வெள்ளி, 11 ஏப்ரல், 2014

சாப்ளின் கதை -- 2


 'The Kid' என்ற திரைப்படத்தில் ஓர் தாய் பெற்ற குழந்தையை வளர்க்க முடியாமல் பெரிய கனவான் வீட்டுக்கு முன்னால் நின்ற காரின் இருக்கையில் குழந்தையை வைத்துவிட்டு ‘தயவு செய்து அன்புகாட்டுங்கள்’ என்ற சீட்டு எழுதிவைத்து விட்டுப் போய்விடுவார். சார்லியிடம் வந்துசேரும் குழந்தையை வளர்த்து வருவார், குழந்தைக்கு உடல்நலமில்லாத நேரத்தில் மருத்துவரை அணுகியபோது அனாதை குழந்தையை வளர்த்துவருகிறேன் என்று சொல்வார், உடனே அனாதை குழந்தைகள் மையத்திலிருந்து குழந்தையை வலுக்கட்டாயமாக கொண்டு செல்லும்போது குழந்தையின் உணர்ச்சி ஒரு தாயிடமிருந்து பிரிக்கப்பட்டதாக இருக்கும். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவத்தை சினிமாவில் காட்சியாக்கியிருப்பார். அனாதை களுக்கான பள்ளியிலும் தொழிலகத்திலும் இருந்த சார்லியையும் ஸிட்னியையும் தாய் ஹன்னா, என்னால் சொந்தவீடு அமைத்துக் கொள்ளமுடியும் என்று அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளித்தபிறகு குழந்தைகளை அழைத்துச்செல்ல அனுமதி தந்தார்கள். பட்டினியோடு வாழ்ந்தாலும் அம்மாவின் அண்மை சார்லிக்கு பூச்செண்டாக இருந்தது.

அம்மா வீட்டிலிருந்தபடியே தையல் வேலைகளை செய்து குழந்தைகளை வளர்த்தார். அப்போது சார்லிக்கும், ஸிட்னிக்கும் பொழுதுபோக்கிற்காக நாடகம் நடித்து காண்பித்தார். எங்கிருந்தாவது கிடைக்கும் செய்தித்தாள்களில் இருக்கும் நகைச்சுவையை வாசித்துச் சிரித்து துன்பத்தை போக்குவார். சிலவாரங்கள் கழித்து அம்மாவுக்கு ‘மனநோய்’ வந்ததால் மிகவும் ஏமாற்றமாக போனது. அப்போது சார்லியின் அப்பா இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்திவந்தார். அம்மாவை ‘மனநோய் விடுதிக்கு’ அழைத்துச் சென்றவுடன் சார்லியையும் ஸிட்னியையும் அரசாங்க அதிகாரிகள் அப்பாவிடம் கொண்டுசென்றார்கள். அங்கே லூஸி என்ற பெண்மணியும் அவளுடைய மூன்றுவயது மகனும் இருந்தார்கள். வேண்டாத விருந்தாளிகளின் புதுவரவால் லூஸி எரிச்சலடைந்தாள். சிறுவர்களை வேலைவாங்கிக் கொண்டு உணவுகொடுத்தாள். தந்தையைப் போல லூஸியும் பெரிய குடிகாரியாக இருந்தாள். எப்போதும் அவளுடைய அண்மை சிறுவன் சார்லிக்கு பயத்தைக் கொடுத்தது. அங்கிருந்தபடியே பள்ளிக்கு சென்றான். பள்ளிநேரம் முடிந்தவுடன் நேராக வீட்டுக்குவந்து சில்லரை வேலைகளைச் செய்யவேண்டும். ஒருநாள் மாலைநேரம் பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது, வெகுநேரம் காத்திருந்தபோதும் யாரும் வரவில்லை. அப்படியே பசியோடு கால்போன போக்கில் நடந்தான், சாலைகளின் ஓரத்தில் விற்கும் உணவுப் பண்டங்களை பார்த்து பசி தீர்த்துக்கொண்டான். திரும்பி வீட்டுக்கு வந்தபோது இரவாகிவிட்டது அப்போதும் பூட்டிய கதவு திறக்கப்படவில்லை. பயத்தில் பசியும் மறந்தான், அருகே இருந்த பூங்காவின் அருகே சாலையோரத்தில் படுத்து உறங்கினான். பிறகு ரோந்துவந்த போலிஸ்காரர்கள் வீட்டிற்கு கொண்டு சேர்த்தார்கள்.

அம்மா சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினார்கள், குறைந்த வாடகையில் ஒருஅறையுள்ள வீட்டை வாடகைக்கு பிடித்தவுடன் லூஸி யிடமிருந்து சிறுவர்களை அழைத்துச்சென்றார்கள். ஸிட்னி பனிரெண்டு வயதில் கப்பலில் வேலைக்குச் சென்றான். அம்மா மனநோய் காலத்தில் தேவாலயத்திற்கு அடிக்கடி சென்றார்கள். அங்கிருந்து சிறுசிறு வேலைகள் கிடைத்தன.  ஜாக்சன் என்பவர் குழந்தைகளை வைத்து சிறிய நாடகக் கம்பெனி நடத்திவந்தார். சார்லியின் தந்தை அங்கே சார்லியை சேர்த்துவிட்டார். எட்டுவயது சார்லி நாடகம் நடிப்பதற்கு இங்கிலாந்து முழுதும் சுற்றிவந்தான். அந்த வேலை கற்றுக்கொள்வதற்கும் பசி இல்லாமல் இருப்பதற்கும் உதவியாக இருந்தது. ஸிட்னி கப்பல்வேலை முடிந்து வீட்டுக்கு வந்தான். தபால் நிலையத்தில் தபால்களை வீட்டுக்குவீடு டெலிவரி செய்யும் பையனாக வேலை செய்தான். சார்லியின் நாடகவேலை உடல்நலக்குறைவால் நின்றுபோனது. சிறுவர்கள் கிழிந்த ஆடைகளை தைத்து அணிந்துவந்தார்கள், ஸிட்னி தபால் சீருடையை வாரத்தின் விடுமுறை நாட்களிலும் அணிந்துவந்தான்.

1899ம் ஆண்டு, இங்கிலாந்தில் அப்போது யுத்தகாலம். சாதாரண மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமானதாகியிருந்தது. வெளியில் எங்கும் யுத்தம் குறித்த பேச்சாகவேயிருந்தது. அம்மா யுத்தம் குறித்து ஒரு நாள் கூட பேசியதேயில்லை,  வாழ்க்கையே யுத்தமாகத்தானே இருந்தது. அம்மா வெகுநேரம் தையல் இயந்திரத்தில் மூழ்கினார்கள். குளிருக்கு முன்னால் ஸிட்னிக்கு ஓர் ஆடை தயாரிப்பதற்காக அதிகம் உழைத்தார்கள். பீஸ் ரேட்டுக்கு உழைப்பதை sweat shop என்பார்கள். அதிகவேலை வாங்கிக்கொண்டு குறைந்த ஊதியம் தருவார்கள். வேலையில்லா திண்டாட்டத்தை சாக்குபோக்கு சொல்வார்கள். ஸ்ட்னி வேலைக்குப்போன நாட்களில் அவன் உடையை அடகுவைப்பார்கள், அவன் வரும்போது மீட்பார்கள். ஒரு சமயம் அடகுக்கடைக்காரன் அதை வைத்துக்கொண்டு பணம்தரமுடியாது, கந்தலான துணிக்கு பணம் தரமுடியாது என்றான். அம்மா வாரக்கடைசியில் மீட்டுக்கொள்வேன் என்று கண்ணீர் விட்டார்கள்.

அப்பாவின் உடல்நிலை மிகமோசமாக இருப்பதாகவும் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக செய்தி வந்தது. அவர் சிரமப்பட்டு மூச்சுவிட்டார்.சில தினங்களில் தன்னுடைய 37வது வயதில் இறந்துபோனார். சவ அடக்கத்தை செய்வதற்குக் கூட பணம் இல்லை, ஒரு தர்ம் ஸ்தாபனம் சவ அடக்கச்செலவை ஏற்றபோது அப்பாவின் தம்பிகள் கோபப்பட்டார்கள். சவ அடக்கத்தின்போது மலர்வளையங்களை வைத்தார்கள் சிலர் பூக்களை போட்டார்கள். எங்களிடம் இடுவதற்கு ஒன்றுமில்லை, என்னிடமிருந்த மிகவும் பிடித்த கைக்குட்டையைத்தான் போட்டேன். வீட்டில் அடுத்தவேளை உணவுக்கு ஒன்றுமேயில்லை, விற்பதற்காக ஒரு பொருளும் இல்லை. பழைய எண்ணெய் அடுப்பு இருந்தது, அதை விற்று பசி தீர்த்தார்கள். அப்பாவின் உடமைகளை ஆஸ்பத்திரியிலிருந்து கொடுத்தனுப்பினார்கள். அதில் ஒரு ஆரஞ்சுப்பழம், ஒரு கோட், காலுறைக்குள் திணித்த அரை பவுன் நாணயம் இருந்தது. அப்போது கடவுளின் அனுக்கிரகமாகயிருந்தது.

அப்பா இறந்த துக்கச்சின்னமாக கையில் துணி கட்டியிருந்தான், மொத்தமாக பூக்கள் வாங்கி சிறு சிறு கட்டுகளாக பிரித்து விற்பனை செய்தான். துக்கச்சின்னத்திற்காக எல்லாமே சீக்கிரம் விற்பனையானதுடன், சிலர் அன்பளிப்பும் கொடுத்தார்கள். ஒருநாள் மதுக்கடையில் விற்ற வெளியே வந்தபோது அம்மா திட்டினார்கள். அதன்பிறகு சில்லரை விறப்னைக் கடையில் விளம்பரக்காரன் வேலை, மருத்துவரிடம் உதவியாளர் வேலை, வீட்டுவேலை, கண்ணாடி தயாரிக்கும் பவுண்டரியில் வேலை, புத்தகம் விற்பனை வேலை, அச்சகத்தில் வேலை என பல இடங்களில்  உழைத்தான்.  சார்லியின் அம்மாவழி தாத்தா மூட்டுவலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அம்மா, அடிக்கடி போய் பார்த்துவந்தார்கள். அந்த சந்திப்பு லாபகரமாக இருந்தது. அங்கிருந்து பைநிறைய முட்டைகளுடன் வருவார்கள். பசி நாட்களில் அது ஆடம்பரமாக உணர்ந்தார்கள். தாத்தா மருத்தவமனையிலிருந்து குண்மாகி திரும்பிவந்த நாள் மகிழ்ச்சிகரமாக இல்லை, ஏனென்றால் இனி முட்டை கிடைக்காதல்லவா..

                                                                                                                                --தொடரும்

கருத்துகள் இல்லை: