ஞாயிறு, 6 ஜனவரி, 2013

மொழிகள் பற்றி...



எப்போதுமே அவரவர் தாய்மொழி உயர்ந்ததுதான் ஆனால் அதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றமொழிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. இன்றைக்கு மின்னஞ்சலில் வந்த செய்தியில் தமிழ் மொழியின் ஆரம்பம் கி.மு. 50000 ஆண்டுகளாம். தலைசுற்றுகிறது, மொழிப்பற்று இருக்கலாம் ஆனால் புருடா விடுவதர்கு ஒரு அளவு வேண்டாமா? அதேபோல உலகில் முதலில் மனிதர்கள் தோன்றிய இடம் லெமூரியா கண்டம் எப்போதென்றால் 2.5 பில்லியன் ஆண்டுகள் அப்படியென்றால் 250 கோடி ஆண்டுகள். இன்னும் இதைபொன்ற அறிவியலுக்கு முரணான நிறைய தகவல்கள் கொண்ட மின்னஞ்சல்கள் , வலைப்பக்கம் மூலமாகவும் நிறைய பேரை சென்றடைகின்றன. ஆகா நாம் தமிழர்கள் எவ்வளவு பெருமைக்குரியவர்கள் என்ற புளங்காகிதம் அடைகிறோம். இன்னும் தமிழிலிருந்து சீனமொழிக்குடும்பம் பிரிந்ததாம் எப்போதென்றால் 35000 - 50000 ஆண்டுக்கிடையில். இந்த தவலை யார் உருவாக்குகிறார்கள் என்று தெரியாது ஆனால் நமக்கு எளிதான விஷயம் அதை அப்படியே கொஞ்சம் அது உண்மையா, இல்லையா என்று ஆராயாமல் பார்வேர்டு செய்துவிடுவதில் ஒரு மகிழ்ச்சி. ஒரு சில நண்பர்கள் மூடநம்பிக்கைகளை கடைபிடித்துக்கொண்டே அதற்கெதிரான செய்திகளையும் மற்றவர்களுக்கு சொல்கிறார்கள். முதுகலையில் அறிவியல் வேதியியல் படித்த நண்பர்கள் சிலர் ‘ஏழுமலையானின் புகைப்படத்தை’ மெயிலில் அனுப்பி ஒரு பத்து பேருக்கு இதை பார்வேர்டு செய்தால் இத்தனை நாளுக்குள் நல்லது நடக்கும்  அதை உணர்வீர்கள் என்று அனுப்புவது கொஞ்சமும் அவர்கள் கற்ற கல்வியை வாழ்க்கைக்கு பயன்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டிலிருந்தே வெளியே எந்த மாநிலத்திற்கும் சென்றாலும் நம்மை எளிதாக அடையாளம் காணுகிறார்கள் எப்படி இந்தி சுத்தமா தெரியாது? எந்த மொழியை கற்கவேண்டும் என்பது அவரவர் உரிமை, மத்திய அரசாங்கம் ஹிந்தியை திணித்தது என்பதற்காக திமுகவில் மொழிப்போர் தியாகிகள் அதாவது தீக்குளித்தார்கள் அந்த நெருப்பை வைத்து ஆட்சியை பிடித்தார்கள். ஆங்கிலம் கற்பதில் எந்த இழிவும் இல்லை, அது ஏகாதிபத்திய மொழி என்று இகழ்வதில்லை அது இல்லையென்றால் இந்தியாவை விட்டு வெறெங்கும் செல்லமுடியாது என்பதைவிட கணிதம், மருத்துவம், அறிவியல் , தொழில்நுட்பம் எல்லாம் ஆங்கிலம்தான்.  சரி, இந்தியை ஒரு தொடர்பு மொழிக்காக நாம் கற்பதில் என்ன தவறு, ஒரு மலையாளி எங்கே சென்றாலும் இன்னொரு மலையாளியிடம் தாய்மொழியில் பேசுகிறான். ஆனாலும் அவன் ஹிந்தியை கற்றுக்கொண்டான். தமிழ் எங்கள் மூச்சு என்று பேசியவர்கள் காலத்தில்  தான்  தமிழ்நாட்டில் தமிழை ஒருபாடமாகவது கற்கவேண்டும் என்று சட்டம் போட வேண்டியிருக்கிறது. இது அவர்களின் தமிழ் பற்றுக்கு கிடைத்த வெற்றி! இன்னும் இந்த  தமிழர்கள் இரண்டாம்  /மூன்றாம் விருப்பப்பாடமாக பிரெஞ்ச் கற்கிறார்கள், ஆனால் தமிழை பாடமாக கற்காதவர்கள் தமிழகத்தில் உண்டு. எப்போதும் மொழிகளில் உயர்வு தாழ்வு இருந்திருக்கிறது. 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் படித்தவர்கள், பண்க்காரர்கள் பிரெஞ்சில் தான் பேசுவார்கள் ரஷ்யாவிலும் ஜார் மன்னர் காலத்தில் மேட்டுக்குடியினரின் மொழி பிரெஞ்ச் தான். இந்தியாவில் மேட்டுக்குடியினரின் மொழி ஆங்கிலம்,சாமானியர்கள் பேசுவதை எலைட் குடிகள் பேசக்கூடாது என்பது உலக நியதி. இப்போது தமிழகத்தை விட்டு வெளியே வந்து ஹிந்தி தெரியாமல் அவஸ்தை படுபவர்கள் எல்லோரும் அரசியல்வாதிகளை ஏசுகிறோம். என்ன செய்வது. காசுகொடுத்து ஹிந்தி  கோச்சிங் சென்றாலும் பரவாயில்லை அரசாங்கப் பள்ளியில் அதை குறிப்பிட்ட வகுப்புக்கு மேலே ஒரு பாடமாக வைப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள், விருப்பப்பாடமாக வையுங்கள்,  விருப்பமுள்ளவர்கள் கற்றுக்கொள்ளட்டும்

சம்ஸ்கிருதத்தைப் பற்றி நீண்டகாலமாக ஒரு அபிப்பிராயம் வைத்திருந்தேன், அது தேவபாஷை, வேதங்களின் மொழி, செத்த மொழி, மேலும் மதவாத சக்திகள் சம்ஸ்கிருத்ததை தலையில் வைத்துக் கொண்டாடுவதால் இன்னும் அதர்கு மேலே வெறுப்பு, இந்தியாவில் அதற்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்து அதை வளர்ப்பதற்கு இலாகா போட்டு ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒதுக்குகிற நிதியைப் பார்த்து வெறுப்பு, ஆனால் சம்ஸ்கிருதத்தைப் பற்றி சமீபத்தில் நீதிபதி கட்ஜூ எழுதிய ‘sanskrit a language of science' என்ற கட்டுரையை வாசித்ததிலிருந்து அதன் மேலிருந்த பார்வை மாறிவிட்டது. கோவில்களில் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டு அதைவைத்து பணம் பண்ணுகிற ஒரு கூட்டத்தின் மொழி எப்படி விஞ்ஞான மொழி?

சம்ஸ்கிருதத்தில் 5 சதம்தான் மதம் சம்பந்தமானது, மீதி 95 சதம் தத்துவம், அறிவியல் கணிதம், சட்டம், இலக்கியம், கவிதை, மருத்துவம் பற்றியது. முதலில்  இந்தியத்தத்துவங்கள் பற்றிபார்த்தால் கடவுளை மறுத்த தத்துவதங்கள் தான் அதிகம், நியாயம், வைசேடிகம்,சாங்கியம், யோகம், மீமாம்சம், வேதாந்தம். இதில் முதல் 5 தத்துவங்கள் கடவுள் மறுப்பைக் கொண்ட தத்துவங்கள். இன்னும் சார்வாகம், பவுத்தம், சமணம் போன்ற தத்துவங்கள் வேதமரபுகளுக்கு எதிரானவை, பின்னாளில் சமணமும், பெளத்தமும் மதமாகிப்போனது. இந்தியாவில் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் தோன்றிய தத்துவங்கள் பின்னர் வேதமதத்தால் அழிக்கப்பட்டன. கணிதத்திலும் நமது முன்னோர்கள் பூஜ்யம் கண்டுபிடிப்பு பெரிய சாதனை, எண் களை அரேபிய எண்கள் என்று ஐரோப்பியர்கள் அழைத்தார்கள், அரேபியர்கள் இந்தி எண்கள் என்றார்கள் உண்மையில் யார் கண்டுபிடித்தது? அரபி, பாரசீகம் உருது மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படுபவை ஆனால் எண்களை மட்டும் அவர்கள் இடமிருந்து வலமாகத்தான் எழுதுகிறார்கள் அப்படியென்றால் இடமிருந்து வலமாக எழுதும் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. ஐரோப்பாவில் தோன்றிய எண்முறை என்பது ரோமன் எண்கள். ஒன்று, ஐந்து, பத்து, ஐம்பது, நூறு, ஐநூறு ,ஆயிரம் என்ற எண்களுக்கு மட்டும் குறீயீடு உள்ளது அதை வைத்துதான் எழதமுடியும், உதாரண்மக்க 3000 என்று எழுதவேண்டுமானால் M என்பது ஆயிரத்தைக்குறிக்கும், மூன்றுமுறை MMM எழுதினால் அது 3000. இந்தியாவில் வானசாஸ்திரத்திலும் ஆர்யப்பட்டா, பிரம்மகுபதர், பாஸ்கரா வராகமிஹிரர் போன்றோர் பங்களிப்பு மகத்தானது.

இந்தியத்தத்துவங்கள் பற்றி தனியாகவே ஒரு பதிவு எழுதவேண்டும்.

2 கருத்துகள்:

kashyapan சொன்னது…

அருமை ஹரிஹரன் அவர்களே! ஜனவரி மாத "செம்மலரில் " தொழர் அருணன் "நீலகேசி " என்ர கட்டுர எழுதியுள்ளார். தயவு செய்து அதனப் பாருங்கள் ! ---காஸ்யபன்

kashyapan சொன்னது…

அருமை ஹரிஹரன் அவர்களே! ஜனவரி மாத "செம்மலரில் " தொழர் அருணன் "நீலகேசி " என்ர கட்டுர எழுதியுள்ளார். தயவு செய்து அதனப் பாருங்கள் ! ---காஸ்யபன்