ஞாயிறு, 8 ஜூலை, 2012

வாடகைக்கு வீடு__________ மட்டும்.

 தருமியின் வலைப்பதிவில் ‘அவாளுக்கு மட்டும்’ என்ற பதிவை வாசித்தேன். ‘ஹிந்து’ நாளிதழில் property plus இணைப்பில் வந்த விளம்பரம் “only Brahmins” என்றிருந்திருக்கிறது. இது சட்டப்படி தவறானது; முறையற்ற விளம்பரம் என்று இனியன் இளங்கோ என்று ஒருவர் பத்திரிக்கை ஆசிரியருக்கு எழுதியுள்ளார். அதற்கு ஹிந்து நாளிதழ் எங்களுக்கு தெரியாமல் இந்த விளம்பரத்தை அனுமதித்துவிட்டோம், அதற்கு தவறுதான் என்று விளக்கமளித்துள்ளது. இன்றைய 08-07-2012 ஹிந்து நாளிதழில் வந்த செய்தி “இஸ்லாமியர்களுக்கு தில்லியில் வீடு கிடைப்பதில்லை” என்ற செய்தி வந்துள்ளது. அதற்கு நிறைய வாசகர் கடிதங்கள் வந்துள்ளன. சிலர் இது நாகரீகமற்ற செயல், ஒரு சமூகத்தை ஒதுக்கிவைப்பது சரியல்ல என்று எழுதியுள்ளார்கள், இன்னும் பலர் இஸ்லாமியர்களுக்கு வீடு கொடுத்தால் தேவையற்ற தொல்லைவரும் அதை தவிற்கவே வீடு கொடுப்பதில்லை என்றும், அவர்கள் இறைச்சி சாப்பிடுகிறார்கள், சைவம் சாப்பிடுவர்கள் எப்படி அவர்களுக்கு வீடு தரமுடியும் வீடே நாசமாகிவிடாதா என்றும் இஸ்லாமியர்கள் யாரோடும் பொதுவெளியில் ஐக்கியமாவதில்லை அதனால் வீடு கொடுப்பதில்லை என்றும் இன்னும்சிலர் பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ், காஷ்மீர் யெல்லாம் இழுத்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறுவதை ஹிந்து நாளிதழ் பெரிதுபடுத்துவது நல்லதல்ல என்றும் வாசகர் கடிதங்கள் வந்துள்ளது.

இந்த செய்தி தில்லிக்கும் மட்டுமில்லை, மும்பை நகரத்தில் ஏற்கன்வே இப்படிப்பட்ட discrimination ஐ சிறுபான்மை சமூகம் சந்தித்திருக்கிறதாக செய்திகள் வந்தன. வீடு வாடகைக்குக் கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன, பேச்சிலர்களுக்கு எளிதாக வாடகைவீடு கிடைக்காது, 1996ம் ஆண்டு சென்னைக்கு குடியேறியபோது சந்தித்திருக்கிறேன். எல்லா ஓனர்களும் அப்படி கிடையாது. பேச்சிலர்கள் ஒப்பீடளவில்  அதிகவாடகை தரவேண்டும். அதேபோல் சில மாதங்களுக்கு முன் சென்னையில் வங்கிக்கொள்ளையில் வடமாநிலத்தவர் சிலரின் பங்கு இருந்ததால் இப்போது வடமாநிலங்களிலிருந்து வேலைக்குவரும் தொழிலாளர்களுக்கு வீடு கொடுக்க யோசிக்கிறார்கள். நாம் பெரும்பான்மையாக உள்ள இடத்தில் வசிக்கும்போது இது போன்ற சிக்கல்கள் நமக்குத்தெரியாது, நாம் மொழியாலோ, தேசத்தாலோ ஒரு இடத்தில் சிறுபான்மையாக இருக்கும்போது அனுபவம் கிடைக்கும்.  நகரங்களில் மத அடிப்படையில் பிரிவினை நிலவுவது போல் கிராமங்களில் ‘இந்து’ சமூகத்தில் சாதி அடைப்படையில் இந்தத்தெரு இந்த சாதிக்கு என்ற பிரிவினை நிலவுகிறது. நான் வாழ்ந்த கிராமத்தில் ஆதிக்கசாதியினர் அதுவும் அண்டைவீட்டாருடன் சண்டை வந்துவிட்டால் என் வீட்டை ‘பள்ளனுக்கு’ விற்றுவிடுவேன் என்பார்கள்.  கீழத்தெரு என்றாலே கீச்சாதிகள் தான், சேரிகள் பெரும்பாலும் கழிவுநீர் செல்லும் வாய்க்கால், பள்ளமான பகுதியில்தான் குடியிருப்பு இருக்கும். இப்போது இந்த போக்கு மாறியிருக்கிறது அதுவும் மனமுவந்து அல்ல!!

இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர் நாடெங்கும் மதக்கலவரம் பற்றி எரிந்தது, தென் மாநிலங்களில் அத்தகைய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் மதத்தை மையமாக வைத்து அரசியல் நடப்பதால் பிரிவினையை ஏற்படுத்தி ஒரு சமூகத்தை ஓரணியில் திரட்டி ஆதாயம் காண ‘சங்க்பரிவார்’ அமைப்புகள் முயற்சி செய்கின்றன. எங்கெல்லாம் மதக்கலவரம் மூல்கிறதோ அங்கே ‘சங்பரிவார்’ அமைப்புகள் வலுவாக காலூன்றி வருகின்றன. குஜராத்தை அடுத்து, கர்நாடகம், பழங்கிடியினர அதிகமுள்ள ஒரிஸ்ஸாவில் இந்துத்துவா வளர்ந்துவருகிறது. 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் கரசேவகர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்வினையாக குஜராத் மாநிலமெங்கும் கல்வரம் மூண்டது.  அந்தக் கலவரத்தில் சுமார் 2000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. இதைவிட அந்த மக்கள் தங்கள் சொந்த வீடுகளிலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாகப்பட்டவர்கள் அதிகம்.  அதுவரை ஒன்றாக இருந்த இரண்டு சமூகமும் குடியிருப்பு அள்வில் பிரிந்துகிடக்கிறது. இன்னும் மேலாக சில நகரங்களில் இரு சமூகத்தை ‘பார்டர்’ என்று முள்வேலி பிரிக்கிறது. ஒரு தேர்தல் கூட்டத்தில் விஸ்வஹிந்து பரிஷ்த்தின் தலைவர் பிரவீன் தொகாடியா தொண்டர்களுக்கு திரிசூலம் விநியோகித்துவிட்டு பேசுகிறார், “நான் இந்துத்துவா கொள்கைகளுக்கு உட்பட்டு நடப்பென், இந்துக்களின் கடையில் மட்டுமே பொருள் வாங்குவேன், விற்பேன், ஆட்டோக்களில் பயணம் செய்தால் அங்கே “திரிசூலம் காவிக்கொடி” உள்ள ஆட்டொ ரிக்‌ஷாவில் மட்டுமே பயணம் செய்வேன் என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.

இது போன்ற பிரிவினை polarization சமூகத்தில் உருவாகிவருவது மிகவும் ஆபத்தானபோக்கு அதை படித்த நடுத்தர வர்க்கத்தினர் செய்வது, இது போன்ற கருத்துக்களை பரப்புவது மத அடிப்படையில் சமூகம் பிளவை எதிர்நோக்கியிருக்கிறது. இது போன்ற மத அடிப்படையிலான பிரிவினை இந்தியா சுதந்திரம் வாங்கும் போது இருந்தது காலப்போக்கில் சமூகம் நல்லிணக்கமாக வாழ பழகியிருந்தது. இப்போது மதத்தை அரசியலில் கலப்பதால் கடந்த 20 ஆண்டுகளாக தூபம் போடப்பட்டுவருகிறது. நாம் பெருவாரியான சமூகம் ஆனால் அவர்களுக்கு ஏன் சலுகை, இஸ்லாமியர்களால் நம் நாட்டின் ஜனத்தொகை பெருகிவிட்டது தீவிரவாதம் பெருகிவிட்டது என்ற பிரச்சாரத்தை ‘சங்பரிவார்’ அமைப்புகள் திட்டமிட்டு செய்துவருகின்றன. அதே போல் இஸ்லாமிய சமூகத்திலும் சில அமைப்புகள் நாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்ற பிரச்சாரம் கண்ணுக்குத் தெரியாமல் நடந்துகொண்டிக்கிறது, இந்த கருத்துக்களை மீடியாவின் மூலமாகவும் சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லக்கூடிய இணையதளத்தில் பகிரப்படுகிற செய்திகள் மூலமாகவும் காணலாம். இது ஒரு ஹைட்ரோகார்பன் வாயுவுக்கு நிகரான கசிவு என்று சொல்லலாம், சிறு தீப்பொறி எழுந்தால் பற்றிக்கொள்ளும் தன்மைகொண்டது. இன்னும் இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்கள் ‘இந்துத்த்வா’வின் கொள்கைகளுக்கு பலியாகவில்லை அப்படியாகியிருந்தால் நிலைமையே வேறு. சமய நல்லிணக்கம் இருக்கும்வரை தான் இந்தியா பெருமைப்படமுடியும். நாமும் பாகிஸ்தானைபோல் அல்லது மத அடிப்படியில் செயல்படுகிற நாடுகளைப் பின்பற்றினால் கற்காலத்தை நோக்கி செல்வோம் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை: