வியாழன், 13 செப்டம்பர், 2012

அநாமதேயர்கள் வழங்கிய நிதியா?



அநாமதேயர்கள் வழங்கிய நிதியால் அரசியல் கட்சிகளின் கஜானா நிரம்பிவழிகிறது என்ற செய்தி வந்தது. adrindia.org என்ற இணையதளத்தில் அரசியல் கட்சிகளின் வருமானம்,  வரவு- செலவு கணக்கு வெளியிட்டுள்ளார்கள். 2001- 02 முதல் 2008-09 வரையிலான நிதியாண்டில் இரண்டு பெரிய தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக வும் முறையே ரூ1500 கோடி, 750 கோடி பணம் கையிருப்பில் உள்ளதாகவும் மூன்றாவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  வசம் மேலே குறிப்பிடப்பட்ட நிதியாண்டில் ரூ338 கோடி இருப்பதால் அந்த கட்சிகள் மாதிரி சிபிஎம் கட்சியும் ஊழல் செய்து சம்பாதித்தது என்ற ஊடகங்கள் சொல்ல வருகிறார்கள். சாதாரண மக்களைவிட ஊடகத்துறைக்கு இடதுசாரிகளின் அரசியல் அமைப்பு பற்றி அதிகம் தெரிந்திருக்கும். அவர்கள் இதுவரை இந்தியாவின் பெருமுதலாளிகள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதியோ, கட்சி நிதியோ பெறவில்லை. பிறகு எப்படி இத்தனை கோடி ரூபாய் உங்களிடம் இருக்கிறது என்பதன் மூலம் மற்ற கட்சிகள் மாதிரி இவர்களும் ஊழல்வாதிகள் தான் என்கிறார்கள்.
 
முதலில் பணம் கொடுத்தவர்கள் யாரும் அநாமதேயர்கள் அல்ல, தேர்தல் ஆணையம் வகுத்துள்ள சட்டத்தில் ரூ 20000 க்கும் அதிகமாக நிதிஅளிப்பவர்களின் பட்டியல்தான் சமர்பிக்கவேண்டும். அந்தப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகமாக வசூலாவது தொழிலாளர்களிடமிருந்து தான் இயற்கையாகவே நிதியளித்த 98 சதவீதம் பேர் சட்டத்திற்கு அநாமதேயர்கள்.



காங்கிரஸ், பாஜக, அல்லது பிற முதலாளித்துவ கட்சிகள், பிராந்திய கட்சிகள் எப்படி பணம் வசூலித்தன என்பது குறித்த ஆராய்ச்சியை நாம் அலசவேண்டியதில்லை. அந்த கட்சிகளின் தலைவர்கள், மந்திரிகள் அடிக்கிற கொள்ளைகள் தினந்தோறும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. தேர்தலில் அதிகபணம்  செலவு செய்து வெற்றிபெற்று பின்னர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துகொண்டு மந்திரிபதவியை பேரம்பேசி வாங்கி சொத்துகுவிப்பது, நாட்டின் இயற்கை வளங்களை குறைந்த விலைக்கு உள்நாட்டு, பன்னாட்டு பெரிய நிறுவனக்களுக்கு தாரைவார்த்து அதன் மூலம் கட்சியின் கஜானாவையும் அதிகமாக சொந்த கஜானாவையும் நிரப்பிவருகிறார்கள் என்பது கண்கூடு. இடதுசாரிக் கட்சியான சிபிஎம் மீது வைக்கப்பட்டுள்ள புகாருக்கு விளக்கம் அளிப்பதே நம் கட்டுரை.

ADRINDIA நிறுவனத்தின் இன்னொரு அட்டவணையில் சிபிஎம்  2007-08 மற்றும் 2008-09  நிதியாண்டில் மட்டும் லெவியாக ரூ.45.51 கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. Voluntory Contribution  ஆக இந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.55 கோடி ரூ பெற்றிருக்கிறது என்கிறது. இந்த  Voluntory Contribution  ஐ எந்த பெரு முதலாளிகளிடமிருந்து பெருவதில்லை என்ற கொள்கையில் சிபிஎம் உறுதியாக இருக்கிறது. 2009ம் ஆண்டு கணக்கின்படி 10 இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் அக்கட்சியில் இருக்கிறார்கள், ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்தில் 5 சதவீதம் கட்சிக்கு மாதந்தோறும் வழங்கவேண்டும் , அது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் பொருந்தும். கட்சியின் மிகப்பெரிய நிதி ஆதாரம் அதன் உறுப்பினர்கள் தரும் லெவிதான், இதுபோக வருடந்தோறும் கட்சி உறுப்பினர்கள் கட்சிநிதி வழங்கவேண்டும். தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், சிறுதொழில் செய்வோரிரமிருந்து கட்சிவளர்ச்சிக்கு நிதி பெறுகிறார்கள். ADR India சொல்கிற மாதிரி ரூ.20,000 க்கும் அதிகமாக கட்சிக்கு நிதி வழங்கியோர் 2 சதவீதம் தான், அதுவும் தேர்தல் ஆணையத்திற்கு வருடந்தோறும் கணக்குகளை முறையாக வழங்கிவருவது இடதுசாரிகள் மட்டும் தான். மடியில் கணமில்லையென்றால் வழியில் என்ன பயம்.
சமீபத்தில் மறைந்த சிபிஎம் மாநில செயலாளர் வரதராஜன் அவர்களுக்கு குடியிருக்க சொந்தவீடு கூட இல்லை. ஆனால் கட்சி ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் அலுவலகம் வைத்துள்ளது. இன்னொரு விசயம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு யாரும் வாடகைக்கு இடம் தரமாட்டார்கள், அப்படியொரு பிரச்சாரம். அதனால் சொந்த கட்டிடத்தின் தேவை, அன்றாடம் கட்சிப்பணிக்காக இயங்குபவர்கள் ஒதுங்குவதற்கு இடம் தேவை. சொந்த நலனைவிட கட்சியின் நலன்தான் முக்கியம் என்று நினைக்கும் இடதுசாரிகள் கட்சிக்கு இடம், சொந்தகட்டிடம் கட்டுகிறார்கள், மற்றவர்கள் கட்சியின் பணத்தை தலைவரின் பணமாக மாற்றி அதை ஒரு டிவியில் முதலீடு செய்து அது சொந்த உழைப்பு என்று வாழ்ந்துவருகிறார்கள். முதலாளித்துவ கட்சிகள் அடிக்கிற கொள்ளையைப் பார்த்துவிட்டு எல்லா கட்சிகளும் ஊழல்தான் அப்படி பொத்தாம்பொதுவாக பேசுவது சமூக நோயாகிவிட்டது. எங்காவது பஸ்ஸிலோ, ரயில் பயணத்திலோ தங்களுடைய அரசியலை பேசமாட்டார்கள் எல்லா அரசியல்வாதிகளையும் சாடுவார்கள். அது எளிது. நான் எந்த அரசியலுக்கு சாய்வில்லை என்று சொல்லும்போது விவாதத்திற்கு அங்கே இடமில்லை, பதில் சொல்வதற்கு தயாராக இல்லை, வெறும் ஒருவழிப்பாதை அல்லது சொற்பொழிவு மாதிரி தான். இது அவதூறுக்கு பதில்.
 






கருத்துகள் இல்லை: