வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

நிதி நிறுவனங்கள்


நான் விடுமுறையில் சென்றபோது குழந்தைக்கு ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கலாம் என்ற திட்டமிருந்தது. எனது தந்தை நமக்குத் தெரிந்தவர் ஒருவர் இன்சூரன்ஸ் பாலிஸி ஏஜெண்டாக இருக்கிறார் அவரிடம் நாம் பாலிசி போட்டால் நல்லதென்றார். பாலிஸி போடுவதற்காக அந்த நண்பரை அழைத்திருந்தேன். அவரிடம் நேராக குழந்தைகளுக்கு LIC யில் எந்த பாலிசி நல்லது என்று கேட்டேன், அவர் LIC க்கு பதிலாக ‘PACL’ என்ற பெயருடைய பாலிசி திட்டத்தை என்னிடம் கொடுத்தார். எனக்கு தனியார் நிதி நிறுவனங்களில் பாலிசி எடுப்பதில் விருப்பமில்லை, நீங்கள் LIC யின் முகவர் என நினைத்தேன் அதனால் தான் உங்களிடம் பாலிசி எடுக்க அழைத்தேன் என்றேன். வந்த முகவர் LIC ஐ விட PACL யில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது என்றெல்லாம் வெகுநேரம் சொன்னார். 5 அல்லது 6 1/2 வருடம் கட்டினால் போதும் இன்சூரன்ஸ் பாலிசியும் அதோடு உள்ளது இறுதியில் உங்களுக்கு குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்றார். வேறு வழியின்றி அவரை அழைத்துவிட்டோமே என்று மிகவும் குறைந்தபட்ச அளவில் ஒரு பிளானில் சேர்ந்தேன். பின்னர் நம் உறவினர் ஒருவர் மற்றொரு இந்த ‘சங்கிலி’ தொடர் ஆள் சேர்ப்பு நிறுவனத்தில் முகவராக இருக்கிறார். தட்டமுடியாமல் அவரிடமும் சிறிய பிளான் எடுக்கவேண்டியதாயிற்று. முகவர்கள் தங்களுடைய கமிசன் தொகைக்காகவும்,அதிகமான ஆள்சேர்த்தால் பதவிஉயர்விற்காகவும் கவர்ச்சியாக பேசுகிறார்கள். நம்முடைய முதலீட்டை அந்த நிதி நிறுவனங்கள் எங்கோ நிலம் வாங்கி அதில் இத்தனை சதுரஅடி உங்களுக்கானது என்கிறார்கள். அவர்கள் ஒருநாள் ஓட்டமெடுப்பார்கள் அப்போது பாலிசிதாரர்களிடம் மாட்டுபவர்கள் இந்த ‘முகவர்கள்’ தான். தனியார் நிதி நிறுவனங்கள் புதிய புதிய பெயர்களில் வடிவங்களில் மாறிக்கொண்டே யிருக்கிறார்கள்.

இந்தியாவில் LIC அல்லது பொதுத்துறை வங்கிகளுக்கு நிகராக தனியார் நிதி நிறுவனங்கள் வளரமுடியவில்லை. மக்களுக்கு அவர்கள் மீது நம்பகத்தன்மையில்லை. ஒரு நண்பர் சொன்னார். பொதுத்துறை வங்கி என்பது ‘மனைவி’ மாதிரி,கவர்ச்சியிருக்காது ஆனால் அன்பு நீடித்திருக்கும். தனியார் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் எனபது ‘விலைமாதர்’ மாதிரி திட்டத்தில் விழுகிற வரைக்கும் தான் கவர்ச்சியிருக்கும் பின்னர் வேதனை தான் மிஞ்சும் என்றார். வளைகுடா நண்பர்கள் சிலர் பொதுத்துறை வங்கிகளை குறை கூறுவார்கள், நான் கேட்பேன் நீங்கள் எங்கே சேமிக்கிறீர்கள் என்று. பெரிய முதலீடு என்பது தேசிய வங்கிகளில், இதர ஆன்லைன் சர்வீஸ்களுக்காக ICICI /AXIS bank என்று செல்கிறார்கள். 2008ம் ஆண்டு உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது அதன் பாதிப்பு இந்தியாவிற்கு இல்லை, அமெரிக்காவில் இன்றும் மாதத்திற்கொன்றாவது வங்கி திவாலாகிவருவது வாடிக்கை. ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை. இதற்கு தேசிய வங்கி ஊழியர்களின் போராட்டமும் அவர்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் இடதுசாரிகளின் குரலும் தான் காரணம். வங்கி ஊழியர்கள் தங்களுடைய சம்பள உயர்வுகளுக்காக மட்டும் போராடவில்லை, வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது , காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், வங்கித்துறையில் அந்நிய மூலதனத்தைனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் போராடுகிறார்கள். பின்னது பொதுமக்களின் நலனும் சமூகத்தின் நலனும் அடங்கியிருக்கிறது. இன்சூரன்ஸ் துறையிலும் இதே நிலை தான். பன்னாட்டு இன்சூரன்ஸ் களுடன் கூட்டணி போட்ட இந்திய கம்பெனிகள் தலையெடுக்கவே முடியவில்லை. பொதுத்துறையை சீரழிக்கும் மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து அதை காப்பார்கள் அந்த ஊழியர்கள் அது சமுதாயத்தின் தேவையும் கூட.

2 கருத்துகள்:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே ! இந்திய முதலாளிகள் டாடா ,பிர்லா,முதல் நம்ம ஊர் செட்டியார் வரை சொந்தமாக இன்சுரன்ஸ் கம்பெனியும் ,வங்கிகளும் வைத்திருந்தார்கள் .அதில்" கஜா முஜா " செய்து தான் மூலதனத்தை உருவாக்கிக் கொண்டார்கள். டால்மியா, போன்றவர்கள் பண்ணிய அழிச்சாட்டியம் தாங்க முடியாமல் சி.டி.தேஷ்முக் இன்சுரன்ஸை தேச உடமை ஆக்கினர்.முன்னமேயே தெரிந்தால் சுரிட்டுவிடுவார்கள் என்பதால் தேதியை பிரதமரிடம் கூட சொல்லாமல் அறிவித்தார். உலக சரித்திரத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததில்லை . இது பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறேன். புத்தகம் போடலாமென்று.---காஸ்யபன்

hariharan சொன்னது…

உலகத்தில் முன்னேறிய நாடுகளில் இல்லாத பில்லிணியர்கள் வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் எப்படி அதிகமானார்கள் என்பதை எழுதுங்கள். இந்தியாவில் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறை ஊழியர்கள் அதிகாரிகள் என்ற வித்தியாசம் இல்லாமல் இடதுசாரிகளின் பக்கம் நிற்கிறார்கள். மற்ற துறைகளில் எப்படி இருக்கிறது.