செவ்வாய், 29 மார்ச், 2011

பகிர்வு

“தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை மனித்தன்மையற்ற செயல்.”

இந்த வரிகளை நாம் பாடநூல்களில் பார்க்கிறோம், இப்படி பாடப்புத்தகத்தில் எழுதுனா தீண்டாமை போய்விடும்னு இந்த அரசு நம்புகிறதா? இதை போக்குவதற்கு அரசு ஏதாவது செய்கிறதா? அட என்னங்க 21ம் நூற்றாண்டுளயும் இன்னும் தீண்டாமை அது இதுன்னு பேசி ஜாதி வித்தியாசத்தை பெரிசுபடுத்துறீங்க?ன்னு சில பேர் கேக்கிறாங்க. தீண்டாமை அப்படி இல்லன பாடப்புத்தகத்திலிருந்து இந்த வரிகளை நீக்கியிருக்கனும். பாடப்புத்தகத்தில் இந்த வரிகள் இருந்தாலும் மாணவர்களுக்கு இந்த வரிகளை எந்த ஆசிரியராவது வாசித்து காண்பித்தார்களா, அப்படின்னா என்ன என்று சொன்னார்களா என்றால் இல்லை.

தீண்டாமை இருக்கிறதா என்றால் இருக்கிறது, பல வடிவங்களில். உத்தபுரம் என்ற கிராமம் 2008ம் ஆண்டு செய்திகளில் வருகிறது. அந்த ஊர்ல சுமார் 600 மீட்டர் நீளத்திற்கு சும்மா ரெண்டு ஆள் உயருத்துக்கு சுவர் ஒன்று இருக்குது, அதுக்கு மேல இரும்புவேலி போட்டு மின்சாரம் இணைப்பு கொடுத்திருக்குன்னு ‘ஹிந்து’ பேப்பரில் போட்டோவோட செய்தி வந்தது. இந்த சுவர் ஏதோ இயற்கை சீற்றத்திற்கு அரணாகவோ அல்லது வனவிலங்குகள் அந்தப் பகுதிக்கு வந்துவிடக்கூடாதோன்னு அதக் கட்டல. ஒரு சாதி மக்கள பிரிச்சிவைக்கிறத்துக்காக அந்த சுவர் எழுப்பபட்டிருக்கு. தமிழகத்தின் தீண்டாமை ஒழிப்பு முண்ணனி முயற்சிஎடுத்து போராட்டம் நடத்தியதால் சுமார் 10 மீட்டர் அள்விற்கு சுவரை உடைத்து பொதுப்பாதைக்கு திறந்துவிட்டது தமிழக அரசு. ஆனாலும் இன்னைக்கும் உத்தபுரம் தமிழ்நாட்ல நிறைய பேருக்குத் தெரியாது. இப்படி சுவர்கள் மூலம் சமீபத்தில் தீண்டாமை நிலவுகிறதுன்னு கோவையிலும், திருச்சியிலும் போராட்டம் நடந்து பின்னர் இடிக்கப்பட்டது.

‘கருக்கு’ நாவலில் எழுத்தாளர் பாமா, தன்னுடைய கிராமத்தையும் தனது வாழ்க்கை அனுபவத்தையும் கதையாக சொல்லியிருக்கிறார். அதில் பறைச்சாதிக்கும் மற்றொரு பிற்படுத்தப்பட்ட சாதிக்கும் இடையே இடுகாடு பிரச்சனை வருகிறது, அப்போது அரசின் காவல்துறை பணம் இருப்பவர்கள் பக்கம் இருந்துகொண்டு தலித் மக்கள் மீதும் வீடுகள் மூதும் தாக்குதல் நடத்துகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் காவல்துறை தேடுதலால் ஊரைவிட்டே ஓடி மறைந்துவாழ்கிறார்கள். அப்போது பெண்களை காவல்துறை துன்புறுத்துகிறது, அந்த சமுகத்தில் ஒரு மரணம் நிகழ்கிறது பெண்களே அடக்கம் செய்கிறார்கள். இதே அனுபவம் உத்தபுரத்திலும் நடந்தது. இந்த நாவலைப் படிக்கும் போது மிகுந்த வேதனையடைந்தேன். நானும் ஒரு பிற்படுத்தப்பட்ட பிரிவினராக இருந்து தலித்மக்கள் அனுபவித்த இந்த துயரம் எனக்கு அசாதாரணமாகப் படவில்லை எனும்போது குற்ற உணர்வு ஏற்படுகிறது. தலித் இலக்கியம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு தலித்தாக இந்த ஒடுக்கு முறையை அனுபவித்து அந்த மக்களின் துயரத்தை பொதுவெளிக்கு கொண்டுவருவது தான் தலித் இலக்கியம். கருக்கு நாவல் அந்த வகையைச் சேர்ந்தது தான்.

ஒவ்வொரு கிராமத்திலும் ‘கருக்கு’ நாவல்ல பார்த்த சம்பவங்கள் வரலாம், என்னுடைய சிறுவயதில் எங்க கிராமத்தில் ரெண்டு குடிநீர்க்கிணறு இருந்தது, தனித்தனியாக கோயில் அது இன்னும் அப்படித்தான் இருக்கு. இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது, ஏனென்றால் நிலவுடமை தான் தீண்டாமையின் மையம். இன்று அந்த கிராமத்தில் எல்லா சமூகத்திற்கும் நிலமிருக்கிறது. தலித்மக்கள் சுயமரியாதையோடு வாழ்க்கை நடத்தமுடிகிறது.சிறுவயதில் பொதுகிணற்றில் நீர் இறைத்துக்கொண்டிருந்தேன், அப்போது ஒரு பெண்மணி குடத்துடன் வந்து கிணற்றிற்கு வெளியே நின்று யாசிக்கிறார், யாராவது தண்ணீர் ஊற்றுங்கள் என்று. சில சமயம் அந்தப் பெண்மணி அரைமணிநேரம் கூட காத்திருக்கவேண்டியிருக்கும். ஏனென்றால் அந்த பெண்மணி அருந்ததியினர் மக்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தலித் சமூக கிணற்றிலிருந்து கூட நீர் இறைக்க அனுமதி இல்லாத காலம் அது.பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏதோ மனசுமாறி அவங்களுக்கு சரிசமதை அளித்திடவில்லை எல்லாம் அவர்கள் கல்வியாலும் கடின உழைப்பாலும் இன்று முன்னேறியிருக்கிறார்கள். தீண்டாமையால் தலித் மக்கள் மதம் மாறியிருக்கிறார்கள், அங்கும் தீண்டாமை இருக்கிறது என்று தான் அனுபவித்ததையும் நாவலில் எழுத்தாளர் பதிவு செய்திருக்கிறார். கல்வி தான் விடுதலை செய்யும் என்று அனுபவரீதியாக பகிர்ந்திருக்கிறார்.

3 கருத்துகள்:

kashyapan சொன்னது…

அற்புதமான இடுகைகள்! ஹரிஹரன் தோழர்! விக்கிலீக்ஸ் பற்றி,சட்டமன்ற தேர்தல் பற்றி, மெ.ஆசியா பற்றி, தலித்துகளின் பாடுகள் பற்றி... குழந்தை பாரதிக்கு என் ஆசிகள் தோழர்...அன்புடன் காஸ்யபன்

hariharan சொன்னது…

மிக்க நன்றி தோழர்.காஸ்யபன் அவர்களே.

அம்பாளடியாள் சொன்னது…

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......