மனிதகுல வரலாற்றின் கி.மு.6000 முதல் இரண்டாம் உலகப்போர் நடக்கின்ற காலம் வரையிலான மனிதகுல வரலாற்றை மார்க்சீயம் அல்லது பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் விளக்குகிற நூல் தான் வால்கா முதல் கங்கை வரை. இந்த நூல் தமிழில் அது பதிப்பாகிய 1954 லிருந்து 2009 வரை 28 பதிப்புகள் போடப்பட்டிருக்கின்றன. அறிஞர் அண்ணா இந்த நூலை தமிழர்கள் எல்லோரும் வாசிக்கவேண்டும் என்றார். அதற்காக இந்த நூல் ஒன்றும் திராவிடத்தை உயர்த்திப்பிடித்தது என்றும் சொல்லமுடியாது. இந்த நூலை எழுதிய ராகுல்ஜி பிறந்தது 19ம் நூற்றாண்டின் இறுதியில் உ.பி.யில் ஒரு வைதீக பிராமணக் குடும்பத்தில், இளமைக்காலத்தில் புத்தமதத்தின் பால் ஈர்க்கப்பட்டு ஒரு புத்தபிட்சுவாகவே மாறினார். பின்னர் மார்க்சிய நூல்களை கற்றார். இவர் எழுதிய நூல்களை வாசிக்கும்போது இவர் படிக்காத விசயமென்று எதுவுமே இல்லை எனலாம். இந்த நூலை சுதந்திரப் போராட்ட காலத்தில் அவர் சிறையிலிருக்கும்போது எழுதினார், அதை மொழிபெயர்த்த கண.முத்தையா அவர்களும் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காக பர்மா சிறையில் இருந்தபோது இந்நூலை தமிழில் மொழிபெயர்த்தார். ராகுல்ஜி சுமார் 35 மொழிகளில் புலமைவாய்ந்தவர். ஹிந்தி, சம்ஸ்கிருதம், பாலி, கிரேக்கம், ருஷ்யமொழி, சிங்களம், ராமானுஜரின் தத்துவத்தை கற்பதற்காக தமிழையும் கற்றறிந்தார். இவர் 150க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். பெளத்தம், ரிக்வேதம், மார்க்சியம், பொருளாதாரம், அயல்தேசத்தின் தத்துவங்கள் மதங்கள் இவர் எழுதிய நூல்கள்.
வால்கா முதல் கங்கை வரை நூல் மனிதகுல வரலாற்றை 20 கதைகளில் விளக்குகிறார். குகைகளில் வாழ்ந்த மனித இனம், அப்போது பேச்சு என்பதே இல்லை அதன் இன்னொரு வடிவமான எழுத்து தோன்றியே 5000 வருடங்கள் தான் இருக்கும்.வேட்டை சமூகத்தில் உணவு தேடுவது மட்டும் தான் முக்கியவேலை, மக்கள் கூட்டங்கள் இனக்குழு என பிரிந்திருந்தது. ஒரு குழு இன்னொரு குழுவுடன் வேட்டைக்கான வனத்தில் மோதல் ஏற்பட்டால் வெற்றி பெற்ற இனக்குழு தோற்ற இனக்குழுவின் பச்சைக்குழந்தைகளைக்கூட கொண்று போட்டது. அவர்கள் பயன்படுதிய ஆயுதங்கள் கல்லால் ஆனது. பின்னாளில் போரில் தோற்ற இனக்குழுவினரைக் கொல்லாமல் அவர்களை அடிமைகளாக வைத்திருந்தன்ர் இதுவே அடிமைச்சமூகமாயிற்று. இப்படி அடிமைச்சமுதாயம், நிலப்பிரபுத்தவம், மன்னாராட்சி, முதலாளித்துவசமூகம் வரை சமூகமாற்றத்தின் தேவையை எளிதாக விளக்குகிறார். மனிதன் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்துதான் அது கற்காலம், உலோக காலம் என அழைக்கப்படுகிறது.
இன்றும் வரலாற்றில் ஆரியர்கள் என்பது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது்.ராகுல்ஜி, ஆரியர்கள் இந்தோ-அரோப்பா இனத்தை சார்ந்தவர்கள், மத்தியதரைக்கடல் நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்கிறார். ஆரியர்கள் சப்தசிந்துவில் குடியேறியது கி.மு.1500 களில். இந்தியா என்ற பெயர் சிந்துவிலிருந்து வந்ததுதான். ஆரியர்களின் அக்கால சகோதர இனமான ஈரானியர்கள் `ச`வை ஹ` என உச்சரித்தார்கள் ஏழுநதிகள் பாய்ந்த பிரதேசத்தில் அவர்கள் குடியேறிதால் சப்தஹிந்து என்றழைத்தார்கள். அக்காலத்தில் மேற்கத்திய நாடுகளில் நாகரீகமாக விளங்கிய கிரீசில் `ஹ` வை `அ` என உச்சரித்தனர்.அதனால் ஹிந்த் என்பது `இந்த்` ஆகிவிட்டது. சப்தசிந்துவைப் பற்றி ரிக்வேதத்திலும் குறிப்புகள் இருக்கின்றன. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபோது சிந்துவெளி நாகரீகத்தை `ஆரிய` நாகரீகமாக மாற்ற முயற்சிகள் நடந்தன. அதாவது சிந்துவில் வாழ்ந்த நாகரீக மக்கள் எருது சின்னத்தை `குதிரையாக மாற்றமுயன்றார்கள். இப்போது ஏதோ வேதகாலம் என்றால் சுத்த சைவமும், கொல்லாமையும் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆரியர்கள் நாடோடிகள் வேட்டைச்சமூகத்தை சார்ந்தவர்கள் அதனால் போர்க்குணம் மிக்கவர்களால் ஹரப்பா-மொகஞ்சதாரோ பகுதியில் வழ்ந்த நாகரீக மக்களை எளிதில் வீழ்த்தமுடிந்திருக்கிறது. ஹரப்பா-மொகஞ்சதாரோவை சிந்துவெளி நாகரீகம் எனலாம். சிந்துச்சமவெளி நாகரீகத்தின் சிறப்புக்காலம் கி.மு.2500. அப்போது அவர்கள் நகரவாழ்க்கையை வாழ்ந்தார்கள். நேரான வீதிகள், கழிவுநீர் செல்வதற்கு கால்வாய்கள், சுட்ட செங்கலால் கட்டப்பட்ட வீடுகள், குளியறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்ட தடங்கள் தொல்லியல் ஆய்வில் கிடைத்துள்ளன.அவர்களை வென்ற ஆரியர்களுக்கு அந்த வீடுகள் ப்யனற்றையாகவே இருந்ததில் வியப்பில்லை. நாடோடிவாழ்க்கையாக ஆழ்ந்த ஆரிய இனக்குழுவினர் அவர்களிடமிருந்த கால்நடைகளை பறித்துக்கொண்டு அவர்கள் தஸ்யுக்கள் அல்லது தாசர்களாக மாற்றினார்கள்,தொடர்ந்து அவர்கள் கங்கைச்சமெவெளியில் குடியேறினார்கள். இமயமலைப் பகுதியில் வாழ்ந்த கிர் பழங்குடிகளை போரில் வென்றார்கள். சிந்துவெளி நாகரீக மக்கள் உயர்ந்த நாகரீகத்தில் வாழ்ந்தார்கள் என்பதை தொல்லியல் ஆயுவுகள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களிலிருந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். சூரியக்கடிகாரம் பயன்படுத்தியிருக்கிறார்கள். வானியலைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். விவசாயம் செய்து வாழ்ந்ததால் அவர்களுக்கு காலத்தை கணிக்க காலண்டர் அவசியமாக இருந்திருக்கிறது.` தேவை` தான் கண்டுபிடிப்புகளின் தாய் என்கிறார்கள். ஒருவேளை ஆரியர்கள் அந்த நாகரீகத்தை அழிக்காமல் இருந்திருந்தால் இந்தியா உலகின் முன்னொடியாக இருந்திருக்கலாம்.
அமெரிக்கா எப்படி குடியேறிவர்களின் நாடோ அதேபோன்று தான் இந்தியாவும். அமெரிக்காவில் குடியேறிய மக்கள் சில நூற்றாண்டுகளில், ஆனால் தற்போது இந்தியா என அழைக்கப்படுகிற பகுதிக்கு குடியேறிய மக்கள் பல நூற்றாண்டுகள் அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்பு எனலாம். இன்று ஆரியர்கள் எனவர்கள் யாருமே கிடையாது, அந்த அள்விற்கு இங்கே ரத்தக்கலப்பு நடைபெற்றுவிட்டது. இந்தியாவிற்கு மற்ற பிரதேசங்களிருந்து ஏன் வந்தார்கள் என்றால் இங்கே வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கிறது. இந்த மண்ணில் `சைவ உணவு` சாப்பிடுபவர்கள் அதிகம் ஏன் என்றால்? அமெரிக்கா மொத்தமும் விளையக்கூடிய தானியங்கள் இங்கு ஒருசில மாவட்டங்களில் அத்தனைவகை தானியங்கள் விளைகின்றன. ரிக்வேதம் வரலாற்றாசிரியர்களுக்கு சிறந்த வரலாற்று நூலாக உள்ளது, அது இயற்றப்பட்ட காலம் ஆரியர்கள் சப்தசிந்துவில் குடியேறுவதற்கு முன்பே அதாவது இன்றுள்ள ஆப்கானிஸ்தான் பகுதியில் அவர்கள் இருக்கும்போதே பாடியிருக்கிறார்கள். ரிக்வேதம் என்பது அந்த வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட கஷ்டங்களை கடவுளிட்ம் முறையிடும் செய்யுள்கள். ரிக்வேதம் அது இயற்றிய காலத்திலிருந்து வாய்மொழியாகவே கடத்தப்பட்டு வந்திருக்கிறது.அவர்களின் கடவுள் எல்லாம் ஆண்கடவுள்கள் இந்திரன்,வருணன்,அக்னி ஆகியோர்.அக்கால ஆரியர்கள் மாமிச உணவை விரும்பி சாப்பிட்டு இருக்கிறார்கள். ரிக்வேதத்திலேயே `பொலி எருது மாமிசத்தை நெய்யோடு கலந்து சாப்பிட்ட பெண்ணுக்கு ஆரோக்யமான புத்திரன் கிடைப்பான என்ற வரிகள் உள்ளன. ஆதிசங்கரரும் தன் விரிவுரையில் `மாமிசமும் வயதுவந்த எருது அல்லது அதைவிட அதிக வயதுள்ள எருதுவின் மாமிசமாக இருக்கவேண்டுமென்கிறார். பசுவின் புலால் விசயத்தில் இன்று எத்தனை அருவருப்பு இருப்பினும் பழங்காலத்தில் இப்படிப்பட்ட அருவருப்பு இருந்ததில்லை. புத்தர் கால்த்திலும் பசு மாமிசம் அதிகமாகவே சாப்பிட்டு வந்தார்கள் என்று பவுத்த நூலான ` மஜ்ஜம் நிகாய்` கூறுகிறது.
சோமபானம் என்ற போதைவஸ்துவை பருகி ஆடல் பாடலுடன் வாழ்ந்தார்கள். ராகுல்ஜி எழுதிய `ரிக்வேத கால ஆரியர்கள்` என்ற நூலில் ஆரிய இனக்குழுவ்வைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன. புரு, யது,துர்வஸூ, த்ருஹ்யு மற்றும் அனு ஆகியவை ஆதி ஆர்ய இனக்குழுக்கள். இதர இனக்குழுக்கள் `பக்தூண்`கள் இவர்கள் ஆப்கனிலும் பாகிஸ்தனிலும் வசிக்கின்றனர். பலான், விஷானி, அலின் மற்றும் சிவ இனக்குழுக்களும் ஆரிய இனக்குழுக்கள் தான்.மத்ர இனக்குழுவைப் பற்றி வால்கா முதல் கங்கை வரை கதைகளில் வருகிறது, அவர்கள் தான் மிடியா என்ற இனக்குழுவினர். `மத்ர` குலப்பெண்கள் கவர்ச்சிமிக்கவர்கள், ஆண்களை வசீகரிப்பவர்கள். அதனால் தான் மஹாபாரத்தில் பாண்டு இன்னொரு மனைவியாக மாத்ரி என்ற மத்ர குலப்பெண்ணை மணக்கிறார். புராதன பண்டைய நகரங்கள், காந்தாரம், மகதம், கோசலம், தட்சசீலம், போன்ற வற்றைப் பற்றி நிறைய தகவல்கள் உள்ளன. இந்த நூல மனிதகுலவரலாற்றைப் பற்றிய அறிவுப்பொக்கிஷம் என்றால் மிகையாகாது.
1 கருத்து:
உங்களின் கருத்துக்களைத் தெளிவாக முன்வைத்த அருமையான விமர்சனம்... உங்களின் இதர பதிவுகளையும் வாசித்து என் கருத்துக்களைப் பதிவு செய்கிறேன்.
கருத்துரையிடுக