தமிழ்நாட்டில் கி.பி. 7ம் நூற்றாண்டுவரை சமணமும் பெளத்தமும் செல்வாக்குடன் இருந்தன. அதே நூற்றாண்டில் தோன்றிய பக்தி இயக்கம் தோன்றியபிறகு பெளத்தம் படிப்படியாக மறைந்தது.இன்றளவும் வடமாவட்டங்களில் திண்டிவனம், வந்தவாசி,காஞ்சிபுரம் பகுதிகளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சமணர்களாக வாழ்ந்துவருகிறார்கள். இந்த செய்தியை பலர் அறியாமல் இருக்கலாம்.
சமண, பெளத்த மதங்களின் தொல்லெச்சங்கள் இன்றும் நம்மிடையே இருக்கின்றன. சைவ, வைணவ, சுமார்த்தத் துறவிகள் துறவுக்கு அடையாளமாகச் சிவப்பு ஆடை அணிகின்றனர். துறவு நெறியை இந்தியாவில் உருவாக்கி வளர்த்தவை சமண, பெளத்த மதங்கள் தான். பெளத்த மதத்தின் துறவிகள்தாம் முதலில் செவ்வாடை அணிந்தவர்கள், ‘சீவர’ ஆடை அணிந்தவர்கள் என்று அவர்களை தேவாரம் கண்டிக்கிறது. பெளத்தமதம் அழிந்தபிறகு சைவ, வைணவ சுமார்த்தத் துறவிகள் சிவப்பு ஆடையை அணியத்தொடங்கினர். பெளத்தம் தந்த மற்றொரு வழக்கம் தலையினை மொட்டையடித்துக் கொள்வது. வேத, புராணங்களில், தேவார, திவ்வியப் பிரபந்தகளில் இவ்வழக்கம் பற்றிய பேச்சேயில்லை. திருப்பதி, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோவில்களில் மொட்டையடித்துக் கொள்ளும் வழக்கம் பரவலாக உள்ளது (இவ்வழக்கத்தை பிராமணர்கள் ஏற்றுக்கொள்வதில்லை). பெளத்த மதத்தின் துறவிகள் கையில் வைத்திருக்கக்கூடிய எட்டுப் பொருட்களில் தலைமழிக்கும் கத்தியும் ஒன்று. மதத்தின் பெயரால் தலைமுடியினைப் புனிதத்தலங்களில் மழித்துக்கொள்ளும் வழக்கத்தைப் பெளத்தத் துறவிகளிடமிருந்து தான் தமிழ்மக்கள் கற்றுக்கொண்டனர்.
அரசமரம் பெளத்தர்களுடைய புனிதச்சின்னமாகும் அது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. அதைப் பின்பற்றி தமிழர்களும் அரசமர வழிபாட்டினைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
‘பள்ளி’ என்ற சொல்லுக்கு படுக்கை என்று பொருள். பள்ளியறை என்றால் படுக்கையறை பள்ளிகொள்ளுதல் என்பது என்பது உறங்குதல். இந்த சொல் எப்படி கல்விக்கூடத்திற்கும் குறிப்பதாயிற்று?
கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டிற்கு முன்னர் தமிழகம்வந்த சமண மதத்தின் திகம்பரத் துறவிகள் மலைக்குகைகளில் தங்கத்தொடங்கினர். சமண மதத்தின் கொடையாளர்கள் இவ்வகையான ஆடையில்லாத் துறவிகளுக்காக அவர்கள் தங்கும் குகைகளில் தரைப்பகுதியை படுக்கையைப் போல சமதளமாக செதுக்கிக்கொடுத்தனர். இப்படிப்பட்ட குகைத்தளங்கள் திருப்பறங்குன்றம், திருவாதவூர், சமணமலை, நாகமலை ஆகிய இடங்களில் இன்றும் இருக்கிறது. நாகமலையிலுள்ள புலியங்குளம் குகையில் மட்டும் 50 படுக்கைகளுக்கு மேலாக வெட்டப்பட்டுள்ளது. ஆடையில்லாத சமணத்துறவிகள் பசித்த நேரத்தில் மட்டும் அருகிலுள்ள ஊருக்குள் நுழைந்து பிச்சை ஏற்று உண்டுசெல்வர். கல்வி, மருந்து, உணவு ஆகிய மூன்று கொடைகளும் அடைக்கலம் அளித்தலும் சமண மதத்தின் தலையாய அறங்கள். ‘ஞானதானம்’ செய்வதற்காகச் சிறுபிள்ளைகளைத் தங்கள் இருப்பிடத்திற்கு துறவிகள் அழைத்துக் கற்றுக்கொடுத்தனர். குகைத்தளத்தில் பிள்ளைகள் அமர்வதற்கு வேறுஇடம் கிடையாது. கற்படுக்கைகளின் மீதுதான் அமர்ந்திருக்க இயலும். பள்ளிகளின் மீது பிள்ளைகள் அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம் பள்ளிக்கூடம் ஆயிற்று.
தேசிய இயக்கத்தின் வளர்ச்சியில் உண்ணாநோன்பு என்பது மிகப்பெரிய போராட்டக் கருவி. உண்ணா நோன்புக் காலத்தில் தண்ணீர் மட்டும் அருந்துவது சமணர்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்டதாகும். கடுமையான துறவை வலியுறுத்தியதும், தொல்பழைய சடங்குகளை நிராகரித்ததும், ஆடல் பாடல், போன்ற நுண்கலை உணர்வுகளை ஏற்றுக்கொள்ளாததும், புலால் உணவை முற்ரிலுமாக மறுத்ததும், பாண்டிய, சோழப்பேர்ரசுகள் வேத நெறிக்கு ஆதரவு அளித்ததும் சமண மதம் தமிழ்நாட்டில் வீழ்ச்சியடையக் காரணங்களாயின.
தகவல்: பண்பாட்டு அசைவுகள்- தொ.பரமசிவன்
2 கருத்துகள்:
பல தகவல்களை அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி சார்...
பல அரிய தகவல்கள் அறிந்து கொண்டேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
கருத்துரையிடுக