந்த் பூஷன் பேசியதும் அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இது நீதிமன்றத்தின் இரட்டைத்தன்மையை காண்பிக்கிறது. நீதிமன்றம் சாந்திபூஷனிடமும் பிரசாந்த் பூஷனிடமும் மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறது.ஆனால் தங்களின் கூற்று உண்மையில்லாத பட்சத்தில் தாங்கள் சிறைக்குச் செல்லவும் தயார் என்றனர். சமூகத்தில் இப்படி சில தனிநபர்கள் சிறந்த சேவையை செய்கிறார்கள் அவர்களை பாராட்டவேண்டும்.

அண்மையில் டாடா நிறுவன அதிபர், விமானத்துறை தொடங்குவதற்கு முன்னாள் விமானப்போக்குவரத்து அமைச்சர் ஒருவர் தன்னிடம் ரூ15 கோடி லஞ்சம் கேட்டதாக மீடியாவில் சொன்னார், உடனே சிலருக்கு கிலி ஏற்பட்டுவிட்டது. முதலில் சி.எம்.இப்ராஹிம் நான் கேட்கவில்லை அந்த அரசிற்கு அப்படியொரு கொள்கையே இல்லையென்றார். நேற்று பாஜகவின் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் ஒருவர், தானோ அனந்த்குமாரோ அல்லது ஷனாவாஷ் ஹுசைனிடமோ டாடா நிறுவனம் அணுகவில்லை என்றார். இந்த ப்ரப்ரப்பு நீடிக்கிறது இதை ரத்தன் டாடா தான் முடித்துவைக்க வேண்டும்.ஏதோ அவர் லஞ்சத்தை ஊக்குவிப்பவர் அல்ல என்பதைப் போல் பேசிவிட்டார். அரசின் எந்தத்துறையையும் லஞ்சமில்லாமல் சந்திக்க முடியாமா? தேர்தல் கட்சிகளுக்கு யார்யார் நிதி கொடுக்கிறார்கள், அரசியல் கட்சிகளின் வரவு செலவு என்ன? தேர்தலுக்கு எவ்வள்வு செலவு? என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. பொது அறிவுக்காக பார்த்துக்கொள்ளலாம். நெடுந்தொடரையும் மானடமயிலாட நிகழ்ச்சிகளை பார்த்தும் நேரமிருந்தால் சிலரை யோசிக்கவைக்கலாம். முடிவாக மக்கள் எவ்வழி ..மன்னன் அவ்வழி. வாழ்க ஜனநாயகம்.

Thanks 'The Hindu' for Cartoons.

4 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

//இந்த ப்ரப்ரப்பு நீடிக்கிறது இதை ரத்தன் டாடா தான் முடித்துவைக்க வேண்டும்.ஏதோ அவர் லஞ்சத்தை ஊக்குவிப்பவர் அல்ல என்பதைப் போல் பேசிவிட்டார். //


உண்மையான பதிவு.இந்த இடுகையில் எந்த ஊழலுக்கும் இடமில்லை என்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்

kashyapan சொன்னது…

சிறந்த இடுகை ஹரிஹரன்! செங்கல்பட்டு அருகில் வயக்காட்டில் தண்ணீர் பாய அரசு செலவில் சிமெண்ட்டில் வர ப்பு கட்டினார்கள்.அந்த வயக்காட்டில் ஒரு சிறு துண்டு நிலம் அன்றய அமைச்சர் பக்தவதவத்சலத்துக்குச்சொந்தம்..வரப்பு கட்ட 10லட்சம் செலவானது.மெடைகளில் "10லட்சம் பக்தவத்சலம்" என்று தி.மு.க தலைவர்கள்.திட்டியது இப்போதும் காதில் ஒலித்துக்கொண்டுஇருக்கிறது.---காஸ்யபன்.

சிவகுமாரன் சொன்னது…

இந்த ஊழல் செய்தித்தாள்களை விட இணையத்தில் தான் அதிகம் விவாதிக்கப் படுகிறது.நம்மை போன்ற பதிவர்களின் சுதந்திரமும் பறிக்கப்பட்டால் என்ன செய்வோம்? நடக்காது என்று சொல்ல முடியாது. Blogspot இன் சேவையை முடக்கிவிட்டால்?

hariharan சொன்னது…

திரு.சிவகுமரன் பதிவர்கள் சுயமாகவும் பெரும்பாலும் உண்மையாகவும் எழுதுகிறார்கள். இதில் தான் பத்திரிக்கைகளிடமிருந்து வேறுபடுகிறார்கள்.வாசகனுக்காவும் லாப்நோக்கதிற்கும் இடமேயில்லை.

நீங்கள் கூறியது போல தடைகள் வரலாம், அதற்கு முன்பே ‘சவுக்கு’ போன்ற இனையதளத்திற்கு அர்சிடமிருந்து வந்த நெருக்கடியை நாம் அறிவோம்.