வெள்ளி, 31 டிசம்பர், 2010

திமுக : மிசா முதல் ஸ்பெக்ட்ரம் வரை



இந்திய வரலாற்றில் 2010ம் ஆண்டு ஒரு ஊழல் நிறைந்த ஆண்டாகவே எதிர்கால சந்ததிக்கு அறிமுகப்படுத்தப்படும். காமன் வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல், பூனா, கொல்கத்தா உள் ளிட்ட பல்வேறு இடங்களில் ராணுவத்திற்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு ஊழல், இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் வெளிவந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் என ஊழல் கொடிகட்டி பறக்கிறது. இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்த ஊழல்கள் குறித்த செய்திகள் ஊடகங் களில் உலா வந்துகொண்டிருக்கின்றன.

காங்கிரஸ் - திமுக, திரிணாமுல் கட்சி கள் அடங்கிய ஐக்கிய முற்போக்கு கூட்ட ணியின் ஆட்சி இந்திய நாட்டின் ஏழை-எளிய மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. மாறாக பன்னாட்டு முதலாளிகளுக்கும் அம்பானி, டாடா போன்ற பெரு முத லாளிகளுக்குமே சேவை செய்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து சில்லரை ஊழல்கள் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், தாராளமய சந்தைப்பொருளாதாரம் தீவிரமாக அமல் படுத்தப்பட்ட பிறகு, ஊழல் என்பது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாற்றப்பட் டிருக்கிறது.

மன்மோகன் சிங் ஒரு பொருளாதார நிபுணர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் ஏழை, எளிய இந்திய மக்களின் பிரதமராக இல்லை. மாறாக முதலாளிகளின் சேவகராகவே செயல்படுகிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச் சரவையில் தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட கேந்திரமான இலாகாக்களை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை டாடா, அம்பானி போன்ற பெருமுதலாளிகளே தீர்மானிக்கிறார்கள். திமுக தலைவர் கலைஞர் “நான்தான் ராசாவுக்கு தொலைத் தொடர்புத்துறையை மீண்டும் பெற்றுக் கொடுத்தேன்” என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் பெருமுதலாளிகளே தங்களது தேவைக்காக அவருக்கு அந்தத்துறையை மீண்டும் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

தயாநிதிமாறன் தங்களுக்கு ஒத்துவரமாட் டார் என்பதால் ஆ. ராசாவை தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பொறுப்புக்கு பெருமுதலாளிகள் கொண்டுவந்தார்கள் என்பதை நீரா ராடியா உரையாடல் டேப் தெளிவாக்கியுள்ளது. இதை திமுக எந்த வகையிலும் மறுக்கமுடியாது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, ஆ.ராசா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங் களவையிலும், “அனைத்தும் பிரதமருக்கு தெரிந்துதான் நடந்தது” என்று ஓங்கி கூறி னார். அப்போது அவையிலிருந்த பிரதமர், வாய் மூடி மவுனியாக இருந்தார். ஆனால் தில்லி யில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் “மறைப்பதற்கு என் னிடம் எதுவும் இல்லை” என்று சாதிக்கிறார். ஆ.ராசா மீது வழக்கு தொடர 16 மாத காலம் எடுத்துக் கொண்டது ஏன் என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியபோதும், பிரதமரின் அறிவுரைகளையே ஆ.ராசா மீறியுள்ளார் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய போதும் பிரதமர் மன்மோகன் சிங் மவுனத்தையே பதிலாகத் தந்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பங்கிற்கு ஊழல் ஒழிப்புக்கு ஐந்து அம்சத்திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இத்தகைய திட்டங்களை அறிவிப்பது காங் கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல; 20 அம்ச திட்டம், 10 அம்ச திட்டம், 5 அம்ச திட்டம் என்று காங்கிரஸ் அறிவித்த திட்டங்களைக் கேட்டு கேட்டு மக்களுக்கு புளித்துப் போய் விட்டது. எதையுமே அவர்கள் நிறைவேற்றிய தில்லை.

ஆ.ராசா எந்தத் தவறுமே செய்யவில்லை என்று திமுக தலைவர் கலைஞர் சாதித்து வந்தார். இனி வேறு வழியேயில்லை என்ற நிலையில்தான் அவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். “நான் ஒரு வழக்கறிஞர், சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்று ராசா ஜம்பமாக கூறி னார். முதல் நாள் அவரிடம் எட்டு மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ள னர். இரண்டாவது நாள் ஐந்து மணி நேரத்திற் கும் மேலாக விசார ணை நடத்தப்பட்டது. இரண்டாவது நாள் ஆ.ராசா தன்னுடன் ஒரு மருத்துவரையும் கூடவே அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவரை பக்கத்தில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு விசாரணை நடந்துள்ளது எனத் தெரிகிறது. அவரிடமும், நீரா ராடியாவிடமும் மீண்டும் சிபிஐ விசார ணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

மத்திய தணிக்கை துறை அதிகாரியின் 77 பக்க அறிக்கையில் ஆ.ராசா மீது 25க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட் டுள்ளன. இதுதவிர, நீரா ராடியா உரையாடல் அடங்கிய டேப்பில் பல்வேறு விவரங்கள் உள்ளன. இதுகுறித்தெல்லாம் ஆ.ராசாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது - அவருக்கு அடிப்படையில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் ஆ.ராசா எந்தத் தவறுமே செய்யவில்லை என்று திமுக பிரச்சாரம் துவக்கியிருப்பது வியப்பாக உள்ளது.

‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் ஒளி பரப்பான ஒரு நேர்காணலில் இந்தியாவின் புகழ்பெற்ற காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான கிரண் பேடியிடம் “ஹர்ஷத் மேத்தா, கார்பரேட் முதலாளி சத்யம் ராமலிங்க ராஜூ ஆகியோரை கைது செய்த பிறகே சிபிஐ அவர்களிடம் விசாரணை நடத்தியது. ஆனால் ஆ.ராசா, நீரா ராடியா போன்றவர் களை கைது செய்யாமல் விசாரணை நடத்தி யது ஏன்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கிரண் பேடி “ நீங்கள் ஒன் றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டில் உள்ள சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எதுவும் சுயேட்சையாக இயங்கு பவை அல்ல. அவை அனைத்தும் அரசுக்கு கட்டுப்பட்டவை. அரசு என்ன கருதுகிறதோ அதன்படியே வழக்கு விசாரணை நடத்தப் படும். இந்த வழக்கும் அப்படித்தான்” என்றார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவுக்கு மட்டும் தொடர்பு இல்லை. இந்தியாவின் பெரு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள் இதில் லாபம் பெற்றிருக்கிறார்கள். ஹவாலா மூலம் பல நாடுகளில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. திமுகவை மட்டும் சுட்டிக் காட்டி காங்கிரஸ் கட்சி விலகிக்கொள்ள முடியாது. ஊழலின் முழு பரிணாமும் வெளியே வரவேண்டுமானால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டுமே ஒரே வழி. ஆனால் இதற்கு காங்கிரஸ்-திமுக கூட் டணி அரசு மறுத்து வருகிறது. பொது கணக்குக்குழு முன்பு ஆஜ ராகத் தயார் என பிரதமர் தாமாக முன்வந்து கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவர் நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மறுப்பது ஏன் என்ற மர்மம்தான் புரியவில்லை.

அவசரநிலைக் காலத்தில் ஜனநாயக உரிமைகளுக்காக போராடி, திமுகவைச் சேர்ந்த பலரும் சிறை சென்றார்கள். சிலர் அடிஉதை பட்டார்கள். சாத்தூர் பாலகிருஷ் ணன், சிட்டிபாபு போன்றவர்கள் சிறையி லேயே மரணமடைந்தனர். அவசரநிலைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்தவர்களின் பெயருக்கு முன்னால் ‘மிசா’ என்ற அடைமொழி கொடுத்து பெருமையாக அழைத்தது திமுக. ஆனால் இன்றைக்கு திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாவின் பெயருக்கு முன்னால் ‘ஸ்பெக்ட்ரம்’ ராசா என்று ஊடகங் கள் அடைமொழி கொடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திமுக தேசிய கட்சியாக மாறி விட்டது என்று கூறப்பட்டதன் பொருள் இதுதான்.

திமுகவைப் பொறுத்தவரை ஊழல் குற்றச்சாட்டுக்களை எப்போதும் அவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. வீராணம் ஏரி ஊழல், சர்க்காரியா கமிஷனால் கண்டறியப் பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் என எதையும் திமுக ஒத்துக் கொண்டதில்லை. இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் விசயத்திலும் அதே நிலைபாட்டையே மேற்கொள்கிறார்கள்.

நாட்டின் கஜானாவுக்கு வந்து சேர்ந் திருக்க வேண்டிய ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சூறையாடப்பட்டுள்ளது. ஆனால் இது இழப்புதானே தவிர ஊழல் அல்ல என்கிறார்கள். திமுக இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள முடியாமல், நியாயப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது. ஆ.ராசா ஒரு தலித் என்பதாலேயே இந்த குற்றச்சாட்டு எழுந்துள் ளதாக சொல்லி சமாளிக்கப் பார்த்தார்கள். அது முடியாமல் போய்விட்டது. இத்தகைய ஒரு பெரிய ஊழலை ஒருவர் செய்திருக்க முடி யாது என்று அடுத்து கூறினார்கள். யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை இவர் களாவது வெளிப்படுத்தலாம் அல்லவா?

நாட்டின் பணம்,கொள்ளையடிக்கப்பட் டிருக்கிறது. ஆனால் திமுகவும், காங்கிரசும் இது ஏதோ அவர்களது கூட்டணி சம்பந்தப் பட்ட பிரச்சனை என்பதுபோல, உறவில் விரிசல் இல்லை, கூட்டணி பலமாக உள்ளது என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

முந்தைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்கள் மேற்கொண்ட அணுகுமுறை யைத்தான் ஆ.ராசாவும் பின்பற்றினார் என்று சாமர்த்தியமாக வாதிடுகிறார்கள். அமைச்சர் துரைமுருகன் கரூரில் இந்த கருத்தைத்தான் வெளியிட்டுள்ளார். தயாநிதி மாறனும் இதே கொள்கையைத்தான் பின்பற்றினார் என்றும் அவர் கூறினார். இதுகுறித்தெல்லாம் தயாநிதி மாறன் வாய்திறக்க மறுப்பது ஏன் என்று தெரியவில்லை?

மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அனை வரையும் கண்டறிந்து சட்டப்பூர்வ நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அரசு கஜானாவுக்கு வந்திருக்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாயை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

திமுகவை அண்ணா அவர்கள் துவக்கும் போது, இந்த கட்சி சாமானியர்களுக்காகவும், குப்பன்களுக்காகவும், சுப்பன்களுக்காகவும் துவக்கப்பட்டுள்ளது என்றும், பஞ்சை பராரி களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இயக்கம் இது என்றும் கூறினார். ஆனால் இன்றைக்கு திமுக என்பது டாடா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு சேவை செய்யும் கட்சியாக மாறிவிட்டது. மாநில சுயாட்சி கேட்ட அந்த கட்சி, மத்திய அதிகாரத்திற்கு சென்றவுடன் மாநில சுயாட்சிகளுக்காக போராடவில்லை. மாறாக அனைத்து துறைகளிலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் வலுவான இலாகாக்களை பெற்று, அதன் மூலம் பெருமுதலாளி களுக் கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் சேவகம் செய்து வருகிறது. என்னதான் வாய் சாதுர் யத்தால் தப்பிக்க முயன்றாலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் கறையிலிருந்து திமுக தப்பமுடியாது.

-டி.கே.ரங்கராஜன் எம்.பி.

நன்றி: தீக்கதிர்

3 கருத்துகள்:

சண்முககுமார் சொன்னது…

என்ன பாஸ் எங்க போனாலும் ஊழல் ஊழல் இதை மற்ற வழியே இல்லையா


வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

சிவகுமாரன் சொன்னது…

நீங்கள் உங்கள் கருத்துக்களை இடுகைகளாக இடுங்கள். T.K.ரங்கராஜன் போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் கட்டுரைகள் வேண்டாமே. ( நான் திருச்சியில் வெகுகாலம் இருந்தவன். எனக்கு TKR பற்றி தெரியும் ).

hariharan சொன்னது…

திரு.சிவகுமாரன்.
என்னுடைய கருத்துக்களையும், நான் உடன்படுகிற கட்டுரைகளையும் எனது வலைப்பூவில் வெள்யிடுகிறேன்.கட்டுரையின் செய்தி பலரிடம் சேரவேண்டும் என்பது எனது அவா.

இந்தியாவிலேயே மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்து பதவிஆசையிலும் நேர்மையிலும் உறுதியானவர்கள் வித்தியாசமானவர்கள் இடதுசாரிகள் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் என்று நான் நம்புகிறேன்.

நீங்கள் கூறும் T.K.R ஐ எனக்கு கடந்த சில ஆண்டுகளாகத்தான் தெரியும், அவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றவுடன் அவர் போராடி சாதித்த விஷயம் இந்திய அரசு மூடிய மூன்று நோய் தருப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களை மீண்டும் இயக்கியதைக் குறிப்பிடலாம்.

நீங்கள் அவருடைய சந்தர்ப்பவாத அரசியலை இங்கு குறிப்பிடலாம். நானும் தெரிந்து கொள்வேன்.