ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

விக்கிரமாதித்தன் கதைகள்


விக்கிரமாதித்தன் கதை தமிழகத்தில் அதிகமான விற்பனையான புத்தகங்களில் ஒன்று, அந்த கதைகளை சின்னவயதில் கேள்விப்பட்டிருகிறேன். அந்த கதைகள் முன்னர் தினமலர்-சிறுவர்மலர் இதழில் காமிக்ஸ் வடிவில் வரும், அதற்காக பள்ளிமுடிந்ததும் சிறுவர்மலர் இதழுக்காகவே நூலகம் செல்வோம். அந்த கதைப்புத்தகத்தை சென்ற ஆண்டில் வாங்கினேன் பிரேமா பிரசுரம் வெளியிட்டுள்ள அந்த புத்தகம் 26ம் பதிப்பைக் கண்டுள்ளது. அதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை, வடமொழியிலிருந்து மற்றமொழிகளுக்கு சென்றிருக்கிறது. அந்த கதைகள், போஜரானுக்கு சிம்மசானம் சொல்லியகதை, விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொல்லியகதை என்ற வடிவில் இருக்கிறது. படிக்கும்போது அது திட்டமிட்டு ஒரு பிரச்சார வடிவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. எந்தமாதிரி பிரச்சாரம் என்றால் பிராமணீய மேலாண்மை, பெண்களைப்பற்றி மோசமான கருத்துக்களையும் அந்த காலத்தில் பகுதிவாரியாக ஆட்சிசெய்த ராஜாமார்கள் நீதிதவறாமல் ஆட்சிசெய்தமாதிரி சித்திரம் தீட்டியிருக்கிறார்கள். அரசர்கள் பிராமணர்களை நடத்தியவிதம், இளவரசர்கள் கண்ணில்பட்ட பெண்களை கண்டு மோகம் காதல் கொள்வது, ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தியப்பண்பாடு என்று கதையை ஏற்படுத்தி அது அரசர்களுக்கு அல்ல என்பது, ஒரு அரசன் 1000 பெண்களை மணந்து அந்தப்புரத்தை அழகு செய்தானாம். பண்பாடு என்பது ஒரேமாதிரி இல்லை. முதல் ஐம்பது பக்கங்களை வாசிக்கும்போதே அலுத்துவிட்டது, இவ்வளவு மோசமான பிரச்சார நூல் எவ்வள்வு விற்பனையாகியிருக்கிறது. இன்னும் என்ன்வெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்பதற்காக 670 பக்கம் கொண்ட நூலில் 200 பக்கங்கள் கடந்துள்ளேன்.

அந்த கதைகளில் பெண்கள் மோசமானவர்களாம், மயானத்தில் வைக்கப்படும் பண்டங்களுக்கு நிகராக அவர்களை ஒதுக்கவேண்டுமாம். பெண்கள் என்றால் நம் அன்னையர்களை, சகோதரிகளையெல்லாம் இழிவுசெய்திருக்கிறார்கள். காடுகழ்னிகளில் ஆண்களுக்கு நிகராக இன்னும் அதிகமாக வீட்டுவேலையை பெண்கள் மட்டும் செய்கின்ற பெண்களை, மென்மையானவர்கள், பேராசைபிடித்தவர்கள், பழிவாங்கும் குணமுடையவர்கள், காம இச்சைகள் தீராதவர்கள், அழகான யாரைக்கண்டாலும் மோகிப்பவர்கள் என்று எழுதியிருக்கிறார்கள். இதைவைத்துதான் ஆட்டோக்களில் `பாம்பை நம்பினாலும் பெண்ணை நம்பாதே` போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
அதில் குறிப்பிட்டுள்ள வரிகள் சிலவற்றைஅப்படியே தருகின்றேன்.

நந்தமன்னன் ஒருவன் தன்னுடைய அரசியை பொதுசபையில் உட்காரவைத்தானாம், மந்திரிபஹூசுருதன் உட்காரவெண்டிய இடத்தில் அவனுடைய சகதர்மினியை உட்காரவைத்ததால் மந்திரி இப்படி சொல்கிறான், ``பொதுச்சபையில் பேரழகியான ஒரு பெண்ணை தன்னுடன் உட்காரவைத்துக்கொள்கிறான். மக்கள் அவளைப்பார்க்கிறார்கள், மக்கள் கூட்டத்தில் வாலிபர்களும் இருப்பார்கள், காணாத கனியைக் காண்பவர்கள் போலவே பலர் பட்டமகிஷியைப் பெரு மூச்சுடன் பார்க்கிறார்கள். ஆடவனின் ஆசை வழியும் விழிகளை ஆரணங்கு பார்ப்பாளேயாகில் அவளால் நிஷ்டூரமாகப் புறக்கணிக்கமுடியாது, அவளுடைய சித்தமும் குழம்பக்கூடும்``.

அந்த மன்னனின் ராஜகுரு சொல்கிறார், ``பெண்கள் ஒருவனுடன் வாயால் பேசுகிறார்கள். அதே சமயம் கருவிழிகளால் மற்றவனின் மனதைக் கிளரும் விதமாகப் பார்க்கிறார்கள்; மூன்றாம் மனிதனைப் பற்றி மனதிலே நினைக்கிறார்கள். ஒருவனொடு பெண்கள் திருப்தி அடைவதில்லை, எரிப்பதற்கு விறகுக்கட்டை எவ்வளவு இருந்தாலும் நெருப்புக்கு போதாது; ஆற்று நீர் எவ்வளவு விழுந்தாலும் கடலின் நீர்மட்டம் உயராது; எல்லா ஜீவவர்க்கங்களின் உயிர்களைத் தின்றாலும் கூற்றுவன் திருப்தி அடையமாட்டான்; அவ்விதமே அழ்கிய கண்களை உடைய பெண்களும் ஆடவர்கள் விசயத்தில் திருப்தியடையந்து விடமாட்டார்கள்``.

மேலும் சொல்கிறான், காக்கையிடம் சுத்தம், சூதாடியிடம் நியாயம், பேடியிடம் வீரம், குடிகாரனிடம் வாக்குறுதி, பாம்பினிடம் தயை, பெண்களிடையே நிரந்தர மோகவிகாரம் இல்லாமை ஆகியவற்றை யார்தான் கண்டும் கேட்டும் இருக்கிறார்கள்.

இன்னொரு அரசனைப்பற்றிய கதை வருகிறது, சந்திரவர்ணன் என்கிற பிராமணன் ஆறுமாதம் அன்னம் ஆகாரமின்றியும் நித்திரையின்றியும் காட்டில் தவம்செய்தான், அவன் காட்டிலிருந்து நாட்டிற்கு வந்தபோது களைப்பால் தாசிவீட்டுத்திண்ணையில் உறங்கிப்போனான் பின்னர் அவனுக்கு ஆகாரம்கொடுத்து பசியை நீக்கி உடல்நலத்தை கவனித்தாள், தன்னையே மணக்கவேண்டுமென்று தாசி அரசசபையில் முறையிட சபையிலிருந்த புரோகிதர், பிராமண குலத்தில் பிறந்த ஒருவன் தங்கள் குலத்திலல்லாமல் வேறு குலத்தின் பெண்ணை மணந்தால் நான்கு வர்ணப்பெண்களையும் ஒரே முகூர்த்தத்தில் மணக்க வேண்டுமென் சாஸ்திரம் சொல்கிறது என்றான்,. அப்படியே தாசி அலங்காரவல்லியையும், புரோகிதரின் குமாரத்தி கல்யாணியையும் மன்னனின் குமாரத்தி சித்திரரேகையையும், சபையிலிருந்த வைசியகுலச் சோமசேகர செட்டியாரின் குமாரத்தி கோமளாங்கியையும் ஒரே முகூர்த்தத்தில் சந்திர்வர்ணன் என்ற அந்த பிராமணுக்கு மணம் முடித்தார்கள். அந்த நாட்டு மன்னன் இறந்தவுடன் வாரிசு இல்லாததால் சந்திரவர்ணனுக்கு ஆட்சிப்பொறுப்பு அளித்தார்கள்.

சந்திரவர்ணனுக்கு பிராமணஸ்திரீயிடம் பிறந்தவன் வல்லவரிஷி  காட்டுக்கு தவம் செய்யப்போய்விட்டான், வைசியப்பெண் வயிற்றில் பிறந்தவன் பட்டி  என்பவன், அரசகுமாரிக்கு பிறந்தவன் விக்கிரமாதித்தன் என்றும், தாசிவயிற்றில்  பிறந்தவன்  பர்த்ருஹரி என்ற நான்கு குமாரர்கள் பிறந்தார்கள். சந்திரவர்ணன் அந்திமகாலத்தை நெருங்கும்போது புதல்வர்களை அழைத்தான், அப்போது தாசிக்கு பிறந்த பர்த்ருஹரியைப் பார்த்து, இவனுக்கு கல்யாணம் செய்தால் புத்திரர்கள் பிறப்பார்கள் அது நல்லதல்ல என்றான், அப்படியே பர்த்ருஹரி ,கல்யாணம் செய்துகொண்டாலும் பிள்ளைகள் பெற்று உங்கல் நற்கதிக்குத் தடையாக ஒருபோதும் இருக்கமாட்டேன் என்று சத்தியம் செய்துகொடுக்கிறான்.

தாசியை கல்யாணம் செய்ததால்தான் மற்ற மூன்று மனைவியரை அடைந்தேன், அதனால் தாசி வயிற்றுப்பிள்ளையான பர்த்ருஹரிக்கு பட்டம் சூட்டவேண்டும் என்றான். அவ்வாறே பர்த்ருஹரி ராஜாவானான், அவனுக்குப்பின்னர் ஷ்த்திரகுலப்பெண்ணுக்கு பிறந்த விக்கிரமாதித்தன் அரசபொறுப்பேற்றான் அவனுக்கு மதியூகமந்திரியாக வைசியப்பெண்ணுக்கு பிறந்த பட்டி என்பவன் இருந்ததாக கதை வருகிறது.ராஜா பர்த்ருஹரி பெண்ணாசை கொண்டு 360 அழகிகளை மணந்து தன் அரண்மனை அந்தப்புரங்களைக் கலைக்கூடமாக்கினானாம். ராஜா பர்த்ருஹரி அனங்கசேனை என்பவளிடம் அலாதிப்பிரியம் கொண்டான், ஆனால் அவளுக்கு குதிரைப்பாகன் ஒருவன் சோரநாயகனாக இருந்தானாம். பர்த்ருஹரியின் அரசியைப்பற்றி சொல்லப்பட்ட வரிகள்..

`` மனதைக்கவரும் உருவம்,யெள்வனம் ஆகிய இரண்டிலும் ஆடவன் கொள்ளும் அபிமானம் வீந்தான். வில்போன்ற புருவங்களுடைய பெண்கள் உள்ளத்தில் மன்ம்தன் தான் விரும்பியதையே செய்வான். பெண்களின் எண்ணங்களயும் செயல்களையும் ஒருவராலும் அறியமுடியாது``

``குதிரையின் பாய்ச்சல், தேவேந்திரனின் இடிமுழக்கம், பெண்களின் சித்தம், மனிதனுடைய பாக்கியம், அதிகமழை, மழையின்மை- இவைகளை தெய்வத்தாலேயே தடுக்க முடியாது``

``மலட்டுப்பெண்ணின் குழந்தை அரசுக்கட்டில் ஏறலாம் என்றும், வானத்தில் பூக்கள் மலர்வதைக் காணமுடியும் என்றும் நினைக்கலாம், ஆனால் பெண்களின் உள்ளத்தில் புனிதத்தன்மையைப் பற்றிச் சிறிதுகூட நினைக்க முடியாது``

``ஜபம், மந்திரம், தந்திரம், விநயம், அறிவு, ஆகியவை இல்லாமலேயே பேரறிவு படைத்த ஒருவனையும் பெண்கள் ஒரு கணத்தில் ஏமாற்றும் சக்தி வாய்ந்தவர்கள்``

``பெண்கள் சுயலாபத்திற்காகச் சிரிக்கவும் அழவும் செய்வார்கள்; தங்களிடம் நம்பிக்கை வைக்கும்படி அவர்கள்கெஞ்சுவார்கள்; ஆனால் அதே சமயம் அவர்கள் யாரிடமும் நம்பிக்கை வைப்பதில்லை; நல்ல குடும்பத்தில் பிறந்தவனும் புத்தியுள்ளவனும் , அவர்களை மயானத்தில் கிடக்கும் பணியாரங்களைப் போல் தவிற்க்கவேண்டும்``

இவ்விதம் ராஜாபர்த்ருஹரி தன்னுடைய ஆசைநாயகி அனங்கசேனையைப் பற்றி சிந்தித்தான். இந்த அரசிகளைப் பற்றிய வசைகள் எல்லாப்பெண்களுக்கும் பொதுவான குணமாக சித்திரத்துள்ளார்கள். ராஜாபர்த்ருஹரி ஒரு ஷ்த்திரியன் அல்லாதவன், அதேபோல நந்தமன்னனின் மனைவியைப் பற்றியும் வசைவருகிறது அவனும் ஷ்த்திரிய வம்சமல்ல.

வேதாளம்  இன்னொரு கதையைக்கூறி யார் அதிக புத்திசாலி என்று விக்கிரமாதித்தனைக் கேட்கிறது. விக்கிரமாதித்தன், ``ஆடாகயிருந்தாலும்
பெண் புத்தி கேளாதிருந்தமையால் அதுவே அதுவே அதிக புத்திசாலி`` என்று விடை சொல்கிறான், இதன் மூலம் பெண்புத்தி பின்புத்தி என்ற வசை நிலவுகிறது.

அர்த்தசாஸ்திரத்தில் தண்டனைகள் , ஒரே குற்றத்திற்கு ஒவ்வொரு வர்ணத்திற்கும் தனித்தனியான தண்டனைகள் இருக்கிறது. அந்தனன் ஒருவனுடைய நிலத்தின் பயிரை போஜராஜனின் படைகள் பசியில் அழிமானம் செய்கிறார்கள். அப்போது அந்த அந்தணன் போஜராஜனைப்பார்த்து சொல்கிறான், ``தாங்கள் எல்லா நீதி சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவர். அப்படியிருக்கத் தாங்களே அந்தணன் ஒருவனுடைய சொத்தைப் பாழாக்குகிறீர்கள். அந்தணன்  சொத்து தான் உண்மையான விஷம் என்று சொல்லப்படுகிறது. விஷம் என்பது அறிஞன் ஒருவனுடைய சொத்துடன் ஒப்பிடும்போது விஷமாகது; அந்தச் சொத்தே உண்மையான விஷமாகும்; ஏனென்றால் விஷம் அருந்திய ஒருவனை மட்டுமே கொல்லக்கூடியது; ஆனால் அறிஞன் சொத்தோ அபகரித்தவனின் சந்ததியையும், அவர்களின் சந்ததிகளையும் கூட அழித்துவிடும் அன்றோ? இதைத் தாங்கள் அறிவீர்களே என்கிறான். இதைவைத்து கிராமங்களில் கதைகள் இருக்கின்றன.

 எல்லாக்கதைகளிலும் நீதிதவறாத மன்னர்கள், தவத்தில் சிறந்த அந்தணர்கள் நிச்சயம் வருவார்கள், சாதாரணகுடிகளைப் பற்றி எந்தக் கதையிலும் பதிவுகள் இல்லை. அந்தப்புரங்கள், ராணிகள் மென்மை, இளவரசர்களின் கண்டவுடன் காதல், மோகம் இது நிரம்பியிருக்கிறது. இந்த கதைகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களிடம் வாய்மொழியாக சென்றிருக்கிறது. இந்தக் கதைகளை தேசத்தின் பண்பாடு என்று கொண்டாடுபவர்களும் இருப்பார்கள்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

தாய் - பெண் - தெய்வங்கள்.


 ஒரு நாவலை வாசித்தபோது அங்கே முத்தாலம்மன் பற்றிய உபகதை ஒன்று வருகிறது, மூக்கச்சாம்பான் என்பவனின் மூதாதையர்கள் சோழதேசம், அந்த சேரிமக்கள் அனைவரும் கைலாசநாதர் கோவிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட அடிமைகளாக இருக்கிறார்கள். சோழமாமன்னன் தஞ்சைப்பெருவுடையார் கோவிலை கட்ட கடைக்கால் நாட்டும்போது துவாரபாலகர்கள் நரபலி கேட்க ஆயிரம பஞ்சமர்களைப் பிடித்து நரபலிகொடுக்க சோழமன்னன் முடிவுசெய்து பறையறிவிக்கிறான். இதைக் கேள்விப்பட்ட சேரி ஜனங்கள் பயந்து தப்பிக்கிறார்கள். அப்போது மூக்கச்சாம்பானும் அவனது மனைவியும் நள்ளிரவில் சேரியை விட்டு அமாவாசை நாளில் தப்பித்து வேற நாட்டுக்கு தஞ்சம்புகலாம் என்று கிளம்புகிறார்கள். இரவில் அடைமழைவேறு..சேரி ஜனங்கள் தப்பித்து ஓடுவதை கேள்விப்ப்ட்ட சோழமன்னர் பிரதானிகள் படைகளை அனுப்பி அவர்களை பிடித்துவர உத்தரவு போடுகிறார்கள். காவிரியாற்றை நெருங்குகிறார்கள், ஆற்றில் கரைதொட்டு வெள்ளம் சென்றுகொண்டிருக்கிறது, பின்னால் சோழபடைகள் விரட்டிவருகிறது, ஆற்றில் இறங்கினால் வெள்ளம் அடித்துக்கொண்டுபோகும், படையினரிடம் சிக்கினால் சிரச்சேதம் உறுதி. இந்த சூழ்நிலையில் மழைக்கு ஒரு ஆலமரத்தின்கீழே ஒதுங்கிறார்கள். அப்போது ஒரு பெண் சிறிய விளக்குவைத்துக்கொண்டு இவர்களை நோக்கிவருகிறாள், பின்னர் தானும் காவிரியை தாண்டி அக்கறை செல்லப்போவதாகவும் தன் பின்னே வருமாறு பெரியமூக்கன் தம்பதியை அழைக்கிறாள். அந்தப் பெண் வெள்ளம் புரண்டு ஓடுகிற காவிரியில் அசாத்தியமாக இறங்குகிறாள் இவர்களும் பிந்தொடர்கிறார்கள் காவிரி அவர்களுக்கு வழிவிடுகிறது பின்னால் துரத்திவந்த சோழப்படையினர் ஆற்றில் இறங்கியபோது வெள்ளம் அவர்களை அடித்துக்கொண்டு போய்விடுகிறது. அந்த பெண்ணிற்கு அம்மைநோய் கண்டு சிலதினங்களில் இறந்துபோகிறாள், இறப்பதற்கு முன்பு தான் ஒரு தெய்வப்பிறவி என்றும் இவர்களை காப்பதற்கே வந்ததாகவும் இறந்தவுடன் அடக்கம்செய்து எரித்த சாம்பலை குறிப்பிட்ட ஊருக்குச்சென்று மரத்தில் போடுங்கள் அது ஒரு புற்றாக வளரும், அதை முத்தாலம்மன் என பெயரிட்டு வழிபடுங்கள் என்று சொன்னதாக அந்த கதை அமைகிறது.

 இதே கதை மாதிரியே, கி.ரா. எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலில் ஒரு குழுமக்கள் தெலுங்கு தேசத்தின் துலுக்கராஜாக் களிடமிருந்து தப்பித்து அரவதேசம் வருகின்ற ஒரு குடும்பத்திற்கு ஒரு கன்னிப்பெண் விளக்குடன், பனை நாரினால் செய்யப்பட்ட பெட்டியோடு வந்து ஒரு ஆற்றைக்கடக்க உதவுகிறாள், அவர்களை துரத்திவந்த துலுக்கராஜாவின் படைகளால் வெள்ளம் பொங்கிவரும் ஆற்றைக்கடக்க இயலவில்லை. அவர்களை காப்பாற்றிய கன்னிப்பெண் நோய்வாய்ப்பட்டு இறந்துபோகிறாள் அவளை ரேணுகாதேவி என்ற பெயரில் குலசாமியாக வழிபடுகிறார்கள் என்பது நடைமுறையாகவும் இருக்கிறது.

 தமிழகத்தில் பெண் தெய்வங்கள் அதாவது ஆண் துணையின்றி இருக்கும் சாமிகள் யாவும் வைதீகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாதது, சில பெண் தெய்வங்கள் ஊருக்கு பொதுவாகவும், சில தெய்வங்கள் சில குடும்பங்களுக்கு மட்டும் என நடப்பில் பார்க்கிறோம். எல்லா ஊர்களிலும் மாரியம்மன் போன்ற சினங்கொண்ட தெய்வங்கள் ‘வடக்கு’ நோக்கியே பார்த்திருக்கிறது, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் தமிழகம் என்பது கேரளம் உள்ளிட்ட பகுதி முப்புரமும் கடல் சூழ்ந்தது, அதனால் பகைப்படை என்பது வடக்கிலிருந்துதான் வரமுடியும் அதை தடுக்கவே அம்மன் வடக்கு நோக்கி இருக்கிறார். இந்த கோவில்களில் பிராமணர்கள் பூசாரிகளாக இல்லை , பண்டாரம், குயவர் போன்ற சாதியினரே பூசாரிகளாக இருக்கிறார்கள்.வைதீகம் பெண் தெய்வத்தை சிவனுக்கு மனைவியாக, திருமாலுக்கு தங்கையாக மாற்றியபோதும் ‘தாய்’த்தெய்வத்தின் தனித்த அடையாளம் முற்றிலும் நீங்கிவிடவில்லை. தீச்சட்டி எடுப்பது, பொங்கலிடுவது முளைப்பாரி, வீதிஉலாவரும்போது சாமிசிலை எடுத்துவருவதர்குப் பதிலாக சாமியாடிகள்மேல் அருள் வந்து ஆடுவது, இரத்தப்பலி போன்றவை தாய்த்தெய்வத்தின் தனி அடையாளம்.

 சில பெருந்தெய்வக் கோவில்களில் தந்தைத் தெய்வத்தைவிட தாய்தெய்வம் ஆழ்ந்த பக்திக்கும் மரியாதைக்கும் உரியதாக உள்ளது, கன்னியாகுமரியில் குமரித்தெய்வம், திருநெல்வேலி காந்திமதி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், திருவானைக்கால் அகிலாண்டேசுவரி, காஞ்சி காமாட்சி போன்றவற்றில் தாய்த்தெய்வத்தின் மீதான வழிபாடு சிறப்புடையதாக இருக்கிறது. சில தாய்த்தெய்வங்கள் குறிப்பிட்ட மக்கள்திரள்களுக்கு உரியவையாக இருக்கிறது, காஞ்சி காமாட்சியம்மன் கோவில் சங்கராச்சியர்களுக்கு முன்பு கம்மாளர் ‘விசுவகர்மா’’ சாதியாருக்கு சொந்தமானது, காமாட்சிதெய்வம் கொளதமபுத்தரின் தாயார் தாராதேவி வழிபாட்டிலிருந்து தோன்றியிருக்கவேண்டும் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதேபோல் ’பத்திரகாளி’ அம்மனை தமிழகத்தில் நாடார்கள் அதிகமாக வழிபடுகிறார்கள். பத்ரம் என்ற வடசொல்லுக்கு ஓலை என்று பொருள். மரபுவழியாக பனைத்தொழிலோடு தொடர்புகொண்ட மக்கள்திரளின் (clan)தெய்வமாக தோன்றியிருக்கவேண்டும்.

 தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதத்தில் இயேசுவைப்போல மரியமாதாவை வழிபடும் வழக்கமுள்ளது, தொடக்ககால மதம் பரப்புநர்கள் தமிழர்களின் தாய்தெய்வ வழிபாட்டிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை உண்ர்ந்து அதை கிறிஸ்தவத்தில் ஏற்படுத்தியிருக்கலாம். 18ம் நூற்றாண்டில் திருச்சிக்கு அருகே ஏலங்குறிச்சியில் தூயமரியாளுக்கு வீரமாமுனிவர் கோவில் கட்டினார், அந்த கோவிலின் மாதாவுக்கு ‘பெரியநாயகி’ என்று பெயரிட்டார்.அங்கு அமைந்த குடியிருப்புகளுக்கு அன்னையின் காவலில் உள்ள ஊர் என்பதற்கு ‘திருக்காவலூர்’ என்று பெயரிட்டார். இன்னும் கத்தோலிக்க தேவாலயத்தை மாதா கோவில் என்று அழைக்கும் வழக்கம் கிறிஸ்தவர் அல்லாத மக்களிடமுண்டு.

 மனிதர்களாக வாழ்ந்து மரித்தவர்களையும் அம்மனாக வழிபடும் மரபும் இருக்கிறது, பூப்பெய்தும் பருவத்திலோ இளவயதிலோ இறந்த பெண்கள் அந்த குடும்பத்திற்குரிய கன்னித் தெய்வமாக வழிபடப்படுகின்றனர்.திருமணமாகி குழந்தைபெற்று இளவயதில் இறந்துபோன பெண்களும் குடும்ப தெய்வங்களானார்கள் அவர்களை மாலையம்மன் என்று வழிபடுகிறார்கள். பேரரசர்கள் இறந்தபின் அவர்களுக்கு பள்ளிப்படை (சமாதி) அமைப்பது இருந்தது போல, அரசன் மனைவி மங்கலப்பெண்ணாக இறந்திருந்தால் பள்ளிப்படை கோவில் எழுப்பியிருக்கிறார்கள். சமயபுரம் மாரியம்மன் கோவில் சோழப்பெருந்தேவி ஒருவர் அம்மை நோய்கண்டு இறந்தபின் எழுப்பப்பட்ட பள்ளிப்படை என்கிறார்கள் பண்பாட்டு ஆய்வாளர்கள்.

(தகவல்கள்- தொ.பரமசிவன்  எழுதிய  தாய்தெய்வம் கட்டுரையிலிருந்து)

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

டி.செல்வராஜ் எழுதிய “தோல்” நாவல்..

டி.செல்வராஜ் எழுதிய “தோல்” நாவல்..



இந்த நாவல் வெளிவந்த நேரத்தில் எழுத்தாளர் தோழர்.காஷ்யபன் சொன்னார் (2011) இந்த ஆண்டில் சிறப்பான படைப்புகளில் ஒன்றாக “தோல்” இருக்கும் என்றார். அது பொய்த்துப் போகவில்லை 2012ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் தோல் பதனிடும் ஆலைகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களைப் பற்றிய நாவல் என்றபோதும் தொழிற்சங்க இயக்கம், இடதுசாரி இயக்கம் தடைசெய்யப்பட்ட காலம், வர்க்கப் போராட்டத்துடன் அடித்தட்டுமக்களின் சமூக பரிணாமங்களையும் நாவல் சொல்கிறது. இந்த நாவலில் 117 பாத்திரங்கள் வருகிறார்கள், யார் இதில் கதாபாத்திரம் ஒசேப்புவா, சங்கரனா,வேலாயுதமா, இருதயசாமியா, சாமியார் தங்கசாமியா என்று முடிவுக்கு வரமுடியவில்லை.தோல் ஷாப்பில் பணிபுரியும் பாட்டாளிகள், நகராட்சியில் பீயள்ளும் தொழிலாளர்கள் கதையின் மாந்தர்கள். உழைப்பாளி மக்களை, சமூகத்தின் அடித்தட்டு மக்களை நாயகர்களாகக் கொண்டுள்ள இலக்கியம் மிகவும் குறைவு. தலித் இலக்கியங்கள் அவர்கள் படும் அவலங்களையும் வஞ்சிக்கப்படுவதையும் மட்டுமே காட்டுகின்றன. இந்த நாவல் வஞ்சிக்கப்பட்டவர்களான தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் தங்கள்மீது திணிக்கப்பட்ட இழிவுகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக ஓரணியில் திரண்டு போராடுகிறார்கள், அவர்களுக்கு ஜீவனாக சங்கம் இருக்கிறது. இந்த காலகட்டத்தின் கதைமாந்தர்கள் வீரர்கள் அல்லர், வஞ்சிக்கப்பட்டவர்கள் என்று சொன்ன ரேமண்ட் வில்லியம்ஸ் வரிகளை எழுத்தாளர் கையாண்டுள்ளார்.

“தோல்” ஷாப்புகளில் பணிபுரிபவர்கள் அந்த நகரத்தின் பறையர்களும் அருந்ததியினர்களும், எந்தவித பாதுகாப்பு சாதனங்களின்றியும் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறையின்றியும் 8 மணி நேரம் வேலை என்றல்லாமல் சுரண்டப்படுகிறார்கள். ஆண் தொழிலாளர்களுக்கு அடியும் உதையும், பெண் தொழிலாளர்கள் பணியிடங்களில் பாலியல் வன்புணர்ச்சிக்கும் ஆளாகிறார்கள், நகரத்தில் பிரபலமான ஹாஜியார் அஸன் ராவுத்தர் தோல்ஷாப்பில் சின்னக்கிளி என்ற இளம் பெண்ணை அஸன் ராவுத்தரின் மைத்துனன் காமுகன் முஸ்தபா மீரான் பாலியல் வன்புணர்ச்சி செய்கிறான், அதைத்தட்டி கேட்க காலங்காலமாக அம்மக்களுக்கு துணிவு இல்லை. அதே ஷாப்பில் வேலைசெய்யும் ஓசெப்பிற்கு ‘ஸ்டோர் ரூமிலிருந்து’ கதறும் சின்னக்கிளியின் கதறல் அவனது இதயத்தை கூறுபோடுவதுபோல் இருந்தது, அந்த அறையின் கதவை உடைத்து முஸ்தபாமீரானை அடித்து தாக்கிவிடுகிறான். இச்சம்பவத்தையடுத்து என்ன நடக்கும் என்பதையுணர்ந்த சகபெண் தொழிலாளியும் அவனது காதலியுமான அருக்காணி ஒசேப்பை தப்பியோடவைக்கிறாள். பின்னர் தோல்ஷாப்பு முதலாளிகளின் அடியாள் கழுவத்தேவனிடம் பிடிபட்டு சித்திரவதைக்குள்ளாகிறான். அவ்வழியே சென்ற கத்தோலிக்க பள்ளியில் ஆசிரியராக இருக்கும் இருதயசாமி ஒசேப்பை கழுவத்தேவனிடமிருந்து காப்பாற்றுகிறார்.

வன்புணர்ச்சிக்குள்ளான சின்னக்கிளி இறந்துபோகிறாள், அவளை அடக்கம் செய்வதற்கு வழக்கமாக சேரிமக்கள ஊர்தெருவழியாக அல்லாமல் ஊருணிவழியாகத்தான் செல்வார்கள். அப்போது பெய்த மழையில் ஊருணி நிறைந்து வழிந்ததால் பிணத்தை அவ்வழியே கொண்டுசெல்லமுடியாமலும் ஊரின் தெருவழியே கொண்டுசெல்ல திராணியில்லாமலும் தவித்தார்கள். அந்த ஊரில் சுந்தரேசய்யர் ஒரு வழக்கறிஞரும் காந்தியவாதியுமாவார். அவர் ஹரிஜனசேவா சங்கத்தின் முக்கியபுள்ளியும் மதுரை வைத்தியநாதய்யரின் ஆத்ம சீடரும் ஆவார்.அவரிடம் சென்று சுடுகாட்டுப் பாதைக்காக முறையிட்டார்கள், அந்த மக்கள் சார்பாக ஏற்கனவே அந்த வழக்கை சுந்தரேய்யர் வாதாடி நீதிபெற்றிருக்கிறார்கள் ஆனால் அந்த தீர்ப்பை மேல்சாதியினர் ஏற்றுக்கொள்ளச்செய்ய கையாளாகாத அரசு நிர்வாகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சுந்தரேசய்யர் தன்னுடைய மகன் சங்கரனை பிரச்சனைக்கு தீர்வுகாண அனுப்புகிறார். சங்கரனின் நண்பனும் சப்-கலெக்டருமான வாட்ஸனுன் மேல்சாதிக்காரர்களை அணுகி பேசுகிறார்கள், பொருளாதாரபலமும், சாதிஆதிக்கமும் கொண்டவர்கள் பிடிவாதமாக அரசாங்கத்தின் பேச்சைக்கேட்கமறுக்க பிணத்தை பிராமணன் சங்கரனும் சப்-கலெக்டரும் தூக்கி நீதிமன்றத்தீர்ப்பையும் மனித உரிமையையும் நிலைநாட்டுகிறார்கள். அந்த மக்களின் சுடுகாட்டுப் பாதையுரிமை அமல்செய்யப்படுகிறது.

அந்த காலத்தில் பிராமணர்கள் அருகில் வருவதற்கே தாழ்த்தப்பட்ட மக்கள் அஞ்சுவார்கள், பார்த்தால் தீட்டு, பேசினால் தீட்டு என மடமை கொண்டகாலத்தில் பிராமணனான சங்கரன் அதுவும் ஒரு சக்கிலியப்பெண்ணின் பிணத்தை தூக்கினால் அக்ரகாரம் பொறுத்துக்கொள்ளுமா? சுந்தரேசயர்ரின் குடும்பத்தால் அக்ரகாரம் தீட்டுப்பட்டுவிட்டது என்று வந்தார்கள், அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. வரலாற்றில் திலகரின் பிணத்தை மகாத்மா காந்தி தூக்கவந்தபோது பிராமணர்கள் அவரை தள்ளிவிட்டார்கள், ஒரு வைசியன் பிராமணனின் பிணத்தை தூக்கலாமோ என்று? பிராமணசாதியில் பிறந்த சங்கரன் படிப்படியாக “தோல்” ஷாப் தொழிலாளிகளுக்காக அரசாங்க நிர்வாகத்திடம் ஒரு வக்கீலாகவும் தொழிற்சங்கவாதியாகவும் போராடினார். சுந்தரேசய்யர் மகனின் இந்த நடவடிக்கைகள் தன்னுடைய செயலின் தொடர்ச்சியாகவே பார்த்தார். ஆரம்ப காலத்தில் முடநாற்றம் வீசும் அந்த மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஒரு அசூயையுடன் சென்ற சங்கரன் தொடர்ந்து அவர்களோடு ஒன்றாக உணவருந்துவது அந்த மக்கள் சமைத்த உணவை உண்ணப்பழகிப்போனார். அந்த மக்கள் வேலைசெய்யும் தோல் ஷாப்பிலிருந்து கொண்டுவரும் மாமிசம் அதாவது பச்சைத்தோலிலிருந்து வழித்து எடுப்பது , விட்டுப்போன கொழுப்பு, சவ்வு போன்றவைகளை குச்சிக்கிழங்குடன் சமைத்த உணவுதான் சங்கத்தலைவர்களுக்கு விருந்து. இன்னமும் இரட்டை குவளைகள் அமலில் இருக்கிற சூழ்நிலையில் ஒரு சங்கரன் செய்த காரியம் சாதாரணமானதா?

சங்கரன் தலைமையில் தோல் தொழிலாளர்கள் சங்கம் அமைத்து தங்கள் உரிமைகளுக்காக போராடினார்கள். இதுவரை முதலாளிகளைக்கண்டு கூனிக்குறுகிய சக்கிலியர்கலும் பறையர்களும் சங்கத்தின் நிர்வாகிகள் என்பதால் அரசங்கத்தின் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமதையாக உட்காருவதை கண்டு அஸன் ராவுத்தரும், வரதராஜூலு நாயுடுவும் சுந்தரம் அய்யரும் முதலான தோல் ஷாப் உடமையாளர்கள் கொதித்துப்போனார்கள். அவர்களின் ஆத்திரம் சங்கரன்மேல் பெருகியது, அவனை ஒழித்தால் இவர்கள் அடங்கிவிடுவார்கள் என்று அடியாட்கள் மூலம் கொலைமுயற்சி செய்தார்கள். காவல்துறையை விலைக்குவாங்கி ஏவிப் பார்த்தார்கள். அந்த மக்கள் குடியிருந்த சேரி அடிக்கடி காவல்துறையின் வன்முறைக்கு இலக்காக இருந்தது. தொழிற்சங்க வரலாற்றோடு,அரசியல் இயக்கவரலாறும் இடம்பெறுகிறது. இக்கதையின் மாந்தர்கள் யாவரும் இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர்களும் அந்நகரில் வாழ்ந்த பாட்டாளிகளுமாவர். நாவலின் காலம் இந்திய விடுதலைக்கு முன்னர் ஆரம்பித்து 1952 வரை செல்கிறது. தோல் ஷாப்பின் தொழிலாளி அந்த நகரத்தின் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். சங்கரன் பூனூலை  அறுத்தெரிந்து சாதியற்றவானாக மாறுகிறார், தேவசாதி குலத்தில் பிறந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்கிறார்.

இந்த நாவல் வர்க்கப்போராட்டத்தின் வரலாறாகவும், அருந்ததியர்கள், பறையர்களின் வாழ்க்கைப் பதிவாகவும் தொழிற்சங்க இயக்கத்தின் வர்லாறாகவும், பொதுவுடமை இயக்கத்தின் வரலாறாகவும் இருக்கிறது.

ஞாயிறு, 16 ஜூன், 2013

கொள்கைக் காரங்க நாங்க!

சித்தாந்தவாதிகளெல்லாம் கொள்கைப்பிடிப்போட இருப்பாங்க, அதுலயும் ஆர்.எஸ்.எஸ் காரங்களுக்கு கை சுத்தம்.. இப்படி கொஞ்சபேர் சொன்னாங்க!

இவரோட கதை எல்லாருக்கும் தெரியும் அதனால விளக்கம் வேணாம், ஒரு ஆள் நல்லவனா கெட்டவனான்னு கண்டுபிடிக்க அவருகிட்ட கொஞ்சபணம் கொடுத்தா தெரிஞ்சுபோயிடும், அதிகாரமும் அதமாதிரிதான் அதிகாரம் கிடைக்கிறவரைக்குத்தான் சுத்தம் அப்புறம் சூட்கேஸ்தான். காசு கொடுத்தா விலைபோறவங்க!

இவரையும் தெரியும் சர்க்கரை ஆலை சாம்ராஜ்யம். கைசுத்தம். இவங்கதான் அந்த வித்தியாசமான கட்சியை கண்ட்ரோல் பண்றது.
என்னோட நண்பனுக்கு இந்த கட்சியை ரெம்ப பிடிக்கும் ஏன்னா கைசுத்தம் நேர்மையான ஆளுங்க, இதெல்லாம் அவங்க ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி இந்த நிலக்கரி ஊழல், சுரங்க ஊழல், சவப்பெட்டி ஊழல் ஆயுத ஊழல் எல்லாத்துலயும் சிக்குனபின்னாடியும் அவனுக்கு இந்த கட்சிதான் பிடிக்கும் ஏன்னா அவனுக்கு இடஒதுக்கீடு பிடிக்காது, அப்புறம் இந்தியா இந்து ராஷ்டிரமா மாறனுங்குறது. சாதி, மதத்தை தாண்டி வெளியவரமுடியல கயிறு தடுக்குது.