புதன், 15 செப்டம்பர், 2010
தலித் மக்கள் வீட்டில் ராகுல் காந்தியும் மகாத்மா காந்தியும்
சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் நேருவின் குடும்ப வாரிசான ராகுல் காந்தி எல்லா மாநிலங்களையும் சுற்றிவருகிறார். “தலித்” மக்களுக்கு நெருக்கமாக தான் இருக்கின்ற மாதிரி அவர்கள் வீடுகளில் தங்கவும் அம்மக்களுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என்று “வாக்குகளை” மையமாக கொண்டு விளம்பரம் தேடிவருகிறார். இந்தியாவில் தீண்டாமை நெடுங்காலமாக நிலவி வருவதன் காரணமாக அம்மக்களுக்கு கோவிலில் வழிபாட்டு உரிமையில்லை,பொதுமயானம் பயன்படுத்த ஆதிக்க சாதிகள் தடுப்பது, சில கிராமங்களில் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க மறுப்பு, தடுப்புச்சுவர் மூலம் அம்மக்களை பிரித்துவைப்பது (உத்தபுரம் சாட்சி) என்பதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு தெரியவில்லையா என்ன? வரலாற்றில் மகாத்மா காந்திக்கே அல்வா கொடுத்திருக்கிறார்கள்.
இந்திய சுதந்திரப்போராட்டம் நடக்கும்போது அதன் ஒருபகுதியாக காந்திஜி தீண்டமைக் கொடுமைக்கெதிராக போராடினார். சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகாலம் ஆகியபின்பும் கிராமங்களில் நிலமில்லா விவசாயக் கூலிகளாக பெருமளவு “தலித்” மக்கள் தான் இருக்கிறார்கள், அன்றைய நிலையை யோசித்துப் பார்த்தால் சமூகத்தில் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள். காந்திஜியின் இந்த முயற்சிகளை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் விரும்பவில்லை. காந்தி தாமாகவே வறுமை வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து அதில் உறுதியாக இருக்கும் நிலையில் அவரை காங்கிரஸ் கட்சியால் உண்மையில் பாதுகாத்திட முடியுமா என்று இந்தியாவுக்கு கடைசி வைஸ்ராயாக பொறுப்பேற்றிருந்த மெளண்ட்பேட்டன் பிரபு கவிக்குயில் சரோஜினிநாயுடுவிடம் கேட்டார். ‘ஓ..’ ‘அவருக்குப் பொருத்தமான மக்கள் கூட்டம் நிறைந்த மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியைத்தேடி கல்கத்தா ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அவர் தனியாக நடந்து செல்வதாக நீங்களும்(மெளண்ட்பேடன்) காந்தியும் வேண்டுமானால் கற்பனை செய்து கொள்ளலாம். அல்லது தீண்டத்தகாதோரின் காலனியின் குடிசையில் காந்தி தங்கியிருக்கும்போது பாதுகாப்பின்றி அவர் இருப்பதாகவும் நினைக்கலாம்.
தீண்டத்தகாதவர் போல உடையணிந்து காங்கிரஸ்காரர்கள் பலர் அவர் பின்னால் நடந்து செல்வதையும் மூன்றாம் வகுப்பு ரயிபெட்டியில் அவருடன் பயணம் செய்வதையும் காந்திஜி அறியமாட்டார். டில்லியின் பங்கி காலனிக்குள் போது ஹரிஜன்கள் போலவே உடை உடுத்தி அவரைச்சுற்றியுள்ள குடில்களில் காங்கிரஸ்காரர்கள் பலர் குடியிருந்தனர் என்று விளக்கியிருக்கிறார். மேலும், அந்த வயதான மனிதரை வறுமையில் வாழ வைப்பதற்கு காங்கிரஸ் கட்சி எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்’ என்று கூறி சரோஜினி நாயுடு விளக்கத்தை முடித்தார்.
இந்தக் கொள்கையும் நடைமுறையும் தான் அவர்களின் யோக்கியதை, இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் அம்மக்கள் தங்களது அனுபத்தில் தங்களுக்காக யார் போராடுகிறார்கள் என்று புரிந்துகொள்வார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக