புதன், 21 செப்டம்பர், 2011

பேசாப்பொருள் குறித்து..........

இந்தக் கட்டுரை ஒரு இணையக்குழுமத்திற்காக எழுதப்பட்டது, அங்கே சாதி, மதம், மொழி இனம் சம்பந்தமாக எழுதினால் பிரச்சனை ஏர்படுகிறது. அதனால் இது சம்பந்தமாக எழுதவேண்டாம் என ஒரு அன்பர் எழுதினார், அதற்கு எதிர்வினையாக எழுதியது.

சாதி, மதம், மொழி, இனம் சம்பந்தமாக எழுதினால் அடுத்தவர் மனம் புண்படுமோ என்று எழுதாமல் இருக்கமுடியவில்ல. மொழியும் பேச்சும் இல்லாத காலங்களில் வாழ்ந்த மாந்தர்கள் ஒருவொருக்கொருவர் உறவாடத்தடையாக தடையாக இருந்தது. கற்றறிந்த சமூகத்திற்கு அதே “மொழியே” தடையாக இருப்பது முரணன்றி வேறென்ன? நாளிதழ்களில் அன்புள்ள ஆசிரியருக்கு என்று போஸ்ட் கார்டில் முன்பு எழுதியதெல்லாம் அவர்களால் இடம் கருதி பிரசுரிக்காமல் போன காலமும் உண்டு, ஆனால் இப்போது இணையத்தில் வருகின்ற நாளிதழ் செய்திகளுக்கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆரோக்கியமான கருத்துக்களை வழங்குகிறார்கள் இதன் மூலம் வாசகர்களின் நாடித்துடிப்பறிகிறார்கள் என்பதை அந்த பத்திரிக்கைகளின் `தலையங்கச்செய்திகள் சொல்கின்றன. ஆனாலும் சிலர் கழிவறையில் எழுதும் வக்கிரங்களையும், வாசகர் கடிதங்களாக அனாமதேய முகவர்களிலும் மாற்றுப்பெயர்களிலும் எழுதி வருகிறார்கள். பத்திரிக்கைகளில் எழுதுபவர்கள் திறந்தவெளியென்று நினைத்து அப்படிஎழுதுகிறார்கள், இந்த குழுமத்தில் எழுதுபவர்கள் அப்படியில்லை, கருத்துக்களை எழுதுபவர்களை அதன் 10 சதவீத உறுப்பினர்களாவது அவர்களை அறிவார்கள். நமக்கு விரும்புகிற செய்திகளை மட்டுமே படிக்கிற சுதந்திரம் நமக்குண்டு. நாம் எழுதுகிற எழுத்தால் எவருடைய சித்தாந்தத்தையும் குறை கூடாது, என்று எழுத ஆரம்பித்தால் எழுதவே முடியாது. தொழிலே எழுத்தாகக்கொண்டவர்கள் சிலர் சிறுகுழந்தை மஹாராஜா அம்மணமாக இருந்தாலும் கைகொட்டி சிரிப்பதைப்போல அதிகாரத்திற்குமுன் அச்சம் தவிற்த்து எழுதுகிறார்கள்.

மற்றவர்கள் மனம் புண்படுமோ அதனால் என்னவோ இரு வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7பேர் பலியான செய்தியும் கருத்தும் யாரும் பகிரவேயில்லை. நாம் எழுதுகிற கருத்தால் சாதிப்பிரச்சனை வந்துவிடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வு காரணமா? அல்லது நமக்கு நேர்ந்தால் அது துன்பம்,அதுவே பிறருக்கு நேர்ந்தால் வெறும் செய்தியாக பார்க்கிற மனோபாவமா எனதெரியவில்லை. உலகின் மற்ற பகுதிகளில் சிவிலியன்கள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்படும்போது நாம் எதிர்ப்புணர்வும் வருத்தத்தையும் பகிர்கிறோம், இதோ நம் மாநிலத்தின் சகோதரரமக்கள் குண்டடியால் செத்து மடிந்ததை கண்டுகொள்ளாமல் செல்கிறோம். அந்த மரணத்தை கொண்டாடியவர்களையும் நான் வலைப்பூவில் பார்த்தேன். எப்பேர்ப்பட்ட மனிதர்கள்.

தென்மாவட்டங்களில் மட்டும் ஏன் இப்படி பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் ஒரு பகை நிலவுகிறது, எப்போதாவது அது வன்முறையாகவும் மாறுகிறது, கடைசியில் யார் மீது குற்றமிருந்தால் காவல்துறையின் குண்டுக்கு சாவது சாதியிலும், பொருளாதாரத்திலும் கடைசியிலுள்ள சேரிமக்கள். இந்த சாதிப்பூசல்கள் தொழில்ரீதியாகவும் நிலவுடமை காரணமாகவும் நீடித்துவருகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் முதலாளித்துவத்தால் தொழிற்சாலைகள் பெருகின, அங்கே தொழிலுக்கு அமைதியும் இலாபமும் மட்டுமே தேவை.தென்மாவட்டங்களில் விவசாயம் மட்டுமெ அந்த மக்களின் வாழ்வாதாரம். அந்த நிலம் எல்லோருக்கும் இல்லை, நிலமில்லா கூலிகள் இருக்கிறார்கள். அவர்களில் அதிகமாக தலித்துகள் இருக்கிறார்கள். மற்றவர் நிலத்தில் சென்று உழைப்பை செலுத்தி அதில் வாழ்ந்தும், அவர்களை நம்பியும் வாழ்கிறார்கள். தொழிற்சாலை உடமையாளர்கள் `மனு`வின் எழுத்தை பரணில் போட்டுவிட்டமாதிரி நிலவுடமையாளர் களால் செய்யமுடியவில்லை. இன்னமும் மனுவை உயிர்பித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

தென்மாவட்டங்களை விட நிலவுடமை இன்னும் அதிகமாக இருக்கும் கீழ்த்தஞ்சையிலும் நாகைமாவட்டங்களிலும் தீண்டாமையோ அல்லது சாதிமோதலை இல்லையென்றால், அங்கே சவுக்கடிக்கும் சாணிப்பாலுக்கும் எதிராக ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட்கட்சிகள் அந்த மக்களுக்கு ஆதரவாக நடத்திய போராட்டம்தான். இன்னமும் நமது நகராட்சிகளிலும் அரசின் துப்பரவு பணிகளிலும் `மாதிகா’க்களும் அருந்ததியினரும் தான் குப்பையள்ளும் வேலையை செய்கிறார்கள், அதை தனியார்மயமாக்கியபோது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் மற்றசாதியினரும் அந்த வேலையை செய்ய முன்வந்ததுதான். மற்றவேலைக்குத் தரும் ஊதியத்தைவிட அங்கே அதிகமாக ஊதியம் கொடுத்தால் அந்த “ சாதிக்கான வேலை ” என்பது எப்போதே ஒழிந்திருக்கும். நிலவுடமைச்சமூகத்தை விட முதலாளியம் முற்போக்கானது தான், மேல்சாதித் தெருக்களில் செருப்பணிந்து நடக்கமுடியாத மக்கள் பிரிட்டிஷ் விட்ட ரயிலில் டிக்கெட் எடுத்தால் சமதையாக அமரும் சுதந்திரம் கிடைத்தது. வள்ளுவன் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று எழுதியதை நாம் செம்மொழியின் அடையாளமாகக் கொண்டாடினாலும் இழிசினர் என்ற பதம் சங்ககாலம் தொட்டு தொடர்ந்து ஒட்டிக்கொண்டு வருகிறது.

இன்னமும் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த தெருவில் நாம் செருப்பணிந்து செல்லலாமா, சைக்கிள் ஓட்டத் தகுதியான தெருவா, இந்தக்குளத்தில் குளிப்பற்கு அனுமதியிருக்கிறதா, இந்த ஆலயத்தில் வழிபாட்டு செய்வதற்கு தாங்களுக்கு உரிமை இருக்கிறதா இந்தப் பொதுக்கிணறு தாங்கள் பயன்படுத்த முடியுமா ஏன் செத்த பிறகு புதைக்கும் சுடுகாடும் நாம் பயன்படுத்துவதற்கு ஏற்றதா? என்று வாழ்ந்து வருகிறார்கள். இப்பயெல்லாம் யாருங்க சாதிவித்தியாசம் பார்க்கிறாங்க? என்ற கேள்வி அப்பாவித்தனமாக இருக்கிறது. கடந்த மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் பேரளிகிராமத்தில் தலித்துகள் மேல்சாதித்தெருக்களில் சைக்கிள் ஓட்டமுடியவில்லை என்ற செய்தி செப்.3ம்தேதி ஹிந்து நாளிதழில் வந்தது.

தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல்கள் அறிவித்துள்ள சூழ்நிலையில் நாமெல்லாம் எந்தக்கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிற வேளயில் பாப்பாபட்டி,கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் என்ற பெயர் சொன்னாலே பொருள் விளங்கக்கூடிய கிராமங்களில் எதுக்கு இந்த தேர்தல் வந்து தொலைக்குது என்ற எண்ணம் பயத்தின் காரணமாக அந்த மக்களிடம் வருகிறது. 2006க்கு முன்பு பத்தாண்டுகளாக அந்த ஊராட்சிகளில் முறையாக தேர்தலே நடத்தமுடியாத சூழ்நிலை நிலவியது. அப்போதைய ஆட்சித்தலைவர் உதயச்சந்திரன் வெற்றிகரமாக நடத்திமுடித்தார். எந்த பிரிவினர் இந்த தேர்தலை நடத்த தடையாக இருக்கிறார்களோ அவர்களின் மனசாட்சியை தட்டியெழுப்பி தேர்தலை நடத்தினார். பாரதி தன்னுடைய சாதியின் மாண்பை தூக்கியெறிந்து மனுவின் நீதியை விமர்சித்து “சூத்திரனுக்கு ஒரு நீதி, தெண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு ஒருநீதி” என்று சுயசாதி என்ற அபிமானத்தில் சிக்காமால் கலகம் செய்தான். அவன் வைத்த அக்னி நல்லது என்பதால் தானே, இந்த சமூகம் அவனை கொண்டாடுகிறது. தலித் களின் காவல்ர்கள் என்று சொல்லித்திரிவோர்களால் இந்த அவலம் நீங்கா, அந்தத் தலைவர்கள் அடுத்த தேசத்திலுள்ள தமிழர்களுக்கு குரல் கொடுத்தால் அவரை கொண்டாடும் சமூகம், உள்ளூர் தலித் களுக்காக போராடினால் தீய சக்தி என்று சொல்கிறது. சென்னையில் ‘நாம் தமிழர்’ என்று பேசிய தமிழன் சொந்த கிராமத்திற்குச் சென்று சாதிப்பெருமை பேசினான் .

தமிழனுக்கு கடாரம் கொண்டான் என்ற வீண்பெருமை வேண்டாம், ஏகாதிபத்தியத்தை அமெரிக்க்கா செய்தாலும் சோழனாகிய தமிழன் செய்தாலும் அது தவறு தான். நமக்கு அருகாமையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து ஒரு சிங்களன் எழுதினான் நான் சிங்களனாக இருப்பதில் வெட்கமடைகிறேன் என்று. ஆதிக்கம் சாதிசெய்தால் என்ன மதம் செய்தால் என்ன மொழிசெய்தால் என்ன? சுயத்தை எதிர்த்து கலகம் செய்தால் எல்லாம் உடையும்.

கருத்துகள் இல்லை: