ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

கருப்பாயி என்கிற நூர்ஜஹான்நம் நாட்டில் தான் சிலர் இந்த சாதியில் பிறந்தோம் என்று பெருமைப்படுகிறவர்களும் ஏன் இழிந்தசாதியில் பிறந்தோம் என்று தங்களையே சபித்துக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். பிறப்போடு வந்த சாதி இழிவு சுடுகாடுவரை தொடர்கிறது. இங்கே தான் பிறப்பின் அடிப்படையில் தேனீர் விடுதியில் ‘கிளாஸ்’ தீர்மானிக்கப்படுகிறது. சிலர் பசியால் உயிர்பிரியும் தருவாயில் இருந்தாலும் புலால் உணவைத் தொடவே மாட்டார்கள். சில வாரங்களுக்கு முன் உயர்ந்த சாதியில் பிறந்த முதல்வர் ‘மாட்டுக்கறி’ சாப்பிட்டார் என்று ஒரு பத்திரிக்கையில் வந்தது கூட கலவரமாக வெடித்தது. அப்படி சாப்பிடக்கூடாத ஒன்றை சாப்பிட்டுவிட்டதாக பத்திரிக்கையில் பரபரப்பு விற்பனைஉத்தி ஒருபக்கம். இழிந்த சாதியில் பிறந்ததற்காக அவர்கள் ஊருக்கெ வெளியே, கோவிலுக்கு வெளியே, குடிநீர் கிணற்றுக்கு வெளியே நிறுத்தப் பட்டார்கள். அவர்களின் பெயர்கள் கூட ‘உயர்வான’ பொருள் பொதிந்ததாக இருக்கக்கூடாது என்பதை விதித்தார்கள். இந்த சமூக இழிவை நீக்க மாற்று மதம் நோக்கி நடந்தார்கள்.,அங்கேயும் தொடர்ந்தது இதே இழிவு. அப்படி ஒரு கருப்பசாமி காதர்பாய் ஆன கதை தான் இந்த நாவலின் கரு.

1981ம் ஆண்டு செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் என்ற கிராமம் முக்கிய செய்திகளில் இடம்பெற்றது, லண்டன் பிபிசியில் கூட இந்த ஊரைப்பற்றிய செய்தி வந்தது. தேவேந்திரகுல வேளாளர் சாதியைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் இஸ்லாம் மதத்தை தழுவியதுதான் அந்த செய்தி. இங்கே ஒருவன் மதம் மாறிக்கொள்ளலாம்.,ஆனால் சாதி மாறமுடியாது. மேல்சாதியில் பிறந்தோம் என்று சொல்லிக்கொண்டோர் அந்த உழைப்பாளி மக்களை ‘கீச்சாதி பயலுவ’ என்றழைத்தபோதும், அவர்களை ஆலயத்திற்கு வெளியே நிற்கவைத்தபோதும், தேனீர் விடுதியில் தனிகிளாஸில் டீ கொடுத்தபோதும், திண்ணியத்தில் சகமனிதனென்றும் பாராமல் மனிதமலத்தை வாயில் திணித்தபோதும் வராத அகில இந்திய மதபீடங்களும் ஆன்மீக குருக்களும் அந்த ‘கீழ்சாதியில்’ பிறந்த கொடுமையை போக்க மதம் மாறமுற்பட்டபோது அந்த கிராமத்திற்கு விரைந்தார்கள். இன்னும் சிலர் மதம் மாறிய அந்த மக்களை பிரியாணிக்கு மாறினார்கள் என்று இழிவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி மதம் மாறியவர்களின் இன்றைய நிலை என்ன? அவர்களின் சமூகநிலை மாறிவிட்டதா என்பதை அப்படி மதம் மாறியவர்களில் ஒருவர் எழுதும் நாவல் இது.

அகமணமுறை வழக்கம் சாதி நீடித்திருப்பதற்கு ஒரு முக்கிய காரணம்,இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களும் அகமணமுறையில் தான் திருமணம் செய்கிறார்கள். அதே நடைமுறையில் தான் மதம்மாறிய ‘தலித்’ முஸ்லீம்களோடு மண உறவை பரம்பரை முஸ்லீம்கள் வைத்துக்கொள்ளவில்லை. இப்படி அந்த கிராமத்தில் 40 வயதிற்கு மேல் திருமணம் ஆகாத முதிர்கன்னிகள் அதிகமாக இருக்கிறார்கள்.புதிதாக மதம் மாறியவர்களை ‘நவ்முஸ்லீம்’ என்று சக முஸ்லீம்கள் அழைப்பது இந்த நாவலை படிக்கும்போதுதான் தெரிகிறது. ஒவ்வொருவருக்கும் தான் விரும்புகிற மதத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வழக்கம் நம்மிடமில்லை. நம்முடைய சிறு வயதிலேயெ பெற்றோர்கள் விரும்புகிற உணவுப்பழக்கத்தையும் கடவுள்களையும் தொடர வேண்டியிருக்கிறது. இந்த நாவலில் தற்கொலை செய்துகொண்ட நூர்ஜஹான் தன் தந்தைக்கு எழுதிய கடிதம் நம்மை உலுக்குகிறது.

“ நீங்களும் மதம் மாறாது அங்கிட்டே இருந்திருந்தா இந்நேரத்துக்கு நானும் ஒங்களுக்கு கொஞ்சி விளையாட ரெண்டு பேரம் பேத்தியப் பெத்துக் கொடுத்து கெழவியாயிருப்பேன். ம்...என்ன செய்ய...”

“மதம் மாறுனதால அன்னைக்கு உங்களுக்கு கெடச்ச விடுதலை என்னைய அடிமையாகும்முனு நீங்க நெனச்சுக்கூட பாத்திருக்கமாட்டிய. ஆனா அன்னைக்கு உங்களுக்கென்ன் கொடுமையோ... இல்லணா .......... அம்புட்டு தூரம் போயிருப்பிளா என்ன..”

என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். இறந்த நூர்ஜஹானின் உடல் அடக்கம் செய்யும் சமயத்தில் நடக்கும் உரையாடல்களே இந்த நாவல்.

பரம்பரை இஸ்லாமியர் ஒருவர் நடத்திவந்த தேநீர் விடுதியில் நவ்முஸ்லிம்களின் நிலையை
‘‘கம்பிளி தைக்கா முக்குக்கு போனாத்தான் தெரியுது நான் பள்ளனா... பாயான்னு. அங்க சந்தை முக்கில கடை வச்சிருக்கிற முல்லாபாய்ட்ட போயி டீ தாங்க பாய்ன்னு கேட்டமுன்னா... நமக்குனு ஒரு டீ வரும். அவருக்கு தெரிஞ்ச வித்தியாசமெல்லாம் பேரு மட்டும்தான்’’ என்று குறிப்பிடுவது அதிர்ச்சியான செய்தி. அரபு நாடுகளிலிருந்து கோடிகோடியாக மீனாட்சிபுரத்தில் பணம் கொட்டியதாக வெளியூர்க்காரர்கள் நம்ப, அதற்கு மாறான நிலையே அங்கு நிலவியுள்ளது. நவ்முஸ்லிம்களின் பெயரைச் சொல்லி நிதி திரட்டப்பட்டதையும், அதில் கையாடல் செய்த அவ்வட்டாரத்தின் பரம்பரை முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர்குறித்த சில செய்திகளும் நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன.

இந்த ஊர்மக்கள் மதம் மாறியவுடன் பக்கத்து ஜமாத் மக்கள் ஆதரவு அளித்தார்கள், ஆனால் இந்த சமூகப்பிரச்சனையை தீர்ப்பதற்கு யாருமே வரவில்லை என்று ஏங்குகிறார்கள்.

முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டது போல நிச்சயம் விவாதத்திற்குரிய நாவல் தான்.

கருப்பாயி என்கிற நூர்ஜஹான்
ஆசிரியர்: அன்வர் பாலசிங்கம்
பக்: 102 ; விலை ரூ.100 |
கலங்கைப் பதிப்பகம்.
திருநெல்வேலி
தொடர்புக்கு: 9445801247

1 கருத்து:

hasanraja சொன்னது…

கருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவல் மறுப்பு P.சிராஜுதீன்
www.scribd.com/siraj2025