வெள்ளி, 18 நவம்பர், 2011

தேவ-அசுர யுத்தத்தின் வேர் எங்கே?

“மனிதன் எந்த உணவை உண்கிறானோ அதே உணவையே அவனது தேவனும் உண்கிறான். மனிதன் எந்த உருவில் இருக்கிறானோ அதே உருவத்தில் அவனுடைய தேவனும் இருக்கிறான்” என்கிறது ரிக் வேதம்.

தந்தை பெரியார், இராமாயணம் மற்றும் வைதீக மதத்தின் புராணங்களில் வருகின்ற தேவர்- அசுரர் யுத்தங்களை ஆரிய-திராவிட யுத்தம் என்று சொன்னார்.தீபாவளி பண்டிகைக்காக கொல்லப்படும் நரகாசுரன் ஆகட்டும், முருகனால் சூரசம்ஹாரத்தில் கொல்லப்படுகிற அரக்கன் ஆனாலும் சரி அது ஆரிய-திராவிட போர்களின் கதைதான். ஆனால் வெட்கம் கெட்ட தமிழர்கள் தம் இனத்தவரான அரக்கனை கொல்கிற ஆரிய விழாவை தீபாவளி என கொண்டாடுகிறோம் என வருந்தினார். நம்முடைய இதிகாசங்கள் என்னவோ மஹாபாரத்தை பல இலட்சங்கள் வருடங்களுக்கு முன்பு நடந்ததாகவும், இராமாயாணத்தையும் அதே பாணியில் திரேதா யுகத்தில் நடந்த கதை எனவும் சொல்கிறார்கள். `சோ` எழுதிய மஹாபாரதம் பேசுகிறது நூலில் நகுல-சகாதேவர்கள் 13 ஆண்டு வனவாசத்தில் தமிழகத்தில் சேர-சோழர் அல்லது பாண்டியனை பார்த்ததாக எழுதியிருக்கிறார், இது எப்படியிருக்கு? ஆனால் மஹாபாரத்தின் கதையின் காலம் சூது வாது, ஏமாற்று, வஞ்சகம் நிறைந்த அரசாட்சி கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை இருக்கலாம் என ஆய்வாள்ர்கள் சொல்கிறார்கள். ராமாயாணமும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் அரச குமாரரின் கதை என்கிறார்கள். மனிதகுல வரலாற்றில் ஆராய்ந்தால் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் ‘மனிதனாகவே’ இல்லை. ஆனால் நம்முடைய புராணங்களில் வரும் கடவுளர்களுக்கு மீசையோ, தாடியோ கிடையாது. சித்திரங்கள் ஏன் அப்படி வரையப்பட்டன என்றால் ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட வரிகள் தான் சாட்சி. இந்த இதிகாசங்களை உருவாக்கியவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி கடவுளையும் கற்பனை செய்தார்கள். ஆனால் இராமாயாணக்கதையிலும், மஹாபாரதத்திலும் அரக்கர்கள் என்பவர்கள் குண்டாகவும், சுருட்டை தலைமுடியுடன், முருக்கிய மீசை கொண்ட தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். இப்போதும் சமூகத்தில் மீசை வைக்கதவர்கள் அவர்கள் வணங்கும் கடவுளின் உருவத்தை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள் போலும். சூத்திரர்கள் வணங்குகிற கடவுள்கள் எல்லாம் சாராயம் குடிப்பவையாகவும், பச்சை ரத்தம் குடிப்பவையாகவும் இருக்கும்போது பிராமணர்கள் வழிபடும் கடவுளர்கள் வேதகாலத்தில் குடித்த சோமபானத்தையும் பசு மாமிசத்தையும் மறந்து சாந்த சொரூபிகளாக சர்க்கரை பொங்கல் சாப்பிடுவர்களாக மாற்றிவிட்டனர்.

கதைக்கு வருவோம்....

ஆரியர்கள் தங்களை தேவர்களின் வழிவந்தவர்கள் அதனால் தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள், எதிர்கொண்ட சிந்துவெளிமக்களை அசுரர் என்று குறிப்பிட்டார்கள். இந்தச் சண்டைகளின் நினைவுகள் தாம் ரிக்-வேதத்தில் தேவ-அசுர யுத்தம் என்று விவரிக்கப்படுகிறது. சிந்துவெளி நாகரீகமக்கள் எதிர்கொண்டது போலவே கி.மு.2500களில் பாரசீகத்தின் பாலைவனத்தின் நடுவே கிடைத்த செழிப்பான மண்ணில் ஒரு விவசாய சமூகம் உருவாகியிருந்தது. அந்த விளைச்சலையும், சேமிப்பையும் இரவு நேரங்களில் கொள்ளையடிக்க வந்த நாடோடிக் கூட்டங்களை எதிர்த்து விரட்டிக்கொண்டிருந்தது. அந்த நாடோடிக்கூட்டத்திற்கு பாரசீக விவசாய சமூகம் இட்டபெயர் தேவா (Daevas) என்பதாகும். பாரசீக மொழியில் தன் பொருள் ராட்சஷர் அல்லது திருடர். அங்கு தோன்றிய மதம் செளராஷ்ட்ரம், அதனை பார்ஸீ என்றும் குறிப்பிடுவார்கள். இந்த மதத்தின் வேதநூல் ஜெண்ட் அவெஸ்தா (Zend Avesta).ரிக் வேதத்தில் உள்ள தேவ-அசுர யுத்தம் சிந்தனைகளுக்கு மூல காரணமான்வை அவெஸ்தாவில் உள்ளன.

அவெஸ்தா ஒளிதரும் கடவுளான அஹூரா மஜ்தா-வை மையமாக கொண்டுள்ளது. ஒளி என்பது விவசாயிகளுக்கு பாதுகாப்பாகவும், இருட்டு என்பது அவர்களின் எதிரிகளான திருடர்களுக்கு சாதகமாகவும் இருந்துள்ளது. ஒளிதான் தங்களை காப்பதாக அவெஸ்தா நம்பியது. இருட்டை அறவே வெறுத்த பாரசீக குடிகள் இரவைப் படைத்தவனை அருவருப்புடன் அங்கிரா மைன்யூ (angra mainyu) என்றழைத்தனர். தேவர்களின் தலைவனை அந்திரா என்றழைத்தனர். ஒளியினால் பாதுகாக்கப்படும் அஹூராக்களின் உடமைகளை திருட வரும் எதிரிகளை நிந்தனை செய்ய தேவ என்ற சொல்லைப் பயன்படுத்திய அவர்கள் திருடவரும் அனைவரையும் தேவர்கள் என்றே குறிப்பிட ஆரம்பித்தனர். இந்த திருடர்களின் வாழ்விடம் தமது பூமிக்கு வடக்கெ இருக்கிறது என்று அவெஸ்தா கூறுகிறது. இந்த விவசாயிகளுக்கு வழிகாட்டியாய் ஒருவன் வருகிறான், அவன் திருடுபவர்களைப் பிடித்து மரணதண்டனை கொடுக்கிறான் அவன் பெயர் யிம(yima). மத்திய ஆசியப் பகுதியில் வாழ்ந்த இந்த தேவர்களுக்கு, தென் திசையிலிருந்த இந்த பாரசீகத்து யிம அச்சத்தைக் கொடுத்தான். காலப்போக்கில் தென் திசையே யிம திசையாகிப்போய்விட்டது.

பாரசீகத்து விவசாயிகளால் அடித்துவிரட்டப்பட்ட இந்த தேவர்கள் காடுமலைகளை கடந்து சிந்துவெளியில் பிரவேசித்தார்கள். அவர்களின் சந்ததிகள் தான் சிந்துவெளியில் பிரவேசித்திருப்பார்கள். இங்கே சிந்துவெளியில் புதுவிதமான அஹூரா (விவசாயி)க்களை காண நேர்ந்தது. பாரசீகத்து அஹூரா, சிந்துவெளியில் அஸூரா ஆயிற்று. பாரசீகர்களுக்கு ஸ வை உச்சரிக்க வராது, அதனாலேயெ சிந்து என்பது `ஹிந்த்` ஆயிற்று. தேவர்களின் தலைவனான அந்திரா இந்திரனாகவும் யிம எமனாகவும் மாறிப்போனார்கள். பாரசீகத்தின் அஹூராக்கள் பலம் வாய்ந்த நிலையில் இருந்த்தால் தேவர்களை அடித்துவிரட்டும் சக்தி பெற்றிருந்தார்கள். துச்சமாய் கொன்று போட்டார்கள், பைசாசங்கள் என்று இழித்துரைத்தார்கள். ஆனால் சிந்துவிலோ , வந்து சேர்ந்த தேவர்களின் பலம் கூடியிருந்தது. அதனால் வென்றவர்கள் தேவர்கள்-உயர்ந்தவர்கள் ஆனார்கள். அதேபோல் அசுரர் என்பவர் ஒளியின் பிள்ளைகள், நாகரீகம் மிக்கவர்கள் என்ற பொருளுக்குப் பதிலாக ராட்சஷர் என்ற தலைகீழான அர்த்தம் ஏற்பட்டு அதுவே இன்றும் நிலைத்து நீடித்துவருகிறது.

- அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள வாழ்வை வழி மறிப்பது எது? என்ற நூலிலிருந்து..

4 கருத்துகள்:

kashyapan சொன்னது…

அருமையான் பதிவு ஹரிஹரன்!நூலை எழுதியவர் பெயரையும் கொடுத்திருக்கலாம்.அன்புடன் காஸ்யபன்

hariharan சொன்னது…

இந்த நூலை எழுதியவர் தமிழ்நடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கங்காதரன், அவர் அரசு ஊழியன் மாத இதழில் எழுதிய தொடரை நூலாக அக்கியிருக்கிறார்கள். பல விசயங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. ராகுல்ஜி யை அதிகம் வாசித்திருக்கிறார் என்பது தெரிகிறது.

Edin சொன்னது…

சௌராஷ்டிர மதத்திற்கும் இந்து மதத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இதில் எழுதி இருப்பது போல நடந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.பாரசீக மதமே இந்து மதத்தின் ஆணி வேர் என்பது இரண்டு மத கருத்துக்களையும் அது தோன்றிய விதத்தையும் படிப்பவர்களுக்கு தெரியும்.இன்னொரு கருத்தும் உண்டு.அதாவது யூத குலத்தை சேர்ந்த சிலரே பிராமின்கள் என்று கூட சொல்லலாம்.

தமிழ் சொன்னது…

//
தந்தை பெரியார், இராமாயணம் மற்றும் வைதீக மதத்தின் புராணங்களில் வருகின்ற தேவர்- அசுரர் யுத்தங்களை ஆரிய-திராவிட யுத்தம் என்று சொன்னார்.தீபாவளி பண்டிகைக்காக கொல்லப்படும் நரகாசுரன் ஆகட்டும், முருகனால் சூரசம்ஹாரத்தில் கொல்லப்படுகிற அரக்கன் ஆனாலும் சரி அது ஆரிய-திராவிட போர்களின் கதைதான். ஆனால் வெட்கம் கெட்ட தமிழர்கள் தம் இனத்தவரான அரக்கனை கொல்கிற ஆரிய விழாவை தீபாவளி என கொண்டாடுகிறோம் என வருந்தினார்//

உண்மை வரிகள்,
ராவணனை ராமன் கொன்றதும் இந்த புரட்டு காரர்களின் கற்பனையே!

நல்ல பதிவு