அரசியல் எனக்குப் பிடிக்கும்-அரசு பிறந்த கதை
அரசு என்கிற இந்த ஏற்பாடு (நீதி, நிர்வாகம், ராணுவம், போலீஸ் என்கிற இந்த ஏற்பாடு) எப்போது தோன்றியது? ஏன் தோன்றியது? என்று பார்ப்பதுதான் இப்போதைக்கு நம்முடைய தேவை.
வரலாற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று எழுதப்பட்ட வரலாறு. இன்னொன்று எழுத்து கண்டுபிடிப்பதற்கு முன்பாக நடந்த வரலாறு எனப்படும். எழுதப்பட்ட வரலாறு நமக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு மட்டும் தான் இருக்கிறது. சில கல்வெட்டுக்கள், மலைக்குகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் இவற்றை வைத்துக் கொண்டு மேலும் சில ஆண்டுகளுக்கு முன் பூமியில் நடந்தவற்றை சொல்ல முடிகிறது. எழுதப்பட்ட வரலாறுகளில் எல்லாம் அரசு பற்றியக் குறிப்புகள் இருந்து வந்திருப்பதால் எப்போதுமே அரசு இருந்து வந்ததாக ஒரு கருத்து நம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மனிதன் பூமியில் தோன்றி லட்சக்கனக்கான ஆண்டுகள் ஆகிவிட்டனவே. எழுதப்பட்ட வரலாறு ஒரு 5000 வருடத்துக்கு உட்பட்டுத்தானே இருக்கிறது.
மனிதன் முதன் முதலில் தோன்றியது ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் என்று இப்போது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்து கால்நடையாகப் புறப்பட்ட மனிதன் உலகம் முழுவதும் பரவினான். தன் பிறந்த பூமியான ஆப்பிரிக்காக் கண்டத்தில் அவன் இருந்த போது அரசு கிடையாது.
குரங்குகளில் ஒரு பிரிவு போல அங்கே வாழ்ந்து பிறகு முன்னங்கால்களைத் தூக்கி நட்டமாக நடக்கத் துவங்கிய பிறகு தான் மனிதனான். கூட்டம் கூட்டமாக நடக்கத் தொடங்கிய மனிதன் சாப்பிட கறியும் கிழங்கும் பழமும், குடிக்கத்தண்ணீரும் கண்ட இடங்களிலெல்லாம் தங்கி வாழ ஆரம்பித்தான். அதை ஆதிகால இனக்குழுக்கள் என்கிறோம். கூட்டாக இரை தேடி கூட்டாக வேட்டையாடி கூட்டாக பகிர்ந்து உண்டு வாழ்ந்த அப்போதும் அரசு என்ற எதுவும் கிடையாது. தேவைப்படவும் இல்லை.
அன்றைய காலத்தில் வேட்டையாடிய மிருகங்கள் மற்றும் தேடிக் கோண்டு வந்த பழங்கள், கிழங்குகள் பூராத்தையும் ஒரே நாளில் தின்று முடிக்கவும் முடியாது. அதை மறுநாளைக்கு வச்சிக்கிடலாம் என்று பாதுகாக்கவும் வழி தெரியாது. ஆகவே கிடைத்ததை எல்லோரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர்.வேறு வழி இல்லை. அந்தக் கட்டத்தில் அரசு தோன்றியிருக்கவில்லை. தனியாக எந்த மனிதனுக்கும் அப்போது சொத்து என்று எதுவும் இல்லை. எல்லாமே பொதுச்சொத்துதான். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம். பயன்படுத்தலாம். காற்று போல தண்ணீரைப் போல ஆகாயத்தைப் போல பூமியும் அதிலுள்ள அத்தனையும் அப்போது எல்லாருக்கும் பொதுவாகத்தானே இருந்தது. அது தான் ஆதிகால பொதுவுடமை சமூகம்.
அடுத்தகட்டமாக மனிதன் மிருகங்களை வளர்க்க ஆரம்பித்தான். அது மேய்ச்சல் காலத்தின் தொடக்கம். மேய்ச்சல் காலத்தில் நிறைய மிருகங்களை மனிதன் பழக்கினான். அந்த மிருகங்களும் அவற்றை மேய்க்கப் பயன்படுத்திய கருவிகளும்தான் மனித வாழ்க்கையின் முதல் சொத்துக்களாகின.
ஆரம்பத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து தான் வேட்டைக்குப் போனார்கள். பிரசவம் போன்ற காரணங்களால் வேட்டைக்குப்போக முடியாத பெண்கள் குகைகளில் தங்கி இருந்தபோது மரம் செடிகொடிகளை உன்னிப்பாகக் கவனித்து அவை வளரும் விதத்தை அறிந்தனர். அதேபோல தாங்களும் பயிரிட்டு வளர்க்க முடியும். பகல் பூராவும் மிருகங்களோடு சண்டை போட்டுக்கொண்டு இரை தேடி நாயாக அலைய வேண்டியதில்லை. நாம் இருக்குமிடத்திலேயே எல்லாத்தையும் உண்டாக்க முடியும் என்பதை பெண்கள் கண்டுபிடித்தனர். விவசாயம் வளரத்துவங்கியது. சொத்தும் பெருகலாயிற்று.
சொத்து வந்தாலே தகராறுதானே? என்று சொல்லுவர்கள். ஆனால் உண்மை அதுவா? சொத்து என்பது இயற்கையில் எப்போதும் இருந்து கொண்டேதானே இருக்கிறது. இது என் சொத்து என்கிற “ தனிச்சொத்து” என்பது மனிதகுல வரலாற்றில் எப்போது வந்ததோ அப்போதுதான் பிரச்சனை ஆரம்பமாயிற்று. பொதுச்சொத்தால் பிரச்சனை இல்லை. தனிச்சொத்துதான் பிரச்சனை. தங்களுடைய சொத்தைப் பாதுகாப்பதற்காக சொத்துக்காரர்கள் அடியாட்களை வைத்துக்கொண்டார்கள். சொத்து என்ன பெரிய சொத்து. அன்னக்கித் தேதியில் கொஞ்சம் ஆடு மாடுகளும் ஆடு மேய்க்கிற கம்புகளும் தொரட்டிகளும் கொஞ்சம் தானியம் தவசமும்தான் இருந்திருக்கும். பிறகு தனிச்சொத்து மேலும் பெருகப் பெருக அடியாட்களின் எண்ணிக்கையும் பெருகியது.
இப்படி “தனிச்சொத்து” என்று அதற்கு முன் கிடையாது. ஆரம்பத்தில் எல்லாமே வாலி பாடியதுபோல “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்” என்கிறபடிதான் இருந்தது. எல்லாத்தையுமே பொதுவுடமையாகத் தான் இயற்கை படைத்தது. வலுத்தவன் இது என் சொத்து” என்று வளைத்துப் போட்டுக்கொண்டு தனியுடமையை இயற்கைக்கு விரோதமாக உருவாக்கினான். எல்லாம் பொதுவாக இருந்தபோது யார் வேண்டுமானாலும் எந்த மரத்திலும் எந்தப் பழத்தையும் பிடுங்கி சாப்பிடலாம். ஆனால் இப்போதோ பசிக்கிதே என்று ஒரு பழக்கத்தைத் தொட்டால் அடியாள் வந்து அடித்து இழுத்துப்போகிறான். தண்டனை தருகிறான்.
இப்படியே நாள் போகப்போக காடுகரையெல்லாம் ஒருசிலர் வளைத்துப் போட மற்றவர்கள் அதில் உழைத்து வாட என்கிற நிலை உருவானது. அது உடைமை வர்க்கம். இது உழைக்கும் வர்க்கம் என்றல் ஒரே நிலையில் உள்ளவர்களின் கூட்டம் என்று அர்த்தம். இவர்கள் உழைத்தால்தான் அவனுக்குச் சொத்து சேரும். அவனுக்குச் சொத்து சேரச்சேர இவர்கள் தேய்ந்து கட்டெரும்பாக வேண்டும்.
இரண்டும் நேர் எதிரான இரண்டு வர்க்கங்களாக வளர்ந்தன. மோதல்களும் அடிக்கடி நடக்காமலா இருக்கும்? உடைமை வர்க்கம் என்பது கொஞ்ச பேர்தான். உழைக்கும் வர்க்கம் தான் பெரும்பகுதி. இரண்டுக்கும் இடையிலான மோதல் வலுத்தது. ஒன்றின் அழிவில் தான் இன்னொரு வர்க்கம் வளர முடியும் என்கிற நிலைமை வந்தது. அப்போது ’சரி சரி நமக்குள்ளே சண்டை வேண்டாம். எது நியாயமோ-எது நீதியோ – எது சட்டமோ அதை ரெண்டு பேரும் ஒத்துக்கொள்வோம்’ என்றது உடைமை வர்க்கம். அவரவர் சொத்து அவரவருக்கு அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்டால் ஜெயில். இதுதான் சட்டம், நீதி சரியா…என்றது.
ஆதிகாலத்தில் இயற்கையோடு போராடியபோது மனிதர்கள் எல்லோரும் ஆயுதங்கள் வைத்திருந்தார்கள். தனிச்சொத்துக்காரர்கள் அரசு என்பதை உருவாக்கியபோது முதலில் செய்த காரியம் மக்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ததுதான். ராணுவம், போலிஸ் என்று ஆயுதங்களை வைத்திருக்கும் தனிவகை அமைப்புகளை உருவாக்கிவட்டது. நிராயுதபாணிகளாக உழைப்பாளிகளை வைத்துக்கொண்டு அவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறது அரசு. அதனால் தன் அரசு என்பது ’ஒரு ஒழுங்கு முறை செய்யப்பட்ட வன்முறைக் கருவி’ என்றார் லெனின்.
இப்படியாக தனிச்சொத்து என்று ஒன்று இந்த பூமியில் வந்த பிறகு தான் அதைப் பாதுகாப்பதற்காக நீதி, நிர்வாகம், ராணுவம், போலீஸ், ஜெயில் என்று எல்லா இழவும் வந்தது. இம்மூன்றும் சேர்ந்ததுதான் வன்முறைக் கருவி.
“வர்க்கப்பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆனதன்விளைவாய்த் தோன்றியதே அரசு” என்றார் லெனின்.
சொத்துக்காரன் ஆரம்பகாலத்தில் உண்டாக்கிவைத்த அடியாள் தான் பிற்காலத்தில் ரத கஜ துரோக பதாதிகள் என்றானது. அதற்கும் பிற்காலத்தில் ராணுவம் போலீஸ் என்று சீருடைமாட்டி நின்றது. லெனின் மேலும் கூர்மையாகச் சொன்னார்.
”ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான உறுப்பே அரசு…. அரசு எனப்படும் சக்தி சமுதாயத்திலிருந்து உதித்தது. ஆனால் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை இருத்திக் கொள்கிறது. சமுதாயத்திலிருந்து மேலும் மேலும் அயலானாக்கிக் கொள்கிறது. இந்த சக்தி பிரதானமாய் எவற்றால் ஆனது? சிறைக்கூடங்களையும் இன்னபிறவற்றையும் தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஆயுதமேந்திய ஆட்களைக்கொண்ட தனிவகைப் படைகளால் ஆனது”.
மனிதன் தோன்றிய காலம் முதலாக இன்றுவரை உலகத்தில் உருவான அரசுகளை கீழ்க்கணடவாறு வகைப்படுத்தலாம்.
1. ஆதி பொதுவுடைமை சமூகம்: இதை அரசு என்று கூற முடியாது. ஏனெனில் சொத்து எல்லோருக்கும் பொதுவாக இருக்கிறது. மக்கள் இனங்களாக, இனக்குழுக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வர்க்கமும் இல்லை. வர்க்கப்பகைமையும் கிடையாது.
2. ஆண்டான் – அடிமை சமூகம்: மோதிக்கொண்ட இரண்டு இனக்குழுக்களில் தோற்ற குழு அடிமையானது. ரோம், கிரேக்கம் போல இல்லாவிடினும் தமிழகத்திலும் அடிமை முறை இருந்தது. ”சந்திராதித்தர் உள்ளவரை” “யானும் என் வம்சத்தாரும்” பரம்பரை பரம்பரையாகைருந்தது பற்றி ஏராளமான சோழர் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
அடிமைகள் ஏலம் போகிறார்கள்
3. நில உடைமை அரசு: நாந்தான் ராஜா , இந்த நாடு பூரா எனக்கே சொந்தம் என்று ஒருத்தன் சொல்லி படை பலத்தால் மக்களை நேரடியாக ஒடுக்குவது. நீதி, நிர்வாகம், ராணுவம், போலீஸ் எல்லாமே அவன் கையில்தான். விவசாயம் தான் அடிப்படைத்தொழில்.
4.முதலாளித்துவ அரசுகள்: இப்போது உலகம் பூராவும் இருப்பது இது தான் இதில் நேரடியாக முதலாளி நம் கண்ணுக்குத் தெரியமாட்டான். அது மக்களாட்சியாக இருக்கலாம் (இந்தியாவைப் போல), ராணுவ ஆட்சியாக இருக்கலாம்(பாகிஸ்தானைப் போல), பாசிச ஆட்சியாக இருக்கலாம். (ஹிட்லரின் ஜெர்மனியைப் போல), ரொம்ப புத்திசாலியான அரசு இதுதான். ஏனெனில் உண்மையான ராஜாவான முதலாளிகள் பின்னணியில் திரை மறைவில் இருக்க அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானது போல படம் காட்டிக் கொண்டு நீதி, நிர்வாகம், ராணுவம், போலீஸ் எல்லாம் முதலாளிகளுக்கு நேரடியாக சம்பந்தமே இல்லாதது போல மக்கள் நம்பும் விதமாக இருக்கிறது.
5.சோஷலிச அரசு: இதற்கு முன்பு இருந்ததெல்லாம் கொஞ்சப்பேரான உடைமை வர்க்கத்துக்காக பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கும் அரசுகள். சோஷலிச அரசுதான் உலக வரலாற்றில் முதன் முறையாக பெரும்பான்மையான உழைக்கும்
மக்களின் நலன்களைக் காப்பதற்காக உருவான அரசு. 1917 முதல் 70 ஆண்டு காலம் சோவியத் நாட்டில் இருந்தது. இப்போது மக்கள் சீனம், கியூபா,வியட்நாம், வடகொரியா போன்ர நாடுகளில் இருப்பது.
சரி. இது பொதுவாக அரசு தோன்றி வலர்ந்த கதையாக இருக்கிறது. அரசு என்பதே தனிச்சொத்து உடைமையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு ”சட்டப்பூர்வமான” (!) வன்முறை ஏற்பாடு என்பது பொதுவாகப் புரிகிறது.சொத்து ஆதி காலத்தில் தன்னைக் காத்துக்கொள்வதற்காக ஏற்படுத்திய அடியாள் மற்றும் கூலிப்படைதான் பிற்காலத்தில் போலீஸ், ராணுவம், சிறைஎன்றானது. நாகரிகம் வளர வளர வெரும் அடியாள் மட்டும் வைத்து பெருவாரி மக்களை கட்டுப்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொண்ட தனிச்சொத்து (இப்போது அதன் பெயர் மூலதனம்) நீதி , சட்டம், பரம்பரைச்சொத்து அப்படி இப்படி என்று கண்ட கண்ட விசயங்களையும் மக்கள் மண்டையில் ஏத்தி தனிச்சொத்து இருப்பதும் நியாயம் அதைக் பாதுகாக்க அரசு இருப்பதும் நியாயம், தேவை என்று மனப்பூர்வமாக மக்களை நம்பவைத்துவிட்டது.
இப்படியாக பிறந்த அரசு நம்ம தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த கதை நாம் அவசியமாக தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.
--ச.தமிழ்ச்செல்வன்
3 கருத்துகள்:
சிறப்பான பதிவு பல தகவல்களை அறிந்துகொண்டேன் . பகிர்வுக்குநன்றி !
தோழர் ரெண்டாவது முறை வாசக்க நேர்ந்தாலும்.இன்னும் புதுப்புது பரிமாணங்கள் கிடைக்கிறது. நல்லது தோழர்.பகிர்வுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி!!
பனித்துளி சங்கர்
தோழர்.காமராஜ்
கருத்துரையிடுக