வெள்ளி, 25 ஜூன், 2010

ஆப்கனில் கனிம வளங்கள்

சமீபத்திய செய்திகளில் ஆப்கானிஸ்தானில் சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கனிமவளங்கள் தோண்டப்படாமல் உள்ளன என்பது தான். உடனே ஆப்கானிஸ்தான் உலக சுரங்கங்களின் மையமாக திகழும் அந்த நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துவிடும் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது அல்கயிதா தீவிரவாதத்தை ஒடுக்க போர் தொடுத்தபோது அது இரட்டை கோபுரத்தை தாக்கிய உலக மகா தீவிரவாதத்தை அழிப்பதற்குத் தான் ஆப்கனில் தனது ராணுவத்தை நிலை நிறுத்திவைத்துள்ளது என நம்பப்பட்டது ஆனால் நாளடைவில் வறட்சிமிக்க இயற்கைவளமில்லாத, ஏன் தன்னுடைய உள்நாட்டிற்கே தேவையான உணவளிக்க முடியாத ஒரு நாட்டில் அமெரிக்காவும் அதன் கூட்டணியினரும் ஏன் டேரா போடவேண்டும் என யோசிக்கவைத்தது. ஒருவேளை ஆசியப் பிராந்தியத்தில் பொருளாதாரரீதியாகவும் ராணுவரீதியாகவும் வளர்ந்து வருகிற சீனாவை கண்காணிக்கவும் அதேவேளை இந்தியாவையும் கண்காணிக்கலாம் என ஆப்கனில் தன்னுடைய ராணுவத்தை வைத்திருக்கிறதோ என ஐயம் ஏற்பட்டது. கடைசியில் அந்த நாட்டில் புதைந்துகிடக்கிற கனிம வளங்கள் தான் அதற்கு காரணம் என புலப்படுகிறது.ஈராக் நாட்டை சதம்ஹூசேன் கிருமி,ரசாயன ஆயுதங்கள் வைத்துள்ளார் என ஆரம்பித்து அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை சூரையாட போர் தொடுத்து சதாம் கொல்லப்பட்டு வேறு அவர்கள் பாணியிலான ஜனநாயக ஆட்சி அமைந்தபின்பும் அமெரிக்க ராணுவம் விலக்கிக்கொள்ளப்படவில்லை. அதே நிலைமை தான் ஆப்கனில் ஏற்படும்.

ஒரு வேளை ஆப்கன் மக்கள் புதிய கனிமவளங்கள் மூலம் தங்கள் நாடும் மக்களும் வளம்பெறுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் எண்ணம் தவறாக இருக்கும். ஆப்பிரிக்க ஏழைநாடுகளில் காங்கோ,சியாரோ-லியோன், நைஜீரியா போன்றவற்றில் கனிமவளங்கள், தங்கச்சுரங்கம், கச்சாஎண்ணெய் வளம் நிறைந்திருந்தாலும் உள் நாட்டுப் போர்களால் அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் அடுத்த வேளை உணவிற்காக அல்லல் படுகின்றனர். ஆனால் உள் நாட்டுப் போர்களின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்கு ஒன்றும்குறைவில்லை. இன்று மூன்றாம் உலக நாடுகளில் அன்னியமூலதனம் என்ற பெயரால் அந்த நாட்டின் செல்வத்தை போர் தொடுக்காமல் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்கின்றன. இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் குறைவாக இருந்தாலும் கனிமவளத்திற்கு குறைவில்லை, ஆனால் இந்த இயற்கை வளம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படாமல உலகமயம், தனியார்மயம் என்ற கொள்கையால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுரங்கங்களை குத்தகைவிட்டுள்ளனர். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்,ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் இரும்பு, நிலக்கரி, காப்பர், பாக்சைட் போன்ற கனிமங்கள் அதிகமாக இருக்கின்றன. பழங்குடியினர் பெருமளவு உள்ள இந்த பகுதிகளில் தான் கனிமவளங்கள் உள்ளன, அந்த மக்களை காடுகளிலிருந்து விரட்டிவிட்டு அந்த கனிமவளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கின்றனர்.

இந்தியாவில் கிடைக்கக்கூடிய 60% பாக்சைட்,95% குரோமைட், 90% நிக்கல், 70% கிராபைட், 67% மாங்கனீசு, 30% இரும்புத்தாதன் மற்றும் 25% நிலக்கரி ஒரிஸ்ஸாவில் கிடைக்கிறது. அந்த மாநிலம் ஒன்றும் வளர்ச்சி கண்டுவிடவில்லை. அங்குதான் பழங்குடிமக்கள் பட்டினியால் இறந்தனர். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் அதே நிலைமை தான். பாஜக அரசு சிறிய மாநிலங்களாக பிரிக்கப்பட்டால் அந்த மாநிலங்கள் நன்றாக முன்னேறும் என்று சிறிய மாநிலங்களாக மாற்றியமைத்தனர், ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கவும் அதற்கு உடந்தையாக மதுகோடா வகையாறாக்கள் ஊழலில் நாறியதும் இந்த நாடறியும். ரெட்டி சகோதரர்கள் அனுமதி பெறாமல் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் சுரங்கங்கள் அமைத்து நாட்டிற்கு பெருமளவு அந்நிய செலவானியை? களவானித்தனமாக ஈட்டுத்தந்தனர். இதையெல்லாம் பார்க்கும் போது இயற்கை வளங்களே வேண்டவே வேண்டாம் என எண்ணத்தோன்றுகிறது.உலகமே இன்று கனிமவளங்களுக்காகவும் கச்சா எண்ணெய்க்காகவும் தேடியலைகிறது. ஆனால் இந்தியாவில் கிடைக்கின்ற கனிமவளத்தை பன்னாட்டு நிறுவங்களுக்கு சொற்ப பணத்திற்காக ஏலம்விடப்படுகிறது. கிருஷ்னா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை ரிலையன்சிற்கு கொடுத்துவிட்டு GAIL, ONGC போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சூடானுக்கும், ரஷ்யாவிற்கும் ஓடுகிறது. இப்போது காப்பர், அலுமினியம் போன்றவற்றை Vedanta விற்கு கொடுத்துவிட்டு இதற்காக ஆப்கனில் உள்கட்டமைப்பை இந்தியா அமைக்கப்போகிறது.

வளர்ந்துவருகிற இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளே பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிவரும்போது அமெரிக்காவையே நம்பியிருக்கிற ஆப்கானிஸ்தானால் என்ன செய்யமுடியும்.

1 கருத்து:

Unknown சொன்னது…

இந்த ஆப்கன் புதையலை கொள்ளை அடிக்க, சீனாவும் போட்டி போடும், அமெரிக்காவும் சீனாவும் பங்கு போட்டுக்க மாட்டாங்க. யாருக்கு கிடைச்சாலும் ஒருத்தருக்குதான். இப்போது ஆப்கன் அமெரிக்கா வசம். சீனா குடைச்சல் கொடுக்கும் வேலையில் சலசலப்புகள் வரும். சீனா மீது பொருளாதார தடை பாயும்.புதையலை கொள்ளை அடிக்க G8 நாடுகளும் முயலும். கடைசியில் அவங்களுக்குள்ள சண்டை வரலாம். என்ன நடந்தாலும் ஆப்கனுக்கு எலும்பு துண்டுதான் கிடைக்கும்.