சனி, 27 நவம்பர், 2010

உறவுகள் வெளிச்சம்


கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நாடாளுமன்றம் முடங்கிக்கிடக்கிறது,JPC விசாரனைக்காக காங்கிரசும் அதன் தோழமைகளும் ஏன் அஞ்சுகின்றன. இதற்கு முன்னர் ஹர்சத் மேத்தாஊழல்,போபர்ஸ்பீரங்கி ஊழல் மற்றும் பங்குச்சந்தை ஊழலுக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கப்பட்டுள்ளது.தேசம் இதுவரை கண்டிராத ஒரு வருமான இழப்பிற்காக அல்லது பெருந்திருட்டுக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை ஏன் நடத்தக்கூடாது. இடதுசாரிகளும் பாஜகவும் ஆளும் கூட்டணிக்கு நெருக்குதலை தருகின்றனர்.ஆனால் கர்நாடகாவில் பாஜகவின் தலைகள் பெரும் ஊழலில் சிக்கியிருப்பதால் பரஸ்பரம் நலன்காக்க பாஜக-காங்கிரஸ் பேரம் திரைமறைவில் ஏற்படக்கூடும். முடிவில் பெரிய தலைகள் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பது தான் கடந்தகாலத்தின் வரலாறு.

நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் இப்போது பரபரப்பாக பேசப்படுகின்றன, இதில் பெரிய ஊடகங்களின் செய்தியாளர்கள் புரோக்ககர்களாக செயல்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் தேர்தல் உடன்பாடுகளுக்காக செய்துகொள்ளும் கூட்டணிதான் மக்களுக்கு தெரியவருகிறது. திரைக்குப்பின்னால் தொடர்ந்து நடைபெற்றுவருகிற பேரங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. சிலநேரங்களில் ஊடகங்கள் அரசியல்வாதிகளின் ஊழல்களை அம்பலப்படுத்தும் போது நாம் அந்த ஊடகங்களை அளவுக்குமீறி புகழ்கிறோம்.ஆனால் அவர்களும் இதில் கூட்டு அல்லது புரோக்கர் வேலை செய்கின்றனர் என்ற செய்தி நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. பெருமுதலாளிகள் தங்களுக்கு தேவையான காரியத்தை சாதிப்பதற்கு யாரும் நேரடியாக அரசின் இலாகாவையோ அல்லது அமைச்சர்களையோ சந்திப்பதில்லை பெரும்பாலும் கன்சல்டண்ட் மூலமாகவே இந்த பேரங்கள் நடைபெறுகின்றன என்பது அம்பலமாகிறது. சாதாரண மக்கள் ‘அரசு’ என்பது பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக இருக்கிறது என்று நம்புகின்றனர்.இடதுசாரிகள் குறிப்பாக கம்யூனிஸ்ட்கள் தான் இந்த அரசு என்பது பெருமுதலாளிகளால் அவர்களுடைய நலன்களுக்காகவே நடத்தப்படுகிறது என்பதை மக்களுக்கு சொல்கின்றனர். நான் வாசித்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய‘அரசியல் எனக்குப்பிடிக்கும்’ என்ற புத்தகம் திரைமறைவில் இருந்து கொண்டு இந்த பெருமுதலாளிகள் எப்படி ஆட்சி நடத்துகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.

கண்ணுக்கு தெரியாத பல மறைமுக கூட்டணிகள் உள்ளன.....

முதலாளித்துவ அரசியல் கட்சிகள் vs பெருமுதலாளிகள், அந்நியமூலதனம்.

சில நேரங்களில் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் தலைவர்களே பெருமுதலாளிகளாகவும் அல்லது பெருமுதலாளிகளை இந்த அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக்கிவிடுகின்றனர்.

பெருமுதலாளிகள் vs ஊடகங்கள் (பெரும்பாலும் அவர்களாலேயே நடத்தப்படுகிறது)

இந்த கூட்டணிதான் காலவரையற்ற ஒப்பந்தம் போல நீடித்துவருகிறது, அதாவது mutual benefit அடைகின்றனர்.மக்களை திசைதிருப்புவது, குறிப்பிட்ட செய்திகளின்மீது அதிக ஒளியை பாய்ச்சும்போது பல முக்கிய விவரங்கள் மக்களின் பார்வைக்கு வராமலேயே போய்விடும். மக்களை எப்போதும் பொழுதுபோக்கு அம்சங்களில் கட்டிப்போடும் வேலையை செய்கிறது.நாம் பார்க்கின்ற எல்லா நிகழ்ச்சிகளும் விள்ம்பரதாரர் நிகழ்ச்சிகள் தான்.தொலைக்காட்சி அல்லது அச்சு ஊடகங்களின் நிலையான வருமானத்தை பெருநிறுவனங்கள் உறுதிப்படுத்துகின்றன.அதனாலேயே சமீபகாலத்தில் தொலைக்காட்சி ஊடகத்தின் வருமானம் பன்மடங்கு பெருகியுள்ளது.

தினமும் நாம் பார்க்கின்ற ஊழலில் பெரும்பாலும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இலக்காகின்றனர்,ஆனால் அதிக பலன்பெருகிற வர்க்கமான பெருமுதலாளிகள் ‘வெளிச்சத்திற்கே’ வருவதில்லை. அவர்கள் புனிதப்பசுக்களாகவே உலவிவருகின்றனர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ1.75 இலட்சம் கோடிகள் என்பது அரசின் கருவூலத்திற்கு வந்து சேரவேண்டிய பணம் வரவில்லை அதன் பலன்களை தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் வருமானமாக ஈட்டியுள்ளன. இதற்கு உடந்தையாக இருந்த அமைச்சர், அத்துறையின் செயலாளர், முக்கியக்கட்சி, கூட்டணிக்கட்சி என அவர்களுக்குரிய பங்குத்தொகை கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. நாள்தோறும் 230கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து லஞ்சம்,வரிஏய்ப்பு,கறுப்புப்பணம் போன்றவற்றால் வெளியேறுகிறது என செய்திகள் வருகின்றன. தினமணியில் வெளியான ஸ்பெக்ட்ரம் தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் வேறு சில செய்தித்தாள்களில் வரவில்லை. மீடியா என்பதே முதலாளித்துவ நலன்களில் தான் இயங்குகிறது .மாற்று ஊடகம் என்பது மக்களிடம் செல்லாதவரை உண்மைகள் வெளிச்சத்திற்கு வர சாத்தியமில்லை.

கருத்துகள் இல்லை: