புதன், 2 ஏப்ரல், 2014

நீண்ட விடுமுறைக்குப்பின்...

வலைப்பக்கத்தில் எழுதியும் மற்றவர்களையும் வாசித்தும் நீண்ட நாட்கள் என்று சொல்வதை மாதங்கள் ஆகிவிட்டன. இந்த எழுதாமல் வாசிக்காமல் விட்டதற்கு ஏதோ ஒரு குற்ற உணர்வும் சோம்பேறித்தனமும் தான் காரணம். குற்ற உணர்வு என்றால் சமூகமுன்னேற்றத்தைப் பற்றி நிறைய கவலைப்படுகிறேன் ஆனால் நம்மால் களப்பணி எதுவும் செய்யமுடியவில்லையே என்றொரு உணர்வு மனதில் அரித்துக்கொண்டிருக்கிறது. எழுதுவது என்பது மீண்டும் புதிதாக வாசிக்கத் தூண்டவும்செய்கிறது. மனிதம் பற்றிய இரு நாவலகளை பெப்ரவரியில் வாசித்தேன். இரண்டும் இந்தியத் துணைக்கண்டத்தில் சென்ற நூற்றாண்டில் இந்தியாவோடு இருந்த பங்களாதேஷ் நாட்டில் சிறுபான்மை இந்துக்களை, பெரும்பான்மை மதவெறி சிறுபான்மை இந்துக்களை சூறையாடும், ஒடுக்கும் சம்பவங்களைப்பற்றியது. அந்த நாவலை ஒரு ரயில் பயணத்திலேயே வாசித்துமுடித்தேன். லஜ்ஜா என்ற நாவ்லைப் பற்றி வாசிப்பு அனுபத்தையும் கடைசியாக எழுதினேன். வாசித்த சிலநாட்களுக்குப் பின்னர் ஒரு செய்தி பார்த்தேன், தமிழகத்தில் ஏதோ ஒரு இஸ்லாமிய அமைப்பு அந்த புத்தகத்தின் தமிழ் வெளியீட்டை தடைசெய்ய வேண்டும் என கோரியிருந்தது. அந்த நாவ்லை வாசித்து இங்கே சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மீது வன்முறை பரவிவிடுமோ என்கிறார்கள். அந்த நாவலை ஒரு இந்துத்துவாதி வாசித்திருந்தால் இங்கே மதவெறி பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியும்.. அத்தனை சமப்வங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஓரிடத்தில் சிறுபான்மையினராக இருப்பவர்கள் மற்றொரு இடத்தில் பெரும்பான்மையினராக  இருக்கிறார்கள், அங்கே ஒடுக்கப்படும் இனத்திற்கு இங்கே பலிவாங்கவும், இங்கே ஒடுக்கப்படுவர்களுக்கு அங்கே பதிலடியும் தொடர்ந்தால் மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கொல்லப்பட்டு சாவார்கள். மதவெறி அது பெரும்பான்மை, சிறுபான்மை என எல்லா மதங்களினாலும் மக்கள் பலியாகக்கூடாது என்பது நமது புரிதல்.

சமீபத்தில் மறைந்த குஷ்வந்த்சிங் அவர்கள் எழுதிய ‘பாகிஸ்தான் போகும் ரயில்’’ நாவலையும் வாசித்து முடித்திருந்தேன். ஒரு சராசரி மனிதன் எந்தவொரு ல்ட்சியமும் இல்லாத சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தும் ஒருவன் மதவெறி கொண்டு பழிக்குப் பலி வாங்கும் செயலான ‘பாகிஸ்தான் போகும் இஸ்லாமியர்களை கொல்லப் போகும் சதியை’ இயல்பாக முறியடிக்கிறான். நாவலில் ஒரு இடதுசாரி பாத்திரத்தைப் பற்றி சொல்கிறார், அவன் பெயர் இக்பால். இக்பால் என்ற பெயர், சீக்கியர்கள், மார்வாடிகள் மற்றும் இஸ்லாமியர்கள் வைத்துக் கொள்ளும் பொதுப்பெயர். நாடு பிரிவினை சந்தித்தபோது மக்கள் ஒற்றுமைக்காக  கம்யூனிஸ்ட் கட்சி  அப்போது ஐரோப்பாவில் கல்விகற்ற கட்சி உறுப்பினர்களை எல்லோயோர கிராமங்களுக்கு அனுப்பி மத நல்லிணக்கத்திற்கு பாடுபட்டதை நாவலில் பதிவு செய்திருக்கிறார். ஆனால், லட்சியத்தோடு ‘மனோமஜ்ரா’ விற்கு வந்த  இக்பால் சோபிக்கவில்லை.  “நாற்காலியைவிட்டு எழுத்திருக்காத டைப் ” என்ற வரிகள் குற்ற உணர்வு கொள்ளச்செய்கிறது. எதற்கும் துணிந்த ஒரு ரெளடியான் ஜக்காசிங் இயல்பாகவோ, அல்லது தனது காதலி உயிரோடு பாகிஸ்தான் செல்லவேண்டும் என்ற நோக்கத்திலோ பாகிஸ்தான் போகும் இஸ்லாமியர்களை காப்பாற்றி அதில் பலியாகிறான்.

இந்த நாவலை வாசித்துமுடித்தவுடன்  Train To Pakistan என்ற சினிமா நாவலை வைத்து தயாரித்திருக்கிறார்கள் என்று தெரிந்து அதை பார்த்தேன். நாவலை வாசிக்காமல் சினிமா பார்த்திருக்கவேண்டும்.  ஒரு 260 பக்கமுள்ள நாவலின் ஒவ்வொரு பக்கத்தின் வர்ணனையும் சினிமாவில் எதிர்பார்க்க முடியாது என்று புரிந்துகொண்டேன். வங்கத்தின் சிறந்த திரைப்பட இயக்குனர் மிருணாள்சென் தன்னுடைய சுயசரிதையில் காப்ரியல் மார்கவேஸ் பற்றி எழுதியிருப்பார். தன்னுடைய நாவல்கள் சினிமாவாக மாறுவதை மார்கவெஸ் விரும்பவில்லை என்று சொன்னாராம்.

தற்போது வாசித்து வரும் நூல் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய  “வலையில் விழுந்த வார்த்தைகள்” அதை ஏற்கனவே வாசித்தது போல இருக்கிறது ஏனென்றால் அவருடைய வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏப்ரல் 16ம் தேதியன்று சார்லி சாப்ளின் என்ற மகத்தான கலைஞனின் 125வது பிறந்தநாள் வருகிறது, சாப்ளினின் வாழ்க்கை வரலாற்றையும் வாசித்து முடித்தேன். அதை ஒரு பதிவாக எழுதவேண்டும். ஏப்ரல் 16க்குள்.. முயற்சிக்கலாம்.

கருத்துகள் இல்லை: