சனி, 6 ஏப்ரல், 2013

மெளனித்தவர்களுக்காக பேசுகிறேன்..


தமிழகத்தில் கடந்த ஒருமாதகாலமாக நடத்திய மாணவர்களின் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது, தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சி ஊடகங்கள் குறிப்பாக புதிய தலைமுறை தமிழக மக்களை ‘உணர்ச்சிவசப்படுத்தி’ வென்றெடுத்துள்ளது. அதே மாணவர்கள் தனியார் கல்லூரிகளின் கல்விக்கட்டணக் கொள்ளையை எதிர்த்தால் இவ்வளவு வெளிச்சம் போடுவார்களா?  தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் அமைப்பை அனுமதிக்கிறார்களா? மக்களின் பெரும்பான்மை உணர்வை அறிந்துகொண்டு அதைமேலும் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் . தனி ஈழமே தீர்வு என்று நீங்கள் ஏற்காவிட்டால் நீங்கள் ராஜபக்‌ஷெவின் கூட்டாளியாகிவிடுவீர்கள். ஜார்ஜ்புஷ் தீவிரவாதத்திற்கெதிரான போரில் எங்கள் பக்கம் இல்லையென்றால் தீவிரவாதிகள் பக்கம் இருக்கிறீர்கள் என்றார் அதேமாதிரியான குரல்கள் ஒலித்தன. போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற முதலமைச்சர் இப்போது  2014 தேர்தல் பேய் மக்கள் நலன் சார்ந்து துரத்துகிறது, தனி ஈழமே தீர்வு, பொதுவாக்கெடுப்பு நடத்து, பொருளாதாரத்தடை, கிரிக்கெட் விளையாடத்தடை என்றெல்லாம் தீர்மானம் போடுகிறார். இதை சட்டமன்றத்தில் யாராவது எதிர்க்கமுடியுமா? தமிழினத் துரோகிகள் ஆகிவிடுவார்களே! இரண்டு திராவிடக் கட்சிகளும் ஈழத்தை யார் அதிகமாக ஆதரிக்கிறார்கள் என்று போட்டிபோடுகிறார்கள், ஆனால் டெல்லியில் மக்கள் நலனிற்காக சேர்ந்திசை பாடமுடியவில்லை போலும்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களின் மீது ஐநா நடவிடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஈழத்தமிழர்களை ஆதரிப்பது என்பதும் தனி ஈழத்தை ஆதரிப்பதும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதும் ஒன்றாக்கிவிடுகிறார்கள். மனிதநேயத்திற்காக பேசுகிற, எழுதிகிற புத்திரன்கள் தமிழ்நாட்டில் சிங்களர்களை தாக்குவதை ஆதரித்து பேசுகிறார்கள் அதனால் அவரை தினமும் பேசுவதற்கு எல்லா தமிழின தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு அழைக்கின்றன. அப்பாவி முஸ்லீமை தீவிரவாதி முத்திரை குத்தினால் எதிர்க்கின்ற நாம் எல்லா சிங்களவனும் இனவாதியல்ல என்பதை உணரமறுக்கிறோம்.  இங்கே ஒரு சிங்களத்தவனை அடித்தால் அங்கே இன்னும் இனவெறி அதிகமாகும் அதன் பாதிப்பை பெரும்பான்மையாகிய நாம் உணரப்போவதில்லை அதன் வலியை அங்கெ சிறுபான்மை தமிழன் சுமப்பான். குறுகிய இனவெறியை எளிதாக வளர்க்கலாம், காவிரியில் கர்நாடகம் நீர் தரவில்லையா தமிழ்நாட்டில் கன்னடியனை அடி, முல்லைப்பெரியாற்றில் அணைகட்டுகிற மலையாளியை தமிழ்நாட்டில் அடி! உணர்ச்சிக்கு அடிமையான தமிழனே தமிழ்நாட்டை விட்டு எந்தத் தமிழனும் வெளியேயில்லையா? அங்கே அவன் சிறுபான்மையாக இருக்கிறான் என்பதை உணர்ந்துகொள்.

சமூகவலைத்தளங்களில் நாளையே தமிழீழம் மலரப்போவதாக ஏங்குகிறார்கள், இன்னும் தங்கள் தலைவன் பிரபாகரன் சாகவில்லை என்று நம்புகிறார்கள். ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சேகுவேராவின் படத்தை போட்டுக்கொண்டு ஏகாதிபத்தியத்திடமே கெஞ்சுகிறார்கள். யதார்த்தத்தை உணராமல் போராடுகிறவர்கள் வெல்லமுடியுமா? மத்திய அரசு தமிழனுக்கு எதிராக இருக்கிறது, ஒரு மலையாளி சுடப்பட்டதற்கு இத்தாலியை இணங்கவைத்த இந்தியா நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதை அதே இந்திய அரசு தடுத்துநிறுத்த முடிய்வில்லை என்ற ஆதங்கம் சரி, தனித்தமிழ்நாடு தீர்வாகிவிடுமா? இங்கே எதிரிக்கட்சிகளாக உள்ளவர்களால் தில்லியில் எப்படி பேசமுடியும். கடந்த இரண்டு பத்தாண்டில் மத்திய அரசில் தமிழக மந்திரிகள் இல்லாமல் இருந்ததா? சுயநல அரசியல்வாதிகளை அடையாளம் கண்டுகொள்ளாமல் கோவிந்தா போட்டால் இன்னும் தமிழகத்தின் இயற்கை வளங்கள் சூறையாடப்படும்.

இனத்திற்காக அல்ல மனிதநேயத்திற்க்காக போராடுகிறேன் என்பவர்கள் ஏன் காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்தும் அட்டூழியங்களை பேசமறுக்கிறார்கள், ராணுவம் சென்றால் அப்படித்தான் இருக்கும் தீவிரவாதிகளுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்தால் ராணுவம் அத்துமீறல்கள் இருக்கத்தான் செய்யும் என்பவர்களால் அதை ஈழமண்ணில் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே? தமிழ்நாட்டில் சாதிப்பிடியிலிருந்து மீளாதவர்கள் இனத்திற்க்காக போராடுவது முரணாகயில்லையா? முதலில் இந்தியாவில் (தமிழகத்தில்) அகதிகளாக வந்தவர்களுக்கு சிறப்பு முகாம்களை மீடிவிட்டு குடியுரிமை வழங்க தீர்மானம் போடட்டடும், யார் குடியும் மூழ்கிப்போய்விடாது!

பேஷ்புக்கில் பார்த்த கவிதை..

ஓ இயேசுவே
நீ மீண்டும் பிறந்து வருவதானால்
ஈழத்தமிழனாக மட்டும் பிறந்துவிடாதே!
அப்படி பிறந்தாலும்
அகதியாக தமிழ்நாட்டிற்கு வந்துவிடாதே
ஏனெனில்
இம்முறை சிலுவையைவிடக் கொடிய
சிறப்பு முகாமில் அடைக்கப்படுவாய்.

சனி, 23 மார்ச், 2013

கிறிஸ்தவத்தில் பிரிவினைச்சுவர்கள்

"கடந்தகாலத்தை மதிப்பிடுவதோ, எதிர்கால நல்னுக்காக நிகழ்காலத்திற்கு அறிவுறுத்தலோ வரலாற்றின் பணியன்று, என்ன நிகழ்ந்ததோ அதனை அப்படியே கூறுவதுதான் வரலாறு " -  German historian Leopold von Ranke.

வரலாற்றில் பல பிரிவினைசுவர்களை பார்த்திருக்கிறோம், பெர்லின் சுவர்  சித்தாந்த ரீதியில் ஜெர்மானியர்களை பிரித்தது, இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையில் இனரீதியான மெகாசுவர்  ‘பாதுகாப்பு அரண்’ என்ற பெயரில் எழுப்பப்பட்டுவருகிறது. தமிழகத்தில்  உத்தபுரத்தில் மேல்சாதிக்காரர்கள் கீழ்சாதிக்காரர்கள் குடியிருப்புகளுக்கிடையில் தடுப்புச்சுவர் எழுப்பினார்கள். எல்லா சுவர்களும் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அவர்களால் கட்டப்பட்டது என்பது உண்மை. மக்களைப் பிரிக்கின்ற சுவர்கள் உடைந்துவருகின்றன. அப்படி சாதிஆதிக்கத்திலிருந்து விடுபட்டு கிறிஸ்தவத்திற்கு மாறியபின்பும் அங்கேயும் குறுக்குச்சுவர்கள் மறித்தன. பொருட்களால் கட்டப்பட்ட சுவர்களைவிட மனதளவில் கட்டியுள்ள சுவர்கள் மிகப்பெரியதாக உள்ளதால் ஒன்றைவிட்டு ஒன்றைமட்டும் இடிக்கமுடியாது.  “கிறிஸ்தவமும் சாதியும்” என்ற நூல் தமிழகத்தின் தென்மூலையிலுள்ள வடக்கன்குளம் தேவாலயத்தில் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாதிப்பிரிவினை சுவர் 20ம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டது வரையிலான வரலாற்றைப் பற்றியது.

16ம்நூற்றாண்டில் அராபிய மூர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, கொச்சியிலிருந்த போர்த்துக்கீசியர்களின் உதவியை பரதவர்கள் நாடினார்கள். போர்த்துக்கீசியர்கள் பரவதவர்களை மூர்களிடமிருந்து காப்பாற்றியதுடன அவர்களை கத்தோலிக்கர்களாக மாற்றினர். தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் காலூன்றிய கத்தோலிக்கம் தன் செயல்பாடுகளை உள்நாட்டுப்பகுதிக்கும் விரிவுப்டுத்தியது, மதுரைய ஆண்ட நாயக்கமன்னர்களின் ஆதரவுடன் ’மதுரைமறைத்தளம்’ 1606ல் உருவானது. மதம் பரப்புவதற்காக போர்ச்சுக்கல், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து துறவிகள் இந்த மறைத்தளங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். ஐரோப்பிய துறவிகள் தமிழகத்தில் நிலவிவந்த சாதியவேறுபாடுகளை-தீண்டாமையைக் கண்டு வியப்புற்றனர். இந்த சாதியவேறுபாடு இருவிதத்தில் அவர்களின் மதமாற்றம் வேலைக்கு உதவியது. 1) தனிமனிதனை மதமாற்றம் செய்வதைவிட, ஒரு குறிப்பிட்ட சாதியில் செல்வாக்குள்ள குழுவை மதமாற்றம் செய்தால் அவர்களைச்சார்ந்துள்ள்  ஒட்டுமொத்த சாதியையும் மதமாற்றம் செய்யமுடிந்தது. 2) ஒரு குழுவாக மதம் மாறும் சாதியினர் அதற்குப் பின்னர் வேறுமதத்திற்கு மாறுவதில்லை.

அதே சமயத்தில் தாழ்த்தப்பட்டமக்கள் கட்டிடங்கள் எதுவுமின்றி பீடங்களாகவும், சிலைகளாகவும் மரத்தடியில், களத்துமேட்டில் இருந்த கிராமதெய்வ வழிபாட்டுடன் நிறைவுபெறவேண்டியிருந்தது. கட்டிடவடிவில் அமைந்த இந்துக்கொவில்களுக்குள் நுழைவதை நினைத்துப்பார்க்கவும் முடியாது. கத்தோலிக்க ஆலயத்தில் நிலவிய இந்த சமத்துவம், தாழ்த்தப்பட்ட மக்களை ஈர்க்கும் சக்தியாக விளங்கியது.  அதே சமயத்தில் இந்துசமூகத்திலிருந்த உயர்சாதியினரும் கத்தோலிக்கத்த்ற்கு மதம் மாறினார்கள். அப்படி மாறியவர்கள் தாங்கள் முன்பு கடைபிடித்துவந்த சாதிவேறுபாட்டை தீண்டாமையை கிறிஸ்தவமதத்திலும் செயல்படுத்தினார்கள். ஐரோப்பாவிலிருந்து வந்த பல சமயகுருக்களும் இத்தகைய வேறுபாட்டினை நீண்டகாலம் அரவணைத்தார்கள். இத்தாலியிலிர்ந்து வந்த ராபர்ட் டி-நொபிலி என்ற  பாதிரி குறிப்பாக பிராமணர்களை மதமாற்றம் செய்வதில் கவனம் செலுத்தினார். அவர் சொன்னார் “கிறிஸ்தவர்களாக மதம் மாறுபவர்கள் சாதியையோ, சாதிய அடையாளங்களையோ, சாதிய பழக்கங்களையோ, சமூக உயர்நிலையையோ விட்டுவிடத்தேவையில்லை” மேலும் ராஜரிஷி என்று தம்மை அழைத்துக்கொண்டு பாதிரிகளுக்கான அங்கிகளுக்குப் பதிலாக காவியுடைதரித்து முப்புரி நூலும் அணிந்தார்.  பிராமணர் சமைத்த உணவைமட்டும் சாப்பிட்டார். வடமொழியிலுள்ள் நான்கு வேதங்களை அறிந்துள்ள உங்களுக்கு ஐந்தாவது வேதமான ‘ஏசுரவேதம்’ என்று கூறி பைபிளின் சிலபகுதிகளை வடமொழியில் மொழிபெயர்ப்பு செய்து பிரச்சாரம் செய்தார். இவர் உருவாக்கிய தேவாலயத்தில் மேல்சாதி- கீழ்சாதியை பிரிக்க கைப்பிடிச்சுவர்கள், சற்றுப்பள்ளமான பகுதி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கினார்.

18ம் நூற்றாண்டில் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்த புதுச்சேரியில் கத்தோலிக்க மதம் மாறியிருந்த பறையர் சாதியினர் தேவாலயத்தில் தனித்து ஒதுக்கப்பட்டிருநதனர். இதனை எதிர்த்து கலகம்செய்த செய்திகள் “அனந்தரங்கப்பிள்ளையின்’ டைரியில் குறிப்பிட்டுள்ளார். அந்த தேவாலயத்தில் உட்புறம் ஒரு சுவர் பிரித்தது, ஒருபுறம் உயர்சாதிகிறிஸ்தவர்கள், ஐரோப்பியர்கள், ஈரோசிய்ரகள் ஆகியோரும் மறுபுறம் பறையர்களும் வழிபாட்டின்போது அமர்ந்தனர் என்று குறிப்பிட்டிருக்கிறார். காரைக்கலிலிருந்து வந்த ஒரு பாதிரி இந்த பிரிவினைசுவரைப் பார்த்து எரிச்சலைந்து பறையர்களிடம் சுவருக்கெதிராக தூண்டிவிட்டார்.  “நாங்கள் உண்மையிலேயே உங்கள் சிஷ்யர்கள் என்றால் எங்கள் அனைவரையும் ஒன்றுபோல் நடத்தவேண்டும். தேவனானவர் அவரை வழிபடுகிறவர்களிடம் வேறுபாடு காட்டுவதில்லை, ஆனாலும் சாதி கிறிஸ்தவர்கள் வேலியின் மூலம் எங்களை வேறுபடுத்துகின்றனர், நீங்களும் அதற்கு உடன்பட்டுள்ளீர்கள்” என்று மூத்தகுருவிடம் முறையிட்டார்கள். இதை கேட்டகுரு புகாரின் நியாயத்தை உணர்ந்து சுவரை இடிக்க 16-10-1745 அன்று உத்த்ரவிட்டார். மறுநாள் பூசையின்போது பறையர்களை மற்றவர்களிடமிருந்து பிரிக்க சுவருக்குப் பதிலாக மேசைகள் நாற்காலிகள் வேலியாகப் போடப்பட்டன.

வடக்கன்குளம் தேவாலயம

வடக்கன்குளம் கிராமத்தில் முதல்குடியேற்றம் 1680ல் நடந்தாகத்தெரிகிறது, அப்படி குடியேறிய்வர்கள் நாடார்சாதியைச் சேர்ந்தவர்கள், கத்தோலிக்கத்தை தழுவியிருந்தார்கள். அவ்வழியே சென்ற கத்தோலிக்கத்துறவி ஜாண்டி-பிரிட்டோ அந்த மக்களைச் சந்தித்தபின் 1685ல் வழிபாட்டுக்கூடம் ஒன்றை கட்டிக்கொடுத்தார். சுமார் 60 ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்கு பாளையங்கோட்டைக்கு அருகேயிருந்து வெள்ளாள சாதியினர் குடிபுகுந்தனர். வடக்கன்குளத்தில் வாழும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக புதிய ஆலயம் ஒன்றை கட்டநேர்ந்தது. அந்த ஆலயம் சிலுவை வடிவில் அமைந்தது, கோவிலை இரண்டாகப்பிரிக்க வேலி போடப்பட்டிருந்தது முதற்பகுதியில் வெள்ளாளர், முதலிமார்,ராசாக்கள், கம்மாளர் ஆகியோரும் பின்பகுதியில் கீழ்சாதிக்காரர்கள் இருந்தார்கள். கோவில் பீடத்தில் வேலை செய்வது, பூசையில் உதவிசெய்வது, பாட்டுபாடுவது, தீபம் ஏற்றுவது எல்லாம் பிள்ளைமார், முதலிமாருக்கு மாத்திரமே உரியது. கீழ்ச்சாதிக்காரர்கள் மேல்சாதிக்காரரைத்தாண்டி வரக்கூடாது என்பதினால் சுவாமியார் அவர்களிருக்கும் இடத்திற்கே சென்று நன்மை கொடுப்பார். காலப்போக்கில் கிரிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், 1752ல் கட்டப்பட்ட ஆலயத்திற்கு மாற்றாக இன்னொரு புதிய ஆலயம் கட்ட அவசியமேற்பட்டது.

காற்சட்டை ஆலயம்



1850களில் வடக்கன்குளம் வெள்ளாளர்கள், நாடார்கள் பாளையங்கோட்டை வந்திருந்த மதுரை ஆயர் கானோஸ் என்பவரை சந்தித்து புதிய ஆலயம் கட்டவேண்டும் என்கிற வேண்டுகோளை வைத்தார்கள். இரு சாதியினரைப் பிரிக்க கம்பியளி அமைத்து இரு சாதியினரும் பிரிக்கப்பட்டிருய்க்க வேண்டமென்றும் விரும்பினர். 1855ல் தொடங்கிய புதிய ஆலயப்பணி 1872ம் ஆண்டு முற்றுப்பெற்றது. இப்பணியில் நாடார்களும் வெள்ளாளர்களும் தங்கள் உழைப்பையும் பணத்தையும் அளித்தார்கள். இந்த கட்டிடம் அமைப்பில் விசித்திரமானது மேலிருந்து பார்த்தால் கால்சட்டைமாதிரி வடிவம் இருக்கும். உட்புறம் "V" போன்றிருக்கும். இரண்டு கோவில்கள் என்று கூறத்தக்கமுறையில் அமைந்த ஆலயம் அது. ஒவ்வொரு சாதிப்பிரிவுக்கும் (வெள்ளாளர் - நாடார்)  ஒரு கால் என்ற முறையில் இது அமைந்திருந்தது.இரு தரப்பினரையும் பிரிக்க இரு சுவர்கள், அந்த சுவர்களுக்கு நடுவே ஒரு பாதை. இந்த பாதையில்வழியாகத்தான் பங்குக்குரு பலிபீடத்தற்குச்செல்வார். இப்புதிய கோவிலை கட்டும்போதே இருதரப்பாரும் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள், அது பழைய கோவிலில் என்ன சலுகையோ அதே சிறப்புச்சலுகையை அனுபவிக்கும் உரிமையை வெள்ளாளர்கள் பெற்றார்கள். 1872ல் ஆயர் கனோச் ஒரு சுற்று மடல் வெளியிட்டார், அதில் வெள்ளாளர்களுக்கும் நாடார்களுக்கும் ஆலயத்திலுள்ள உரிமைகளை வரையறுத்துச் சொல்லப்பட்டிருந்தன. எண்ணிக்கையில் அதிகமாக இருந்த நாடார்களுக்கு வடபகுதிக்கூடம் போதவில்லை. தென்பகுதிக்குரிய சாதியினர் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் இடம் காலியாக இருந்தது ஆனாலும், நாடார்கள் அப்பகுதியினுள் செல்ல அனுமதியில்லையாதலால் வெளியே நின்று பூசை கேட்டனர்.

1909ம் ஆண்டில் திருஇருதயசபை சகோதரர் இருவர் ஆலயத்திற்கு தணிக்கை செய்ய வந்தார்கள், அவர்களில் ஒருவர் நாடார்சாதியைச் சார்ந்ததால் தென்பகுதியில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது, எனவே இருவரும் ஆலயத்திற்குள் செல்லாமல் திரும்பிச்சென்றனர். இதே ஆண்டில் நாடார் ஒருவர் பலிபீடப்ப்குதியில் எண்ணெய் ஊற்றுவதற்க்காகத் தென்பகுதிவழியாக நுழைந்ததற்கு அபராதம் விதிக்கப்பட்டார். 1910ம் ஆண்டில் புனித வெள்ளியன்று ஆலயத்தில் பாடியதற்காக ஒரு நாடார் கண்டிக்கப்பட்டார். வெள்ளாள ஆண்கள் அனைவரும் இதர்குப் பழிவாங்குவதற்காக ஆலய வளாகத்தில் கூச்சலிட்டனர். அதே ஆண்டு துணை ஆயர் ஃபைசாந்தியர் வடக்கன்குளத்திற்கு வந்தார். பிரிவினைச் சுவரின் இடையேயுள்ள குறுகியசந்துவழியே பலிபீடத்திற்கு செல்வது அவருக்கு அதிர்ச்சி அளித்தது, மேலும் சொன்னார் “சாதிப்பகையுணர்வால் கத்தொலிக்கர்களின் பண்டிகைகள் கொண்டாடப்படவில்லை, சமூகவாழ்வு முடக்கப்பட்டுள்ளது என்று குறிப்பேட்டில் பதிவுசெய்தார்.  ஃபைசாந்தியரின் குறிப்புகள் சாதிய ஆதிக்கத்திலிருந்து வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலயத்தை விடுவிக்க வேண்டுமென்ற அவரது விருப்பத்தை வெளிக்காட்டின. இரண்டு தரப்புக்கும் இடையேயான முரண்பாடு நாளுக்குநாள் அதிகரித்தவண்ணமிருந்தது. ஃபைசாந்தியரின் எண்ணம் குரித்து வெள்ளாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக் இனி ஆலயத்தில் பாடமாட்டார்கள் என்று அவர்கள் தரபிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

கெளசனால் “இனி வெள்ளாளர்கள் பாடமறுத்தால் நாடார்களிடம் பாடும்படி சொல்லுவேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். இது இருசாதியாரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாகச்சொல்லி வெள்ளாளர்கள் ‘கெளசனால்’ மீது ஆத்திரம் கொண்டார்கள். அடுத்த பாவமன்னிப்பு கேட்க வெள்ளாளர்கள் யாரும் வரவில்லை, அதனால நாடார்கள் பாடினார்கள். அன்றுமாலை வழிபாட்டிற்கு வெள்ளாள ஆண்கள் கெள்சனால் மீது தாக்குதல் நடத்த திட்டம்போட்டார்கள். இதனால அவருக்கு பாதுகாப்பாக 100 நாடார்கள் சூழ்ந்துகொண்டு அவருடைய வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். இதையடுத்து கெள்சனால் ஆலயத்தில் வெள்ளாளர் நுழௌவதற்கு தடைவிதித்தார். 1877ம் ஆண்டு வடக்கன்குளம் தேவாலயத்தில்  வெள்ளாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்யவேண்டுமென்று மறைவட்ட தலைவர்கள் முடிவுசெய்தார்கள். திருனெல்வேலி மறைவட்டத்தலைவர் 18-11-1910 அன்று பிரிவினைச்சுவரை இடித்துத்தள்ளும்படி கெளசனாலுக்கு உத்த்ரவிட்டார். 22-11-1910 அன்று சாதிய ஆதிக்கத்தின் குறியீடாக விளங்கிய அந்த சுவர் உடைந்தது. ஆனால் எழுப்பப்பட்ட மனச்சுவர்களை இடிக்கமுடியவில்லை.

நீண்டகாலமாகத் தங்கள் சாதிய உயர்வின் குறியீடாக விளங்கிய பிரிவினைச்சுவர் இடிக்கப்பட்டதை வெள்ளாளர்களால் தாங்க்கிக்கொள்ள முடிய்வைல்லை. இதை எதிர்த்து மாவட்ட துணைநீதிமன்றத்தில் வழக்குதொடுத்தார்கள்.  தீர்ப்பு பிள்ளைமார்களுக்கு ஆதரவாக வந்தது, இத்தீர்ப்பை சேசு சபையினர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறியீடு செய்தார்கள். மாவட்டதுணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்வதாக அமைந்தது மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு. மாவட்ட முன்சீப் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளாளர் சார்பில் மனுச்செய்தார்கள். இவ்வழக்கை ஆராய்ந்த நேப்பியர் என்ற ஆங்கிலேயரும் சதாசிவ அய்யர் என்ற இந்தியரும்  பிரிவினை சுவரை இடித்தது சரியே என்று தீர்ப்பை வழங்கினார்கள்.

ஞாயிறு, 17 மார்ச், 2013

பரதேசி

வரலாறு, என்பது மன்னர்களின் பரம்பரைக்கதை அல்ல. அது, விவசாயத்தை அடிப்படை ஜீவனோபாயமாகக் கொண்ட உழவர்கள் தம் போராட்டங்களின், கிளர்ச்சிகளின் கதை. சுரண்டப்படுகிறவர்களின் கதை, வரலாறு என்பது சாமானிய மக்களின் வாழ்க்கைக்கதை -பிரபஞ்சன்


பாலா இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் “பரதேசி”, பிழைப்புக்காக வேறு இடம் தேடி செல்பவர்களெல்லாம் பரதேசிதான். அப்படி பிழைப்பு தேடி ஒரு ஊரே செல்கிறது. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளைக்காரர்கள் தாங்கள் கண்டுபிடித்த ‘தேநீர்’ பயிரை வளர்ப்பதற்கு ஏற்ற இடமான மேற்குத்தொடர்ச்சி மலையை தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கே தேயிலைப்பயிர் வள்ர்க்கவேண்டுமானால் மலைக்காடுகளை அழிக்கவேண்டும், அதற்கு ஏராளமான மனித உழைப்பு தேவை. வெள்ளைக்காரர்கள் ‘கங்காணி’ என்றழைக்கபடுகிற சூப்பர்வைசர்களைக் கொண்டு வேலைக்கு ஆள்பிடிக்கிறார்கள். பஞ்சம், பசியால் வாடுகிற அந்த கிராமத்து மக்களிடம் ‘தேன்’ தடவிய வார்த்தைகள் பேசி அட்வான்ஸ் கொடுத்து மலைக்கு கூட்டிவருகிறான். இப்படி வெள்ளைக்காரகள், பிரெஞ்சுக்காரர்கள் தங்களுடைய காலனிநாடுகளுக்கும் தமிழர்களை கொத்தடிமைகளாக கூட்டிக்கொண்டு போனார்கள் அவர்கள் இலங்கையில் மலையகத்தமிழர்களாகவும் பல தீவுகளில் சுதந்திரம் அடைந்த நாடுகளில் பிரஜையாகிப்போனார்கள்.
வால்பாறை தேயிலைத் தோட்டத்திற்கு ஒரு கிராமத்திலிருந்து ஒட்டுமொத்த மக்களும் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் கைக்குழந்தைகளுடன் கால்நடையாக செல்கிறார்கள். தேயிலைத்தோட்டத்தில் அவர்களுக்கான இருப்பிடம் என்பது பன்றிகள் கூட வாழத்தகுதியற்ற குடியிருப்புகள். சூரியன் உதிப்பற்கு முன்பே ’கொம்பு’ ஊதப்படுகிறது. அதுதான் வேலையின் தொடக்கம், மீண்டும் அந்தியாகும்வரை கடும் உழைப்பு. பெண்களென்றால் தேயிலை பறிக்கவேண்டும் ஒரு நாளைக்கு மூன்று கூடைக்கு குறையாமல் பறிக்கவேண்டும். ஆண்களுக்கு பாறைகள் உடைத்தல், தேயிலைத்தோட்டத்தை புதிதாக உண்டாக்கும் பணி. பெண்களிடம் வெள்ளைக்காரத்துரையின் பாலியல் சீண்டலும் உண்டு. புதிதாக வந்த ஒரு பெண்ணை சீண்டுகிற வெள்ளைக்காரனை அந்தப்பெண் உதைத்துவிடுகிறாள்.கோபம் கொண்ட வெள்ளைக்காரன் கங்காணியை அடி அடியென்று அடிக்கிறான், அடிவாங்கிய கங்காணி இன்னும் அதிகமாக அந்த பெண்ணையும் அவளது கணவனையும் அடிக்கிறான்.  அவர்களது உடையே கிழிந்த சாக்குப்பை, குளிருக்கு கிழிந்த கம்பளி. செருப்புகள் அற்ற அவர்களின் கால்களை அட்டைகள் ‘ரத்தம்’ உறிஞ்சுகிறது, மீதி ரத்தத்தை நிர்வாகம் அட்டையாக உறிஞ்சுகிறது. தினமும் அவர்களது வாழ்க்கை பயத்தால் நகர்கிறது.  கல்வியறிவு அற்ற அந்த மக்களுக்கு வரும் நோயை தீர்க்க ஒரு சாமியாடி தாயத்து கட்டி காசுபணம் பார்க்கிறான், இன்னொரு போலி டாக்டர் மருந்து தடவி காசு பிடுங்குகிறான்.

வருடத்திற்கொருமுறை கணக்குப்பார்த்து சம்பளம் கொடுத்து ஊருக்கு அனுப்புவார்கள் என்ற நம்பிக்கையில் உழைப்பாளிகள் பெட்டி, படுக்கையை எடுத்துக்கொண்டு சைட் ஆபீஸ்க்கு  ஒரு நாளில் வருகிறார்கள். கங்காணி வேலைபார்த்த நாள்கணக்கு, சம்பளம் அதில் கேப்பை, வெங்காயம், விறகு என கொஞ்சம் கடைக்காரன் பிடிங்குகிறான், டாக்டர் ஒரு கணக்கெழுதி வைத்தியச்செலவுக்கு பிடிங்கிக்கொள்கிறான், மீதிச்சம்பளத்திற்கு பதிலாக கடனே மிஞ்சுகிறது, அதைக் கழிப்பதற்கு இன்னும் சில ஆண்டுகள் இலவசமாக உழைக்கவேண்டும்,இப்படியே வருடங்கள் நகர்கின்றன. அங்கிருந்து தப்பிக்க வழியே கிடையாது, அடியாட்கள் இரவுகளில் ரோந்து செய்கிறார்கள், பிடிபட்டால் கடுமையான அடி உதை. சக வேலைக்காரனை அடியாட்கள் அடிக்கும்போது மற்றவர்கள் பயந்து ஒடுங்குகிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியில் அடிமைகள் ஸ்பார்ட்டகஸ் தலைமையில் கிளர்ச்சி செய்தார்கள். ஆனால் இங்கே ஒன்றும் நடக்கவில்லை.

தீடிரென்று ஒரு கொள்ளைநோய் வந்து நிறையபேர் செத்துப்போகிறார்கள், அவர்களுக்கு மருத்துவம் பார்க்க ஒரு ஏற்பாடும் இல்லை. நிர்வாகத்திற்கு எந்த கவலையும் இல்லை, செத்துப்போனவர்களை எரித்துவிட்டு புதிய பட்டினிபட்டாளத்தைக் கொண்டுவந்து நிரப்பிவிடலாம். நோய் பரவிதைத் தொடர்ந்து ஒரு டாக்டர் வருகிறார், அவர் வந்து இந்த மக்களுக்கு வைத்தியம் செய்வாரென்றால் எல்லார் தலையிலும் நாக்கிலும் + போட்டு மதமாற்றம் செய்கிறார்கள். நம்ம கதாநாயகன் எப்ப இந்த மக்களை அணிதிரட்டி போராடுவான் என்று பார்த்தால் ஊரிலிருந்து அவனுடைய தாலிகட்டாத பொண்டாட்டி, பிள்ளையும் மலைக்கு வந்துவிடும். கொத்தடிமை வாழ்க்கை அப்படியே எந்த மாற்றமில்லாமல் தொடருகி்றது. இது நிச்சயமாக வழக்கமான தமிழ் பொழுதுபோக்கு  சினிமா அல்ல மாறாக ஒரு வரலாற்று ஆவணப்படம். Red Tea என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.

வெள்ளி, 15 மார்ச், 2013

கேணி சந்திப்பில் முன்னால் நீதிபதி சந்துரு

சென்னையில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றிக்கிழமை ‘கேணி’ கூட்டத்தை பத்திரிக்கையாளர் ஞாநி தன்னுடைய வீட்டில் நடத்துகிறார்.  இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் தான் அதிகமாக பேசியிருக்கிறார்கள். சமீபத்தில் ஓய்வுபெற்ற நீதியரசர் அல்ல நீதிபதி சந்துரு அவர்கள் பங்கேற்று பேசினார்கள் வழக்கமாக வாசகர்  கலந்துரையாடல் நிகழ்ச்சியும் உண்டு. சமீபகாலமாக நீதிபதி சந்துரு பற்றி சில வழக்குகளை கேள்விப்பட்டிருந்தேன், அதில் குறிப்பாக சாதிக்கொரு சுடுகாட்டை முடிவுகட்டி தீர்ப்பு எழுதினார். குறிப்பாக அடித்தட்டு மக்கள், பெண்கள் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளார், மனித உரிமை சம்மந்தமாக வழக்குகளில் அவர் வழக்கறிராக இருக்கும்போது வாதாடியிருக்கிறார், அதில் பொடாவுக்கு எதிராக, ராஜீவ் காந்தி கொலையாளிகள் என்று 4 பேருக்கு வாங்கிய தூக்கு தண்டனையை எதிர்த்து வாதாடியிருக்கிறார். இன்று நீதிமன்றத்தில் சில வழ்க்கறிஞர்கள் தொழில் தர்மத்தை மீறி காசுக்காக ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள், சங்கம் அமைப்பு என்ற பெயரில் அடிக்கடி வேலைநிறுத்தம், உள்ளூர், வெளியூர், குறிப்பாக இலங்கைப் பிரச்சனைக்காக அடிக்கடி வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம், ஒரு வழக்கு இழுத்துக்கொண்டே போனால் சாமானியர்களால் வழக்கை நடத்தமுடியௌமா? அதற்கு வழக்கறிஞர்கள் துணைபோகலமா? இங்கே வேலைநிறுத்ததிற்கு எதிராக பேசவில்லை, அவர்களுடைய அறிவிக்கப்படாத வேலைநிறுத்தங்களைப் பற்றித்தான் சொல்கிறேன். இன்னும்மைப்பு ரீதியாக சேர்ந்துகொண்டு சிலருக்கு வாதாடமாட்டோம் என்கிறார்கள், இது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது, அது அப்சல்குருவாக இருந்தாலும், அஜ்மல் கசாப் ஆக இருந்தாலும் அவர்களுக்கு சட்டௌதவி செய்வது என்பது இந்திய அரசியலமிப்புச்ச்ட்டம். அப்படி காஞ்சி மடம் பற்றி முரண்பாடான கருத்துகொண்ட சந்துரு அவர்கள் ஜெயேந்திரருக்காக வாதாடியதைக் குறிப்பிட்டார்.

அறிமுகம் செய்து பேசிய ஞாநி தனக்கும் சந்துரு அவர்களுக்கும் உள்ள நெடு நட்பை விளக்கினார், ஞாநி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிள் வேலைசெய்தபோது சங்கம் அமைத்ததால் வேலைநீக்கம் செய்யப்பட்டார், அந்த வழக்கை  வழக்கறிஞராக சந்துரு ஏற்று நடத்தி நியாயம் வாங்கிக்கொடுத்தார் என்பதைவிட ஒரு பைசா காசு வாங்கவில்லை, இது அவருடைய நண்பர் என்பதற்காக மட்டுமல்ல, அவருடைய கொள்கைப்பிடிப்பு. சந்துரு அவர்கள் பேசும்போது என்னுடைய நீதிமன்ற அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன் என்று பல வழக்குகளைப் பற்றி பேசினார்.

அவர் மதுரை நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும்போது, மதுரை மாநகராட்சி மதுரை மாநராட்சியில் பணியிலிருக்கும்போது ஒரு கார்டனர் இறந்துவிட்டார், அவர் பணியிலிருக்கும்போது நகராட்சி கொடுத்த குவார்ட்டர்ஸ் என்று சொல்லப்பட்ட குடியிர்ப்பில் அவர் குடும்பம் தொடர்ந்தது, அதே  சமயம் அவருடைய மாணவி தினக்கூலியாக நாளொன்றுக்கு 60 ரூ சம்பளத்தில் வேலை செகிறார். கார்ப்பரேசன் கமிஷனர் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்தார், அந்தப்பெண்மணி ஸ்டே ஆர்டர் வாங்க நீதிமன்றத்தை அணுகினார், அதற்கு கமிசனர் அந்தப் பெண்ணிடம் என்னுடைய வேலைநேரத்தை வீணடிதாய் என்று நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். அந்த கார்ப்பரேசன் கமிஷனரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து நீதிமன்றத்திற்கு ஒரு பெண், ஜனநாயக நாட்டில் யாரும் நீதிமன்றத்தை அணுகலாம் நீங்கள் எப்படி தடுக்கலாம என்று 5000 ரூ அபராதம் விதித்திருக்கிறார்.

இன்னும், அங்கன்வாடி ஊழியரை மன்நலம் சரியில்லை என்று பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் முதலில் அந்த பெண்ணிற்கு மனநலம் சரியில்லை என்பது பொய், அப்படியே பணியில்ருக்கும்போது ஒருவருக்கும் விபத்து ஏற்பட்டால் வேலைநீக்கம் செய்யாமல் வேறு வேலை கொடுக்கவேண்டும் அல்லத் ஓய்வுபெறும்வரை ஊதிஒயம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார், பெண்கள் பூசாரியாகலாமா? என்ற வழக்கு அகில இந்திய கவனத்தை பெற்றது. அவருடைய ஒரு தீர்ப்பால் 22000 தலித்களுக்கு அங்கன்வாடியில் இடஒதுக்கீடு கிடைத்தது மட்டுமல்ல, தலித் அங்கன்வாடி பெண் சமையல் செய்வதை ஏற்காத தனியார் பள்ளி நிர்வாகத்தை மாவட்டநிர்வாகம்  கையிலெடுத்து நடத்தவேண்டும் என்ற தீர்ப்பை அடுத்து பள்ளி நிர்வாகம் பணிந்துபோனது. சமபந்தி போஜனத்தை வருசத்திற்கொரு நாள் சடங்கு மாதிரி செய்யாமல் இந்த அங்கன்வாடியில் தலித்கள் ச்மைத்து அதை எல்லா மாணவகளும் சாப்பிட்டார்ல் அதுவே சமபந்தி யென்று வரலாற்றில் வ.வே.சு ஐயர் நடத்திய சேரன்மகதேவி விடுதியில் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு தனி பந்தி என்பதை எதிர்த்து பெரியார் போராடியதை சுட்டிக்காட்டினார்.

ஒரு பெண் போலிஸ்துறையில் வேலைசெய்யும்போது அதிக (15நாள்) தொடர்விடுப்பு காரணமாக பணிநீக்கம், அந்த வழக்கில் அந்த பெண் சொல்கிறார், நான் பிராமண சமூகத்தை சார்ந்தவள், கணவனை இழந்த பிராமணப்பெண் வெளியே உடனே நடமாடக்கூடாது என்பது இந்த சமூகத்திற்குத் தெரியும். காவல்துறை அதிகாரிகள் என்னுடைய கணவனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அந்த வழக்கில் சமூக நிலைமையை விளக்கி தீர்ப்பு வழங்கியதால் மீண்டும் வேலை கிடைத்தது.

வக்கீல்கள் வேலைநிறுத்தம் அன்று ஒரு பெண்மணி, நீதிமன்றத்திற்கு வந்தார், அவர் செல்போன் உபயொகித்தார் என்பதற்காக வக்கில்கள் அந்தப்பெண் மீது நீதிமன்ற அவமதிப்புவழக்கு போட்டார்கள், தீர்ப்பை வழங்க பல நீதிபதிகள் வழக்கறிஞர்களுக்கு (ஒரு சில வக்கீல்கள் கூட்டம் சேர்த்துகொண்டு  குண்டாஸ் போல செயல்படுவது தமிழர்களுக்கு தெரியும்) பயந்து வழக்கை எடுத்துகொள்ள மறுத்தார்கள். சந்துரு அந்த வழக்கில் அந்த பெண்னை மொபைலில் போட்டோ எடுத்த வழக்கறிஞருக்கு அபராதம் விதித்தார். இன்னும் சில வழக்குகளில் வக்கீல்கள் இவருக்கெதிராக கோஷம் போட்ட சம்பவங்களும் உண்டு. ஆனால் சாமானியர்களுக்காக நீதிமன்றத்தில் உழைத்தார்.

ராஜீவ் கொலைவழக்கில் 4 பேருக்கு தூக்கு வழங்கியபின் கருணைமனு, தமிழக அமைச்சரவைக்கு வருகிறது அப்போதைய முதல்வர்  கருணாநிதி அப்படியே ஆளுநர பாத்திமா பீவிக்கு அனுப்பிவிட்டார். பாத்திமாபீவி அவர்கள் தள்ளுபடி செய்துவிட்டார். மீண்டும் அமைச்சரவைக்கு வருகிறது சோனியாகந்தி என்னுடைய குழந்தைகள்மாதிரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனுபவிக்கவேண்டாம் என்பதை அடுத்து நளினிக்கு மட்டும் கருணை கிடைத்தது. கருணாநிதி நினைத்திருந்தால் எல்லாருக்கும் கருணை வழங்கியிருக்காலாம் அதிகாரத்தில் இருக்கும்போது செய்யாமல் இப்போது மற்ற 3பேரின் தூக்குதண்டனையை பேசுவதை விமர்சித்தார். சமீபத்தில் நீதிமன்ற விழாவில் நீதிபதியாக இருந்த சந்துரு அவர்கள் கலந்துகொள்ளவில்லை, ஏனென்றால் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தலைமையில் விழாவில் கலந்துகொள்ள விருப்பம் இல்லை என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இன்னும் எத்தனையோ சமூக முன்னேற்றத்திற்காக தீர்ப்புகளை வழங்கி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்களுக்கு ஒரு சல்யூட்.

நிகழ்ச்சியின் காணொளியின் இணைப்பு கீழே...

http://www.youtube.com/watch?v=y5p0GYavVSE

Regards
Hariharan