திங்கள், 21 ஜூன், 2010

போபால் பற்றிய செய்திகள்....

போபால் விஷவாயு வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் அதையொட்டி அதிக தகவல்கள் வந்து கொண்டேயிருக்கிறது. யூனியன் கார்பைடு சேர்மன் ஆண்டர்சன் பத்திரமாக அமெரிக்காவிற்கு அனுப்பிவைத்தது யார் என்ற சர்ச்சை இன்னும் நிலவிவருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாகாந்தி இதுகுறித்து வாயே திறக்கவில்லை. ஏதோ இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் சம்பவம் நடந்தமாதிரி பிரதமர் 10 நாட்களுக்குள் அமைச்சரவை சகாக்களிடம் அறிக்கை கேட்கிறார். வீரப்பமொய்லி ஆண்டர்சன் வழக்கு இன்னும் முடியவில்லை, நமது சட்டம் சரியில்லை என்றும் விளக்கம் கொடுக்கிறார்.காங்கிரஸ் கட்சியையும் ராஜீவ்காந்தியின் இமேஜையும் காப்பாற்ற அர்ஜூன்சிங் பலிகடாவாகப் போகிறார்.



தினமும் “ஹிந்து”வில் புதிய தகவல்கள் வருகின்றன, அதில் யூனியன் கார்பைடு ஆலைக்கான அனுமதி எமர்ஜென்சி காலத்தில் வழங்கப்பட்டதாக தகவல். 1970 ல் ஆலை அமைப்பதற்கான அனுமதியைக் கோரியிருந்தர்கள். ஆனால் 1975ம் ஆண்டு அக்டோபர் 31ம்தேதி வழங்கப்பட்டது. அமெரிக்காவில் காலாவதியான டெக்னாலஜிக்கு எமர்ஜென்சியில் அனுமதியளித்தால் யாரும் கேள்வி கேட்கமுடியாது.அதற்காக எவ்வளவு லஞ்சம் பெற்றார்களோ.

இந்த விவகாரத்தில் பாஜக ராஜீவ்காந்தி, சோனியாவை விமர்சிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டது. காங்கிரஸ் பாஜகவின் விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது புதிய தகவல் சொன்னது, அதாவது யூனியன் கார்பைடின் “டெள கெமிக்கல்ஸ்” யிடமிருந்து 2006-07ல் தேர்தல் நிதியாக ரூ.1 லட்சம் பாஜக வாங்கியுள்ளது என்ற விவரம் தான். அதற்குப் பின்னர் பாஜகவிடமிருந்து மறுப்பே கானோம்.ஆனால் காங்கிரஸ் தவிர 1984க்கு பின்னால் ஆட்சியமைத்த பாஜக இந்த வழக்கிற்காக என்ன செய்தது. மத்தியில் ஆட்சியில்பங்குகொண்ட கட்சிகள் அனைத்தும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது. இப்போதாவது போபாலை “சயனைடு” பாதிப்பிலிருந்து சுத்தப்படுத்தவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த நஷ்டைஈட்டை “டெள கெமிக்கல்ஸ்” யிடமிருந்து மத்தியரசு பெற்றுத்தரவேண்டும்.

கருத்துகள் இல்லை: