நம் நாட்டில் நடக்கிற மனித உரிமை மீறல் பற்றிய செய்திகள் வருவதேயில்லை, அடுத்த நாடுகளில் நடக்கிற மனித உரிமைகளைப் பற்றி இங்கே நிறைய விவாதிக்கப்படுகிறது அது ஒரு வகை அரசியல். மனித உரிமை மீறல்களை யார் செய்கிறார்கள்? தீவிரவாதிகளா? சமூகவிரோதிகளா? ரெளடிகளா? இல்லை. போலீஸூம் ராணுவமும் தான். இங்கே அரசு செய்யும் அடக்குமுறைகள் நியாயப்படுத்தப் படுகின்றன. பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்கள் ஊடகங்களுக்கு வருவதில்லை, அப்படி வந்தாலும் எடிட்டரின் அறையிலேயெ அந்த செய்திகள் கொல்லப்படுகின்றன. அவர்கள் ஆளுகிறவர்களை காப்பாற்றுகிறார்கள். இந்தியாவின் பிரச்சனையாக இருக்கச்கூடிய காஷ்மீரிலும், மணிப்பூரிலும் இந்திய ராணுவம் நடத்திய மனித உரிமைமீறல்களும் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை இங்கெ தேசவிரோதிகளாக சித்தரிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் ராணுவத்தின் முகமூடியைக் கிழிப்பதால்தான். சமூகத்தில் அடித்தட்டு மக்கள்தான் தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். பொருளாதாரரீதியில் பினதங்கியவர்களும் சாதியில் கடைநிலையில் இருப்பவர்களான ‘தலித் மக்கள்’ ஆதிக்கசாதியினராலும் காவல்துறையினராலும் தாக்கப்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 3 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்; ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகின்றனர்; ஒவ்வொரு நாளும் தலித்துகளுக்கெதிராக 27 வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன, இது அரசே கொடுத்த தகவல்கள். இது போன்று பொதுமக்களிடமிருந்து அந்நியமாக வசித்துவருகிற பழங்குடிமக்களும் காவல்துறையால் தாக்குதலுக்குள்ளான செய்தியை வாச்சாத்தி சம்பவத்தால் அறிந்தோம். அந்த பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையிலெடுத்துப் போராடியதால் வெளிச்சத்திற்கு வந்தது.
‘சோளகர் தொட்டி’ நாவல் மூலமாகத்தான் இப்படி ஒரு இனம் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருப்பதாக அறிந்தேன். இன்றைக்கு பூர்வகுடிகள் என்றால் அவர்கள் பழங்குடியினர் மட்டுமே, மற்ற எல்லா இனமக்களும் ஏதோ ஒரு இடத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தான். அப்படிப்பட்ட மண்ணின் மைந்தர்கள் நாகரீக வாசிகளால் வஞ்சிக்கப்படுகின்றனர். இந்நாவலின் தொடக்கத்தில் அம்மக்களின் வாழ்க்கைமுறையை சொல்கிறது. பிற்பகுதியில் சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையால், பாதுகாப்புப் படையினரால் அந்த இனமக்கள் விசாரணை என்ற பெயரில் சித்தரவதைக்குள்ளாகிறார்கள். நாகரீக மனிதர்களைப் போல் அவர்கள் தனியாக சொத்துசேர்ப்பதில்லை. காடுகளில் வசிப்பவர்களால் காடுகள் அழியவேயில்லை, வனத்தை காப்பதற்கு வேலியாக இருப்பவர்கள் தான் ‘மேய்ந்தார்கள்’. சந்தனமரக் கடத்தலுக்கும் அந்த மக்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை, அவர்கள் வனத்தின் எல்லையில் குடியிருந்தாலேயே, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் விசாரணை என்ற பெயரில் ஆண்களை தனிமுகாம்களில் அடைத்து சித்தரவதை செய்தனர், பெண்களை கைதுசெய்து முகாம்களில் அடைத்து காவலர்கள் பாலியல் வண்புணர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். அந்தமக்களுக்கு தெரியாத தகவல்களை காவல்துறையினர் பெறுவதற்கு அவரகளை பல்வேறு சித்திரவதைக் குள்ளாக்கினார்கள், விரல் நகங்களை பிடிங்குதல், மின்சாரத்தால் ஷாக் கொடுப்பது, கைது செய்யப்பட்டவர்கள் சிறுவர்கள் என்றும் பாராமல் அவர்களை கண்மூடித்தனமாக தாக்குவது, பெண்களை தினமும் பாலியல் வல்லுறவு செய்வது, அவர்களின் ஆடைகளை கழைந்து எல்லாரையும் நிர்வாணத்தைக் காணுமாறு கட்டாயப்படுத்தி அடிப்பது. இது போன்ற எண்ணற்ற கொடுமைகள் நாவலை வாசிக்கும் போது மனம் கனக்கிறது, இப்படிப்பட்ட சமூகத்தில் தான் வாழுகிறோமா? இதற்கெல்லாம் ஆளுபவர்கள் தானே பொறுப்பு. வீரப்பனை பிடிக்கமுடியாத நேரத்தில் முகாம்களில் சித்தரவதைக்குள்ளான சோளகர்களுக்கு வீரப்பன் கூட்டம் அணிகின்ற ‘யூனிபார்ம்’ களை காவல்துறையே அணிவித்து சுட்டுக்கொன்றுவிட்டு மோதலில் கொல்லப்பட்டனர் என்று மீடியாக்களுக்கு சொல்லியிருக்கிறார்கள்.
நாவலை எழுதிய திரு.ச.பாலமுருகன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனித உரிமை அமைப்புகளில் இணைந்து போராடியவர். சோளகர் இனத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும் அரசு இயந்திரத்தால் எப்படி இந்த சமூகம் கொடூர அடக்குமுறைக்கு உள்ளானது பற்றியும் தெரிந்துகொள்ள இந்நாவலை வாசிக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக