“An eye for an eye only ends up making the whole world blind” - Mahatma Gandhi
அண்மையில் வாசித்த நாவல் வங்கதேசத்தின் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் எழுதிய லஜ்ஜா தமிழில் சொல்வதென்றால் ‘அவமானம்’. ஒரு தேசத்தில் வகுப்புவாதம் அதிகரித்தால் அங்கே வாழும் ‘சிறுபான்மையினர்’ எப்படி நடத்தப்படுவார்கள் என்பதற்கு வங்கதேசம் சிறந்த உதாரணம். அங்கே சிறுபான்மையினர் இந்தியாவில் பெரும்பான்மையினராக உள்ள ‘இந்துக்கள்’ ஆவர். இந்திய துணைக்கண்டத்தில் ஏதாவது ஒரு நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறை இன்னொரு நாட்டில் அதற்கு பழிவாங்கும் உணர்ச்சியோடு திருப்பித்தாக்கும் வாய்ப்புகள் உருவாகின்றன. சிறுபான்மையினரின் வலியையும் வேதனைகளையும் உணரவைக்கிற நாவல் இது. நன்கு படித்த மக்கள் கூட அடிக்கு அடி, வன்முறைக்கு வன்முறை சித்தாந்தகளுக்கு பலியாகிவிடுகிறார்கள். இந்தியாவில் சிறுபான்மையினருக்கெதிராக நடத்தப்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான், வங்கதேசத்தில் ‘இந்து’க்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையை பேசி நியாயப்படுத்துகிறார்கள். கடந்த ஆண்டுகளில் இலங்கையில் சிங்களர்கள் தமிழ் இனத்தை அழித்தொழிக்கிறார்கள் என்பதற்காக தமிழகத்தில் சில இடங்களில் பெளத்த துறவிகளாக, பயணிகளாக வந்த சிங்களர்கள் இலங்கை தமிழர்களையும் தாக்கும் ‘அவமான’ கரமான செயல் நடைபெற்றது. அதை செயல்களை நியாயப்படுத்திய நண்பர்களையும் பார்த்தேன். சாதி, இனம், மதம், தேசியம் போன்றவற்றின் மீதிருக்கிற பற்றுதல்கள் ‘வெறி’ கொண்டவர்களாக மாறுகிறார்கள்.
இந்த நாவலின் மூலம் வங்கதேசத்தின் அரசியல், வரலாறு மீது தெளிவு கிடைக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையில் கிழக்கு வங்காளம் பெருவாரியான முஸ்லீம்களின் மக்கள்தொகை காரணமாக கிழக்கு பாகிஸ்தானாக உருவாகிறது. ஒரு தேசம் என்பது அமைவதற்கு ஒரே மதம் இருந்தால் ஒற்றுமையாக இருக்கும் என்பது சாத்தியமல்ல என்பதை வங்கதேசத்தின் அனுபவம் சொல்கிறது, ஜின்னாவின் இருதேசக் கொள்கையை விமர்சித்த மெளலானா அபுல்கலாம் ஆசாத் சொன்னார்
“புவியியல் ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், மொழிரீதியாகவும், கலாச்சாரரீதியாகவும் மாறுபட்டிருக்கும் இரு நாடுகளை மத ஈடுபாட்டை மட்டும் வைத்து ஒருங்கிணைக்க முடியாது. இன, மொழி, பொருளாதார, அரசியல் வேறுபாடுகளைக் கடந்த சமூகத்தை உருவாக்க இஸ்லாம் முயன்றது உண்மைதான். முதல் நூற்றாண்டுக்குப் பிறகு இஸ்லாத்தால் எல்லா முஸ்லீம் நாடுகளையும் மதத்தின் அடைப்படையில் ஒருங்கிணைக்க இயலவில்லை என்பதையும் சரித்திரம் நிரூபித்துள்ளது”.
கிழக்கு பாகிஸ்தானாக உருவான கிழக்கு வங்காளத்தில், வங்க மொழியை பாகிஸ்தான் அரசு நிராகரித்து உருதுவை மட்டுமே தெசியமொழி அறிவித்ததைத் தொடர்ந்த போராட்டம் ‘வங்கதேசம்’ என்ற தனி நாடு உருவாக காரணமாகியது. அப்போது சுதந்திர வங்கதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிவதை’ ஜமாத் இஸ்லாமி போன்ற மத அடிப்படைவாதிகள் விரும்பவும் இல்லை, சுதந்திரப்போராட்டட்தில் பங்கேற்கவும் இல்லை. அவர்கள் கிழக்கு பாகிஸ்தானில் இந்து-முஸ்லீம்கள் ஒற்றுமையாக இருப்பதை அவர்கள் வெறுத்தார்கள். வங்கதேசம் உருவானதன் அடிப்படை காரணங்களான மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிஷம் இவற்றிற்கு எதிராக மத அடிப்படைவாதிகள் இருந்தார்கள். ஜமாத்திகள் சிறுபான்மை ‘இந்துகளை’ இரண்டாம் குடிமக்களாக நடத்தப்படவேண்டும், வங்கதேச மக்கள் குடியரசு, வங்கதேச இஸ்லாமிய குடியராச மாற்றப்பட வேண்டுமென்பதில் வெற்றி பெற்றார்கள்.
மதத்தின் பால் வெறுப்பு பாராட்டாத பெரும்பான்மை சமூகத்தினர் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக மதவாதம் புகுந்தது. அரசு, நிர்வாகத்திலும் சிறுபான்மை ‘இந்துக்களை’ புறக்கணிக்கும் போக்கு தொடர்ந்தது. தொடர்ச்சியாக சிறுபான்மை இந்துக்கள் இந்தியாவிற்கு குடியேறுகிறார்கள், அப்படி கடைசிவரை தன்னுடைய தாய்நாடு வங்கதேசம் என்று உணர்ந்த ஒரு சிறுபான்மை ‘குடும்பத்தின் கதைதான் நாவலின் மையம். 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபர் மசூதியின் இடிப்பு செயலை அரங்கேற்றிய சங்கபரிவார் அமைப்புகள் அதன் அதிர்வலைகள் எங்கே தாக்கும் என்பதை உண்ரமாட்டார்கள். அடிப்படியில் ஜமாதிகளுக்கும் பாஜக வுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இரண்டும் சிறுபான்மையினருக்கெதிரான அமைப்புகள் என்பதை நாவல் கோடிட்டு காட்டுகிறது.
வங்கதேசத்தில் எல்லா முஸ்லீம்களும் இந்துக்களை வெறுக்கிறார்களா? என்றால் இல்லை. ஜமாத்தேகள் அரசியலில் செல்வாக்கு குறைவுதாம். ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அவாமி லீக் கட்சி மதச்சார்பற்ற கட்சி, ஆனால் அத்தனை தீவிரமான மதச்சார்பின்மை கொள்கையை உயர்த்திப் பிடிக்கிறது என்பதை இல்லை. எப்படி இங்கே காங்கிரஸ், சமாஜ்வாதி, ஜனதாதளம் போன்ற கட்சிகளை ஓட்டுவங்கி அரசியல் என்று பாஜக குற்றம் சாட்டுகிறதோ அதேபோல் அங்கே அவாமி லீக் கட்சியை ஜமாத்தே இஸ்லாமி விமர்சிக்கிறது. சிறுபான்மையினருக்கு ஆதரவானர்கள் போல இரண்டு தேசங்களிலும் பாவலா காட்டுகிறார்கள். பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை ‘இந்துக்களை’ வேட்டையாடிக்கொண்டிருக்கும் போது பங்களாதேஷ் கம்பூனிஸ்ட் கட்சி மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி இயக்கம் நடத்தியது, அவர்களின் கட்சி அலுவலகம் தலைவர்கள் மதவெறி சக்திகளால் தாக்கப்பட்டனர் என்பது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த நாவல் வெளியான 1993ம் ஆண்டில் வங்கமொழியில் மட்டும் 60000 பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. சமூக அமைதிக்கு கேடுவிளைவிக்கிறது என்பதற்காக அரசு இந்த புத்தகத்தை தடை செய்திருக்கிறது. “30 இலட்சம் பேரை பலிகொடுத்து வாங்கிய சுதந்திரம், மதத்திவிரவாதிகள் நம்மை ஆள்வதற்கு நாம் அனுமதித்தால் அந்த தியாகங்கள் வீணாகிப்போய்விடும். மத அடிப்படைவாதம் என்ற நோயானது பங்களாதேஷத்தில் மட்டுமே இருப்பதாக எண்ண வேண்டாம் என்று இந்தியாவில் வகுப்புவாதம் தலைதூக்கியிருப்பதையும் சொல்லியிருக்கிறார்.
நாவலில் விவரிக்கப்பட்டுள்ள வன்முறைகளின் பட்டியலை வைத்து இங்கே மதவெறி சக்திகள், பெரும்பான்மையினரின் உணர்ச்சியை தூண்டவும் வாய்ப்பிருக்கிறது. இந்தியப் பிரிவினையின்போது வன்முரையில் பாதிக்கப்பட்ட அகதிகள் செய்த பிரச்சாரம் எதிர்வன்முறையாக பயணித்துக்கொண்டே இருந்தது. இந்தியாவில் பாஜக பரிவாரங்களால் 1992 டிசம்பர் 6ல் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதன் விளைவாக வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுகெதிரான வன்முறையை நாவல் விவரிக்கிறது. உலகமே இந்த செயலை காட்டுமிராண்டித்தனம் என்றது, மதசார்பற்ற இந்தியர்கள் வெட்கித்தலை குனிந்த இந்த நாளை சங்பரிவார் அமைப்புகள் ‘வெற்றி நாள்’ என்று ஒவ்வொரு டிசம்பர் 6ம் நாளை கொண்டாடி வருகிறது. இந்தியாவின் பாஜக சங்பரிவார் அமைப்புகளுக்கும் வங்கதேசத்தின் ஜமாத்தே இஸ்லாமி அமைப்புகளுக்கும் அடிப்படியில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே மனிதத்தை அழித்து மதத்தை முன்னிறுத்தும் செயலை செய்கிறார்கள்.
பழிக்குப் பழி, கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல் வாங்கும் செயல்கள் உலக மனிதர்களை குருடர்களாக்க்கும் என்ற மகாத்மாவின் வரிகளை நினைவு கொள்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக