வியாழன், 23 பிப்ரவரி, 2012

கிறுகிறுவானம்இன்னைக்கு சிறுவர்கள் விளையாடுற விளையாட்டு முன்னாடி நாமெல்லாம் விளையாடல, கிரிக்கெட் விளையாடாத கிராமமோ வற்றிப்போன குளமோ எந்த ஊர்லயும் இல்ல. 80களில் சிறுவனாக இருந்த எனக்கு இன்னும் கிரிக்கெட் விளையாட்டே தெரியாது, என்னைமாதிரி அறியாமையில் இருபவர்கள் ஆயிரத்தில் ஒருவனாகத்தான் இருப்பார்கள். கிராமங்களில் சிறுவர்கள் விளையாடுவதற்கு எந்த உபகரணமும் தேவையில்லை, ஒவ்வொரு விளையாட்டும் ஒரு சீசனுக்குத்தான். பள்ளிக்கூடம் ஆண்டு விடுமுறையில் அது வெயில்காலம், அப்ப நொங்கு சீசன் இருக்கும் நொங்கோட இரண்டு கூந்தலை ஒரு குச்சியால சேர்த்து அதை ஓட்டிக்கிட்டு போவோம். வைகாசி மாசம் முடிஞ்சவுடனே ஆனி, ஆடியில மேகாத்து அடிக்க ஆரம்பிச்சிரும் அப்ப பன ஓலையில காத்தாடி செஞ்சி மேக்காம ஓடுறது விளையாட்டு. ஆடுமேய்க்கும்போது ஒரு விளையாட்டு, தெருவில சுத்தும்போது கோலிக்காய், புளியமுத்தை சப்பைக் கல்லை வச்சி செதுக்கி விளையாடுறது, அப்புறம் சில்லாங்குச்சி அது சில ஊர்ல கிட்டிப்புல். இந்த விளையாட்டுல ஒரு ஆபத்து இருக்கு யாரு மேலயாவது விழுந்துரும் ஒருவாட்டி ஒரு மாட்டுக் கண்ணுல குத்தி மாட்டோட பார்வையே போச்சு. இன்னொரு விளையாட்டு வானத்தை நம்ம கூட சுத்தவைக்கிற ‘கிறுகிறுவானம்’ இதுக்கு கூட விளையாட யாருமே தேவையில்லை. களத்துமேட்டுல நின்னுகிட்டு கிறுகிறுவானா.. கிண்ணாரவானா.. வானத்தைப் பார்த்து தலைகிறுகிறுக்கிற வரைக்கும் சுத்தனும் அப்புறம் தொப்புனு கீழவிழுவோம். நம்மல வானம், மரம் பக்கத்துல நிக்கிற காளைமாடு எல்லாம் சுத்துறமாதிரி இருக்கும். இந்த விளையாட்டு எல்லாம் இப்ப யார் விளையாடுறாங்க? எல்லாம் மாறிப்போச்சு! உலகமயத்துல உள்ளூர் பிராண்டு மட்டும் காலியாகுறதுல்ல, லோக்கல் விளையாட்டும் காணாமப்போச்சு. வெள்ளக்காரன் நம்ம நாட்டை விட்டு போனாலும் அவனோட ஆங்கிலம், கல்வி, விளையாட்டு உடைகள் எல்லாம் நம்மை விட்டுப் போகல. மாறாதது என்ன இருக்கு!!

புஸ்தகத்துக்கு வருவோம்... சிறுவர் இலக்கியவரிசையில் நான் படிச்சதுல எஸ்.ரா எழுதுன ‘கிறுகிறுவானம்’ நம்பர் ஒன். ஏன்னா.. அது என்னோட பால்யத்தை எனக்கு ஞாபகப்படுத்துது. அதுல வர்ற ஓட்டப்பல்லு ங்கிற செண்பகராமன் மாதிரி நாமலும் இருந்திருக்கோம். எல்லாருக்கும் ‘பட்டப்பேரு’ வைக்கிறது, இன்னைக்கும் கிராமத்துல சர்டிபிகேட் பேரைச்சொன்னா யாருக்கும் தெரியாது. ஒவ்வொருதருத்தரும் ஏதாவது ஒரு சிறப்ப செஞ்சி ‘பட்டம்’ வாங்கியிருப்பாங்க. யாரையும் விட்டுவைக்கிறதில்ல. எங்க ஊர்ல ஒருத்தர் பேரு ‘சித்திப்பால்’ ..பாக்கெட்பாலை கடையில போயி அந்தப்பேரச்சொல்லி கேட்டுருக்காரு அதனால அந்தப்பேரூ. இப்படி இந்த ஓட்டபல்லு எல்லார்க்கும் பட்டப்பேரு வச்சிருவான். எப்பவும் பசியிலதான் அலைவான், அதுவும் இட்டிலி, தோசை எல்லாம் பண்டிகைப் பலகாரம். பணக்கார வீடுகளில் கூட மாசக்கடசி வெள்ளி, கடச்சனி அன்னக்கித்தான் இட்டிலி தோசை போடுற வழக்கம். நிறைய வீடுகளில் அது தீபாவளி, தைப்பொங்கல் அன்னிக்கு மட்டும்தான். அது ஆசைப்பண்டம்.சத்துணவுக்காக பள்ளிக்கூடம் போற நிறைய பிள்ளைகளப் பார்த்திருக்கேன். நானும் 6வது இருந்து 10வது படிக்கிற வர சத்துணவுதான். வீட்டுல இட்டிலி, தோச போடுற அன்னைக்குக்கூட கொண்டுபோகமுடியாது. ஸ்கால்ர்ஷிப் போயிடுமாம், நாங்க விடுவமா? தோசையை தூக்குச்சட்டியில கொண்டுபோயி ரயில் கடியில் வச்சி சாப்பிட்டுவிட்டுத்தன் பள்ளிக்கூடம் போவோம். அங்க போயி மதியம் தூக்குவாளியில சாப்பாடு வாங்கி சாப்பிடுவோம்.

இன்னக்கி பாக்கெட் மணி அன்னைக்கு ‘வாங்கித்திங்க’ ங்கிற பேருல 25பைசா கிடைக்கும் அது பள்ளிக்கூடம் போறதுக்கு முன்னாடி ஐஸ்க்காரர் கிட்ட பூவா தலையா போட்டு ஐஸ் வாங்கிடுவோம். அப்புறம் இண்டர்வெல்ல வேற யாரவது சாப்பிடும்போது வேடிக்கைபாக்குறது இன்னொருத்தான் சாப்பிடும்போது நாங்க உச் கொட்டுறது. அப்புறம் ஊர்லயிருந்து மாவுதிரிக்க யாராவது கொடுப்பாங்க அதுல 25 / 50 பைசா கமிஷன் கிடைக்கும். சில சம்யம் மாவுஅரைக்கிற கடையில கிலோப்புளுகு விடுவோம் அதுல 50 பைசா கிடைக்கும். இன்னைக்கி பசங்கல அத சாப்பிடதா, அன்ஹைஜீன்க் சொல்றோம். அன்னிக்கு அந்த ஜவ்வுமிட்டாய் தாத்தா பாடுற பாட்டுக்காகவே அவருகிட்ட ரயிலு்மிட்டாய் பாம்பு மிட்டாய் செஞ்சதை வாங்கி சாப்பிடுவோம். அப்பெல்லாம் யாராவ்து unhygenic ந்னு சொன்னா போங்க போயி பள்ளிக்கூடத்துல இருக்கிற தண்ணித்தொட்டிய பாருங்க கேட்டிருப்போம். அந்தத்தண்ணிய குடிக்கமுடியாது. ரீசஸ் விட்டவுடனே டீக்கடையப்பாத்து ஓடுவோம், பிளாஸ்டிக் ட்ரம் மேல பிளாஸ்டிக் தம்ளர் பள்ளிக்கூட பிள்ளைகளுக்காகவே வச்சிருப்பார். இன்னைக்கு எந்தக்கடயில ஒரு தம்ளர் தண்ணீ கேட்கமுடியும்..எல்லாம் பாட்டில்ல அடச்சி விக்கிறான். பொதுவா இருக்கிறதெல்லாம் இப்படி பாக்கெட் போடுறான் நாளக்கி காத்து கூட சிலிண்டர் விப்பான். கலிகாலம் தான் எந்த அவதாரபுருஷன் வருவானோ?

முன்னாடி கிராமத்து ஸ்கூல்ல அஞ்சுவரைக்கு அஞ்சு வாத்திமாரு இருந்தாங்க இப்ப? எஅங்க ஊருல 5வது வரைக்கு ஒரு வாத்தியாரு? நாடு முன்னேறிடிச்சின்னு சொல்றாங்க ஏன் கிராமத்துப் பள்ளிக்கூடம் இடிஞ்சுகிடக்குன்னு தெரியல. இன்ஸ்பெக்டர் வருவாரு போலீஸ் இன்ஸ்பெட்டர் இல்ல எஜுகேசன் இன்ச்பெட்டர் வந்து பசங்களப் பாத்து கேள்வி கேப்பாரு. வாய்ப்பாடு, திருக்குறள் ஏதாவ்து சொன்னா வெரிகுட். இந்தக்கதயில அப்படி ஒரு இன்ஸ்புட்டர் பள்ளிக்கூடம் வர்றாரு.. அவரு மதியம் பள்ளிக்கூடத்துல ஹெட்மாஸ்டர் ரூம்ல வச்சி சாப்பிடுறத நம்ம ஓட்டப்பல்லு பய பாக்குறான். ஆளுயுரக்கேரியர்ல் டவுண்ல யிருந்த சாப்பாடு வந்திருக்கு கோழி, மட்டன், மீன் எல்லாம் சாப்பிடுறாரு, இவனும் கூட்டாளியும் ஜன்னல் வழியாப் பாக்குறாங்க.. டேய் யாருடான்னு இன்ஸ்பெட்டர் ஜன்னலைப் பாத்தவுடனே ஒரே ஓட்டம். அப்புறம் பேசிக்கிறாங்க. டேய் பெரியாள ஆனவுடனே இந்த வேலைக்குத்தாண்டா போகனும்! தினம் இறைச்சி, முட்டை ,மீனு சாப்பிடலாம். பாருங்க எவ்வளவு பசியில இருக்காங்க!பசங்க.

இந்தப் புஸ்தகத்த நான் பத்துக்கும் அதிகமான தடவ வாசிச்சியிருக்கென், எனக்காக ஒருவாட்டி தான். என் பையன் எப்பப்பார்த்தாலும் அப்பா ஓட்டப்பல்லு கதயச்சொல்லு சொல்லுனு நச்சரிப்பான், அவனுக்காக இத வாசிப்பேன். எஸ்.ராவை நான் இந்த ஒரு புத்தகத்திற்காக கொண்டாடுவேன். நீங்களும் இதப்படிங்க..உங்க குழந்தைகளுக்காக வாசிங்க .இந்த மொழியிருக்கே அது பசங்களோட பேச்சுமொழி.

இந்தப் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது, புக்ஸ் பார் சில்ட்ரன் என்ற கேட்டகிரியில் இத மாதிரி நிறைய புத்தகங்கள் பாரதி புத்தகாலயம் வெளியிடிருக்கிறது.
இத சின்னவயசு அனுபவம், டைரின்னு கூட சொல்லலாம்.

கருத்துகள் இல்லை: