சனி, 7 ஜூலை, 2012

மூன்றாம் பாலினம்.



நீங்கள் வேலைக்கு சேருகிறீர்களா, பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்கிறீர்கள், ரயிலில் முன்பதிவு செய்கிறீர்கள், பள்ளியில் குழந்தைகளை சேர்க்கிறொம் இப்படி எல்லா இடத்திலும் பால் /SEX என்ற பகுதி உள்ளது இதை நிரப்பவேண்டும். அங்கே சாய்ஸ் ஆண்/பெண் என்ற இரண்டு சாய்ஸ் தான்.  ஆனால் சமூகத்தில் ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் மூன்றாம் பாலினமாக தமிழ்நாட்டில் மட்டும் 30,000 பேர் இருக்கிறார்கள். இப்போது மாற்றுத்திறனாளிகள் அமைப்புரீதியாக திரட்டப்பட்டு போராடி கல்வியில் வேலைவாய்ப்பில் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுவருகிறார்கள்.  வெளிப்பார்வைக்குத் தெரிகிற ஊனத்தை சமூகம் ஏற்றுக்கொண்டுவிட்டது, ஆனால் உள்ளத்தாலும் பால் திரிபால் ஏற்பட்டுள்ள ஊனத்தை சமூகம் ஏற்க மறுக்கிறது. நன்கு படித்த அரவாணிகளாக உண்ரப்பட்டவர்கள் தொடர்ந்து உயர்கல்வி படிக்கமுடியவில்லை, வேலைக்கு யாரும் சேர்ப்பதில்லை.  அப்படி சில நிறுவனக்கள் முன்வந்தாலும் அங்கு நிலவுகிற சூழ்நிலையால் அவர்களால் வேலையில் தொடரமுடியவில்லை என்பதை தமிழகத்தில் அரவாணிகள் அமைப்பின் தலைவராக உள்ள ஆஷாபாரதி சொல்கிறார்.

பொதுமக்கள் மத்தியில் அரவாணிகளைப் பற்றி என்ன சிந்தனை இருக்கிறது? அவர்கள் பாலியல் தொழில் செய்கிறார்கள், மிரட்டி பணம் பறிக்கிறார்கள், அராஜகம் செய்கிறார்கள். ஒரு பேருந்தில் ஏறினால் எங்கே அமர்வது? பெண்களுக்கு அருகே அமர்வதை அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். ஆனால் பெண்களும் அவர்கள் அருகில் அமரும்போது எழுந்துவிடுகிறார்கள். காவல்துறையினரால் அதிகம் துன்பறுத்தப்படுவது அரவாணிகள் தான். அவர்களுக்கு ஏதாவது கேஸ் வேணுமென்றால் அரவாணிகளை பிடித்துக் கொண்டுபோய் கஞ்சா வழக்கு போட்டுவிடுவார்கள். “பாலியல்” தொழில் செய்கிறார்கள் என்று வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை. வீட்டிலிருந்து துரத்தப்பட்ட ஒரு அரவாணியை சமூகம் எப்படி சேர்த்துக்கொள்ளும், படித்த சுயமாக கவுரமான தொழில் செய்யும் அரவாணிகளுக்கு வாடகைவீடு கிடைப்பதில்லை. அப்படி வீடு கிடைத்தால் அதிகவாடகை கொடுக்கவேண்டியுள்ளது.  பெரும்பாலும் நகர்ப்புறங்களில் சேரிகளில்தான் வசிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அரவாணிகளை கேலிக்குறிய பாத்திரமாக பயன்படுத்துகிறார்கள். பால்திரிபும் ஒரு ஊனம் என்று தமிழ் மூதாட்டி உணர்ந்ததால் என்னவோ “ அறிது அறிது மானிடராய் பிறத்தல் அரிது, அதிலும் கூன், குருடு,செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது” என்றார். பேடு, பேடி என்ற சொல திரிந்து சென்னையில் ‘பாடு’ என்று வசைச்சொல்லாகிவிட்டது.

பாரதப்போரில் சகல சாமுத்ரிகா லட்சணம் கொண்ட ஒருவனை பலியிடவேண்டும் என்று ஜோசியர்கள் சொல்கிறார்கள்,அப்படி அறியப்பட்ட அர்ச்சுனனுக்கும் ஒரு அசுர கன்னிக்கும் பிறந்த அரவாண் தன்னை தியாகம் செய்ய ஒத்துக்கொள்கிறான் ஆனால் அவன் திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். அந்த ஒருநாள் மனைவிக்காக எந்த பெண் முன்வருவாள்? கிருஷ்ணபகவானே பெண்ணாக மாறி அரவாணுக்கு மனைவியாகிறான். அரவாணுக்கு மனைவியாக வாய்த்த கிருஷ்ணப் பிறவிகளாக இன்றும் தாலியறுக்கும் திருவிழா கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணக்கென்ன ஒருநாள் கூத்து..ஆனால் இவர்கள் வாழ்நாள் முழுவதும் இழிபிறவிகளாக நடத்தப்படுகிறார்கள். பாரதப்போரில் வில்வித்தையில் வீரனான அர்ச்ச்சுனன் ஒரு வருட அஞ்ஞாதவாசத்தில் பேடியாக வாழ்ந்தான் என்று பாரதம் கூறுகிறது. மும்பை மாநகராட்சியில் அரவாணிகளுக்கு வரி வசூல் செய்யும் வேலை கொடுக்கிறார்கள். அவர்களிடம் இழிசொல் வாங்கக்கூடாது என்ற ‘செண்டிமெண்ட்’ ஆல் வசூல் நன்றாக நடக்கிறதாம் இப்படி அரசு இயந்திரமே அவர்களை இழிவு செய்கிறது.

விலங்குகளைக்கூட சித்ரவதை செய்யக்கூடாது மனிதமாபினம் காட்டவேண்டும் என்கிற அக்கறை இருக்கிற சமூகத்திற்கு அரவாணிகளும் மனிதர்கள் தான் என்கிற அபிமானம் வரவேண்டும். இப்போது தான் தமிழ் சினிமாவில் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி அவர்களின் அவல வாழ்க்கையைப் பற்றி சினிமாவும் குறும்படங்களும் வந்து கொண்டிருப்பது ஆரோக்கியமான போக்கு தான். ஞாநி எழுதிய ‘அறிந்தும் அறியாமலும்” தொடரில் சில கேள்விகள் கேட்கிறார்! உங்கல் வீட்டில் ஒரு அரவாணி உருவாகியிருந்தால் எப்படி அவர்களை நடத்துவீர்கள்? கடினமான கேள்விதான். ஒரு சிறுவனோ, சிறுமியோ தான் அரவாணி என்று எப்போது உணருகிறான். என்பதை “நர்த்தகி” திரைப்படம் சொல்கிறது. இவர்கள் மேல் அக்கறைகொண்டு எழுத்தாளர் சு.சமுத்திரம் 1994ல் “வாடாமல்லி” என்ற புதினம் படைத்தார். இப்போது “மூன்றாம்பாலினத்தின் முகம்” என்ற நாவல் பிரியாபாபு என்கி|ற அரவாணியால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மீதான பரிவும் இவர்கள் மீதும் காட்டப்படவேண்டும், அரசு நலத்திட்டம் அறிவித்தால் மட்டும் போதாது, மக்களின் மனம்பண்படுத்தப்படவேண்டும்.

1 கருத்து:

அழகிய நாட்கள் சொன்னது…

உங்களின் பதிவுக்கு எனது வாழ்த்துகள். எனது பின்னூட்டத்திற்கும்தான்.அ. மங்கை எழுதி பாரதி புத்தகாலய வெளியீடாக வந்த அரவாணிகள் பற்றிய சிறு நூலைப்படித்திருந்தேன். பிறகு வாடாமல்லி நாவலைப்படித்தேன். இப்போது கல்லூரி விண்ணப்பங்களில் ஆண்/பெண்/மற்றவர் என்றொரு பிரிவு இணைக்கப்பட்டிருக்கிறது.அவர்கள் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும்- திலிப் நாராயணன்.