திங்கள், 15 அக்டோபர், 2012

மீண்டும் சாவேஸ்...மக்களாட்சியில் தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் பெருவாரியான மக்களை தன்பக்கம் ஈர்த்திருக்கவேண்டும். மதவெறி, மொழிவெறி, பிரதேசவெறி, போலியான தேசியவெறியை நம்பி தேர்தலில் வெற்றி பெற்றவர்களையும் பார்த்திருக்கிறோம். தங்களுடைய ஆட்சியின் கொள்கையால் பெரும்பான்மை மக்கள் பயன்பெற்று மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களையும் பார்த்திருக்கிறோம். அந்தவரிசையில் சாவேஸ் மக்களின் நம்பிக்கையாக உள்ளார். தென் அமெரிக்கக்கண்டத்தில் சேகுவேராவுக்கு அடுத்தபடியாக பெருவாரியான மக்களின் இதயத்தில் இடம்பிடித்த நட்சத்திரம் சாவேஸ் என்றால் மிகையில்லை.

நாமெல்லாம் உலகமயத்தின் கொள்கைகளின் நெருக்கடிகளை கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் அனுபவித்துவருகிறோம். லத்தீன் அமெரிக்கா அப்படியல்ல. ஸ்பானிய காலனி முடிவுக்குவந்தவுடன் அமெரிக்காவின் பொம்மைகளின் ஆட்சிகள் நடபெற்றுவந்த நாடுகள். ராணுவ ஜெனரல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பார்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல தலைவர்களை கொலையும் செய்வார்கள். இரண்டாம் உலகப் போருக்குப்பின்னால் ஆயுதம் மூலம் முன்றாம் உலக நாடுகளை அடிபணிய வைக்கமுடியாது என்ற நிலைமை வந்தபோது ஏகாதிபத்திய நாடுகளுக்கு உதித்த சிந்தனைதான் சுதந்திரவர்த்தகம். பெயர் வேண்டுமானால் `` சீர்திருத்தம்`` என்ற சொல்மாதிரி இனிப்பாக இருக்கலாம். இந்த சுதந்திர வர்த்தகத்தின் மூலம் மூன்றாம் உலகநாடுகள் தொடர்ந்து கடன்கார நாடுகளாக மாற்றப்படும், அங்கே உற்பத்தியாகும் பொருடகள் ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைக்காக. அவையாவும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை உண்டாக்குபவையாக இருக்கும். இப்படித்தான் 1990 வரை வெனிசுலா ஏகாதிபத்தியத்திற்கு வேட்டைக்காடாக இருந்தது. உலகவங்கியின் பொருளாதாரக் கொள்கைகளின் நெருக்கடிகளை தாங்கமுடியாமல் லட்சக்கணக்கான மக்கள் காரக்கஸின் தெருக்களில் இறங்கி போராடினார்கள். அவர்களுக்கு சாவெஸ் என்ற வழிகாட்டி கிடைத்தார்.

இந்தியாவில் இன்று அரசாங்கம் அமல்படுத்திவருகிற உலகவங்கியின் கொள்கைகளெல்லாம் தென் அமெரிக்க நாடுகளில் சோதிக்கப்பட்டவை. நமக்கு அந்த நாடுகளின் படிப்பினைகள் நல்ல முன்னுதாரணம். எண்ணெய் வளமிக்க நாடுகளையெல்லாம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவிற்கு 1998க்குப் பின்னர் வெனிசுலாவை இழந்துவிட்டமாதிரி இருந்தது. அதுமட்டுமா தனக்கே சவால் விடுக்கும் அளவிற்கு , எரிபொருள் நிறுவனக்களை தேசியமயமாக்குகிறார். பிடல் போன்றவர்களோடு சேர்ந்துகொண்டு தென் அமெரிக்க நாடுகளை தனிஅமைப்பாக அணி திரட்டுகிறார். அதன் விளைவாக 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்கட்சிகள் , ராணுவ ஜெனரல்கள் கூட்டுசேர்ந்து சாவேஸுக்கு நெருக்கடி கொடுத்தார்கள், ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்தார்கள். நாட்டின் தனியார் பன்னாட்டு தொலைக்காட்சிகள் எல்லாம் சாவெஸைக்கு எதிராக பிரச்சாரம் செய்து தன் வர்க்க குணாம்சத்தை காண்பித்தது. கடைசியில் மக்கள் தெருக்களில் இறங்கி போராடினார்கள் நான்கு நாட்களில் சாவேஸ் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றார். சாவெஸ் ஆட்சியை மக்கள் கொண்டுவந்த புரட்சியை the revoultion will not be televised என்ற ஆவணப்படம் http://video.google.com/videoplay?docid=5832390545689805144# காண்பித்தது. தன்னுடைய ஆட்சியை கவிழ்ப்பதில் அமெரிக்காவின் பங்கு இருப்பதை எதிர்த்து அமெரிக்காவை பகிரங்கமாக கண்டித்தார்.

அமெரிக்காவிற்கு சென்ற ராஜாங்க மந்திரிகளின் உள்ளாடையை கழைந்ததைக்கூட வெளியில் சொல்லாமல் வாய்மூடிகளாக இருக்கிற அரசியல்வாதிகளுக்கு மத்தியில் சாவேஸ் ஒரு முறை ஐநா கூட்டத்தொடருக்கு செல்லும்போது அவருடைய பாதுகாப்பு அதிகாரிகளையும் மருத்துவர்களையும் அமெரிக்க அரசு விமான நிலையத்தைவிட்டு வெளியே விடாமல் தடுத்தது. அந்த சம்பவத்தை சாவேஸ் ஐநா சபையில் வைத்து அமெரிக்காவை கண்டித்தார். லிபியாவின் மீது , சிரியாவின் மீது அல்லது ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்துகிற யுத்தம் அநியாயம் என்று தெரிந்தும் வல்லரசுக்கனவுடன் அமைதியாக இருக்கும் நாடுகளின் தலைவர்களுக்கு மத்தியில் சாவேஸ் யுத்தத்தை கண்டித்தார்.ரெவ்.ராபர்ட்சன் என்ற பாதிரியார் புஷ் க்கு மிகவும் நெருக்கமானவர், புஷ் க்காக தேர்தல் பிரச்சாரம் செய்தவர், அப்போது பேசினார், `வெனிசுலா மீது 20,000 கோடி டாலர் செலவுசெய்து போர்செய்யத்தெவையில்லை சாவேஸை மட்டும் கொலை செய்தால் போதும், அமெரிக்காவிற்குத் தேவையான தடையில்லாமல் எண்ணெய் கிடைக்குமென்றார். இந்தப் பேச்சை ஜார்ஜ் புஷ் கண்டிக்கவில்லை அமெரிக்க மக்கள் கண்டனம் தெரிவித்தபின்பு பாதிரியார் வருத்தம் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தின் பலன்கள் 40 சதவீதம் சாமானியமக்களைச் சென்றடைகிறது. மக்களின் கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. சார்க் அமைப்பு என்பது ஏதோ சம்பிரதாயத்திற்காக கூட்டம் கூடுகிறது, ஒவ்வொரு நாட்டிற்கு அடுத்த நாட்டை பிடிக்கவில்லை எல்லையைச் சுற்றி பதற்றம் தான். ஆனால் சாவேஸ் ALBA என்ற அமைப்பை உருவாக்கி தென் அமெரிக்க நாடுகளை ஓரணியில் திரட்டினார்.அவர்களுடன் பொருளாதார ஒத்துழைப்பை செயல்படுத்தினார். நடந்துமுடிந்த தேர்தலில் எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு பொதுவேட்பாளரை சாவேஸுக்கு எதிராக நிறுத்தினார்கள் ஆனாலும் சாவேஸ் மகத்தான வெற்றிபெற்றார்.

கருத்துகள் இல்லை: