தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் முக்கிய எதிர்கட்சியான திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை, அழைப்பு விடுக்கப்பட்டதா எனவும் தெரியவில்லை. சென்ற திமுக ஆட்சி காலத்தில் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றக்கூட்டத்தில் ஒரு முறை கூட பங்கேற்கவில்லை. திமுகவும் அதிமுகவும் ஏன் இபடி எதிரிக்கட்சியாக இருக்கின்றன என்று தெரியவில்லை. இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை அளவில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. பெரியார் வழி அண்ணா வழி என்று சொல்லிக்கொண்டவர்கள் அரசியல் நாகரீகம் கூட தெரியாமல் இத்தனை ஆண்டுகள் ஆட்சி நடத்தி வருகின்றனர். மாநில வளர்ச்சியை மனதில் கொண்டு மத்தியில் பாராளுமன்றத்தில் இருகட்சிகளும் ஒருமித்தகுரல் எழுப்ப அதன் தலைமைகள் தடையாக உள்ளன.
கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முண்ணனி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் உம்மன்சாண்டி தலைமையில் அமைச்சரவை பதவியேற்புவிழா நடைபெற்றது, அதற்கு எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் உட்பட மூத்த முன்னாள் அமைச்சர்கள் விழாவில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அரசியல் அரங்கில் இடதுசாரிகளும் காங்கிரஸும் கொள்கையளவில் எதிரெதிர் நிலைப்பாடு கொண்டிருந்தாலும் அதை மனித உறவுகளில் நட்புரீதியாக இருக்கின்றனர்.
அதேபோன்று மேற்குவங்கத்தில் 34வருட இடதுமுண்ணனியை வீழ்த்தி முதலமைச்சராக பதவியேற்ற மம்தா பானர்ஜி தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு விழாவிலும் முன்னாள் முதல்வரான புத்ததேவ் பட்டாச்சார்யா, இடது முண்ணனியின் ஒருங்கிணைப்பாளர் பீமன்போஸ் மற்றும் இடதுசாரிகட்சிகளைச் சார்ந்த முன்னாள் அமைச்சர்களும் விழாவில் பங்கேற்றனர். மேற்குவங்கத்தில் மாவோயிஸ்ட் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கட்சியினரையும் இடதுசாரி ஆதரவாளர்களையும் திரிணாமூல் கட்சியினர் கொன்றுவருகின்றனர். அரசியல் கட்சி என்பது வேறு மாநில நிர்வாகம் என்பது வேறு. நிர்வாகம் அனைத்துபிரிவு மக்களையும் உள்ளடக்கியது. இப்படிப்பட்ட அரசியல் முதிர்ச்சியும் நாகரீகமும் நாடு முழுவதும் வேண்டும்.
தமிழகத்தில் இப்படிப்பட்ட அரசியல் நாகரீகம் எப்போது மலருமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக