வெள்ளி, 29 அக்டோபர், 2010

Manual Scavenging Must Stop Now


இருதினங்களுக்கு முன்பு செய்தித்தாளில் வந்த கட்டுரை “manual scavenging” ஒழிக்கப்படவேண்டும் என்று, மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கும் அவலம் நாகரீக சமூகத்தில் நிலவக்கூடாது, இச்செயல் இப்போதும் நடைபெற்றால் நாம் நாகரீகமானவர்கள் இல்லை, ஏனென்றால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வீடுகளை சுட்ட செங்கற்களாலும், வீட்டினுள் குளியறை மற்றும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று நாம் பாடபுத்தகத்தில் படித்தோம். அறிவியலைப் பற்றி அறியாத ஒரு சமூகம் வாழ்ந்த காலத்தில் சுகாதாரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் திராவிடர்களா? ஆரியர்களா? என்று செல்லத்தேவையில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் இன்றளவும் மனிதக்கழிவுகளை அறவே ஒழிப்பது பற்றி விவாதங்கள் நடைபெறுவது கேலிக்கூத்து. இதை ஒழிப்பதற்கு 1993ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது, ஆனால் 1997ம் ஆண்டுவரை இந்திய அரசிதழில் வெளிடப்படவில்லை, பொதுமக்களுக்கும் 2000ம் ஆண்டு தான் தெரியவந்தது. சமூகத்தின் பெரும்பான்மையான் மக்களும் இந்த அவலத்தை கண்டுகொள்ளவில்லை ஏனென்றால் இத்தொழிலை செய்வது தலித் களிலும் தலிகளான அருந்ததியினர் என்பதாலோ? எப்படி இந்த தொழில் ஒரு சாதி மக்களின் வாழ்க்கையானது? இந்த சாதிக்கு இந்த தொழில் என்று உலகின் வேறு எந்த பகுதியிலாவது இருக்கிறதா? நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது அருந்ததியர் என்பவர்கள் யார் என்று வினா எழுப்பும் போது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை, அவர்கள் தமிழகத்தில் சக்கிலியர் என்றும் மாதீகா என்றும் விளிக்கப்படுகின்றனர். ஜாதியின் பெயரால் இந்தியாவில் தலித்துகள் மீது இன்று நடக்கும் கொடூரங்கள் குறித்து நாம் பெருமை கொள்ள இயலுமா?

சுத்தம், சுகாதாரம், தூய்மை, மாசுபாடு, தலைவிதி குறித்த பார்ப்பனிய விழுமியங்களின் அடிப்படையில்தான் இன்று நடைமுறையில் உள்ள இழிவான ஜாதியப் படிநிலை உருவானது. அந்தப் படிநிலையின் கீழ்த் தளத்தில் தலித்துகள் மொத்த ஜாதிய கட்டுமானத்தின் சுமையைத் தாங்குபவர்களாக வடிவமைக்கப் பெற்றது. தெருக்களைச் சுத்தம் செய்வது, குப்பைகளைப் பெறுக்குவது, தோல் பயன்பாட்டுடைய தொழில், மனித-மிருக சடலங்களை அப்புறப்படுத்துவது/ எரியூட்டுவது, பன்றிகள் வளர்ப்பது/ மேய்ப்பது, மனித மலத்தை அள்ளுவது /அப்புறப்படுத்துவது என இந்தப் பணிகள் மட்டுமே குறிப்பிட்ட ஜாதிகளுக்கு உரியதாகப் பட்டியலிடப்பட்டது. 2000 ஆண்டுகளாக அது தொடர்ந்து நடைமுறையிலும் கச்சிதமாக இருந்தும் வருகிறது. பார்ப்னியர்கள் மட்டுமின்றி இந்தக் கட்டுமானத் திட்டத்தை அப்படியே இடைநிலை ஜாதிகளும் அப்படியே சுவிகரித்துக் கொண்டனர்.

நம் தேசத்தின் தலை நகரத்தில் பீ அள்ளுபவர்கள் பெரும்பகுதி தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களே. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பாகிஸ்தான் அனைத்து இந்துக்களையும் இந்தியாவிற்கு அனுப்பியது, ஆனால் அதுகாறும் அங்கு மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தலித்துகளை அனுப்ப மறுத்தது. அத்தியாவசிய சேவைகள் என அவர்களைத் தலைப்பிட்டுப் பாதுகாத்துக் கொண்டது. 1947 டிசம்பரில் அம்பேத்கார் இது குறித்துப் பல முறை கேள்விகளை எழுப்பினார், நேருவுக்குக் கடிதம் எழுதினார். இந்திய அரசோ காங்கிரஸ் கட்சியோ இதனைக் கண்டுகொள்ளவேயில்லை.

மனிதக்கழிவுகளை மனிதன் சுமக்கும் சட்டம் ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை, அதற்கு சபாயி கர்மசாரி ஆந்தொலன் நடத்திய போராட்டம் தான் இந்த சட்டம் இயற்றுவதற்கு முக்கிய காரணி, அதை அமல்படுத்டுவதற்கும் அந்த அமைப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. 1996ம் ஆண்டு விஜயவாடாவில் இந்த அமைப்பு தொடக்கப்படுவதற்கு முக்கிய காரணமாய் இருந்தவர்களில் பெசவாடா வில்சன் என்பவர். இவர் கர்நாடக மாநிலத்தில் மாதீகா குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோலார் தங்கவயலில் வசிக்கும் தொழிலாளர் குடியிருப்பில் உள்ள திறந்தவெளி உலர் கழிப்பிடங்களில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள். ஆந்திராவின் குப்பத்தில் தொடக்கக் கல்வி, பெங்களூரில் முதுகலைப் பட்டம் மற்றும் இறையியல் இளநிலை பட்டப்படிப்பும் அதன் பின்னர் சமூகப்பணியென அவரது பயணம் தொடங்கியது. பின்னர் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயத் துவங்கினார், அவர்களில் பெரும் பகுதி குடிகாரர்களாக இருந்தனர். அவர்களின் பணியிடங்களுக்குச் சென்று சூழ்நிலையை விழுங்க முற்பட்டார் வில்சன். அந்த வீச்சம், நாற்றம்தான் அவர்களைக் குடியின் பால் இட்டுச் சென்றது. நாள்தோறும் கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளைப் பெரிய தொட்டிகளில் கொட்டி, பின்னர் அதை வேறு ஒரு இடத்திற்குச் சென்று அப்புறப்படுத்த வேண்டும். மல வாளியைத் தூக்கி ட்ராக்டரில் ஏற்ற வேண்டும். இந்த வேலையைச் செய்யும் பொழுது அவர்களின் உடலில் மலம் வடிந்துவிடுவதைப் பார்த்த வில்சன் கதறக்கதற வெடித்து அழுதார்.

“எனக்கு இரண்டு வழிகள் இருந்தன: ஒன்று, நான் சாக வேண்டும் அல்லது இந்தக் கொடிய வழக்கத்தை நிறுத்த நான் ஏதாவது செய்தாக வேண்டும். முதலில் சொன்னது எளிதானது. இரண்டாவது கடினமானது. நான் செத்துப் போவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.” 1982 முதல் இயங்கத்துவங்கிய வில்சன் 1996ல் தீவிரமான மனித உரிமை ஆர்வலர்களான தனது நண்பர்களுடன் இணைந்து அமைப்பைத் தொடங்கினார். சமீபத்தில் அவுட்லுக் இதழ் 25 நபர்களை கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அது இந்தியாவில் எக்காலத்திலும் அதிகாரத்திற்குச் செல்ல முடியாத வர்களின் பட்டியல். மகத்தான போராளிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அதிகாரத்திற்கு எதிரான அறிவுஜீவிகள், சமூகங்சார் களப்பனியாளர்கள் என நிண்டு சென்றது. அதில் பெசவாடா வில்சன் இடம் பெற்றிருந்தார். இது அவரது பணிக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.

சபாயி கர்மச்சாரிகளின் தேசிய ஆணையம் தனது விரிவான ஆய்வை மேற்கொண்டது. ராணுவம், பொதுத் துறை நிறுவனங்கள், மாநகராட்சிகள் எனப் பல துறைகளில் இன்றும் இழிவான நடைமுறைகள் உள்ளதை அது சுட்டிக்காட்டியது. ராணுவத்தின் பல முகாம்களில் இன்றளவும் கையால் மலம் அள்ளும் வழக்கம் உள்ளது. இதில் இந்திய ரயில்வே துறைதான் அதிகப்படியான ஆட்களை இத்தகைய பணியில் ஈடுபடுத்தி வருகிறது. 2010 க்குள் உலர் கழிப்பிடங்களை இல்லாமல் ஆக்க வேண்டும், கையால் மலம் அள்ளும் நடைமுறை ஒழிய வேண்டும் என்கிற வில்சனின் கனவை நடை முறைப்படுத்தும் பணிகள் தொடர்கிறது.

நன்றி- கீற்று..
அ.முத்துகிருஷ்ணன் அவர்கள் கீற்றுவில் எழுதிய “மலத்தில் தோய்ந்த மானுடம்” கட்டுரையை தழுவி எழுதப்பட்டது.
பிரண்ட்லைன் இதழின் கவர்ஸ்டோரி. http://www.frontlineonnet.com/fl2318/stories/20060922005900400.htm

8 கருத்துகள்:

Sindhan R சொன்னது…

மிகச் சிறப்பாக எழுதி வருகிறீர்கள் ஹரிஹரன் ... மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?

ரிஷி (கடைசி பக்கம்) சொன்னது…

இதெல்லாம் ஒரு முக்கியமான விசயமா?


எங்களுக்கு இலவச டிவிதான் முக்கியம்.

அடுத்த எலகஷனில் இலவச கேபிளுக்கு காத்திருப்போர் சங்கம்.

hariharan சொன்னது…

சிந்தன் என்னுடைய மின்னஞ்சல் முகவரி che_hari@hotmail.com உங்களுடைய வலைப்பதிவு எனக்கு மின்னஞ்சல் மூலம் வருகிறது. நன்றி!

hariharan சொன்னது…

ரிஷி, உண்மை தான் இலவசங்களால் தமிழ்ச்சமூகமே தலைகுனிந்துள்ளது.

தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவனுக்கோர் குணம் உண்டு. என்ற நாமக்கல் கவிஞரின் அடுத்த வரிகளான “தானம் பெற கூசிடுவான் தருவது மேலென பேசிடுவான்” என்பதை மறைத்து விட்டார்கள்.

தருமி சொன்னது…

//வில்சனின் கனவை நடை முறைப்படுத்தும் பணிகள் தொடர்கிறது.//

இப்பணி விரைவில் 'முடிய' வேண்டும்.

சிவகுமாரன் சொன்னது…

"மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் வழக்கம் இனியுண்டோ" என்று பதாஹ் தோன்றுகிறது பாரதி போல்.

சிவகுமாரன் சொன்னது…

"மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் வழக்கம் இனியுண்டோ" என்று பதாஹ் தோன்றுகிறது பாரதி போல்.

hariharan சொன்னது…

ஆக்ரோசமான கவிதை படைத்தீர்கள் நன்றி! திரு.சிவகுமரன்.