வியாழன், 22 நவம்பர், 2012

வாழ்க்கைப் பயணம் -1


அப்போது 1996ம் ஆண்டு சென்னையில் பெருமழை பெய்தால் தாங்காது, வியாசர்பாடி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்லமுடியாது மீன்பாடி வண்டிக்காரர்கள் தான் டூ வீலரை அக்கரை சேர்ப்பார்கள். அது பணம் பண்னுவதற்கு ஒரு வாய்ப்பு, சேவையும் கூட. நாங்கள் வேலை செய்த ப்ராஜெக்ட் பகுதியும் அப்படித்தான், செங்குன்றத்தில் புழல் ஏரியில் அதிகப்படியான நீரை திறந்துவிட்டால் ஆண்டார்குப்பத்தில் மார்பளவு நீர் தேங்கும். அப்படி இருமுறை மழைபெய்தது. காலையில் வேலைக்கு வருவதற்காக புறப்பட்டவர்கள் பஸ் காண்ட்ராக்டர்கள் இயக்கமுடியாது என்று மீண்டும் வீட்டிற்கே திருப்பினார்கள். அப்படி ஒரு சமயம் இரண்டுபேர் sincere ஆசாமிகள் மின் துறையைச் சேர்ந்தவர்கள் மார்பளவு நீரில் ஆண்டார் குப்பத்திலிருந்து கம்பெனிக்கு நடந்துசென்று பணியாற்றினார்கள். warehouse எங்கும் தண்ணீர் தேங்கியிருக்கும், டெக்ஸ்டைல்ஸ் மெஷின்கள் இருக்கிற மரப்பெட்டிகள் நனைந்துவிடாமல் இருக்க தார்பாலின் போடுவோம். ஸ்டோர்ஸ் கட்டிடத்தை யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் கேட்டில் சாவியும் சட்டர் கீயும் வாங்கி திறப்பார்கள், அந்த நாள் நம்ம ரெணுகுமார் காலை உணவை கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு வண்டியில் வந்திறங்கினான், அங்கே மேலாளர் ஸ்டோர்ஸ் திறக்காமல் வெளியில் நின்றிருந்தார். ரேணு போய் கீ வாங்கிட்டு வாங்கோ என்றார் மேலாளர். அதே வண்டியை மடக்கிக்கொண்டு சென்றான். நான், கார்த்தி, கோவிந்த், ராமசந்திரன் ,சுரேஷ் ஆகியோர் ஸ்டோர்ஸ் நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தோம். எங்கள் எதிரே ரேணுகுமார் வண்டியில் சென்றார். நாங்கள் செல்லும்வரை மேலாளர் வெள்யேதான் நின்றிருந்தார், ரெணுகுமார் வரவில்லை. நாங்களும் காத்திருந்தோம். வந்தான் ரேணு கையில் டீ கேண் அவனுடன் கேண்டீன் பையன்!!

என்னடா 9 மணிக்கு வரவேண்டிய டீ 8:15 க்கு வந்துவிட்டதெ என்று பார்த்தால் கீ வாங்குவதர்கு பதிலாக டீ வாங்கி வந்தான் ரேணு. மேலாளருக்கு வந்த கோபம் அப்படி. எல்லோரையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.  ரேணுகுமார் அப்படி நிறைய தமாஸ் பண்ணுவார். விதண்டாவாதம் செய்வார். ஒருமுறை சுப்பையாவுடன் பல் ஆஸ்பத்திரிக்குச் சென்றான் பல்லை சுத்தம் செய்துவிட்டு சுப்பையா பணம் கொடுத்துரு என்றான். அதை திரும்ப வாங்கவேமுடியவில்லை. அவரை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.

மாதாவரம் ஒரு கிராமம் அங்கே மாம்பழசீசன் வந்துவிட்டால் ரோடே நாறிவிடும். கடைக்காரர்கள் அழுகிய பழங்களை சாலையில்தான் எரிவார்கள். மாதாவரம் சாராயத்திற்கு பேர்போனது, பேருந்தில் அங்கே வந்து குடித்துவிட்டு பஸ்ஸில் நடத்துனரிடம் சண்டை போடுவார்கள். பெருத்த அநியாயம் செய்வார்கள். மாதாவரம் பால்பண்ணை அங்கே தான் மணலி பகுதியில் வேலைசெய்வோர் சொந்தமாக வீடுகட்டி வசித்தார்கள். காற்றோட்டமான நல்ல பகுதி அது. பாரதியார் தெருவிற்கு குடிவருவதற்கு முன்பே மாரியம்மன் கோவில்தெருவில் ஒரு வீட்டில் அதே நண்பர்கள் குழாம் இருந்தோம். வீட்டுக்காரருக்கு பணம் மட்டுமே, மனித உறவுகள்பற்றி கவலையே கிடையாது. நமது வீட்டிற்கு யாராவது விருந்தாளி வந்தால் அவர்களிடமே எப்போது செல்வீர்கள் என்று கேட்பான். அப்படியொரு கழிசடை. வாடகை வீட்டில் வாழ்ந்தால் இப்படி நிறைய அவமானங்கள் சகிக்கவேண்டும். அப்போது ஐந்து பேர் சேர்ந்து ஒரு பிலிப்ஸ் ரேடியோ வாங்கினோம், பண்பலை துவங்கிய நேரம். அப்போது ஒருத்தர் ரேடியோவில் பேசுவார் கனீரென்று இருக்கும் அவர் குரல். செளந்தருக்கு அவருடைய குரல் ரெம்ப பிடிக்கும். எல்லாரும் உறங்கிய பின்னரும் நான் ரேடியோ கேட்பேன், ஏ போதும்டா ஆப் பண்ணு என்பர்கள், ம் சரி என்று தூங்கிவிட்டால் காலையில் பேட்டரி தீர்ந்து கொர் என்று சவுண்ட் வரும்.

அப்பொது மாலையில் டீக்கடையில் தான் டீ சாப்பிடுவோம், யார் பணம் தருவது என்ற பிரச்ச்னை எங்களுக்கு இருக்காது. எல்லாம் பொதுதான். நாந்தான் நிதிமந்திரி. சினிமாவா, ஹோட்டலா, திநகர் செல்கிறோமா, பஸ்டிக்கெட் எல்லாமே பொதுக்கணக்கில்தான் யாரும் நட்டமடையவெண்டாம் என்ற ஏற்பாடு. நாங்கள் மாத பட்ஜெட் போடுவோம், சிலர் சாப்பாட்டுக் கணக்கை தினசரி போடுவதாக கேள்விப்பட்டோம். மாதவரத்தில் நல்ல ஹோட்டலே கிடையாது. ரோட்டொரத்தில் இஸ்லாமியர் ஒருவர் இட்லிக்கடை போட்டிருந்தார், பாய்கடை என்போம். அவர் சதா வேலைசெய்து கொண்டேயிருப்பார். ஐந்துவேலை தொழுகை செய்வதற்கு அவருக்கு நேரமில்லை. ரம்ஜான் மட்டும் ஒருநாள் கடைக்கு லீவுவிடுவார். கடைசிவரை மண்ணெணெய் அடுப்பு பயன்படுத்தினார். நாங்கள் கேட்போம் என்ன பாய் கொஞ்சம் கடையை சரிபண்ணுங்க..முடியல தம்பி என்பார். காலையில் அங்கே விடுமுறையில் மட்டும் சாப்பிடுவோம் அல்லது பூரி பார்சல், இரவு சாப்பிட்டால் கண்டிப்பாக ஆம்லெட், அந்த சூடான் ஆம்லெட்டை கையால் எடுத்துப்போடுவார், வேலை, வேலை தவிர வெறு எதுவும் செய்யமாட்டார். பீடி குடிப்பார் அதுவும் மத்தியான நேரத்தில் காய்கறி வெட்டும்போதும் சாம்பார் வைக்கும்போதும். நல்ல ஹோட்டலில் சாப்பிடவேண்டுமென்றால் பெரம்பூர் செல்லவெண்டும். மாதவரத்தில் நான்கு முறை வீடுகள் மாறியிருக்கிறோம். இரண்டாவது வீடுதான் பாரதியார் தெரு வீட்டின் எதிரெ சலூன் கடை , அந்த  கடைக்காரர் பாதிநாட்கள் நாதஸ்வரம் வாசிக்கப்போவார். என்னிடம் வாங்கிய ஒரு ஐம்பது ரூபாயை திரும்பி தரவேயில்லை. நான் கேட்டுப்பார்த்தேன், தரேன் என்பார் அவ்வாள்வுதான். முடிவேட்டி அப்படியே கழித்துவிடலாமா? என்று கூட யோசிப்பேன் அது முறையல்ல என்று ஏமாந்துபோனேன்.ஏற்கனவே நமக்கு ஏறுநெத்தி!

அங்கேயிருந்த சமயம் செளந்தர் செளதிஅரேபியா சென்றான், ராஜா கும்முடிப்பூண்டி சென்றதால் வேறு தெருவில் சிறியவீட்டில் நானும் ஞானசேகரும் தொடர்ந்தோம். அந்த வீட்டுக்காரர் நல்ல மனிதர், பெரியார் கொள்கைவாதி. நன்றாகப் பேசுவார். அப்போது மாதவரம் நூலகத்தில் உறுப்பினரானேன் பொழுதுபோக்குக்காக படித்த நூலகள் என்னை மாற்றின. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அது பொன்னீலன் எழுதிய புதிய தரிசனங்கள் என்ற நாவல். இடதுசாரி அரசியல் பற்றி பேசியது. நூலகத்திற்கு வரும் சில பத்திரிக்கைகள் கடைகளில் விற்காது, அப்படிப்பட்ட இலக்கிய இதழ்கள் அங்கே வரும். நாள் தவறாமல் கொவிலுக்கு சென்றவனை கடவுள் பற்றிய கேள்வி எழுப்ப அறைகூவல் விட்டது அந்த நூல்கள். பெரம்பூரில் பெரியார் இயக்கத்தினர் வாகனங்களில் புத்தகக் கண்காட்சி நடத்துவார்கள். கடவுள்கள், தெய்வ சக்தி பற்றி எல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக விளக்குவார்கள் அவர்கள் விற்கும் புத்தகம் 1 ரூ, 2 ரூபாயில் கிடைக்கும். நாத்திகம் நோக்கி மெதுவாக சென்றுகொண்டிருந்தேன். வழிபட்ட கடவுள்கள்  கேள்விக்குள்ளானார்கள். அரசியல் பற்றி விவாதிக்கும் ஆர்வம் ஈர்த்தது, நேர்மையான அரசியல்வாதிகள் யார், படோபடம் இல்லாத அரசியல்வாதிகள் யார் என்ற தேடலில் அது என்னை 52, குக்ஸ்சாலை, பெரம்பூர் என்ற விலாசத்தில் கொண்டுபோய் சேர்த்தது.

கருத்துகள் இல்லை: