சனி, 22 மே, 2010

அரசியல் எனக்குப் பிடிக்கும்-3

அரசியல் எனக்குப் பிடிக்கும்- இடதும் வலதும்

ஜெர்மன் நாடு உலகுக்கு அளித்த மேதை கார்ல் மார்க்ஸ் 1848 ஆம் ஆண்டு ”கம்யூனிஸ்டு அறிக்கை” என்றொரு புத்தகத்தை அவருடைய நண்பர் ஏங்கல்ஸ்சுடன் சேர்ந்து வெளியிட்டார். அப்புத்தகம் அரசியல் பற்றி அதுவரை இருந்த கருத்துக்கள் , எண்ணங்கள், அர்த்தங்கள் அத்தனையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விட்டது. அதுவரை ஆட்சி – அரசு – அரசாங்கம் என்று பேசி வந்தது எல்லாம் தப்பு என்பது உலகத்துக்குப் புரிந்து விட்டது. மக்கள் என்று பொதுப்படையாகப் பேசுவது தப்பு. தொழிலாளிகளும் விவசாயிகளும் ஆகிய பாட்டாளிவர்க்கம் என்பது வேறு ; இந்த பாட்டாளிகளின் உழைப்பினால் சுகமாக வாழும் முதலாளி வர்க்கம் என்பது வேறு என்பதை கார்ல் மார்க்ஸ் உலகத்துக்குப் புரியவைத்து விட்டார்.

அன்று முதல் உலகத்தில் ரெண்டே ரெண்டு அரசியல்தான் உண்டு என்பது தெளிவாகிவிட்டது.

ஒன்று : இடது சாரி அரசியல்
இரண்டு : வலது சாரி அரசியல்


நாட்டின் சொத்துக்கள் எல்லாம் பொதுவுடைமையாக இருக்க வேண்டும். சமூகத்தின் கையில் இருக்க வேண்டும் என்று சொல்வது இடதுசாரி அரசியல். பாட்டாளிகளின் ஆட்சி இது. சோசலிச அரசு இது. சோசலிசம் என்றால் சமூக உடைமை என்று பொருள். சொத்துக்கள் முதலாளிகளிடமே இருக்க வேண்டும் என்று சொல்வது வலதுசாரி அரசியல். இது தனியுடைமை ஆட்சி. சொத்துக்கள் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்வதும் இதே அர்த்தம்தான். வலதுதான்.

அரசியல் என்றாலே ஒரு சமூகத்தின் சொத்துக்கள் அதாவது பொருளாதாரம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தான். இப்படி இரண்டே இரண்டு அரசியல்தான் என்று முடிவாகிவிட்டால் பிறகு கட்சிகளும் ரெண்டுதானே இருக்க வேண்டும். ஒன்று பொதுவுடைமைக் கட்சி. இன்னொன்று தனிவுடைமைக் கட்சி. அவ்வளவுதானே. பின் ஏன் இத்தனை கட்சிகள்?

இப்படி அப்பாவியாக தொழிலாளிகளாகிய நாம் கேள்வி கேட்பது சரி. ஆனால் முதலாளிகள் நம்மைப்போல் அப்பாவிகள் இல்லையே. வெளிப்படையாக முதலாளி கட்சி அல்லது தனியுடைமைக் கட்சி என்று பெயர் வைத்தால் மக்கள் ஆதரவுக் கிடைக்குமா? ஆகவே பலப்பலவிதமான பெயர்களில் கட்சிகள் வைத்து அரசியல் செய்கிறார்கள். இதையெல்லாம் பார்த்தார் கார்ல் மார்க்ஸ். இத்தனை பெயர்களில் இத்தனை நூறு கட்சிகள் இருந்து என்ன செய்ய? உண்மையிலேயே தொழிலாளிகளுக்காகப் பாடுபட ஒரு கட்சி கூட இல்லையே என்று மனம் வருந்தினார். தான் எழுதியது வெறும் புத்தகமாக நின்று போய்விடக்கூடாது என்று தீர்மானித்தார் .

அவரே முன்நின்று கம்யூனிஸ்டு கட்சியைத் தொடங்கினார். கம்யூனிஸ்டு என்றால் பொதுவுடைமை என்று அர்த்தம். இப்படி வெளிப்படையாக பொதுவுடைமைக் கட்சி என்று பெயர் வைத்து அவர் ஆரம்பித்ததும் ஜரோப்பாக்கண்டம் முழுவதும் தீப்பிடித்துக் கொண்டது. தொழிலாளிகள் விழித்துக்கொண்டார்கள். ஆகா….. நாம இத்தனை நாளா முட்டாளா இருந்துட்டமே என்று புரிந்து விட்டது.

அதைத் தொடர்ந்து முதலாளிகள் எப்படி முதலாளிகள் ஆனார்கள் என்கிற கதையை கார்ல் மார்க்ஸ் புள்ளிவிவரத்தோடு ”மூலதனம்” (DAS CAPITAL) என்ற புத்தகத்தில் விலாவாரியாக எழுதிவிட்டார்.

அதைப்படித்த தொழிலாளிகள் மூலதனம் என்பது எப்படி வந்தது? லாபம் என்றால் என்ன? என்பதையெல்லாம் புரிந்து கொண்டார்கள். லாபத்தின் சூட்சுமம் வேலை நேரத்தில் தான் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள். எட்டுமணி நேரம்தான் வேலை செய்வோம் என்று முதலாளிகளுடன் போராடத் தொடங்கினர்.

அப்போதெல்லாம் தொழிலாளிகள் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் கூட வேலைசெய்து வந்தனர். முதலாளி கொடுக்கிற சம்பளத்துக்கு 4 மணி நேரம் வேலை செய்தால் போதுமானது. ஆனால், தொழிலாளி குறைந்தது எட்டு மணி நேரமாவது வேலை செய்கிறான். நாலு மணி நேரம் போக மிச்சம் தொழிலாளி வேலை செய்யும் நேரத்தில் உருவாகும் பொருள்தான் லாபம் என்ற பெயரில் முதலாளிக்குக் கிடைக்கிறது. இதைத்தான் மார்க்ஸ் உபரி உழைப்பு என்றார். பக்கம் பக்கமாக கணக்கு வழக்கெல்லாம் போட்டு மூலதனம், லாபம் என்பதெல்லாம் தொழிலாளி வர்க்கத்தை ஏமாற்ற முதலாளி வர்க்கம் காலம் காலமாகச் செய்து வரும் ஏமாற்று வேலை என்பதை கார்ல் மார்க்ஸ் தெள்ளத் தெளிவாக எழுதிவிட்டார்.

அதன் பிறகு அரசியல் என்பது முதலாளிக்கும் தொழிலாளிக்குமான பிரச்சனையாக மாறிவிட்டது. கட்சி அரசியல் எல்லாம் பின்னுக்குப் போய்விட்டது. கார்ல் மார்க்ஸ் சொன்னதை எல்லாம் தொழிலாளிகள் பூரணமாக புரிந்து கொண்டார்களா இல்லையா. எட்டு மணி நேரம்தான் உழைக்கமுடியும் என்ற குரல் ஒவ்வொரு நாட்டிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. அதன் உச்ச கட்டம்தான் அமெரிக்க நாட்டில் 1886ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிலாளர் போராட்டமும் மேதினம் உருவானக் கதையும்.

அதெல்லாம் சரி, இன்னொரு கேள்வி பாக்கி இருக்கிறதே? இந்த அரசியலுக்கு இடது- வலது என்று எப்படி பேர் வந்தது? அது பெரிய கதை. உண்மையில் எப்படி நடந்ததோ தெரியாது. ஆனால் கேள்விப்பட்டவரை இதுதான் கதை;

இங்கிலாந்து நாட்டில் ஒரு ராஜா ஆட்சி செய்து வந்தாராம். மன்னராட்சி என்றால் அரசசபை என்ற ஒன்று இருக்குமல்லவா? அரசருக்கு ரெண்டு கைப்பக்கமும் மந்திரிகள் , சேனாதிபதி , பிரபுக்கள் , ராஜரிஷி , முதலாளிமார்கள் எல்லோரும் உட்கார்ந்திருப்பார்கள். அந்த அரசபைதான் நாட்டு மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் , யார் யார் எவ்வளவு வரி செலுத்தவேண்டும் என்பது உட்பட சகலத்தையும் தீர்மானிக்கும். நீதி, நிர்வாகம், ராணுவம், சிறைச்சாலை அத்தனைக்கும் பொறுப்பு இந்த அரசசபைதான். ஆனால் இந்த சபையில் தொழிலாளிகள், விவசாயிகள், உழைப்பாளிகளுக்கு இடம் கிடையாது.

இப்படிக் கதை போய்க்கொண்டிருக்கையில் அந்த அந்த நாட்டுத் தொழிலாளர்கள் பெரிய போராட்டம் நடத்தினார்கள். அரசியல் உரிமை வேண்டும்,நல்ல வாழ்க்கை வேண்டும் என்று பெரிய கலகம் வெடித்தது. ராஜா அரண்மனையை விட்டு வெளியே வரமுடியவில்லை. வேறு வழியேயில்லை. சரி. தொழிலாளர்களும் இனிமேல் அரச சபையில் பங்கேற்கலாம் என்று உத்தரவு போட்டுவிட்டார்.உடனே பிரபுக்கள்,மந்திரி சேனாதிபதிகளெல்லாம் எழுந்து நின்று “ராஜா……ராஜா……..ஒரு சின்ன விண்ணப்பம். நாங்களெல்லாம் சேற்றிலே உழன்று வீச்சமெடுத்த இந்தப் பஞ்சைப் பராரிகளுடன் எப்படி ஒண்ணா உட்காரமுடியும்? எங்கள் நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் மகாராஜா…” என்று பவ்யமாக வேண்டி நின்றனர். ராஜாவும் யோசித்தார். ஓ…. இப்படியும் ஒரு பிரச்னை இருக்கே…. சரி.. நீங்களெல்லாம் எனக்கு வலதுகைப் பக்கம் இருங்கள். தொழிலாளிகள் அப்படி எனது பீச்சாங்கைப் பக்கமாக இருந்துவிட்டுப் போகட்டும். சரிதானே என்று உத்தரவு போட்டுவிட்டாராம்.

அன்றுமுதல் வலது என்றால் முதலாளிகள், பண்ணையார்கள், பிரபுக்கள் -இடது என்றால் பாட்டாளிகள் என்று பழக்கத்துக்கு வந்துவிட்டது. காலப்போக்கில் யாரெல்லாம் தொழிலாளி, விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் இடதுசாரிகள் என்றும் முதலாளிகளுக்காகப் பேசுகிறவர்கள் வலதுசாரிகள் என்றும் அரசியல் உலகில் பேர் ஆகிவிட்டது.
இந்த அடிப்படையில் நாட்டில் உள்ள கட்சிகள் அத்தனையையும் வலதுசாரிக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் என்று ரெண்டாகப் பிரித்து விடலாம். சில கட்சிகள் நாங்க ரெண்டும் கிடையாது நடு என்று சொன்னால் அது ரீல். தனியுடைமையா? பொதுவுடைமையா? ரெண்டும் சரி தான் என்று யாராவது சொன்னால் நடைமுறையில் அவர் வலது சாரியாகத்தான் இருப்பார். (இது பற்றி இன்னும் விளக்கமாக பின்னால் பார்ப்போம்)
1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது நாலே நாலு கட்சிகள் தான் இருந்தன. ரெண்டு இடதுசாரிக் கட்சிகள். ரெண்டு வலதுசாரிக் கட்சிகள்.

ஆனால் இன்று இந்தியாவில் நிலைமை என்ன? 600-க்கும் மேற்பட்ட கட்சிகள் நம் நாட்டில் இருக்கின்றன. அவற்றில் இடதுசாரிக் கட்சிகள் நாலோ ஐந்தோ தான். இப்படி நூற்றுக்கணக்கான கட்சிகள் இருப்பதால் தொழிலாளிகளுக்கும் பிற உழைப்பாளி மக்களுக்கும் எது உண்மையிலேயே நம்ம கட்சி என்று கண்டுபிடிக்கத்தெரியாமல் எல்லாக் கட்சியிலேயும் சேர்ந்து ஏமாந்துகொண்டிருக்கிறார்கள். அல்லது ஒரு கட்சியும் வேண்டாம் எல்லாமே சாக்கடை என்று ஒதுங்கி நிற்கிறார்கள்..

அரசியல் என்பதன் அடிப்படையை-அரசு என்பது பிறந்து வளர்ந்த கதையை –எல்லோரும் தெரிந்துகொண்டால்தான் ஏமாற்றங்களிலிருந்து விடுபடமுடியும். விரக்தியில்லாமல் நமக்கான அரசியலைப் புரிந்துகொள்ளமுடியும்.

-- ச.தமிழ்ச்செல்வன்

கருத்துகள் இல்லை: