வியாழன், 27 செப்டம்பர், 2012

சாமான்ய மனிதர்களைப் பற்றி கவலைப் படாத தேசம்.நேற்று சென்னை திருவிக நகரில் பாதாளச்சாக்கடை அடைப்பை சுத்தம் செய்யும்போது ஈடுபட்ட தொழிலாளர் ஒருவரும் மாநகராட்சி அதிகாரி ஒருவரும் பலியாகியுள்ளனர். இதை எதிர்பாராத சம்பவம் , விபத்து என்றெல்லாம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துவிட்டுப் போய்விடலாம். ஆனால் இது கொலை, அரசு செய்த கொலை அதனால் யாருக்கும் தண்டனை கிடையாது. மனிதக்கழிவை மனிதர் அள்ளும் நிலையை நீதிமன்றம் தடைசெய்துவிட்டதாக செய்திகளில் வருகின்றன. ஆனால் தடையை மீறுவது சமூக விரொதிகளோ, லாபம் ஒன்றே குறிக்கொளுடன் செயல்படும் முதலாளியும் அல்ல. சட்டத்தை உருவாக்கி அமல்படுத்துகிற அரசு இயந்திரம். இது தான் முதல்முறையா? என்றால் பட்டியலுக்குள் செல்லமுடியாத அளவிற்கு மரணங்கள் ! கொலைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியா வல்லரசு நாடுகளுடன் போட்டிபோட வேண்டும் அந்நிய நாட்டு மால்கள் இங்கே கடைவிரிக்கவேண்டும், என்று சொல்வோர்கள் யாரும் சாக்கடை அடைப்பை நீக்கம் செய்ய இயந்திரம் வேண்டுமென்று சொல்லவில்லை. ஏன் இந்த அலட்சியம், அரசுக்கு, ஆட்சியாளர்களுக்கு. அதை செய்வது இழிந்த சாதி என்பதால் தான்.


இச்சம்பவத்தில் ஒரு காண்ட்ராக்ட் தொழிலாளி கொல்லப்பட்டுள்ளார், அவரை மீட்க உதவி செய்த பொறியாளரும் கொல்லப்பட்டுள்ளார். பெரும்பாலான சம்பவங்களில் அடைப்பு நீக்கும் தொழிலாளிகள் தான் உயிரிழக்கிறார்கள். இதைப்பற்றி விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை,  வேலைவாங்கும் நிர்வாகம் அந்த வேலையில் என்ன ஆபத்து இருக்கிறது என்று தெரியப்படுத்துதலும் இல்லை. 19ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் ஆலைப்பணிகளில் தொழிலாளி இறந்தால் அவனைத்தூக்கி வீசிவிட்டு இன்னொருவனை அதெ பணியில் அமர்த்திக்கொள்வார்கள் எந்த இழப்பீடும் தரத்தேவையில்லை. அந்த நிகழ்ச்சி கண்ணெதிரே நம் நாட்டில் நடந்துவருகிறது. அதில் முறைசாராத் தொழிலாளர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். 1990களுக்குப் பின் புதிய வேலைவாய்ப்புகள் எல்லாம் காண்ட்ராக்ட் மயம்தான். அது அரசு நிறுவனமாக இருந்தாலும் தனியார் நிறுவனமாக இருந்தாலும் ஆபத்தான பணிகளை செய்வது ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். ஏனென்றால் நிர்வாகத்தை கேள்வி கேட்டால் அதே வேலையைச் செய்ய ஒருவன் வரிசையில் நிற்கிறான். பணிப்பாதுகாப்பும் இல்லை, உயிருக்கு பாதுகாப்பும் இல்லை. இழப்பீடும் வழங்கத் தேவையில்லை.

“இன்னொரு முறை நான் பிறக்க வாய்ப்பில்லைதான். ஆனால் அப்படி ஒரு வாய்ப்ப்ய்க் கிடைத்து இப்பூமியில் பிறக்க நேர்ந்தால் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்தில்தான் பிறக்க விரும்புகிறேன். மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் மனிதாபிமானமற்ற , சுகாதாரமற்ற, வெறுக்கத்தக்க பணியிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காகவே அப்பிறவியைப் பயன்படுத்துவேன்” என்று மகாத்மாகாந்தி ஒரு முறை எழுதினார்.  தான் இன்னொருமுறை பிறக்கமாட்டேன் என்று மகாத்மாவுக்குத் தெரியும் போல.

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையில் ஏராளமானவர்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் புலம் பெயர்ந்தார்கள். பொறுப்புக்கு வந்ததும் முதல் காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட , தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாகத் தடைசெய்து உத்தரவு போட்டது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா சென்றுவிட்டால் கக்கூஸ் அள்ளுவது யார்? சாக்கடை அள்ளுவது யார்? அவர்கள் எஸ்மா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பபட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது. சுகாதாரப் பணி செய்த தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் முஸ்லீம் எஜமானர்களைப் பின்தொடர்ந்து செல்ல எல்லையில் நின்றனர்.

யுவா சுவாங் இந்தியாவுக்கு வந்தபோது நகரங்கள் இங்கே சுத்தமாக இருப்பதாகவும் கழிவுகள் சுத்தம் செய்ய தனி ஏற்பாடுகள் இருப்பதாகவும் அப்படி கழிவுகளைச் சுத்தம் செய்யும் மனிதர்கள் நகர மக்களின் சுகாதாரத்தைக் கணக்கில் கொண்டு நகருக்கு வெளியே தூரமாகக் குடியமர்த்தபட்டுள்ளதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்த வேலைகளை செய்யும் அந்த மக்கள் ஆகாத மக்களாகத் தள்ளித்தான் சேரிகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

அருந்ததியர்கள் தமிழகத்தில் பலபெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். பகடை, தொம்மான், மாதிகா, மாதாரி, சக்கிலியர், தோட்டி, ஆதி ஆந்திரர், ஆதி கர்நாட்கர் என. இவர்களுக்கு எந்த உடமையும் இல்லை. இந்த தொழிலிலிருந்து விடுபட்டால் மாற்று ஏற்பாடு செய்வதற்கு அரசுகள் தயாராக இல்லை. இடஒதுக்கீட்டின் பயனை பெறமுடியவில்லை. கல்விக்கூடங்களுக்குச் சென்று அங்கேயும் பள்ளிக்கூட கக்கூஸை ஆசிரியர்கள் சுத்தம் செய்யச் சொன்ன சம்பவங்கள் நிறைய உண்டு. சக உயர்சாதி மாணவர்கள் இவர்களுடன் பழகுவதில்லை.  ஆரம்பக்கல்வியோடு நின்று போன குழந்தைகள் நிறைய உண்டு. அப்புறம் எங்கே அரசு வேலைக்கு போட்டிபோடுவது. தனியார் நிறுவனக்கள் கண்ணுக்குத் தெரியாமல் சில சாதிகளுக்கு திறமையிருந்தும் வேலை தருவதில்லை.

நாளும் பொழுதும் நரகலையே பார்த்துப் பார்த்து விதவிதமான ஒவ்வாமை உணர்வுகளுக்கு ஆளாகும் இத்தொழிலாளிகள் வெத்திலை போட்டும் சாராயம் குடித்தும் மனம் அழிக்கிறார்கள். சமைத்துச் சாப்பிடும் மனநிலையே வாய்க்காமல் ஓட்டல்களில் ஏதாவது வாங்கிச் சாப்பிடும் பழக்கம் ஏராளமானவர்களுக்கு இருக்கிறது.  குடும்பமே ஓட்டலில் சாப்பிட்டுக் கடனாளியாகி சாராயம் குடித்துக் கடனாளியாகி என அருந்ததியர் வாழ்வு கொடுமையான கந்துவட்டிக் கடனில் மூழ்கிக்கிடக்கிறது. இவர்களிடம் வட்டி வாங்கியே கோடிஸ்வரர்களாக பிழைக்கும் கூட்டம் ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சி களிலும் இருக்கிறது. ஏழைகள் எல்லாச் சாதியிலும் இருக்கிறார்கள், ஆனால் எந்தச் சாதியாரும் பிறசாதியாரின் மலத்தைச் சுமப்பதில்லை.

மனிதர் கழிவை மனிதர் அள்ளும் நிலைமை பற்றி Frontline magazine செப்டம்பர் 2006ம் ஆண்டு இதழில் கவர்ஸ்டோரி வெளியிட்டுள்ளது. அருந்ததியர்கள் வாழ்க்கை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இன்னும் அவர்களை எட்டிப்பார்க்காத கல்வி, கவுரமான வேலைக்கு வகைசெய்யும் இடஒதுக்கீடு பற்றிய சிந்தனைகளில் மாற்றம்பெரும். ஊடகங்கள் இந்தச்சாவு சம்பவங்கள் வரும்போது அதை விவாதப்பொருளாக க்கொள்ளும். ஆனால் அது அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் அது விவாதப்பொருளாக  வரவேண்டும்.

http://www.frontlineonnet.com/fl2318/stories/20060922005900400.htm2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வேதனை தரும் சம்பவம்...

இந்தக் கொடுமைகள் எல்லாம் எப்போது முழுவதும் தீருமோ...?

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே!மௌனமாக அருந்ததியர்களுக்கு அவர்களுக்காக தங்களால் ஆனதைச் செய்யும் பலரைத் தெரியும்.செல்வராஜ் அவர்களின் "தோல்"நாவல் படியுங்கள்.அதில் வரும்மனிதர்கள் உயிரும்சதையுமாக நடமாடி வாழ்ந்தவர்கள்.அந்த தலைவர்களொடு நெருங்கி பழகியவன் நான்.அ.பாலசுபிராணியம்,கிரி,தங்கராஜ் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களாய் வாழ்ந்தவர்கள்.அந்த அப்பாவி மக்களொடு வாழ்ந்த கிரி அவர்கள் அவர்களின் குடும்பங்கள் பட்ட பாட்டைச் சொல்லி வருந்தியிருக்கிறார்கள். அவர்களுக்கக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தவர் தோழர் கிரி.".ஏன் சம்மந்தி" என்று சொல்லி ஏமாற்றத் தெரியாத சமூகபணியாளர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு ஆதர்சமாக இருந்தவர் தோழர் பி.ராம அருகில்மூர்த்தி ஆவார். ராமமூர்த்தி அவர்களுக்கு வைத்திய நாதய்யர் ஆதர்சம்.. வைகை நதிக்கரையில் ஸ்டேட் இன்சூரன் மருத்துவ மனை எதிரில் "புதர் வண்ணாண்" என்ற வகுப்பினருக்காக நடக்கும் ஆரம்பப் பாடசாலயே வைத்திய நாதய்யர் பேயரில் தான் நடந்தது. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை---காஸ்யபன்.