புதன், 20 அக்டோபர், 2010

ஸ்டெர்லைட் ஆலை ஏன் மூடப்படவில்லை?

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டுமென்று 1996ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 14 ஆண்டுகள் கழித்து தாமிர உருக்காலையை மூடவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழ்ங்கியது. ஸ்டெர்லைட் வெளியேற்றும் கழிவு மற்றும் மாசால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அந்த தீர்ப்பை வரவேற்றார்கள், ஆனால் இரு வாரத்திற்குள் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வழங்கிவிட்டது (எல்லாம் எதிர்பார்த்தது தான்). சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த ஆலையை மஹாராஷ்ட்ரா அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தமிழக அரசு வாரியணைத்து தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் ஆலையமைக்க நிலம் கொடுத்தது. எந்த ஆட்சியானலும் தமிழகம் தொழிற்துறையினருக்கு மிகவும் சாதகமாகவே, அந்த தொழிற்சாலையால் மக்களுக்கு எவ்வளவு பாதகம் இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு கவலை இருந்ததில்லை.இந்த ஆலை அமைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் “தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய” த்தின் அறிக்கை தான் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த பதினான்கு ஆண்டுகால தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் அருகிலுள்ள மீளவிட்டான்,தெற்குவீரபாண்டியபுரம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அடிகுழாய்களில் குடிநீர் பிடித்தால் மஞ்சள் நிறமாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் ஜிப்சம் கழிவு அருகிலுள்ள ஓடையில் கலந்துள்ளதால் செப்டம்பர் 30 தேதியன்று 7 ஆடுகள் நீரைக்குடித்ததால் இறந்துள்ளன. அருகிலுள்ள கிராம மக்கள் மூச்சுத்திணறால் பாதிக்கப்படுகின்றனர், குழந்தைகள் மூட்டுவழியாலும் பல் வலியாலும் அவதிப்படுகின்றனர். பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் copper,chrome, lead, cadmium மற்றும் arsenic போன்ற நச்சுகள் உள்ளதாக உயர்நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.மேலும் chloride மற்றும் fluride ன் அளவு சராசரியாக குடிநீரில் உள்ளதைவிட அதிகமாக இருந்துள்ளது.

சுற்றுச்சூழலை சீரழிக்கும் இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலைசெய்கின்றனர். ஸ்டெர்லைட் தொடங்கப்பட்ட 1996ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை 13 பேர் விபத்தில் இறந்துள்ளனர்,139 பேர் காயமடைந்துள்ளனர். 1997ம் ஆண்டு நடந்த கொதிகலன் வெடிப்பால் இரு ஊழியர்கள் கோரமாக உயிரிழந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 26ம் நாள் ஆஸிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் போது ஒருவர் மரணமடைந்தார். தொழிற்சாலைகளில் செயல்படுத்தும் பாதுகாப்புவிதிகளை மீறுவதினாலேயே இந்த விபத்துகள் ஏற்படுகின்றன.

தூத்துக்குடியின் கடலில் பவளபாறைகள் உலகில் ஐந்து பவளப்பாறை படிவங்களில் ஒன்றாகும், கந்தக அமிலம் கலந்த வாயுக்கள் 25 கிலோமீட்டர் வரை பவளப்பாறைகளைப் பாதிக்கிறது, ஆனால் பவளப்பாறை தீவிலிருந்து ஸ்டெர்லைட் ஆலை 15 கிமீ தூரமே உள்ளது. எல்லா விதிகளையும் மீறி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் இந்நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது. இந்த அனுமதி குறித்து முழுமையாக விசாரிக்கப்படவேண்டும்.

1998ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் NEERI என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஸ்டெர்லைட் குறித்த அறிக்கை கேட்டுள்ளது, NEERI அளித்த அறிக்கையில் நிறுவனம் தொடங்க தவறான வகையில் அனுமதி,அளவுக்கதிகமான உற்பத்தி, ஆபத்தான கழிவுகள், கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியது, நிலத்தடிநீர் மாசுபாடு, தேவையான கிரீன்பெல்ட் ற்கு மரங்களை வளர்க்கவில்லை என அறிக்கையளித்ததால் 1998 நவம்பர் மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது, அதன் பின்னர் இரண்டு மாதங்கள் ஆலையை இயக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தபோது மீண்டும் NEERI யிடம் மற்றொரு அறிக்கை கேட்டது. ஆனால் அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சாதகமாக அவர்கள் சுற்றுச்சூழலை பாதிக்காதவண்ணம் ஆலையை மறுசீரமதைத்தாக அறிக்கையளித்தது.

அரசின் நிரவாகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், நீதிமன்றம் என அனைத்தும் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு உடந்தையாக செயல்படுகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்காக பன்னாட்டு நிறுவங்கள் சுற்றுச்சூழல், பாதுகாப்பு விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் இந்தியாவை மட்டுமல்ல இந்தப் புவியையே நாசம் செய்து வருகிறார்கள். வேதாந்த நிறுவனம் ஒரிஸ்ஸாவில் ஃபாக்சைட் சுரங்கம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுத்துள்ளதோடு அந்த நிறுவனம் அலுமினிய சுத்திகரிப்பு ஆலைகழிவுகளை வெளியேறியதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அரசின் சட்டமன்றம்,நிர்வாகம் எங்கும் லஞ்சப்பணத்தின் சீர்கேட்டால் மக்கள் நீதிமன்றங்களிடம் செல்கின்றனர். நீதிமன்றத்தீர்ப்புகளும் முன்னே குறிப்பிட்ட அமைப்புகளிடமிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல என்பதை சமீபத்திய தீர்ப்புகள் விளக்குகின்றன. மனிதசமுதாயம் நாகரீகமடைந்து “வலுத்தவன் வாழ்வான்” என்ற கோட்பாடிலிருந்து மாறி எளியோரை வலியோரின் அடக்குமுறைகளிடமிருந்து காக்கவே அரசு செயல்படுவதாக தோற்றமளிக்கிறது. எளியோர் பாதிக்கப்படும்போது அதற்காக நீதிமன்றத்தை சாதாரணமக்களும் நாடலாம் என உரிமையளிக்கிறது, ஆனால் நீதிமன்றங்கள் கோபம் கொண்ட மக்கள் வன்முறையை நாடாமல் செய்வதற்குள்ள “relief device" ஆகத்தான் உள்ளது.மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்பையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் கருத்தில் கொண்டு வெகுவிரைவிலேயெ உச்சநீதிமன்றம் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கட்டும், தாமதமான நீதியும் மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பதையும் கவனத்தில் கொள்ளட்டும்.

கருத்துகள் இல்லை: