சனி, 8 செப்டம்பர், 2012

ஆதாமிண்ட மகன் அபு . . . .இந்த திரைப்படம் சென்ற ஆண்டிற்கான தேசியவிருது வாங்கியிருக்கிறது, சிறந்த திரைப்படத்திற்கும், நடிப்பிற்கும், ஒளிப்பதிவிற்கும், பிண்ணனி இசைக்கும் விருதுகள் வாங்கியிருக்கிறது.  மலையாள சினிமாவிற்கான விருதையும் வாங்கியிருக்கிறது. அப்படியென்ன இந்த சினிமா என்பதற்காக இந்த திரைப்படத்தைப் பார்த்தேன். தமிழ் சினிமாவில் வழக்கமாக இஸ்லாமியனை கடத்தல்காரனாக, தீவிரவாதியாக தேசவிரோதியாக சித்தரிப்பதைக் கடந்து நல்ல மனிதர்கள் பற்றி பாத்திரங்கள் படைத்திருக்கிறார்களா? என்றால் இல்லை.

படத்தில் வசீகரிக்கும் கதநாயகன், கதாநாயகி இல்லை, காதல் இல்லை அதனால்  வெளிநாட்டுப் படபிடிப்பு இல்லை, ஹீரோயிசம் இல்லவேயில்லை, சாதாரண மனிதனைப்பற்றிய கதை.   வில்லன் இல்லை,  கதாநாயகன் நல்லவன் என்பதற்காக கெட்டவன் பாத்திரம் இல்லை,  படம் தயாரிக்க அதிக செலவுமில்லை. இதுவரை காமெடி பாத்திரங்களில் மட்டுமே நடித்துவந்த சலீம் தான் கதையின் நாயகன்.   ஒரு ஏழை இஸ்லாமியன் ஹஜ் யாத்திரை செல்ல ஆசைப்படுகிறான், அவன் கனவு நிறைவேறுகிறதா என்பது தான் படத்தின் கரு.

அபு ஒரு அத்தர்விற்கும் வயதான சிறு வியாபாரி, அவருக்கு ஆயிசா என்ற மனைவி. அவருடைய மகன் சத்தார் துபாய் சென்றுவிட்டான், தாய் தந்தையை அவன் கைவிட்டுவிட்டான். இவர்களுடைய வருமானம் என்பது அத்தர் விற்பதில் கிடைக்கும் வருமானம், வீட்டில் பசு வளர்த்து பால்விற்பதில் மற்றும் பலாமரம் மூலம் கிடைக்கும் வருமானம். ஹஜ் யாத்திரை செல்வதற்கு ஒரு வசதியான பலமுறை ஹஜ்யாத்திரை சென்றுவந்த ஒரு இஸ்லாமியரிடம் சென்று ஆலோசனை கேட்கிறார்.  கோழிக்கோட்டிலுள்ள அக்பர் டிராவல்ஸ் நிறுவனம் வருடந்தோறும் ஹஜ் யாத்திரைக்கு ஒரு பேக்கேஜ் வைத்திருக்கிறார்கள் அதன் மூலமாக சென்றால் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறார். அக்பர் டிராவல்ஸ் சென்று விசாரிக்கிறார், அந்த நிறுவனத்தின் மேலாளர் நிச்சயமாக உங்களை ஹஜ்க்கு அனுப்பி பத்திரமாக திரும்பி அழைத்துவருவது என்னுடைய பொறுப்பு என்று ,அவர்களே அபுவிற்கும் அவரது மனைவி ஆயிசாவிற்கும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கிறார்கள்.

 மிக எளிமையான அவர்கள் வாழ்க்கையில் பிற தேவைகளுக்கோ, தேடல்களுக்கோ இடமில்லை. ஹஜ் யாத்திரைக்காக நீண்டநாட்களாக ஒரு டிரங்க் பெட்டியை உண்டியலாக மாற்றி பணத்தை சேமிக்கிறார். 100, 50,20,10 என பல கசங்கிய நோட்டுகள். பயணத்திற்கான அட்வான்ஸ் தொகையை டிராவல்ஸிடம் தருகிறார். மீதி பணம் புறப்படும் சில நாளுக்கு முன்பு அடைக்கவேண்டும். மீதி பணத்திற்கு என்ன செய்வதென்று வீட்டிலுள்ள பலா மரத்தை மரவியாபாரி ஜான்சனுக்கு (கிறிஸ்டியன்) விற்கிறார். விலையை அவரே 60,000 ரூ என்று 10,000 ரூ அடவான்ஸ் தருகிறார். இவ்வளவு விலை போகும் என்பதே அபுவிற்கு ஆச்சரியம். மரம் வெட்டியவுடன் மீதி 50,000 ரூ தருகிறேன் என்கிறார் மரவியாபாரி.  வீட்டிற்கு வந்து கணக்குப் பார்த்தால் இன்னும் பணம் தேவைப்படுகிறது. பால்வருவாய் தரும் பசுவையும் கன்றையும் விற்கிறார், கடைசியாக மனைவியின் கம்மல், மோதிரம் விற்க ஏற்பாடுசெய்கிறார்.

பயணநாட்கள் நெருங்கிவருகிறது, தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் சென்று பயணவிடை பெறுகிறார். ஒரு புனிதயாத்திரை செல்லும்போது எவர் மனதையும் புண்படுத்தியிருக்கக்கூடாது , தெரியாமல் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் தன் அண்டையில் வசித்துவந்த சுலைமான் தன்னுடன் நிலத்தகராறு செய்தார், அவர் தன்மீது ஏதாவது கோபம் கொண்டிருக்கலாமென்று அவரை பார்க்க மனைவியுடன் சுலைமான் வீட்டிற்கு பழம்,பிஸ்கட் வாங்கிச் செல்கிறார். விபத்தில் அடிபட்டு மரணத்தின் தருவாயில் இருக்கும் சுலைமான் அபுவின் பெருந்தன்மையால் நெகிழ்ந்துபோகிறான். கணவனும் மனைவியும் பயணத்திற்கான பொருடகளை வாங்கி சேகரிக்கிறார்கள். இன்னும் ஒருவாரம்தான் இருக்கிறது. 

இறுதித்தவணை மரவியாபாரியிடம் வாங்கி டிராவல்ஸ் க்குத் தரவேண்டும். வெளியூர் சென்றிருந்த அபுதம்பதி திரும்பிவரும்போது அவரது குடைரிப்பேர் நண்பர், மரவியாபாரி தங்களை தேடியதாகச்சொன்னார். உடனே மரவியாபாரி ஜான்சனை சென்று பார்த்தவுடன் மீதிப் பணம் 50,000 த்தை தருகிறார். தந்துவிட்டு உங்கள் மரத்தைப் பார்த்தீர்களா என்று கேட்கிறார். இல்லை வரும் வழியில் உங்களை சந்திருக்கிறேன் என்றார் அபு.  அந்த மரம் ‘உள்ளீடு’ அற்ற வெறும் விறகிற்கே பயன்படும் என்பதை ஜான்சன் சொன்னதும் அபுவின் முகம் வாடிவிடுகிறது. அந்தப் பணத்தைப் பெறுவது தவறு என்று ஜான்சனுக்கே திருப்பித்தருகிறார். மரம் வாங்கிய ஜான்சன், வியாபாரத்தில் லாபம் நஷ்டம் வரும் அதற்காக உங்கள் பயணம் தடைபடவேண்டாம் என்கிறார். ஒருவரை நஷ்டப்படுத்தி கிடைக்கும் பயணம் செய்யக்கூடாது என்று  தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பணத்தை வாங்க மறுத்துவிடுகிறார்.

டிராவல்ஸ் நிறுவனத்திடம் தன்னால் 50,000 ரூ அடைக்கமுடியவில்லை அதனால் ஹஜ் பயணக் குழுவிலிருந்து தன்னையும் ஆயிசாவையும் நீக்கிவிடுங்கள் என்கிறார். டிராவல்ஸ் மேலாளர் இந்தப் பணத்திற்க்காக உங்கள் பயணம் தடையாகவேண்டாம், மீதிப்பணத்தை கம்பெனி சரிசெய்துகொள்ளும் என்றார்.  அபு மறுத்துவிடுகிறார். அபுவின் பயணம் தடைப்பட்ட செய்தி அந்த ஊரில் பரவுகிறது, அபுமீது அன்பு செலுத்தியவர்கள் அதற்காக வருந்துகிறார்கள், அவருடன் பழகிய ஆசிரியர் (இந்து ) தன்னுடைய சேமிப்புப் பணத்தை தரமுன்வருகிறார், தன்னை சகோதரனாக ஏற்று பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார். அவர் மனதை புண்படுத்த விரும்பவில்லையென்றாலும் அந்த பணம் கொண்டு செல்வது ஹஜ் ஆகாது என்று திடமாகமறுத்துவிடுகிறார். வீட்டைவிற்றால் திரும்பிவந்து தங்குவதற்கு ஒரு நிழல்வேண்டுமே என்பதற்காக அதை விற்கவில்லை.

வீட்டில் மனைவியுடன் நமக்கு ஹஜ்பயணம் செய்வதற்கு கொடுத்துவைக்கவில்லை அவ்வளவுதான் நாம் வேறு ஏதாவது தவறுசெய்திருக்கிறோமா என்று ஆராயும்போது பலாமரம் என்பது ஓர் உயிர் அதை வெட்டி அந்தவருவாயில் ஹஜ் செய்வதை இறைவன் விரும்பவில்லைபோலும் என்று அதே இடத்தில் பலா மரக்கன்றை நடுகிறார்.

அடுத்த ஆண்டு ஹஜ் செய்யலாம் என்ற நம்பிக்கை அபு இன்னும் இழக்கவில்லை.

2 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

படித்து முடிக்கும் போது கண்ணீர் எட்டிப் பார்த்தது.
ஒரு சிறுகதை படித்த உணர்வு.
தமிழில் இது போன்ற படம் எடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை.
பகிர்வுக்கு நன்றி

hariharan சொன்னது…

வணக்கம் சிவகுமார் அவர்களே, நான் எம்.ஏ.சுசீலா அவர்களின் தளத்தில் இந்த திரைப்படம் பற்றிய விமர்ச்னம் பார்த்தேன், அந்த விமர்சனத்தின் மூலம் திரைப்படத்தைப் பார்த்தேன். சலீம் குமாரிடம் இவ்வள்வு திறமை இருக்கிறது என்பது இந்தப் படத்தின் மூலம் தெரிந்தது.மதரீதியாக மக்கள் ஒருமுகப்பட்டு வருகிற வேளையில் இது நல்ல சினிமா.