ஞாயிறு, 13 நவம்பர், 2011

சொர்க்கம், நரகம் மற்றும் மறுபிறவி....

எல்லா மதத்திலும் கடவுள் தான் உலகையும் மனிதனை, ஜீவராசிகளையும் படைக்கிறார். அப்புறம் ஏற்றத்தாழ்வுகளையும் அவரே சேர்த்து படைத்துவிட்டார் என்பது முடிவாகிவிடுகிறது. மனிதன் முதலில் வாழ்ந்த காலத்தில் உணவு தேடுவதிலும், துஷ்ட மிருகங்களைக் கண்டு ஓடி உயிரை காப்பாற்றி கொள்வதிலேயும் காலம் போய்விட்டது. அக்காலத்தில் ஒருநாள் உழைத்து நான்கு நாட்கள் அல்லது ஒருவர் உழைத்து இருவர் உட்கார்ந்து சாப்பிடுகிற அளவிற்கு உற்பத்திமுறை பெருகியிருக்கவில்லை. அதனால் `சிந்தனையாளர்களும்` தோன்றவில்லை. பிற்காலத்தில் உற்பத்தி பெருகி வளர்ச்சியடைந்த சமயத்தில் பெரும்பான்மை மக்களின் `உபரி உழைப்பில்` ருந்து உடல் வளர்க்கக்கூடிய ஒரு வர்க்கம் உருவாகியது. அந்த வர்க்கம் தான் உயிர்வாழ உடலுழைப்பு செய்ய வெண்டிய அவசியமே இல்லாமலிருந்தது. இவ்வர்க்கம் மற்றவர் உழைப்பை மேற்பார்வையிடுதல், அரசாங்க நிர்வாகம், நீதி, தத்துவம்,விஞ்ஞானம், கலைகள், மதம் போன்ற பொறுப்புக்களை கவனித்துக்கொண்டார்கள்.

உழைப்பவர்களை ஆயுதபலத்தை மட்டும் கொண்டு அடக்குவது சிரமமாக இருந்ததால் `தத்துவம்` வளர்ந்தது. அந்த தத்துவங்கள் நிலப்பிரபுக்கள் அல்லது ஆட்சியாளர்களுக்கே சாதகமாக இருந்தது என்பதில் வியப்பில்லை. இவ்வுலத்தில் நாம் ஒரு சில நாட்கள் தானே வாழப்போகிறோம்! அதற்காக நாம் ஏன் போராடவேண்டும்? அதற்குப் பதிலாக அழிவில்லாத மறு உலகத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும். இப்படி அப்போதிருந்த தத்துவமேதைகள் பாட்டாளிகளின் உழைப்பைத்தின்று கொழுத்து, அவர்களுக்கு எதிரான கருத்துக்களையே `தத்துவம்` `சாஸ்திரம்` என்ற பெயரிலும் உலகத்திற்கு அளித்துள்ளார்கள்.

மனிதன் உலகத்திற்கு வருகிறான்,, நல்லதும் கெட்டதும் செய்கிறான். இறந்தபிறகு தான் செய்த செயல்களின்படி சொர்க்கத்துக்கோ நரகத்துக்கொ போகிறான். யூதம்,கிறிஸ்தவம், இஸ்லாமிய மதங்களிலும் விஷயம் இப்படித்தான் முடித்துவிடுகிறார்கள். ஆனால் இவ்வுலகத்தில் மனிதன் உயர்ந்தவன் - தாழ்ந்தவனாக, ஏழை - பணக்காரனாக ஏன் இருக்கிறான் என்கிற கேள்விக்கு பதில் இல்லை. அப்படியென்றால் கடவுள் பாரபட்சமானவரா என்கிற கேள்வி வருகிறது. இந்த குற்றசாட்டுகளை மறுப்பதற்கும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சரியானவையே என்று சாதிக்கவும் உபநிஷத்துகளை இயற்றிய `ரிஷிகள்`. மறுபிறப்பு என்கிற தத்துவத்தை எடுத்துக்கூறினர். ஒருவன் பணக்காரனாக ஏன் இருக்கிறான்? அவன் முற்பிறவியில் செய்த நல்லகாரியங்களால், ஒருவன் ஏன் ஏழையாக இருக்கிறான் என்றால் அவன் முற்பிறப்பில் கெட்டகாரியங்கள் செய்தான். எவ்வளவு எளிதான பதில். சமுதாயத்தின் தற்போதைய நிலைமையை அப்படியே நீடிக்கச்செய்ய இந்துக்கள் கண்டுபிடித்த `மறுபிறவி` என்கிற வலிமையான ஆயுதத்தை வேறுயாரும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இன்றைக்கும் துன்பப்படுகிறவர்கள் எல்லாம தலைவிதி என்று சொல்வதை பார்க்கிறோம்.

இன்றைக்கு உலகத்திலிருக்கிற இந்துமதம், கிறிஸ்தவம், யூதம், இஸ்லாம்,சமணம், பெளத்தம் நிலப்பிரபுத்துவ அமைப்பில் தோன்றியதாகும். எல்லா மதங்களிலும் சொல்லப்பட்ட `சொர்க்கம்` என்பது செல்வச்செழிப்புள்ள ஒரு நிலப்பிரபுக் குடும்பத்தின் கற்பனையேயாகும். இந்துக்களின் வைகுண்டம் என்பது அந்தப்புரம் போன்று அங்கே தெய்வீக எழிலரசிகளின் கூட்டம் இருக்கிறது. எப்பொழுதுமே அழுக்காகாத அவர்களுடைய அழகான ஆடைகள், பொன்னும், மணியும்,வைரமும் ஜொலிக்கும் ஆப்ரணங்கள், மலர்களாலும், நறுமணத்தாலும் கமகமக்கும் அவர்களது பூவுடல்கள், ஆடல், பாடலும், மதுக்கோப்பைகளும் எல்லாம் ஒரு சந்திரகுப்த விக்கிரமாதித்தன் அந்தப்புரத்தின் இனிய வர்ணனை.

இஸ்லாமிய ஜன்னத்தின் (சொர்க்கத்தின்) திராட்சைத்தோட்டங்கள், குளிர்நிழல், பாயும் ஓடைகள், முத்துவிழிகள் கொண்ட எழில் கன்னிகள்- இவையெல்லாம் அக்காலத்திய பாரசீக மாமன்னர் குஸ்ரோபர்வேஜ் அல்லது ரோமானிய சக்ரவர்த்தி மோரிஷ் ஆகியோரின் அரண்மனைகளிலிருந்து வந்தன.கிருஸ்துவர்களின் சொர்க்கமும், யூதர்களின் சொர்க்கமும் இவர்களைப் போன்றே நிலப்பிரபுக்களின் ஆடம்பர வாழ்வைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

இன்னமும் வைகுண்டம், சிவலோகம், சொர்க்கம் உயிர்ப்புடன் தான் இருக்கிறது. அடுத்த பிறவியில் கிடைக்கும் நல்ல வாழ்க்கைக்காக இந்தப் பிறவியில் போராடாமல் வறுமையிலும் மூடநம்பிக்கையிலும் சமூகம் உலன்று கொண்டிருக்கிறது என்பது அந்த தத்துவத்தின் தாக்கம் அறிவியல் முன்னேற்றம் நிகழ்ந்துள்ள காலத்திலும் நீடித்து நிலவுகிறது.

---ராகுல்ஜி எழுதிய மனிதசமுதாயம் புத்தகத்திலிருந்து..

1 கருத்து:

Sivamjothi சொன்னது…

"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" என அகஸ்தியர் கூறுவதும் இதுவே!
http://sagakalvi.blogspot.com/2011/12/blog-post_30.html