சனி, 19 ஜூன், 2010

அரசியல் எனக்குப் பிடிக்கும்- 5

அரசியல் எனக்குப் பிடிக்கும் - தமிழக அரசு

ஒண்ணரை லட்சம் வருடங்களுக்கு முன்னால் ஆப்பிரிக்காக் கண்டத்தை விட்டுக் கால்நடையாகப் புறப்பட்ட நம் முப்பாட்டிகளும் முப்பாட்டண்களும் பல திசைகளாக பரவிச் சென்றது போல நடந்து நடந்தே தமிழ்நாட்டுக்கும் வந்து சேர்ந்தனர் ஒரே நடையாக ஆப்பிரிக்காவில் பிடித்த நடையைத் தமிழ்நாட்டில் வந்துதான் நிறுத்தியதாக நினைக்க வேண்டாம். வழி நெடுக அங்கு பத்து வருசம் இங்கு முப்பது வருசம் அங்கன ஒரு நூறு வருசம் இங்கன ஒரு ஆயிரம் வருசம் என்று தங்கி தங்கித் தான் வந்து சேர்ந்தார்கள். அப்போது இங்கே மனிதர்கள் யாரும் கிடையாது. பறவைகளும், சில மிருகங்களும் கூப்பாடு போட்டுக் கொண்டு கிடந்தன.

வந்தவர்கள் தண்ணியும், இரையும் கிடைத்த இடங்களில் ஆங்காங்கே சின்ன சின்னக் குழுக்களாகத் தங்கிவிட்டார்கள். ‘இனக்குழுக்கள்’ என்று அக்குழுக்களைக் கூறுவார்கள். மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலப்பகுதியில்தான் முதலில் ‘செட்டில்’ ஆனார்கள். அங்குதான் வேட்டையாட விலங்குகளும் இருந்தன. சாப்பிட காய்கறிகளும் தேனும் தினையும் குடிக்கத்தண்ணீரும் வளமாகக் கிடைத்தன.அப்போது அங்கே அரசு இல்லை. பொதுவுடைமைதான்.

இனக்குழு வாழ்க்கையில் அரசு தேவைப்படவில்லை. மலை சார்ந்த குறிஞ்சியில் மட்டுமல்லாது காடும் காடு சார்ந்த இடமுமான முல்லை நிலப்பகுதியிலும் இனக்குழுக்கள் வாழ்ந்தன. நாம் ஏற்கனவே சொன்னபடி பெண்கள் விவசாயத்தைக் கண்டுபிடித்த பிறகு வளர்ச்சியின் வேகம் கூடியது. வயலும் வயல் சார்ந்த இடமும் அதிகரித்தது. அதற்கு மருதநிலம் என்று பெயர். அது அனேகமாக நதிகளை ஒட்டியே இருந்தது. மருதநிலத்தில் தனிச்சொத்து குவியத் துவங்கியது. தனிச்சொத்து வந்தால் கூடவே அடியாட்களும் அதைத் தொடர்ந்து அரசும் வந்தாகவேண்டுமே. மருத நிலமெங்கும் முதலில் சிறு சிறு அரசுகள் தோன்றின. காவிரி , வைகை, தாமிரபரணி, பெண்ணை, பாலாறு போன்ற நதிக்கரைகளில் சிற்றரசுகள் பல தோன்றின.

சிற்றரசு என்ன சிற்றரசு விவசாயம் செய்யும் நிலப்பரப்பு கொஞ்சமாக இருந்து அடியாட்கள் கூட்டமும் சின்னதாக இருந்தால் சிற்றரசு அடியாட்கள் படை பெருங்கூட்டமாக இருந்தால் பேரரசு அவ்வளவுதான்.

நதிகளைத் திருப்பி சமவெளிகளில் வயல்களை உருவாக்குவதற்கு ஏராளமான ஆள்பலம் வேண்டும். எனவே மருதநிலத்தில் தோன்றிய அரசுகள் குறிஞ்சியிலும், முல்லையிலும் ”சிவனேன்னு” வேட்டையாடிப் பிழைத்துக் கொண்டிருந்த இனக்குழுக்களை வம்படியாக அடித்துப்பத்திக் கொண்டு வந்து மருதநிலத்தி குடியேற்றி “பண்டு விளைந்தறியாக் களர் நிலங்களை” சாகுபடி நிலங்களாக மாற்றக் கடுமையாக உழைக்கச் செய்தனர். கட்டாய உழைப்புதான். காவிரிக்கரையில் கரிகாலன் கட்டிய கல்லணைதான் முத்ன் முதலாக மிகப்பெரிய அளவிலான விவசாயத்தை சாத்தியப்படுத்தியது. அதற்கு ஏற்றாற் போன்ற ஆள் பலத்தையும் அரசையும் தோற்றுவித்தது. அப்போதும் இன்றைய தமிழகம் முழுவதையும் அடக்கிய ஒரு தமிழக அரசு உருவாகி விடவில்லை.

அதியர், ஆவியர், ஆதன், இளையர், உதியர், நவ்வி, ஒளியர், கவுரியர், கழா அர், கிள்ளி, கொங்கர், சென்னி, செழியன், பழவர், பழையர், பஞ்சவர், புலியர், வழுதியர், வில்லோர், மறவர் எனப் பலநூறு தமிழ்இனக்குழுக்கள் அழிக்கப்பட்டு சிற்றரசுகளும் சிற்றரசுகளை அழித்தும் உட்கொண்டும் பேரரசுகளும் தமிழ்மண்ணில் தோன்றின.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே இனக்குழுக்கள் “அழிப்பு” துவங்கிவிட்டது. கி.மு. இரண்டு முதல் கி.பி. இரண்டுக்குள் இனக்குழுக்கள் அழிந்து சிற்றரசுகளும் சிற்றரசுகள் இணைக்கப்பட்டு சேர, சோழ, பாண்டிய என்று மூன்று முடியரசுகளும் தோன்றிவிட்டன. முடியரசு என்றதும் ஏதோ பெரிய சாம்ராஜ்ஜியம் என்று நினைத்துவிட வேண்டாம். ரெண்டு, மூணு மாவட்டங்கள் சேர்ந்தால் என்ன சைஸ் இருக்குமோ அதுதான் ஒரு முடியரசு.

தமிழ்நாடு என்ற நினைப்பே அப்போது யாருக்கும் வந்திருக்கவில்லை. நாங்க பாண்டிய நாட்டார், நீங்க சேர நாடு என்ற அளவில்தான் சிந்தனை இருந்தது. அதற்கு அடுத்த காலகட்டத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்தில்தான் முதன்முறையாக “வட வேங்கடம் தென்குமரி ஆயிடை”. அதாவது இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு ஒரே நிலம் என்று இளங்கோவடிகளால் கூறப்படுகிறது.

கி.பி. 6-9 காலப்பகுதியில்தான் தமிழ் பேசும் நிலப்பரப்பில் கொஞ்சம் பெரிய அரசுகள் தோன்றின. வட தமிழகத்தில் பல்லவ அரசும் தென் தமிழகத்தில் பாண்டி நாடும் எழுந்தன. எனினும் தமிழகம் முழுவதும் ஆண்ட அரசு உருவானது கி.பி. 9 ஆம் நூற்றாண்டில்தான். அது சோழப் பேரரசுதான். கி.பி 846-ல் பல்லவ அரசின் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் தனி அரசை நிறுவினான். அவனது வாரிசுகள் தொண்டைமண்டலத்தையும் பாண்டிய நாட்டையும் தோற்கடித்துக் கைப்பற்றினார்கள்.

அதற்குப்பின் ராஜராஜசோழனும் ராஜேந்திரசோழனும் பெரும் விஸ்தரிப்புப் போர்களில் ஈடுபட்டனர். தமிழகம் தாண்டிய நிலப்பரப்புகளையும் கைப்பற்றி சோழப்பேரரசை நிறுவினர். அவர்களுக்குப் பிறகு குலோத்துங்கசோழன் ஆட்சிக்காலத்தில்தான் சோழப்பேரரசு அதிக நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. மூன்று குலோத்துங்கசோழர்களுக்குப் பிறகு சோழப்பேரரசு வீழத்துவங்கியது.


முத்துக்குளிக்கும் துறைமுகங்களின் மூலமாகவும் அரேபியருடனான வாணிபத்தாலும் பெருகிய வருமானத்தின் பலத்தில் படைகளைப் பெருக்கிக்கொண்டு மாறவர்ம சுந்தரபாண்டியனும் சடையவர்ம சுந்தரபாண்டியனும் நடத்திய இறுதிப்போர்களில் சோழப்பேரரசு சரிந்து விழுந்தது. அப்போது காலம் கி.பி.1281. நானூறு ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை ஆண்ட ஒரே அரசு இந்த சோழப்பேரரசுதான்.

அதன் பிறகு கி.பி.1400- வாக்கில் தான் ஒரு பேரரசு ஏற்படுகிறது. அது வெளியிலிருந்து வந்த அரசு. கர்நாடகம், ஆந்திரா, தமிழகம் முழுவதையும் அடக்கிய விஜயநகரப் பேரரசு. கி.பி.1700-களின் நடுப்பகுதி வரை நீடித்தது. அந்த நாயக்கர்களின் அரசு தன் ஆட்சிப் பகுதிகளை 72 பாளையங்களாகப் பிரித்தது. நாயக்கர் ஆட்சியின் சிதைவுக்குப் பின் பாளையக்காரர்கள் தம் இஷ்டம் போல் ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

அப்போது வெள்ளைக்காரன் உள்ளே வருகிறான் சூழ்ச்சிகள் வஞ்சனைகள் செய்தும் ராணுவ பலத்தைக் கொண்டும் ஆட்சியைப் பிடிக்கிறான். காலனி ஆட்சி துவங்குகிறது. கி.பி.1803-ல் மெட்ராஸ் பிரசிடண்சி-ஐ வெள்ளைக்காரன் உருவாக்குகிறான். அது தமிழ்நாடு, மற்றும் கேரளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்தது. வெள்ளையனை விரட்டிய பிறகு 1947-ல் புதிய இந்திய அரசு உருவானது. 1956-ல் மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழக அரசு இப்போது உள்ள நிலையில் தோன்றியது.

ஸ்டாப்…… ஸ்டாப்…… இப்படி ஒரேயடியாகக் கதையை இழுத்துக் கொண்டு போனால் எப்படி? இந்த அரசுகள் செய்தது என்ன? வலது சாரியா இடது சாரியா அது அல்லவா முக்கியம்?. தமிழன் கங்கை கொண்டான் – கடாரம் வென்றான் – கலிங்கத்தை வென்றான் என்று சும்மா கதை சொல்லிக் கொண்டே போனால் உடம்பெல்லாம் புல்லரிக்கிறதே. தொழிலாளிகளாகிய நமக்கு இந்த வெட்டிப் புல்லரிப்புகள் தேவையா? வென்று வென்று வந்த இந்தத் தமிழ் மன்னர்கள் அன்றையப் பாட்டாளிகளான ஏழை விவசாயக்கூலிகளுக்கு இருந்தார்களா? அதைச் சொல்லுங்க முதல்ல.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஒன்று பார்ப்போம். சோழப்பேரரசில் குட வோலை முறையில் கிராம சபை தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி எல்லோரும் ஆகா ஓகோ என்று பேசுவார்கள். அந்தக் காலத்திலேயே தமிழன் ஓட்டுப் போட்டு கிராம சபையைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் பார்த்தீர்களா. என்னே சோழர்களின் ஜனநாயக உணர்வு என்று பாராட்டுபவர்கள் நிறைய உண்டு. ஆனால் உண்மை என்ன? யாரெல்லாம் கிராம சபைக்குப் போட்டியிட முடியும் தெரியுமா?.

உத்திரமேரூர் என்ற இடத்திலுள்ள சோழர்காலக் கல்வெட்டு இந்தக் குடும்பு என்கிற கிராமசபைக்கு உறுப்பினராகும் தகுதி பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது.

“கால்வேலி நிலத்துக்கு மேல் இறை நிலம் (அதாவது வரி கட்டும் நிலம்) உடையவனாகவும் தன் சொந்த மனையிலேயே வீடு கட்டிக் கொண்டவனாகவும் முப்பது வயதிலிருந்து அறுபது வயதுக்கு உட்பட்டவனாகவும் வேத சாஸ்திரங்களில் நிபுனனாகவும் இருப்பவனே கிராமசபையின் உறுப்பினனாகமுடியும்”.

இக்கல்வெட்டு தகுதி என்ற பெயரில் பெருவாரியான ஏழை உழைப்பாளி மக்களை ஆரம்பத்திலேயே புறந்தள்ளி விடுகிறது. வேத சாஸ்திரங்களை சூத்திரர்கள் படிக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகவெ பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியார் யாரும் சோழகாலத்து கிராமசபையில் உறுப்பினராக முடியாது. ஆகவே பண்டைய தமிழக அரசுகள் வலது சாரிகளான நில உடைமமையாளர்களுக்கே ஆதரவாக இருந்தன என்பதற்கு இந்த உதாரணமே போதும். கிராமசபைக்கேப் போக முடியாத பாட்டாளிகள் அரண்மனை அரசியலைப் பற்றி யோசிக்கவே முடியாது.

அது மட்டுமல்ல எந்த அரசாக இருந்தாலும் அதன் தலையாயவேலை மக்களிடமிருந்து வரி என்ற பேரில் அடித்துப்பிடுங்குவது தான். சோழர்கள் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வரிகள் விதிக்கப்பட்டிருந்தன. கொடுமையான முறையில் இவ்வரிகள் வசூலிக்கப்பட்டன. “வெண்கலம் எடுத்து மண்கலம் உடைந்தது” வரி வசூலித்ததாக சோழர்காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அதாவது விலைபோகக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்வது. விலை போகாத மண்பானை போன்ற பொருட்களை அம்மக்கள் பயன்படுத்த முடியாதபடிக்கி உடைத்து நொறுக்கிப் போட்டுவிடுவது. அரசன் அன்று கொல்லும் என்னும் பழமொழிக்கு இதுதான் அர்த்தம் போலும். ஆண்ட சோழனும் தமிழன். மண்சட்டியும் இழந்த வரிகட்ட முடியாத மனிதனும் தமிழன். வெள்ளைக்காரனை எதிர்த்து வீரமிக்க போர்புரிந்த கட்டபொம்மு உள்ளிட்ட பாளையக்காரர்கள்கூட வரிவசூலில் தம் நாட்டு மக்களைக் கசக்கிப் பிழிவதில் எந்தக் குறையும் வைக்கவில்லை என்பதற்கு அரசாங்க ஆவணங்களே ஏராளமான சான்றுகளாக உள்ளன.

பேசும் மொழி ஒன்றானாலும் இருவரின் வர்க்கங்களும் வேறு வேறல்லவா? இது அன்றைய தமிழக அரசு. இன்றும் கூட தமிழா தமிழா என்று சொல்லி தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பி தமிழ் நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்யும் அரசுகள் ஒரு வேற்றுமொழி பேசும் முதலாளியின் ஆலையில் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்தால் தங்கள் அரசின் காவல்துறையை தமிழ்த் தொழிலாளிக்கு ஆதரவாக நிறுத்துவதில்லை. அரசு என்றாலே அது தனிச்சொத்துக்குப் பாதுகாப்பாக-உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்குவதற்குத்தான்.

எனவே அது மன்னராட்சி ஆனாலும், காலனி ஆட்சி ஆனாலும் பாளையக்காரர்கள் ஆட்சியானாலும் சொத்தை உருவாக்குகிற பாட்டாளிவர்க்கம் அச்சொத்தின் மீது உரிமை கொண்டாடாமல் பார்த்துக்கொள்வதற்காகவே அரசுகள் இருந்தன.

ஆனால் மக்களே ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் இன்றைய மக்களாட்சி இதற்குமுன் இருந்த ஆட்சிகளிலிருந்து வேறுபட்டதா? மக்களுக்கு-பாட்டாளி வர்க்கத்துக்கு அதிகாரம் தந்துள்ளதா?

1 கருத்து:

விடுதலை சொன்னது…

சிறப்பான பதிவு தேவையான நேரத்தில் தேவையான பதிவு தொடர்ந்து எழுதுங்கள்