சனி, 27 நவம்பர், 2010

உறவுகள் வெளிச்சம்


கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நாடாளுமன்றம் முடங்கிக்கிடக்கிறது,JPC விசாரனைக்காக காங்கிரசும் அதன் தோழமைகளும் ஏன் அஞ்சுகின்றன. இதற்கு முன்னர் ஹர்சத் மேத்தாஊழல்,போபர்ஸ்பீரங்கி ஊழல் மற்றும் பங்குச்சந்தை ஊழலுக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கப்பட்டுள்ளது.தேசம் இதுவரை கண்டிராத ஒரு வருமான இழப்பிற்காக அல்லது பெருந்திருட்டுக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை ஏன் நடத்தக்கூடாது. இடதுசாரிகளும் பாஜகவும் ஆளும் கூட்டணிக்கு நெருக்குதலை தருகின்றனர்.ஆனால் கர்நாடகாவில் பாஜகவின் தலைகள் பெரும் ஊழலில் சிக்கியிருப்பதால் பரஸ்பரம் நலன்காக்க பாஜக-காங்கிரஸ் பேரம் திரைமறைவில் ஏற்படக்கூடும். முடிவில் பெரிய தலைகள் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பது தான் கடந்தகாலத்தின் வரலாறு.

நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் இப்போது பரபரப்பாக பேசப்படுகின்றன, இதில் பெரிய ஊடகங்களின் செய்தியாளர்கள் புரோக்ககர்களாக செயல்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் தேர்தல் உடன்பாடுகளுக்காக செய்துகொள்ளும் கூட்டணிதான் மக்களுக்கு தெரியவருகிறது. திரைக்குப்பின்னால் தொடர்ந்து நடைபெற்றுவருகிற பேரங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. சிலநேரங்களில் ஊடகங்கள் அரசியல்வாதிகளின் ஊழல்களை அம்பலப்படுத்தும் போது நாம் அந்த ஊடகங்களை அளவுக்குமீறி புகழ்கிறோம்.ஆனால் அவர்களும் இதில் கூட்டு அல்லது புரோக்கர் வேலை செய்கின்றனர் என்ற செய்தி நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. பெருமுதலாளிகள் தங்களுக்கு தேவையான காரியத்தை சாதிப்பதற்கு யாரும் நேரடியாக அரசின் இலாகாவையோ அல்லது அமைச்சர்களையோ சந்திப்பதில்லை பெரும்பாலும் கன்சல்டண்ட் மூலமாகவே இந்த பேரங்கள் நடைபெறுகின்றன என்பது அம்பலமாகிறது. சாதாரண மக்கள் ‘அரசு’ என்பது பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக இருக்கிறது என்று நம்புகின்றனர்.இடதுசாரிகள் குறிப்பாக கம்யூனிஸ்ட்கள் தான் இந்த அரசு என்பது பெருமுதலாளிகளால் அவர்களுடைய நலன்களுக்காகவே நடத்தப்படுகிறது என்பதை மக்களுக்கு சொல்கின்றனர். நான் வாசித்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய‘அரசியல் எனக்குப்பிடிக்கும்’ என்ற புத்தகம் திரைமறைவில் இருந்து கொண்டு இந்த பெருமுதலாளிகள் எப்படி ஆட்சி நடத்துகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.

கண்ணுக்கு தெரியாத பல மறைமுக கூட்டணிகள் உள்ளன.....

முதலாளித்துவ அரசியல் கட்சிகள் vs பெருமுதலாளிகள், அந்நியமூலதனம்.

சில நேரங்களில் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் தலைவர்களே பெருமுதலாளிகளாகவும் அல்லது பெருமுதலாளிகளை இந்த அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக்கிவிடுகின்றனர்.

பெருமுதலாளிகள் vs ஊடகங்கள் (பெரும்பாலும் அவர்களாலேயே நடத்தப்படுகிறது)

இந்த கூட்டணிதான் காலவரையற்ற ஒப்பந்தம் போல நீடித்துவருகிறது, அதாவது mutual benefit அடைகின்றனர்.மக்களை திசைதிருப்புவது, குறிப்பிட்ட செய்திகளின்மீது அதிக ஒளியை பாய்ச்சும்போது பல முக்கிய விவரங்கள் மக்களின் பார்வைக்கு வராமலேயே போய்விடும். மக்களை எப்போதும் பொழுதுபோக்கு அம்சங்களில் கட்டிப்போடும் வேலையை செய்கிறது.நாம் பார்க்கின்ற எல்லா நிகழ்ச்சிகளும் விள்ம்பரதாரர் நிகழ்ச்சிகள் தான்.தொலைக்காட்சி அல்லது அச்சு ஊடகங்களின் நிலையான வருமானத்தை பெருநிறுவனங்கள் உறுதிப்படுத்துகின்றன.அதனாலேயே சமீபகாலத்தில் தொலைக்காட்சி ஊடகத்தின் வருமானம் பன்மடங்கு பெருகியுள்ளது.

தினமும் நாம் பார்க்கின்ற ஊழலில் பெரும்பாலும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இலக்காகின்றனர்,ஆனால் அதிக பலன்பெருகிற வர்க்கமான பெருமுதலாளிகள் ‘வெளிச்சத்திற்கே’ வருவதில்லை. அவர்கள் புனிதப்பசுக்களாகவே உலவிவருகின்றனர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ1.75 இலட்சம் கோடிகள் என்பது அரசின் கருவூலத்திற்கு வந்து சேரவேண்டிய பணம் வரவில்லை அதன் பலன்களை தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் வருமானமாக ஈட்டியுள்ளன. இதற்கு உடந்தையாக இருந்த அமைச்சர், அத்துறையின் செயலாளர், முக்கியக்கட்சி, கூட்டணிக்கட்சி என அவர்களுக்குரிய பங்குத்தொகை கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. நாள்தோறும் 230கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து லஞ்சம்,வரிஏய்ப்பு,கறுப்புப்பணம் போன்றவற்றால் வெளியேறுகிறது என செய்திகள் வருகின்றன. தினமணியில் வெளியான ஸ்பெக்ட்ரம் தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் வேறு சில செய்தித்தாள்களில் வரவில்லை. மீடியா என்பதே முதலாளித்துவ நலன்களில் தான் இயங்குகிறது .மாற்று ஊடகம் என்பது மக்களிடம் செல்லாதவரை உண்மைகள் வெளிச்சத்திற்கு வர சாத்தியமில்லை.

புதன், 17 நவம்பர், 2010

ஒரு குடிமகனின் புலம்பல்கள்



ஒரு வழியாக ஸ்பெக்டரம் புகழ் ‘ராசா’ பதவி விலகிவிட்டார். இதுவரை நாடு இவ்வளவு பெரிய ஊழலைக் கண்டிருக்குமா என்பது சந்தேகம் தான். இருபது முப்பதாண்டுகளுக்கு முன்னாலும் ஊழல் இருந்தது, ஆனால் அது இலட்சங்கள்,சில கோடிகளில் இருந்தது. இது ஏன் இப்போது இலட்சம் கோடிகளில் இருக்கிறதென்றால் அதற்கு புதிய பொருளாதாரம் தான் ஊழலையும்‘தாராளமய’மாக்கியிருக்கிறது. ஒருவேளை BSNL நிறுவனம் மட்டுமே தொலைத்தொடர்பில் கோலோச்சியிருந்தால் இந்த ஊழல் நடந்திருக்குமா? என்பது சந்தேகம் தான். உடனே BSNLன் சேவையை குறைசொல்லத் தொடங்கிவிடுவார்கள். நமது மக்களுக்கு லஞ்சம், ஊழல் என்பெதெல்லாம் பழகிவிட்டது அதனால் அந்த சொற்கள் சாதாரணமாகிவிட்டது, இனிமேல் ஊழலை ‘பெருந்திருட்டு’ என்று மாற்றவேண்டும் அப்போதாவது ‘திருடன்’ மேல் கோபம் வருகிறதா என்று பார்க்கலாம்.

ஒரு பதிவர் சொன்னார், சினிமாவில் அநியாயத்தையும்,அக்கிரமத்தையும் எதிர்க்காத இளைஞர்கள் உண்டா? திரைப்படத்தில் விஷாலும்,விஜய்யும் அநியாயக்காரர்களையும், அக்கிரமக்காரர்களையும், பந்தாடும்போது சமூகத்தின் மீது உள்ள அந்த இளைஞனின் கோபம் வடிந்துவிடுகிறது. இந்த நிலைமையில் தான் நாம் உள்ளோம்,அதற்குத் தான் மதங்களே அநியாயங்கள் அதிகரிக்கும்போது ‘கடவுள்’ அவதாரம் எடுத்துவருவார் என்று மக்களின் கோபத்தை தணிக்கிறது.இந்த அமைப்பே ‘பெருந்திருட்டு’களை ஊக்குவிக்கும் அமைப்பாக உள்ளது. ரெண்டுபேர் பேசிக்கொண்டால் சினிமாவில் ஆரம்பித்து அரசியல்வாதிகளை திட்டி உரையாடல்களை முடித்துக்கொள்வார்கள், அதன் வேர் என்ன? முதலாளித்துவ அரசியல் கட்சிகள் எப்படி ‘தொழில்’ (அரசியல் என்பது அவர்களுக்கு தொழில் தானே)நடத்துகிறார்கள் என்ற கேள்வியை யாரும் வைப்பதில்லை, அவர்கள் கைக்காசைப் போட்டு இயக்கம் நடத்தினால் அது வட்டியுடன் திரும்ப எடுக்கவேண்டும். சேவையாக நடத்தினால் மக்களிடம் அவர்கள் சந்தா வசூல் செய்யவேண்டும், யாருக்கும் தருவதற்கு விருப்பம் இல்லை, வாக்குகளையே விற்பவர்கள் எப்படி தருவார்கள்? அதனால் தேர்தல் மற்றும் கட்சி செலவீனங்களுக்கு சமூகத்தின் சிறுபான்மை பிரிவினரான தொழிலதிபர்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் நாடுகிறார்கள். பதவிக்கு வந்தவுடன் நன்றிமறவாமல் ‘கைமாறு’செய்கிறார்கள், எப்படியென்றால் ஸ்பெக்ட்ரம் மாதிரி. இது அவர்களுக்கான ‘Win Win' ஒப்பந்தம். மொத்தத்தில் அரசின் கஜானாவிற்கு உண்மையாக வந்துசேர வேண்டிய பணம் அந்த சிறுபான்மை பிரிவினரான தொழிலபதிர்களிடமிருந்து வரவில்லை. இது தான் சமூகத்தின் ஒருபிரிவினர் குறுகிய காலத்தில் பில்லிணியர்களாக மாறுவதும் மற்றொருபுறம் வறுமைக்கோடு இன்னமும் அழியாமல் இருப்பதற்கும் காரணம்.



முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கும் பெரும்தொழிலதிபர்களுக்கும் உள்ள மானசீக உறவு இது தான். இதைப்போல் இப்போது ஊடகங்களும் மேற்குறிப்பிட்ட இரு பிரிவினரை பாதுகாக்கும் வேலையைச் செய்கின்றன. 50ரூ, 100ரூ லஞ்சம் பெறுகின்ற அரசு அதிகாரிகள் தண்டிக்கபடுவதை நாம் செய்திகளில் வாசிக்கிறோம், ஆனால் கோடிகளில் ‘பெருந்திருட்டில்’ ஈடுபடுவோர் இதுவரை தண்டனை பெற்றதை இந்தியாவில் நிகழ்ந்ததில்லை.அது இந்த அமைப்பு நீடித்திருக்கும் வரை தொடரும். அண்மையில் கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனை காவல்துறை ‘என்கெளண்டரில்’ சுட்டவுடன் மக்கள் நரகாசுரன் இறந்தான் என தீபாவளியே கொண்டாடினார்கள், ஆனால் ஹரியானாவில் முன்னாள் DGP ரத்தோர்ட் அதே பாலியல் பலாத்காரதிற்காக ஜாமீன் பெற்றான் (’ர்’விகுதி அவசியமில்லை). அதை மீடியாவோ மக்களோ கேள்விக்குள்ளாக்கவில்லை. உடனே தண்டனை கொடுக்கவேண்டும் என்று மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.

சமீபத்திய பெருந்திருட்டுகளில் முதலிடம் பெறுவது ‘ஸ்பெக்ட்ரம்’ தான், அடுத்து ஆதர்ஸ் வீடு ஒதுக்கீட்டு ஊழல்,(கார்கில் சவப்பெட்டி,ஆயுதபேர ஊழல் என்னாச்சு?) காமன்வெல்த் ஊழல் என மத்தியில் ஆளும் காங்கிரஸும் அதன் கூட்டணியும் நாறுகிறது. சுரங்க ஊழலில் பாஜக திணறுகிறது. பிரதமர் இதுநாள் வரை ‘சட்டப்படி’ தான் என்று சப்பைக்கட்டு கட்டி திமுகவைக் காப்பாற்றினார். எதிர்க்கட்சிகளின் சீறிய முயற்சியால் தான் ராசா பதவி விலகினார். எதிர்க்கட்சிகல் பாராளுமன்றத்தில் அமளி மக்கள் பணம் வீண் என்று எந்த மீடியாவும் வாய் திறக்கமுடியவில்லை, இந்த தேசத்தில் சுதந்திரம் பெற்றபின்பும் போராடமல் எதுவும் கிடைப்பதில்லை (சிலருக்கு விதிவிலக்கு). உச்சநீதிமன்றம் அடிக்கடி பெருந்திருட்டையும், சிறுதிருட்டையும் விமர்சிக்கிறது, ஆனால் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊழலைப் பற்றி பிரசாந்த் பூஷன் பேசியதும் அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இது நீதிமன்றத்தின் இரட்டைத்தன்மையை காண்பிக்கிறது. நீதிமன்றம் சாந்திபூஷனிடமும் பிரசாந்த் பூஷனிடமும் மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறது.ஆனால் தங்களின் கூற்று உண்மையில்லாத பட்சத்தில் தாங்கள் சிறைக்குச் செல்லவும் தயார் என்றனர். சமூகத்தில் இப்படி சில தனிநபர்கள் சிறந்த சேவையை செய்கிறார்கள் அவர்களை பாராட்டவேண்டும்.

அண்மையில் டாடா நிறுவன அதிபர், விமானத்துறை தொடங்குவதற்கு முன்னாள் விமானப்போக்குவரத்து அமைச்சர் ஒருவர் தன்னிடம் ரூ15 கோடி லஞ்சம் கேட்டதாக மீடியாவில் சொன்னார், உடனே சிலருக்கு கிலி ஏற்பட்டுவிட்டது. முதலில் சி.எம்.இப்ராஹிம் நான் கேட்கவில்லை அந்த அரசிற்கு அப்படியொரு கொள்கையே இல்லையென்றார். நேற்று பாஜகவின் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் ஒருவர், தானோ அனந்த்குமாரோ அல்லது ஷனாவாஷ் ஹுசைனிடமோ டாடா நிறுவனம் அணுகவில்லை என்றார். இந்த ப்ரப்ரப்பு நீடிக்கிறது இதை ரத்தன் டாடா தான் முடித்துவைக்க வேண்டும்.ஏதோ அவர் லஞ்சத்தை ஊக்குவிப்பவர் அல்ல என்பதைப் போல் பேசிவிட்டார். அரசின் எந்தத்துறையையும் லஞ்சமில்லாமல் சந்திக்க முடியாமா? தேர்தல் கட்சிகளுக்கு யார்யார் நிதி கொடுக்கிறார்கள், அரசியல் கட்சிகளின் வரவு செலவு என்ன? தேர்தலுக்கு எவ்வள்வு செலவு? என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. பொது அறிவுக்காக பார்த்துக்கொள்ளலாம். நெடுந்தொடரையும் மானடமயிலாட நிகழ்ச்சிகளை பார்த்தும் நேரமிருந்தால் சிலரை யோசிக்கவைக்கலாம். முடிவாக மக்கள் எவ்வழி ..மன்னன் அவ்வழி. வாழ்க ஜனநாயகம்.

Thanks 'The Hindu' for Cartoons.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

Manual Scavenging Must Stop Now


இருதினங்களுக்கு முன்பு செய்தித்தாளில் வந்த கட்டுரை “manual scavenging” ஒழிக்கப்படவேண்டும் என்று, மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கும் அவலம் நாகரீக சமூகத்தில் நிலவக்கூடாது, இச்செயல் இப்போதும் நடைபெற்றால் நாம் நாகரீகமானவர்கள் இல்லை, ஏனென்றால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வீடுகளை சுட்ட செங்கற்களாலும், வீட்டினுள் குளியறை மற்றும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று நாம் பாடபுத்தகத்தில் படித்தோம். அறிவியலைப் பற்றி அறியாத ஒரு சமூகம் வாழ்ந்த காலத்தில் சுகாதாரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் திராவிடர்களா? ஆரியர்களா? என்று செல்லத்தேவையில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் இன்றளவும் மனிதக்கழிவுகளை அறவே ஒழிப்பது பற்றி விவாதங்கள் நடைபெறுவது கேலிக்கூத்து. இதை ஒழிப்பதற்கு 1993ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது, ஆனால் 1997ம் ஆண்டுவரை இந்திய அரசிதழில் வெளிடப்படவில்லை, பொதுமக்களுக்கும் 2000ம் ஆண்டு தான் தெரியவந்தது. சமூகத்தின் பெரும்பான்மையான் மக்களும் இந்த அவலத்தை கண்டுகொள்ளவில்லை ஏனென்றால் இத்தொழிலை செய்வது தலித் களிலும் தலிகளான அருந்ததியினர் என்பதாலோ? எப்படி இந்த தொழில் ஒரு சாதி மக்களின் வாழ்க்கையானது? இந்த சாதிக்கு இந்த தொழில் என்று உலகின் வேறு எந்த பகுதியிலாவது இருக்கிறதா? நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது அருந்ததியர் என்பவர்கள் யார் என்று வினா எழுப்பும் போது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை, அவர்கள் தமிழகத்தில் சக்கிலியர் என்றும் மாதீகா என்றும் விளிக்கப்படுகின்றனர். ஜாதியின் பெயரால் இந்தியாவில் தலித்துகள் மீது இன்று நடக்கும் கொடூரங்கள் குறித்து நாம் பெருமை கொள்ள இயலுமா?

சுத்தம், சுகாதாரம், தூய்மை, மாசுபாடு, தலைவிதி குறித்த பார்ப்பனிய விழுமியங்களின் அடிப்படையில்தான் இன்று நடைமுறையில் உள்ள இழிவான ஜாதியப் படிநிலை உருவானது. அந்தப் படிநிலையின் கீழ்த் தளத்தில் தலித்துகள் மொத்த ஜாதிய கட்டுமானத்தின் சுமையைத் தாங்குபவர்களாக வடிவமைக்கப் பெற்றது. தெருக்களைச் சுத்தம் செய்வது, குப்பைகளைப் பெறுக்குவது, தோல் பயன்பாட்டுடைய தொழில், மனித-மிருக சடலங்களை அப்புறப்படுத்துவது/ எரியூட்டுவது, பன்றிகள் வளர்ப்பது/ மேய்ப்பது, மனித மலத்தை அள்ளுவது /அப்புறப்படுத்துவது என இந்தப் பணிகள் மட்டுமே குறிப்பிட்ட ஜாதிகளுக்கு உரியதாகப் பட்டியலிடப்பட்டது. 2000 ஆண்டுகளாக அது தொடர்ந்து நடைமுறையிலும் கச்சிதமாக இருந்தும் வருகிறது. பார்ப்னியர்கள் மட்டுமின்றி இந்தக் கட்டுமானத் திட்டத்தை அப்படியே இடைநிலை ஜாதிகளும் அப்படியே சுவிகரித்துக் கொண்டனர்.

நம் தேசத்தின் தலை நகரத்தில் பீ அள்ளுபவர்கள் பெரும்பகுதி தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களே. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பாகிஸ்தான் அனைத்து இந்துக்களையும் இந்தியாவிற்கு அனுப்பியது, ஆனால் அதுகாறும் அங்கு மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தலித்துகளை அனுப்ப மறுத்தது. அத்தியாவசிய சேவைகள் என அவர்களைத் தலைப்பிட்டுப் பாதுகாத்துக் கொண்டது. 1947 டிசம்பரில் அம்பேத்கார் இது குறித்துப் பல முறை கேள்விகளை எழுப்பினார், நேருவுக்குக் கடிதம் எழுதினார். இந்திய அரசோ காங்கிரஸ் கட்சியோ இதனைக் கண்டுகொள்ளவேயில்லை.

மனிதக்கழிவுகளை மனிதன் சுமக்கும் சட்டம் ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை, அதற்கு சபாயி கர்மசாரி ஆந்தொலன் நடத்திய போராட்டம் தான் இந்த சட்டம் இயற்றுவதற்கு முக்கிய காரணி, அதை அமல்படுத்டுவதற்கும் அந்த அமைப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. 1996ம் ஆண்டு விஜயவாடாவில் இந்த அமைப்பு தொடக்கப்படுவதற்கு முக்கிய காரணமாய் இருந்தவர்களில் பெசவாடா வில்சன் என்பவர். இவர் கர்நாடக மாநிலத்தில் மாதீகா குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோலார் தங்கவயலில் வசிக்கும் தொழிலாளர் குடியிருப்பில் உள்ள திறந்தவெளி உலர் கழிப்பிடங்களில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள். ஆந்திராவின் குப்பத்தில் தொடக்கக் கல்வி, பெங்களூரில் முதுகலைப் பட்டம் மற்றும் இறையியல் இளநிலை பட்டப்படிப்பும் அதன் பின்னர் சமூகப்பணியென அவரது பயணம் தொடங்கியது. பின்னர் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயத் துவங்கினார், அவர்களில் பெரும் பகுதி குடிகாரர்களாக இருந்தனர். அவர்களின் பணியிடங்களுக்குச் சென்று சூழ்நிலையை விழுங்க முற்பட்டார் வில்சன். அந்த வீச்சம், நாற்றம்தான் அவர்களைக் குடியின் பால் இட்டுச் சென்றது. நாள்தோறும் கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளைப் பெரிய தொட்டிகளில் கொட்டி, பின்னர் அதை வேறு ஒரு இடத்திற்குச் சென்று அப்புறப்படுத்த வேண்டும். மல வாளியைத் தூக்கி ட்ராக்டரில் ஏற்ற வேண்டும். இந்த வேலையைச் செய்யும் பொழுது அவர்களின் உடலில் மலம் வடிந்துவிடுவதைப் பார்த்த வில்சன் கதறக்கதற வெடித்து அழுதார்.

“எனக்கு இரண்டு வழிகள் இருந்தன: ஒன்று, நான் சாக வேண்டும் அல்லது இந்தக் கொடிய வழக்கத்தை நிறுத்த நான் ஏதாவது செய்தாக வேண்டும். முதலில் சொன்னது எளிதானது. இரண்டாவது கடினமானது. நான் செத்துப் போவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.” 1982 முதல் இயங்கத்துவங்கிய வில்சன் 1996ல் தீவிரமான மனித உரிமை ஆர்வலர்களான தனது நண்பர்களுடன் இணைந்து அமைப்பைத் தொடங்கினார். சமீபத்தில் அவுட்லுக் இதழ் 25 நபர்களை கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அது இந்தியாவில் எக்காலத்திலும் அதிகாரத்திற்குச் செல்ல முடியாத வர்களின் பட்டியல். மகத்தான போராளிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அதிகாரத்திற்கு எதிரான அறிவுஜீவிகள், சமூகங்சார் களப்பனியாளர்கள் என நிண்டு சென்றது. அதில் பெசவாடா வில்சன் இடம் பெற்றிருந்தார். இது அவரது பணிக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.

சபாயி கர்மச்சாரிகளின் தேசிய ஆணையம் தனது விரிவான ஆய்வை மேற்கொண்டது. ராணுவம், பொதுத் துறை நிறுவனங்கள், மாநகராட்சிகள் எனப் பல துறைகளில் இன்றும் இழிவான நடைமுறைகள் உள்ளதை அது சுட்டிக்காட்டியது. ராணுவத்தின் பல முகாம்களில் இன்றளவும் கையால் மலம் அள்ளும் வழக்கம் உள்ளது. இதில் இந்திய ரயில்வே துறைதான் அதிகப்படியான ஆட்களை இத்தகைய பணியில் ஈடுபடுத்தி வருகிறது. 2010 க்குள் உலர் கழிப்பிடங்களை இல்லாமல் ஆக்க வேண்டும், கையால் மலம் அள்ளும் நடைமுறை ஒழிய வேண்டும் என்கிற வில்சனின் கனவை நடை முறைப்படுத்தும் பணிகள் தொடர்கிறது.

நன்றி- கீற்று..
அ.முத்துகிருஷ்ணன் அவர்கள் கீற்றுவில் எழுதிய “மலத்தில் தோய்ந்த மானுடம்” கட்டுரையை தழுவி எழுதப்பட்டது.
பிரண்ட்லைன் இதழின் கவர்ஸ்டோரி. http://www.frontlineonnet.com/fl2318/stories/20060922005900400.htm

திங்கள், 25 அக்டோபர், 2010

உலக அரங்கில் இந்தியா

ஐ நா சபையின் நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகள் பற்றி உலகமெங்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, 2015ம் ஆண்டுக்குள் உலகில் வறுமையை ஒழிக்கவேண்டும், சிசுமரணம், கல்லாமை, எய்ட்ஸ், மலேரியா மற்றும் காசநோயை ஒழிப்பது, அனைவருக்கும் உணவுபாதுகாப்பு அளிப்பது, அடிப்படை கல்வியை உரிமையாக்குவது என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இது ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் சுதந்திரதின உரையில் வாசிப்பது போன்று தான் இருக்கிறது, ஏனென்றால் இந்த வாசிக்கவேண்டிய உரையை 1947 லிருந்து இன்னமும் மாற்றவில்லை, பிரதமர்கள், கட்சிகள் மாறியிருக்கலாம், ஆனால் வறுமையை ஒழிப்பது நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் முற்றுப்பெறவில்லை மாறாக பட்டினி பட்டாளங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. உண்மையிலேயே இந்தியாவிடம் வளமையில்லையா? இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியாகாந்தி “Inclusive Growth” பற்றி பேசுகிறார், அவரின் வாரிசான ராகுல்காந்தி இந்தியாவிற்குள்ளே இரண்டு இந்தியாக்கள் அதாவது ஒளிரும் இந்தியா, வறுமை இந்தியா இருக்கிறது என ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் இதை மாற்றுவதற்கான எண்ணமோ, திண்ணமோ நிச்சயமாக இவர்களிடம் இல்லை.

மக்களின் சார்பாக பேசுகிற காங்கிரஸ் கட்சியில் உள்ள மணிசங்கர் ஐயர் தான் அரசின் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சனம் செய்கிறார், பணக்காரகளுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நிலத்தை அடிப்படையாகக் கொண்ட பிரபுத்துவத்திற்குப் பதிலாக ‘பங்குச்சந்தையை’ அடிப்படையாகக் கொண்ட பிரபுத்துவம் இங்கே ஆட்சி செய்கிறது என்றார். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யமுடியாத நிலையில் 70,000 கோடி ரூபாய் செலவு செய்து காமன்வெல்த் விளையாட்டை நடத்துவது தேவையற்றது என்றார். இந்தியா –ஈரான் எரிவாயு குழாய் மூலம் நீண்டகால எரிசக்திக்கு தேவையான பாதையை வகுத்த மணிசங்கர் ஐயரின் பெட்ரோலிய அமைச்சர் பதவி யாரால் பறிக்கப்பட்டது என தெரியவில்லை.

உலக அரங்கில் 50 பில்லிணியர்களில் இந்தியர்கள் 6 பேர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி ஆசியாவிலேயே முதல் பணக்காரர் என்ற பெருமையை இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை தேடித்தந்திருக்கிறது. நாட்டின் இயற்கை எரிவாயு வளங்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தருவதன் மூலம் நாட்டின் எரிசக்தி செலவை குறைப்பதற்கு மாறாக கிருஷ்ணா-கோதாவரி எண்ணைய் படுகையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்த்துள்ளது, மற்றொரு புறம் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் மூடப்பட்ட சில்லரை விற்பனை நிலையங்களை மீண்டும் சந்தைக்கு வர பெட்ரோலிய பொருட்களின் விலைகளை ‘derugulate’ செய்து அம்பானிகளின் சொத்து மதிப்பை கூட்டுவதோடு மக்களின் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலையை மறைமுகமாக ஏறுவதற்கு உதவிசெய்கிறது.

இந்திய பில்லிணியர்கள் உலக அரங்கில்………….. முதல் 50 இடத்தில்

முகேஷ் அம்பானி - $ 29 பில்லியண் – 4 வது இடம்
லஷ்மி மிட்டல் - $ 28.7 பில்லியண் – 5 வது இடம்
அஸிம் பிரேம்ஜி - $ 17 பில்லியண் 28 வது இடம்
அனில் அம்பானி - $ 13.7 பில்லியண் 36 வது இடம்
எஸ்ஸார் குழுமம் - $ 13 பில்லியண் 40 வது இடம்
ஜிண்டால் குழுமம் - $ 12.2 பில்லியண் 44 வது இடம்

பில்லிணியர்கள் எத்தனை பேர் …….அமெரிக்கா - 329 ,
சீனா - 79
இந்தியா - 58 மூன்றாவது இடம்
ஜெர்மனி - 54
ரஷ்யா - 32
இங்கிலாந்து - 25
ஜப்பான் - 17 (நமக்குப் பின்னாடி தான்)

ஆசியப் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில்…

ASIA’S RICHEST GNP

சீனா - $ 7.7 பில்லியண்
ஜப்பான் - $ 3.8 பில்லியண்
இந்தியா - $ 3.4 பில்லியண்
ரஷ்யா - $ 1.4 பில்லியண்
கொரியா - $1.0 பில்லியண்

உலகப்பொருளாதாரத்தில் இந்தியா 4வது இடத்தில்……….
Richest GDP 2006

அமெரிக்கா - $ 13 டிரில்லியண்
சீனா - $ 10 டிரில்லியண்
ஜப்பான் - $ 4.17 டிரில்லியண்
இந்தியா - $ 4.16 டிரில்லியண்
ஜெர்மனி - $ 2.6 டிரில்லியண்

2050ம் ஆண்டில் இந்தியா உலக அரங்கில் சீனா, அமெரிக்கா வை அடுத்து மூன்றாவது இடத்திற்கு வரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இந்தியாவின் வளர்ச்சி என்பதே பெருமுதலாளிகளின் வளர்ச்சி என்று வாசிக்கவேண்டும், இந்தியா மக்களின் நலன்களில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

Hunger Index ல் நாம் 23.9 புள்ளிகளில் அதாவது மோசமான பசியால் அதிகம் வாடும் மக்கள் கொண்ட 30 நாடுகளில் இந்தியாவும் ஒன்று Hunger Index ‘0’ என்பது No Hunger, 20 புள்ளிகள் முதல் 29.9 வரை ‘alaraming’ என்ற நிலையில் உள்ளோம்,

நம்மோடு இதில் போட்டி போடும் நாடுகள் …..

எத்தியோப்பியா 30.8, நேபாளம் 20, சூடான் 20.9, தான்சானியா 20.9, ருவாண்டா 23, கம்போடியா 20.9, உகாண்டா 14.8, இலங்கை 13.7, சீனா 5.7, கியூபா <5 (நாம் யாருடன் போட்டி போடுகிறோம்).

Poverty- இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள மக்கள் 37 சதவீதம், கிராமப்புறங்களில் 22% பேரும் நகர்ப்புறங்களில் 15% பேரும் இருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு $1.25 சம்பாதிப்பவர்கள் இந்தியாவில் 41.6%, ஐநா வின் வறுமை பட்டியலில் நாம் 88வது இடத்தில் இருக்கிறோம்(out of 134).

மக்களின் மருத்துவ வசதிகளைப் பார்ப்போம்…………

இந்தியாவில் மலேரியா காய்ச்சலால் வருடத்திற்கு 1,25,000 பேர் இறப்பதாக The Lancet என்ற மருத்துவ இதழின் ஆய்வறிக்கை கூறுகிறது, ஐநா வின் திட்டப்படி உலகம் முழுவதிலும் 1,00,000 பேர் இறக்கின்றனர் என்ற கூற்றை விட இந்தியாவில் அதிகமாக இறக்கிறார்கள். இந்த நோயால் மரணிப்பதை தடுக்கமுடியதா?

காசநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வளரும் நாடுகளில் உள்ள விகிதத்தை விட இந்தியாவில் அதிகம் இந்தியாவில் ஒரு இலட்சம் பேருக்கு 23 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர் / மரணிக்கின்றனர். அதே நிலைமை மற்ற ஏழை நாடுகளில் ..
இலங்கை யில் 10 பேரும், நேபாளத்தில 22 பேரும், சீனாவில் 12 பேரும், கென்யாவில் 19 பேரும், கினியா-பிசோவில் 25 பேரும், உகாண்டாவில் 27 பேரும், பாகிஸ்தானில் 39 பேரும் இறக்கின்றனர்.

குழந்தைகள் பிறந்தவுடன் சரியான மருத்துவ வசதி, சத்தான உணவு கிடைக்காமல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்தியாவில் மரணமடைவது அதிகமாக உள்ளது. (மரணவிகிதம் /1000 குழந்தைகள் பிறக்கும்போது)

இந்தியாவில் 69, பங்களாதேஷில் 54, நேபாளத்தில் 51, எரித்ரியாவில் 51, கானா வில் 76, பாகிஸ்தானில் 89, சூடானில் 200, இலங்கை 17, சீனாவில் 21 குழந்தைகளும் இறக்கின்றனர்.

அதே போல் ஐந்து வயதிட்குட்ட குழந்தைகள் எடை குறைவாக இந்தியாவில் 43.5%..

பங்களாதேஷில் 41.3%, நேபாளத்தில் 38%, எத்தியோப்பியாவில் 34.6%, சூடானில் 31.7%, சோமாலியாவில் 32.8, நைஜீரியாவில் 37.9% இலங்கையில் 21.1%, வடகொரியாவில் -20.6%, சீனாவில் 6.8%, ருவாண்டா 18% , கியூபாவில் 3.9% குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் வளர்ந்த நாடுகளோடு போட்டியிடும் நாம் மக்கள் நலனில் உள்நாட்டுக் கலவரங்களாலும், பஞ்சத்தாலும் அவதிப்படும் நாடுகளைவிட கீழேயுள்ளோம்.

இந்தியாவில் கழிவறையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை விட செல்போனை உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக ஐ நா கூறுகிறது. வளர்ந்த நாடுகளில் 100 சதவீத மக்கள் சுகாதரமான கழிவறையை உபயோகப்படுத்தும் போது இந்தியாவில் 31சதவீத மக்களே சுகாதரமானக் கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள். மற்ற நாடுகளில்…………….

அமெரிக்காவில் 100%, இலங்கையில் 91%, சீனாவில் 55%, பங்களாதேஷில் 53%, பிரேசிலில் 80%, உகாண்டாவில் 48%, ருவாண்டாவில் 54%, நேபாளத்தில் 31% பேரும் சுகாதாரமான கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை 10,000 மக்களுக்கு 6 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். பிற நாடுகளில்…………………….

அமெரிக்காவில் 27 மருத்துவர்களும், கியூபாவில் 64 மருத்துவர்களும், எகிப்தில் 25 மருத்துவர்களும், சீனாவில் 14 மருத்துவர்களும், பாகிஸ்தானில் 8 மருத்துவர்களும், ஜமைக்காவில் 9 மருத்துவர்களும், ரஷ்யாவில் 43 மருத்துவர்களும் உள்ளனர்.

இந்தியா மருத்துவம் மற்றும் சுகாதார நலன்களுக்கு மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (GDP) 4.1% மட்டுமே ஒதுக்குகிறது. மற்ற நாடுகள் சுகாதரத்துறைக்கு ஒதுக்கும் GDP யின் அளவைக் காண்போம்.
அமெரிக்கா 15.7% கியூபா 10.4%, சீனா 4.3%, கனடா 10.1%, பிரேசில் 8.4%, கானா 8.3%, நேபாளம் 5.1%, உகாண்டா 6.3%,பாகிஸ்தான் 2.7%,ரஷ்யா 5.4% அளவிற்கு ஒதுக்குகிறது.

இந்தியா விண்வெளியிலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறியுள்ளது, ஆனால் ‘ஆம் ஆத்மி’ யைப் பற்றிய அக்கறை ஆள்வோருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இந்த தகவல்கள் யாவும் ஐ நாவின் ஆய்வறிக்கையிலிருந்து பெறப்பட்டவை.