புதன், 21 நவம்பர், 2012

வாழ்க்கைப் பயணம்



அப்போது சென்னை மாதவரம் பாரதியார் தெருவில் இருந்தோம், நாங்கள் ஐந்து பேர். இப்போது எல்லோரும் சிதறு தேங்காய் போல ஆளுக்கொரு திசையில் இருக்கிறோம். ஆனால் எங்கள் நண்பன் அறைத்தோழன் அவன் இறந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் இராஜாராமன் மின் துறை சென்னையிலிருந்து அவன் துபாய் அலுமினியம் கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற ஆண்டு நினைவில் இல்லை. மின்னஞ்சல் மூலம் தொடர்பு இருந்தது, நான் துபாயில் 6 மாதகாலம் வேலைசெய்தபோது கூட அவனை சந்திக்கவில்லை என்ற காரணம் என்னை வருத்தியது. அவன் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தால் உயிரிழந்தான். அவன் இன்னும் என் கண்முன்னே வருகிறான். வடைச்சட்டியில் அவன்  டீ குடித்ததை கடசிவரை மறக்கமுடியாது. என்னை அதிகமாய் சீண்டுவான், நான் அப்போது செய்தித்தாளை ஒரு பக்கம் விடமாட்டேன் ஆனால் விளையாட்டுச் செய்திகளை வாசிக்க விருப்பம் இருந்ததில்லை. எல்லோரும் கிரிக்கெட் பற்றி பேசினால் அந்த இடத்தில் நான் வேற்று பாஷைக்காரன் போல் ஆகிவிடுவேன் அந்த அளவிற்கு ஞானம். ராஜாராமன் விபத்தில் பலியான சம்பவத்தை செளந்தர் தான் எனக்குத் தெரிவித்தான். அப்போது அவன் செளதியில் இருந்தான். இன்னும் தொடர்பில் இருக்கிறான். நண்பர்கள் யாரும் தொடர்பே கொள்ளவில்லை என்று வருத்தப்படவில்லை எல்லோருக்கும் இந்த அவசரகதியில் அவர்கள் பாடே தாவு தீர்ந்துவிடுகிறது. அவர்களை நினைத்துப்பார்ப்பதே நட்பின் ஒரு அடையாளம் தான் என்ற கலீல் கிப்ரானின் கவிதை உண்டு.

செளந்தருக்கும் ராஜாராமனுக்கும் உள்ள உறவு மானசீகமானது, அவர்களுக்குள் கிண்டல் இருக்காது, சீரியஸ் தான். இன்னும் ராஜாராமன் என் மனக்கண்ணில் சிரித்துக்கொண்டே யிருக்கிறான். இன்னும் இருவரை விட்டுவிட்டென், ஒருவன் ஞானசேகர் மற்றொருவன் பிரபாகரன். ஞானசேகர் எப்போது கோபம் கொள்வான் என்று சொல்லமுடியாது, அவனுடைய தலைவர் கலைஞர். எதனால் அப்படி ஒரு பற்று என்று அவனிடம் கேட்டதில்லை. நாங்கள் அந்த நிறுவனத்தில் வேலைசெய்ய ஆரம்பத்திலிருந்து ஒரே வீட்டில் பேச்சிலர் வாழ்க்கையை துவக்கினோம். தூத்துக்குடியில் என்னுடைய அறை நன்பர்கள் பால்முருகன், ஹரிகரசுதன் மற்றும் செளந்தர். பின்னர் அணிமாற்றத்தில் சென்னையில் வேற அறை நண்பர்களாக இருந்தவர்கள் என்னுடன் இருந்தார்கள். நான் ஷாக்ஸ் என்பதை ஒரு நாளுக்கொரு துவைக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தவன் செளந்தர் தான். ஒரு நண்பன் என்றால் அவனிடம் உள்ள குறைகளை சுட்டி அவ்னை மாற்றவேண்டும். தெரிந்தே செய்கிற தவறுகளை திருத்தமுடியுமா? ஹரிகரசுதன் இப்போது லண்டனில் இருக்கிறான் என்பதை பேஷ்புக் மூலம் தெரிந்துகொண்டேன். பால்முருகன் செளதியிலிருந்து இந்தியாவிற்கு சென்றுவிட்டான், இந்த விடுமுறையில் அவனோடு தொடர்பு கொண்டேன். எத்தனை விசயங்களை மறந்தாலும் மெட்டுகுண்டு என்ற அவனுடைய ஊர்ப்பெயரை மறக்கமுடியாது. இப்போது பழைய நண்பர்களை நேரில் பார்த்தால் என்ன பேசிக்கொள்வோம் என்று தெரியவில்லை. ஆகஸ்டு 1995 முதல் நிறுவனம் வெளியே தள்ளியதுவரை டிசம்பர்2001 எங்கேயும் வேலை தேடவில்லை. வெளிநாட்டு மோகமும் சுத்தமாக இல்லை, அப்படியொரு திருப்தி வேலைமீது. இன்னும் பழைய கம்பெனி கதைகல் பற்றிச்சொன்னால் எங்க கம்பெனி என்று சொல்வது அதை மட்டும் தான். செளந்தர் 1998ம் ஆண்டு சவுதி சென்றான், பின்னர் ராஜாராமன் சென்னையிலேயே வேறு நிறுவனத்திற்குச் சென்றான் அங்கிருந்து துபாய் சென்றான். நாங்கள் சமையல் செய்து தான் சாப்பிட்டோம். அதை சொல்ல நினைத்துதான் இதை எழுத ஆரம்பித்தேன்.

கூட்டு, பொறியல் என்றால் என்ன? என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சாப்பிடுவது இரவு ஒருவேளை மட்டும் வீட்டில் அதற்கு எதுக்காய்ய கூட்டு? சாம்பார் வைத்தால் அதில் காய்கறி இருக்கிறதே! வாரத்தில் 5நாளில் 4 நாட்கள் சாம்பார் தான். எங்களுக்குள் நீ இன்னைக்கு சமைக்கனும் நான் இன்னைக்கு என்று பட்டியலே கிடையாது. எனக்கு விருப்பமான தேர்வு பாத்திரம் கழுவுவதுதான். ஆனால் என்னை ச்மையல் குருவாக செளந்தர் சொல்லிவிட்டான் என்பதற்காக சாம்பார் வைத்துத்தொலைத்தேன். நேற்று நாங்கள் செய்யும் ஒருவகையான உப்புமாவை ஞாபகம் கொண்டேன். அதுதான் எழுதுவதற்கு விதையே! அந்த உப்புமா எப்படி தயாரித்தோம் என்றால் வேடிக்கையானது. வெங்காயம், மிளகாய் கடுகு தாளித்து பின்னர் சம்பாரவைக்குத் தேவையான அளாவு தண்ணீர் ஊற்றுவோம், அது நன்றாக கொதிநிலை வரும்போது அதில் முட்டை இரண்டோ மூன்றோ அடித்து ஊற்றுவோம். பின்னர் ரவையை போட்டு கிண்டி இறக்கினால் உப்புமா ரெடி. எவன் சொன்னானோ இந்த பார்மூலாவை. இது ஒரு மெனு. கடைக்குப் போனால் முட்டைவாங்கும் ட்ரே இல்லாமல் போவதில்லை அந்த அளவிற்கு அவித்த முட்டை பிரியர்கள். சாப்பிடுவதற்கு சைடில் எதாவது வைத்துக்கொள்ளவேணுமே! பாரதியார் தெரு வீட்டிற்கு வந்தவுடந்தான் பாஸ்போர்ட் விண்ணப்பித்தேன் எனக்குட்துணை ராஜா. அவன் என்னை மாதிரி சோடாபுட்டி! எனக்கு -1 லிருந்து ஏறிக்கொண்டே வந்தது அவன் நிலைநிறுத்தினான் யோகாவாம் யோகா செய்வான், கேட்டால் எங்க தாத்தா சொல்லிக் கொடுத்தார் என்பான். பாஸ்போர்ட் வாங்கிய கதை இன்னமும் நினைவில் உள்ளது. நாங்கள் வேலைக்குப்போய்விட்டால் வீட்டில் யாருமே கிடையாது, போலீஸ் என்கொயரி வந்தது. போலீஸ் ஸ்டேசன் செல்லவேண்டும். அவனுக்கும் இருக்கிறது என்கொயரி ஆகையால் இருவரும் மாதவரம் காவல்நிலையம் சென்றோம். உள்ளே சென்றதும் எனக்குப்பீதியானது அங்கே ஜட்டியுடன் ஒருவனை நிற்கவைத்து நமது பொதுமக்களின் நன்பர்கள்! அடித்தார்கள். என்னுடைய பீதியை ராஜாராமன் கடைக்கண்ணில் பார்த்தான், அவன் கண்ணிலும் தான் அச்சம் நைசாக மறைத்துவிட்டான். பின்னர் ஆய்வாளரை இருவரும் அணுகினோம். பாஸ்போர்ட் எடுத்து எங்கே போகப்போறீங்க என்றார், சும்மா ஒரு அட்ரஸ் புரூப் க்குத்தான் என்றோம். சரி சரி என்றார் மாமூல் எதுவும் கேட்கவில்லை நாங்களும் தருவதற்கு துணியவில்லை. நன்றி சொல்லி வெளியே வந்தபோது கொஜ்சம் ஸ்டேசனரி பொருட்கள் வாங்கிக்கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்றார். எப்படியோ தலா 10ரூபாயை கறந்தார்கள். அறைக்கு வந்ததும் என்னுடைய பீதியை நண்பர்களிடம் சொல்லிவிட்டான், அதை அவன் அவ்வப்போது என்னை சீண்டுவதற்கு பயன்படுத்துவான்.


இன்னைக்குப்போதும்...

கருத்துகள் இல்லை: